Sunday, April 2, 2017

வகுப்புவாத எதிர்ப்பு : conscious ம் unconscious ம் - ரவிக்குமார்



காட்சி ஊடகங்களின் விவாத நிகழ்ச்சிகளில் பிரச்சனைகள் சார்ந்து பங்கேற்பாளர்களை அழைப்பதுதான் ஜனநாயகமாகவும்  சரியானதாகவும் இருக்கும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதில் ஒரு சமநிலையை ஊடகங்கள்  பின்பற்றமுடிவதில்லை. அதற்குக் காரணமாக பங்கேற்பாளர்களின் availability தொடர்பான பிரச்சனை சொல்லப்பட்டாலும் சேனல்களின் அரசியல் சார்புக்கேற்ப ஆட்களை அழைக்கவேண்டிய நெருக்கடி ஒருங்கிணைப்பாளர்களுக்கு இருக்கிறது என்பதையும் நாம் மனதில்கொள்ளவேண்டும். தமிழ்நாட்டில்  பெரும்பாலான காட்சி ஊடகங்களை நடத்துவது அரசியல் கட்சிகள் என்பதால் பிரச்சார சாதனங்களாக அவை இருப்பது வியப்புக்குரியதல்ல. 

மத்திய மாநில அரசுகளின் கொள்கைகளை, நடவடிக்கைகளை விவாதப்பொருளாக எடுக்கும்போது அரசுகளை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய நபர்களை அழைப்பது தவிர்க்கமுடியாதது. இப்போது தமிழக அமைச்சர்களே  விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். தமது துறை சார்ந்த விஷயங்களில் அவர்களுக்கிருக்கும் புரிதலை மக்கள் அறிந்துகொள்ள இது உதவுகிறது. எனவே இது வரவேற்கத்தக்க மாற்றம். 

முரளி எழுப்பியிருக்கும் கேள்வி பாஜக எதிர்ப்பு என்ற மனநிலையிலிருந்து பார்க்கும்போது முற்போக்கானது. ஆனால் இது பொதுப்புத்தியில் ( common sense ) படிந்திருக்கும் பெரும்பான்மைவாத நம்பிக்கை சார்ந்த கருத்தாக மாறிவிடக்கூடிய அபாயம் உள்ளது. 

வாக்கு வங்கியின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்றால் அரசை , அதிகாரத்தை எதிர்த்து எழும் குரல்கள் எப்போதுமே சிறுபான்மையாகத்தான் இருக்கும் அவை இந்த விவாதங்களில் இடம்பெறவே முடியாமல் போய்விடலாம். இடதுசாரிகளும் disproportionate ஆன பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள் என முரளி சொல்லும்போது அவர் பொதுப்புத்தியின் பெரும்பான்மைவாத நம்பிக்கையை வழிமொழிகிறார் என்பது தெளிவாகிறது. எந்த பாஜகவை அவர் எதிர்க்கிறாரோ அதே பாஜகவின் கருத்தியலை முரளியின் நிலைபாட்டிலும் நாம் பார்க்கிறோம். 

வகுப்புவாத எதிர்ப்பு நிலைபாட்டில் நாம் conscious ஆக செயல்பட்டால் மட்டும் போதாது நமது unconscious ஆகவும் அது மாறவேண்டும். அதன் முக்கியத்துவத்தையே நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

( BBC தமிழோசையில் பணியாற்றும் முரளிதரனின் முகநூல் பதிவு குறித்து எனது குறிப்புகள் ) 

No comments:

Post a Comment