Sunday, April 9, 2017

படிநிலையாய் உறையும் பாகுபாடு - ரவிக்குமார்

https://www.minnambalam.com/k/2017/04/10/1491762614

பாகுபாடுகள் படிநிலைகளாக உறைகின்றன. படிநிலைகள் சமத்துவத்தை அழித்து வன்முறைக்கு வழிகோலுகின்றன. நாம் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் நமது அரசியல் வழிமுறையாக ஏற்றுக்கொண்டு விட்டோம். நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அதைத்தான் அறிவித்திருக்கிறது. ஆனால் அது கொள்கை அளவில் மட்டும்தான் இருக்கிறது. நடைமுறையில் நாம் பாகுபாடுகளைக் கடைபிடிக்கவே செய்கிறோம்.

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் தாக்கப்படுகிறார்கள்; பசு காவலர்கள் என்ற பெயரில் உலவும் பயங்கரவாதிகள், அப்பாவி ஏழை முஸ்லிம்களை அடித்துக் கொலை செய்கிறார்கள்; ஆணும் பெண்ணும் சேர்ந்து தெருவில் போனாலே பண்பாட்டுக் காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. இப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொறுப்பேற்றிருக்கும் பாஜக அரசு உருவாக்கியிருக்கும் ‘ரோமியோ படை’ இந்தப் பண்பாட்டுக் காவலுக்கு சட்டப் பாதுகாப்பை அளித்திருக்கிறது.

மதத்தின் அடிப்படையில் சாதியின் அடிப்படையில், பாலியல் சார்பின் அடிப்படையில், உடுத்தும் ஆடைகளின் அடிப்படையில், பேசும் மொழியின் அடிப்படையில், உண்ணும் உணவின் அடிப்படையில் ஒவ்வொருநாளும் வன்முறை ஏவப்படுகிறது. அக்லக், ரோஹித் வெமுலா, முத்துகிருஷ்ணன் என பாகுபாட்டின் பலிகளது பட்டியல் நீள்கிறது. இதுவரை பூனை போல இருந்ததாக நம்பப்பட்டுவந்த பாகுபாடு இப்போது ஓநாயைப்போல உருவெடுத்திருக்கிறது. அது ரத்தவெறி கொண்டு தெருவெங்கும் அலைகிறது.


No comments:

Post a Comment