Friday, March 24, 2017

இனிமேல் மிளகாய் பஜ்ஜியை வாங்கிக்கொண்டு போக முடியாது..- அழகியசிங்கர்



 நான் கிட்டத்தட்ட வாரம் ஒருமுறையாவது அசோகமித்திரனைப் பார்க்காமல் இருக்க மாட்டேன்.  அவருக்கு தேவையான உதவிகளைச் செய்வேன்.  "உங்களை தொந்தரவு செய்கிறேன்," என்பார்.  "பரவாயில்லை. நான் ஓய்வுப் பெற்று சும்மாதான் இருக்கிறேன்..உங்களுக்கு நான் உதவுகிறேன்," என்பேன்.  ஒவ்வொரு முறையும் மேற்கு மாம்பலத்திலிருந்து தி நகருக்கு டூ வீலரில் போய் அவரைப் பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.  விருட்சம் ஆரம்பித்தபோது என் பத்திரிகையில் அவர் தொடர்ந்து கட்டுரை எழுதித் தருவார்.  அவருடைய நகைச்சுவை உணர்வை சாதாரணமாக நினைத்து விட முடியாது.  

 நான் ஒவ்வொரு முறை அவர் வீட்டிற்குச் செல்லும்போது, ஆர்யகவுடர் ரோடில் உள்ள வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலில் ஒரே ஒரு மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொண்டு போவேன்.  அசோகமித்திரன் ஒன்றே ஒன்று போதும் என்பார்.  எனக்கு இந்த மிளகாய் பஜ்ஜி மட்டும் பிடிக்காது.  ஆனால் அசோகமித்திரன் ரசித்து சாப்பிடுவார்.  அவர் சாப்பிட்டுக்கொண்டே, இந்த பஜ்ஜி விலை என்ன என்று கேட்பார்.  ஐந்து ரூபாய் என்பேன்.  அவரால் நம்ப முடியாது.  ஐந்து ரூபாய்க்கு இவ்வளவு சுவையான பஜ்ஜியா என்று வியப்பார்.  

 "இந்த மிளகாய் பஜ்ஜி செய்யறவனுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்,"  என்பார்.  அதைக் கேட்டு தாங்க முடியாத சிரிப்பு வரும் எனக்கு.

 ஒரு முறை அவருக்குப் போன் செய்து, 'உங்களுக்கு ஞானப்பீட பரிசு கிடைக்கப் போகிறது,' என்பேன்.  
'அதெல்லாம் எனக்குக் கிடைக்காது,' என்று சாதாரணமாக சொல்வார்.  ஹிந்து பத்திரிகையில் அவர் கட்டுரை வந்தால், நான்தான் ஹிந்து பத்திரிகையைக் கொண்டு போய் கொடுப்பேன். 

 "கதைகளை எழுதினால் மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள்," என்றார் ஒருநாள்.  "யாரும் போட மாட்டார்கள்," என்பேன்.  "பத்திரிகைகளில் பிரசுரமாகிற மாதிரிதான் நீங்கள் எழுதுகிறீர்கள், நிச்சயம் வரும்," என்பார்.

 அந்த சமயத்தில் பத்திரிகைகளில் அவர் கதைகளை அனுப்பி பட்ட அனுபவத்தை சொல்வார்.  சுதேசமித்திரன் என்ற பத்திரிகையில் அவர் அனுப்பிய கதைகள் எதுவும் பிரசுரம் ஆகவில்லையாம்.  அவர் அனுப்பிய காலத்தில் ஒரே பிரதி மட்டும் எழுதி அப்படியே அனுப்பி விடுவார்.  திரும்பவும் அக் கதைகளைப் பெற சுதேசமித்திரன் பத்திரிகை அலுவலகத்திற்குப் போய் அக் கதைகளை தேடியிருக்கிறார்.  தியாகராஜன் என்ற பெயரில்.  அவருடைய பெயரைப் போல வேற ஒரு தியாகராஜன் கதைகள் கிடைக்குமாம்.இப்படி அவர் தொலைத்த கதைகள் பலவாம்.  

 அசோகமித்திரன் ஆசிரியராக இருந்த சமயத்தில் கணையாழியில் என் குறுநாவல்கள் தொடர்ந்து வந்திருக்கின்றன.  என் கதைகள் மட்டுமல்ல. ஜெயமோகன்., பாவண்ணன், கோபிகிருஷ்ணன், சுப்ரபாரதி மணியன், இரா முருகன் போன்ற பலருடைய குறுநாவல்கள் வந்திருக்கின்றன. கணையாழியல் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விபத்து என்ற என் கதையில் சில மாற்றம் செய்ய அசோகமித்திரன் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன்.  அப்போது அவருக்கு சுரம்.  அவர் அக் கதையை அப்படியே சொல்வார்.  ஒன்றும் மாற்ற வேண்டாம்.  அப்படியே இருக்கட்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி விட்டார். 

 பல எழுத்தாள நண்பர்களை அசோகமித்திரன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போயிருக்கிறேன்.  பல இடங்களுக்கு துணையாக அவருடன் சென்றிருக்கிறேன்.  அவர் நடக்கும்போது கீழே மட்டும் விழக்கூடாது என்று ஜாக்கிரதையாக இருப்பேன். ஆனால் அவரைப் பிடித்துக்கொண்டு அழைத்து வருவது அவருக்குப் பிடிக்காது.  

 நேற்றுதான் நானும் நண்பரும் வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலில் மிளகாய் பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்டோம்.  எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது என்றாலும், அசோகமித்திரனை நினைத்துக்கொண்டுதான் சாப்பிட்டேன்.  அந்த நேரத்தில்தான் அசோகமித்திரன் இறந்து விட்டார் என்ற செய்தி டிவி மூலம் பின்னால் தெரிய வந்தபோது ரொம்பவும் சோகமாகிவிட்டேன்.  என் அப்பா ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி இறந்து விட்டார்.  அசோகமித்திரன் நேற்று 23ஆம் தேதி இறந்து விட்டார்.  இனிமேல் மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொண்டு தி நகர் பக்கம் போக முடியாது.

PHOTOS TAKEN BY CLIK  RAVI

Thursday, March 23, 2017

ஆர்.கே.நகர் : வாக்குச்சாவடிகளை கைப்பற்றத் திட்டமா?


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்றுவரை 127 ஆக உள்ளது. திரும்பப்பெறுதல், தள்ளுபடி செய்தல் எல்லாவற்றையும் கழித்துவிட்டுப் பார்த்தாலும்கூட 100 க்குக் குறையாது எனத் தோன்றுகிறது.  இதைப் பார்க்கும்போது அங்கு வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தச் செய்வதற்கு திட்டமிட்ட முயற்சி நடக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. 

ஒரு தொகுதியில் 64 வேட்பாளர்களுக்குமேல் களத்தில் இருந்தால் அங்கே வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படுமென தேர்தல் ஆணையத்தின் விதிகள் கூறுகின்றன. 

வாக்குப்பதிவு எந்திரம் குறித்து புகார்கள் இருந்தாலும் அது அறிமுகம் செய்யப்பட்டதற்குப்பிறகு வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றியதாக புகார்கள் ஏதும் எழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆர்.கே.நகர் தேர்தலில் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்ததற்குப் பிறகு வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் கவனிக்கவேண்டிய ஒன்றாகும்.


Wednesday, March 22, 2017

”மையை வீசுபவர்கள் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களாகி விட்டனர். மையைப் பயன்படுத்துபவர்கள் பிரச்சாரகர்களாகி விட்டனர்.”- ரவிஷ் குமார்



(என்டிடிவி இந்தியா (இந்தி) தொலைக்காட்சியின் பிரபல நெறியாளர் ரவிஷ் குமார். நிகழ்ச்சிகளில் அமைதியாக, ஆணித்தரமாக, சமரசமின்றி பேசும் இவருக்கு ஏராளமன ரசிகர்கள் சமீபத்தில் 

பத்தான்கோட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த இவருடைய நிகழ்ச்சியில் ரகசியமாகப் பாதுகாக்கப் பட வேண்டிய விஷயங்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி என்டிடிவி இந்தியா 24 மணி நேரம் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது மோடி அரசு. அந்த ஆணையையும் எதிர்த்து கேலி செய்து அதே சானலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் ரவிஷ் குமார்.

இவருக்கு எமெர்ஜென்சி காலத்தில் சிறையிலடைக்கப்பட்ட பிரபல பத்திரிக்கையாளர் குல்திப் நய்யார் நினைவு விருது வழங்கப்பட்டது. அந்த நிகழ்வில், அவர் நன்றி தெரிவித்து ஆற்றிய இந்தி உரையில் ஆங்கில மொழியாக்கத்தைதி வயர்

இணைய இதழ் வெளியிட்டது. அதன் தமிழ் மொழியாக்கம் இங்கே: )


தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்


இது வெறுப்பின் காலம் என்று உலகம் முழுவதும் உணரப்படும் நேரத்தில் கவுரவிக்கப்படுவது சிறிது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. டிக் டிக் என்று சப்தமிடும் கடிகாரங்கள் அமைதியாய் அடங்கிப்போய் பல பத்தாண்டுகள் ஆன பின்னும் அந்த சப்தத்தை தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கும் ஒரு சுவர்க் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு அது. மென்மையான சப்தங்களின் மூலம் காலத்தை உணரும் திறமையை நாம் இழந்து விட்டோம். ஆகவேதான், நாம் வாழும் காலத்தினைக் குறித்து சரியான நிர்ணயம் செய்யத் தவறிக் கொண்டிருக்கிறோம். கண்காணிப்புக் குழுக்களும், பறக்கும் படைகளும் தொடர்ந்து ரெய்டு நடத்தும் ஒரு தேர்வு மன்றத்தில் அமர்ந்திருக்கும் உணர்வுடன் நாம் வாழ்கிறோம் _ நமக்குள் இருக்கும் ஒரு குற்றவாளி எந்த நேரமும் கையும் களவுமாகப் பிடிபட்டு விடுவான் என்று திரும்பத் திரும்பத் தோன்றுவது போல். நாம் தொடர்ந்து பரிசோதனைக்குள்ளாகிறோம். சுதந்திரமாகப் பேசுபவர்கள் மீது ட்ரோல்கள் (வம்பர்கள்) ஏவி விடப்படுகின்றனர்.

இந்ததேர்வு மன்றத்தில்அமர்ந்திருக்கும்போது ஒவ்வொரு முறை ரெய்டு வரும்போதும் முதுகுத்தண்டு சிலிர்க்கிறது. தவறு செய்யாதபோதிலும் குற்றச்சாட்டுக்கு உள்ளோவோமோ என்கிற பயம் தொற்றிக் கொள்கிறது. இந்த கண்காணிப்புக் குழுக்கள் தவறிழைத்தோரைப் பிடித்ததை விட அப்பாவி மக்களை பயமுறுத்தியதுதான் அதிகம். உண்மையான டிகிரிகள், போலியான டிகிரிகள் குறித்து விவாதம் நடக்கும் இந்தக் காலத்தில், மூன்றாம் டிகிரி (அடி உதையுடன் கூடிய போலீஸ் விசாரணை) முறைதான் பல்வேறு வடிவங்களில் திரும்பி வந்துள்ளது. நம் காலத்தில் தொலைகாட்சி நெறியாளர்தான் அதிகார மையாமாகி இருக்கிறார். அவர் கருத்திற்கு மாறாகப் பேசுபவர்களை விளாசித்தள்ளுகிறார். மாற்றுக் கருத்து வைத்திருப்பது குற்றம். மாற்றுக் கருத்தை முன்வைப்பது மோசமான குற்றம்; உண்மைகளை எடுத்துரைப்பது நிந்தனை; உண்மையாக இருப்பது பாவம். முன்பெல்லாம் மாலைப் பொழுதுகளில் மட்டுமே தொலைக் காட்சி நம்மைக் கட்டிப்போட்டது. இப்போது இந்தக்காவல் நிலையங்கள்நாள் முழுவதும் செயல்படுகின்றன. உங்களின் முதல் விருதுக்கு ஒரு தொலைக்காட்சி நெறியாளரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் _ ஆபத்து நிறைந்த வேலையில் ஈடுபடுபவர்கள் இன்னும் பிழைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் ஆதாரம். மேலும் ஒரு தோல்வியைச் சந்திக்க இன்னும் சிலர் தயாராக உள்ளனர். அவர்கள் உயிரோடிருப்பது ஒரு மாயை போலிருந்தாலும் கூட நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விருதை வழங்கிய காந்தி அமைதி அறக்கட்டளைக்கு நன்றி.


நம்மில் எத்தனை பேர் அன்பைப் பற்றிப் பேசவாவது செய்கிறோம்? அன்பைப் பற்றி மக்கள் சிந்திக்கிறார்களா என்பதில் கூட எனக்கு சந்தேகம். இப்போதெல்லாம் சூரியனைப் பார்த்து நம் நாளைத் தொடங்குவதில்லை. வாட்சாப்பில் வரும் குட் மார்னிங் செய்தியைப் பார்த்துத்தான் தொடங்குகிறோம்வாட்சாப்பில்தான் சூரியன் உதிக்கிறது என்று உலகம் நம்பத் தொடங்கும் நாள் தொலைவில் இல்லை. விரைவில் நாம் கலிலியோவை மீண்டும் தண்டிக்கப்போகிறோம். அதை தொலைக்காட்சியில் நேரலையாகக் கூட காணலாம்.


வாய்ப்புகளைக் கண்டறியும் காலகட்டம் இது. புதிய வாய்ப்புகளையும், மீதமிருக்கும் வாய்ப்புகளையும் நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம். புதிய நம்பிக்கைகளையும் வாய்ப்புகளையும் போற்றும் மனிதர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம். ஆயினும் இந்த நம்பிக்கைகளும், வாய்ப்புகளும் தற்போது மங்கி வருகின்றன. இதற்கு நடுவில்

நம் நம்பிக்கைகளும் தனிமைப்பட்டு வருகின்றன. எவ்வளவு நாள் நாம் தாக்குப்பிடிப்போம் என்ற கேள்வி நம்மை வாட்டிக்கொண்டிருக்கிறது. நாம் வாழப்போகும் காலத்தில் கூட அர்த்தமுடன் வாழ்வது எப்படி என்பதை நாம் மறந்துவிட்டோம். இந்த சூழலில் நம் சக்திகளையும் உணர்வுகளையும் மீண்டும் தூண்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. கேள்விகளுக்கு பட்டை தீட்டுங்கள். நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கங்களுக்கான கேள்விகளுக்கு. இந்த இயக்கங்கள் நம் நம்பிக்கையை உடைத்துவிட்டன. உங்களுக்கு நம்பிக்கை இல்லாதவர்களையும் கேள்வி கேளுங்கள். நம் சமுதாயத்தில் வாழும் பிற மக்களோடு நம் தகவல் தொடர்பு முழுவடும் உடைந்து விட்டது. இன்றைய மாற்றம் குறித்தான எல்லா நம்பிக்கைகளையும் அரசியல் கட்சிகள் மீது இந்த சமுதாயம் குவித்து வைத்துள்ளது. அரசியல்ரீதியாக பலம் பொருந்தியவர்கள்தான் சுகமான அல்லது அபாயகரமான மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று சமுதாயத்திற்கு இப்போது தெரிந்திருக்கிறது. இதனால்தான் அரசியல் கட்சியின் மீது அனைத்து நம்பிக்கைகளையும் குவித்துவைப்பதிலிருந்து மக்கள் இன்னும் பின்வாங்கவில்லை. மக்கள் இந்த ரிஸ்க்கை தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். அரசியல் கட்சிகள் ஒவ்வொரு முறையும் தவறுகின்றன. ஆனால் அடுத்த முறையும் கட்சிகள் மீதுதான் நம்பிக்கை வைக்கிறார்கள்

உறுப்பினர்கள் வேறு திசைகளில் சென்று கொண்டிருப்பதால் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றன. சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான கருவியாக அரசியலை இனிமேலும் பார்க்க முடியாது என்று நினைத்து வெளியேறுபவர்கள்தாம் இவர்கள். அரசியல் கட்சிகளில் அவர்கள் இல்லாததால் கட்சிகளின் தார்மீக பலம் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது

அரசியல் கட்சிகளைப் புனர்நிர்மாணம் செய்து மறுவடிவம் கொடுக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து உங்கள் உள் முரண்பாடுகளை ஒதுக்கி வையுங்கள்

கடந்த 30-40 ஆண்டுகளாகவே இந்தப் போக்கைக் கண்டு வருகிறோம். இடதுசாரிகள், காந்தியவாதிகள், அம்பேத்காரிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் _ இவர்கள் அனைவரும் அவர்களுடைய மைய நீரோட்ட அரசியல் அமைப்புகளிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் வெளியேற்றத்திற்குப் பிறகு ஒரு மாற்று அரசியலுக்கான் உணர்வை மையநீரோட்ட அரசியல் இழந்து விட்டது. இந்த கட்சிகளுக்கு நீங்கள் திரும்பி அமைப்புகளை உங்கள் கையிலெடுங்கள். இறந்தகாலத்தை மறந்து விடுங்கள். புதிய அரசியலுக்காக கடுமையாக வேலை செய்யுங்கள். நம்முடைய கையாலாகாத்தனதையும், கோழைத் தனத்தையும் உணர வேண்டிய நேரமிது. தயவுதாட்சண்யமற்ற நேர்மையுடன் நம்மை நாமே மதிப்பீடு செய்துகொள்வதற்கு இந்த இருண்ட காலம்தான் சரியான நேரம்.

என்னுடைய இதழியல் பணிக்காக விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. இதழியல் நெருக்கடியிலிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால், அப்படி இல்லை என்று பெரு மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன். தலைநகரிலிருந்து சிறு மாவட்டங்கள் வரையிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிற பத்திரிக்கை ஆசிரியர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியின் தத்துவார்த்தப் புயலினால் அடித்து செல்லப்படுவதற்கு மகிழ்ச்சியுடன் தயாராயிருக்கிறார்கள். நான் அவர்களை எவ்வளவுதான் விமர்சித்தாலும், அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதழியலாளர்களாக இப்போதுதான் சாதித்திருக்கிறோம் என்று அவர்கள் உணர்கிறார்கள். கடந்த 50-60 வருடங்களாகவே ஊடகங்கள் அரசியல் அமைப்புகளுடன் ஒன்றிவிட இடையறாது முயன்று வருகின்றனர். ஹோட்டல்கள், மால்கள், சுரங்கங்கள் போன்றவற்றுக்காக உரிமங்கள் பெற்ற பிறகும் கூட ஊடகங்களின் பசி தீரவில்லை.

அவர்களின் ஆன்மாக்கள் நிறைவில்லாமல் இருந்தன. இப்போது அவர்கள் அமைதி நிலையை அடைந்துவிட்டன. இறுதியாக, அதிகார அரசியலின் அங்கமாக வேண்டும் என்கிற அவர்களின் கனவு நிறைவேற்றப்பட்டு விட்டது

இந்திய ஊடகங்கள் இன்று பரவச நிலையில் இருக்கின்றன. ஒரு காலத்தில் சொர்க்கத்தின் படிக்கட்டுகளைக் கண்டறிய வேண்டும் என்று மனிதர்கள் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று பூமியிலேயே சொர்க்கத்தைக் கண்டுவிட்டனர். இனி படிக்கட்டுகள் தேவையில்லை. நீங்கள் நான் சொல்வதை நம்பவில்லையெனில், ஏதாவது ஒரு பத்திரிக்கையைப் படியுங்கள்; அல்லது ஒரு தொலைக்காட்சியைப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட அரசியல் திட்டத்தின் மீது அவர்களுக்கு

இருக்கும் பாசத்தையும் விசுவாசத்தையும் கண்டு பிரமித்து விடுவீர்கள். பல பத்தாண்டுகள் விரக்தியில் வாழ்ந்த பிறகு அவர்கள் இன்று அடைந்திருக்கும் மகிழ்ச்சியை நீங்கள் புரிந்து கொள்ளும்போதுதான் உங்கள் வலியை இன்னும் எளிதாக எடுத்துக் கொள்வீர்கள். அலங்கரிக்கப்பட்ட நெறியாளர்கள் முன்னேப்போதும் இவ்வளவு அழகாகத் தெரிந்ததில்லை. அரசாங்கத்தைப் புகழும் பெண் நெறியாளர்கள் முன்பு இவ்வளவு அழகாக இருந்ததில்லை. இன்று பத்திரிக்கையாளர்கள் அரசாங்கமாகவும் இருக்கின்றனர்.

உங்களுக்குப் போராடும் நோக்கம் இருந்தால் செய்தித்தாளையும், தொலைக்காட்சியையும் எதிர்த்துப் போராடுங்கள். இதழியலைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உங்கள் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ளுங்கள். தாங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று பத்திரிக்கையாளர்களே நினைக்கவில்லை. மீதமிருப்பவர்களை எளிதாக வெளியேற்றி விடலாம். ஒரு தனிப்பட்ட பத்திரிக்கையாளர் பிழைத்திருப்பது எந்த விதத்தில் நிலைமையைச் சீராக்கும்? ஊடக நிறுவனங்கள் முழுமையாக வகுப்புவாதமயமாகி விட்டன. இதழியல் இந்தியாவில் வகுப்புவாதத்தைப் பரப்புகின்றது. ரத்த தாகம் எடுத்து அலைகிறது. அது ஒரு நாள் தேசத்தை ரத்தக்

களரியாக்கும். அதன் திட்டத்தை அது இன்று நிறைவேற்ற முடியாத நிலையிலிருக்கலாம். ஆனால் அதன் முயற்சிகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. அதனால்தான் இவற்றையெல்லாம் நாம் சந்திக்கும் ஒவ்வொருவருடனும் நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது. செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் அரசியல் கட்சிகளின் கிளைகளாகி விட்டன. கட்சிகளில் பொதுச்செயலாளர்களை விட தொலைக் காட்சி நெறியாளர்கள் 

அதிக செல்வாக்குடன் இருக்கின்றனர். இந்தப் புதிய அரசியல் அமைப்புகளை எதிர்த்துப் போராடாமல், மாற்று அரசியல் சிந்தனைகள் வடிவம் பெறாது. பலரும் நீ ஏன் கேள்விகள் கேட்கிறாய் என்று என்னை கேட்கும் அளவுக்கு மக்களின் சிந்தனைகளை இவர்கள் ஆக்கிரமித்திருக்கின்றனர். மையை வீசுபவர்கள் பத்திரிக்கை தொடர்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்; மையை வைத்து எழுதுபவர்கள் பிரச்சாரகர்களாகி விட்டனர்

ஆனால், வாய்ப்புகளைப் பாதுகாக்கும் முயற்சிகளை செய்து வரும் பத்திரிக்கையாளர்களை நாம் எப்படி கவனிக்காமல் போக முடியும்? இந்த வாய்ப்புகள் நாளை மங்கிப் போகலாம்; ஆனால் இந்தப் பத்திரிக்கையாளர்கள் காட்டும் வழி நமக்கு எதிர்காலத்தில் பலம் தரும். முகஸ்துதியைக் கண்டு சலிப்புற்றும், துரோகதைக் கண்டு அடங்கிபோயும் இருக்கும் இந்தப் பத்திரிக்கையாளர்கள் தூக்கத்திலிருந்து விழித்தெழும்போது, போற்றி வளர்த்த நம்பிக்கைகளும், வாய்ப்புகளும்தான் அவர்களைக் காப்பாற்றும். அதனால்தான் நான் நம்பிக்கைகளையும் வாய்ப்புகளையும் பேணிக் காக்க வேண்டும் என்று அடித்துக் கூறுகிறேன். நிகழ்காலத்தை, நம்பிக்கை அல்லது தோல்வி என்கிற முப்பட்டைக் கண்ணாடியின் ஊடாகப் பார்க்காதீர்கள். ஒரு ரயில் பாதையில் பூதாகரமான எஞ்சினுக்கு மிக அருகில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். ஓடவோ தப்பிக்கவோ முடியாது. நம்பிக்கை, தோல்வி என்று தேர்வு செய்யும் நிலையில் நாம் இல்லை. உங்களைக்  கடமைக்குள் ஆழ்த்திக்கொள்ள வேண்டிய நேரம். நமக்கு நேரம் குறைவாகத்தான் இருக்கிறது.. அது வெகு வேகமாகக் குறைந்து கொண்டிருக்கிறது


Monday, March 20, 2017

வேண்டுதல் - ஃப்ரான்சிஸ்கோ எக்ஸ் அலர்கோன்

வேண்டுதல்
- ஃப்ரான்சிஸ்கோ எக்ஸ் அலர்கோன் ( Francisco X. Alarcón ) 
தமிழில்: ரவிக்குமார் 

எனக்குக் கூட்டாளியாக ஒரு கடவுள்வேண்டும்
பழிக்கப்படும் வீடுகளில்
இரவுகளைக் கழித்து
சனிக்கிழமைகளில் 
தாமதமாய் விழித்தெழும் கடவுள்

வீதிகளில் விசிலடித்தபடி 
நடந்துசெல்லும் கடவுள்
காதலியின் அதரங்களின் முன்னால்
நடுங்கும் கடவுள்

தியேட்டர்களின் முன்னால் கியூவில் நிற்கிற
தேனீர்க் கடைகளில் 
டீ குடிக்கிற கடவுள்

காசநோய்ப் பிடித்து
ரத்தமாய்த் துப்புகிற
பஸ் டிக்கெட்டுக்கும் காசு இல்லாத
கடவுள்

ஆர்ப்பாட்டம் ஒன்றில்
போலீஸ்காரனின் தடியடியில்
மயங்கிவிழுகிற 
கடவுள்

சித்திரவதைக்குப் பயந்து
சிறுநீர் கழிக்கிற
கடவுள்

எலும்பின் கடைசிவரை 
காயம்பட்டு
வலிதாங்காமல் 
காற்றைக் கடிக்கிற
கடவுள்

வேலையில்லாத கடவுள்
வேலைநிறுத்தம் செய்கிற கடவுள்
பசித்த கடவுள்
தலைமறைவாக இருக்கும் கடவுள்
நாடுகடத்தப்பட்ட கடவுள்
கோபங்கொண்ட கடவுள்

சிறையில் வாடும் கடவுள்
மாற்றத்தை விரும்பும் கடவுள்

எனக்கு வேண்டும்
கடவுள்மாதிரியே இருக்கும்
ஒரு கடவுள் 

ஃப்ரான்சிஸ்கோ எக்ஸ் அலர்கோன் ( Francisco X. Alarcón ) (1954-2016) : ஸ்பானிஷ் மொழியில் எழுதிய மெக்ஸிக-அமெரிக்க கவிஞர்

Thursday, March 9, 2017

பாகுபாட்டை நியாயப்படுத்தும் யுக்தி



ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான தனது பாகுபாட்டை நியாயப்படுத்த ஆதிக்க சமூகம் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட பிரிவினரில் திறமையற்றவர்களை அங்கீகரித்து அவர்களை அப்பிரிவினரின் குறியீடாகக் காட்டுவது. பின்னர் அவர்கள் செய்யும் தவறுகளைப் பெரிதுபடுத்துவதன்மூலம் 'இவர்கள் எல்லோருமே இப்படித்தான் ' என ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான தனது பாகுபாட்டை நியாயப்படுத்துவது. இது ஆதிக்க சமூகம் கையாளும் நுட்பமான தந்திரம் 

ஆதிக்க சமூகம் அங்கீகரிக்கும் தவறானவர்களைத் தமது குறியீடாக ஏற்க மறுப்பதும், அவர்கள் செய்யும் தவறுகளை தயக்கமின்றி விமர்சிப்பதும்தான் இதை எதிர்கொள்வதற்கு ஒடுக்கப்பட்ட பிரிவினர் கையாளவேண்டிய செயல்தந்திரம்.இது இன, மொழி, மத, சாதி, பாலின ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் அனைவருக்கும் பொருந்தும். 

Tuesday, March 7, 2017

மகளிர் தினத்தில் அம்பேத்கர்

 

மகளிர் உரிமைக்காக சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் அம்பேத்கர். நான்கு ஆண்டுகாலம் போராடியும் இந்து சட்ட மசோதாவை சட்டமாக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் அவர் தனது பதவியைத் துறந்தார். 

தான் பதவி விலகியதற்கான காரணங்களை விளக்கி 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாளன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்: 

" To leave inequality between class and class, between sex and sex, which is the soul of Hindu Society untouched and to go on passing legislation relating to economic problems is to make a farce of our Constitution and to build a palace on a dung heap." 

என்று அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். அது இன்றும் பொருத்தமாகவே இருக்கிறது. 

இந்திய அரசியல் வரலாற்றில் மகளிரின் உரிமைகளுக்காகப் பதவி விலகிய அம்பேத்கரை சர்வதேச மகளிர் தினத்தில் நினைவுகூர்வோம்.


Monday, March 6, 2017

ரவிக்குமார் கவிதைகள்

ரவிக்குமார் கவிதைகள்

மொழி தோற்றுப்போகும் என ஒப்புக்கொள்கிறவர்களால் மட்டுமே 
கேட்கமுடியும் 
மௌனத்தின் உரையாடலை

2
நேசம் என்பதொரு சொல்
நேசம் என்பதொரு உணர்வு
நேசம் என்பதொரு மாயை
நேசம் என்பதொரு வர்த்தகப் பெயர்

3
அடைத்துக் கிடக்கும்
வீட்டுக்குள்ளும்
வருகிறது
போகிறது
காற்று

4

கூடடையும் பறவை 
துயரம்
பழக்கப்பட்ட மரம்
இதயம்