Friday, April 22, 2016

உலக புத்தக நாள்: சிந்திக்க ஒரு செயல்திட்டம் - ரவிக்குமார்



( 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை ) 

 ஒரு நாட்டின் அறிவு வளர்ச்சி என்பது கல்வித்துறையில் அது எடுக்கும் நடவடிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல. இதில் முக்கியமாகப் பங்காற்றும் இன்னொரு துறை நூலகத்துறையாகும். புத்தகங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அவற்றை பலரும் படிப்பதற்கு வசதி செய்து தரவேண்டிய அவசியமும் உருவாகி விட்டது. துவக்கத்தில் அனைவருக்கும் பொதுவாக இருந்த அறிவுபெறும் உரிமை இடைக்காலத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் என கட்டுப்படுத்தப்பட்டபோது புத்தகங்களின் உருவாக்கம் பாதிப்படைந்தது. நூல்களை அனைவரும் படிப்பதற்கு ஏற்ப பொது இடங்களில் வைத்து பராமரிக்கும் வழக்கம் உலகில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது. இந்தியாவில் தொண்மையான அறிவுக்கு அடையாளமாகக் கூறப்படும் நாலந்தா பல்கலைக்கழகத்தில் லட்சக்கணக்கான நூல்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அதை பலரும் சென்று படிப்பதற்கு வசதி செய்யப்பட்டிருந்ததாகவும் அறிகிறோம்.

 பொது நூலகம் என்கிற கருத்தாக்கம் உலக அளவில் உருப்பெற்று வளர்ச்சி அடைவதற்கு முன்பே இந்தியாவில் அது வலுவாக இருந்து வந்திருக்கிறது என்றபோதிலும், இடைக்காலத்தில் இந்த பெருமையை நாம் தவற விட்டுவிட்டோம். உலக அளவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நூலக துறையில் ஏற்பட்ட மறுமலர்ச்சி நமது நாட்டையும் தொட்டு நம்மை விழிக்க வைக்கும் வரை நாம் இதில் பின்தங்கியே இருந்து வந்தோம். இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எடுத்த சில நடவடிக்கைகள்தான் நம்முடைய பெருமையை மீட்டுக்கொள்வதற்கு வழி வகுத்தன. லார்டு கர்ஸான் ஆட்சிக்காலத்தில் 1902ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 'இம்பீரியல் லைப்ரரி ஆக்ட்' தான் கல்கத்தாவிலிருந்த பொது நூலகத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நூலகமாக உருவாக்கியது. சுதந்திரத்திற்கு முந்தைய நூலக வரலாற்றில் பரோடாவில் மன்னராக இருந்த சாயாஜிராவ் கெய்க்வாட் என்பவர் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது நூலகம் ஒன்றை உருவாக்குவதற்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற நூலகரான எம்.ஏ.போர்டன் என்பவரை அழைத்து வந்தது ஒரு முக்கியமான நிகழ்வாகும். அதன் பிறகு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியா முழுவதும் நடத்திய நூலகம் தொடர்பான பல்வேறு மாநாடுகள் இதில் முக்கியப் பங்காற்றியுள்ளன. 1934ஆம் ஆண்டு சென்னையில்தான் அகில இந்திய பொது நூலகங்களுக்கான முதல் மாநாடு நடத்தப்பட்டது.

 நாடு சுதந்திரமடைந்ததற்குப் பிறகு 1948ஆம் ஆண்டு பொது நூலக சட்டம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இப்படியரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று பாடுபட்டவர் நூலக இயக்கத்தின் தந்தை என்று சொல்லப்படுபவரும், தமிழ் நாட்டைச் சேர்ந்தவருமான எஸ்.ஆர்.ரங்கநாதன் என்பவராவார். அவர் நூலகம் பற்றி உருவாக்கிய ஐந்து அடிப்படை விதிகள் உலக அளவில் நூலக இயக்கத்தின் புனித கட்டளைகளாக கருதப்படுகின்றன. புத்தகங்கள் பயன்படுத்தப்படுவதற்கானவை என்பதுதான் அவர் உருவாக்கிய முதல் விதி. நூலகம் என்பது புத்தகங்களை பாதுகாத்து வைக்கிற இடம் என்று எண்ணியிருந்ததற்குப் பதிலாக புத்தகங்களை எளிதாக அணுகுவதற்கான இடம்தான் நூலகம் என்று அது குறித்த அணுகுமுறையை மாற்றி அமைத்தவர் ரங்கநாதன். ஒவ்வொரு வாசகருக்குமான புத்தகம் என்பது அவரது இரண்டாவது விதி. எந்தவொரு வாசகரும் அவர் விரும்புகிற புத்தகத்தை நூலகத்தில் பெறுவதற்கான வசதி செய்யப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். ஒவ்வொரு புத்தகத்துக்கும் அதற்கான வாசகர் இருப்பார் என்பது ரங்கநாதனின் மூன்றாவது விதியாகும். பயன் இல்லாத புத்தகம் என்று எதுவும் இருக்க முடியாது. எந்தவொரு புத்தகத்துக்கும் அதை படிப்பதற்கான வாசகர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவர்களை கண்டுபிடித்து நூலகத்தை நோக்கி ஈர்ப்பதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்பதே அவர் வலியுறுத்தியது. வாசகரின் நேரத்தை மிச்சப்படுத்துங்கள் என்பது அவரது நான்காவது விதி. வாசகர் தனக்கு வேண்டிய புத்தகத்தை எளிதாக பெறும் விதத்தில் நூலக செயல்பாடு இருக்க வேண்டும். அதற்கேற்ப அட்டவணைப்படுத்துதல், காட்சிப்படுத்துதல் செய்யப்பட வேண்டும் என்பதே அவர் வலியுறுத்தியது. நூலகம் என்பது வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு அமைப்பு என்பது ரங்கநாதன் கூறிய கடைசி விதியாகும். காலத்துக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப நூலக முறையை மாற்றி அமைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவர் வலியுறுத்திய விஷயமாகும்.

 உலக அளவில் நூலகத் துறைக்கு பங்களிப்பு செய்த மாமனிதர்களைக் கொண்ட தமிழகம் இன்று நூலகத் துறையில் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், நாம் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. இந்தியாவிலேயே பொது நூலக சட்டத்தைக் கொண்டுவந்த மாநிலங்களில் தமிழ்நாடுதான் முதன்மையானதாகும். பொது நூலகத்துக்கென்று தனியாக இயக்ககம் 1972ஆம் ஆண்டிலேயே இங்கு உருவாக்கப்பட்டு விட்டது. இப்போது ஏறத்தாழ நான்காயிரம் நூலகங்கள் தமிழக அரசால் பராமரிக்கப்படுகின்றன. முப்பது மாவட்ட நூலகங்கள், 1567 கிளை நூலகங்கள், 1827 கிராமப்புற நூலகங்கள், 487 பகுதி நேர நூலகங்கள், 12 நடமாடும் நூலகங்கள், ஒரு மைய நூலகம் என தமிழகத்தின் நூலகத்துறை மிகப்பெரிய கட்டமைப்போடு செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இதற்காக பலகோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இப்போது உலகத்தரம் வாய்ந்த நூலகம் ஒன்று சென்னையில் சுமார் இருநூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.

 கிராமப்புறங்களில் உள்ளவர்களும் நூலக வசதியை பெறவேண்டும் என்பதற்காகவே அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான நூலகம் ஒன்றை உருவாக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நூலகங்களுக்கு வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகபட்சம் அறுநூறு படிகள் என இருந்தது. நான் சட்டப்பேரவையில் எனது கன்னி உரையை ஆற்றும்போது இந்தப் படிகளை 1500ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அந்த கோரிக்கையை பரிசீலித்து ஆயிரம் படிகள் வாங்கப்படும் என உடனடியாகவே முதல்வர் கலைஞர் அறிவிப்பு செய்தார். தமிழக பதிப்புச் சூழலை இந்த அறிவிப்பு மிகப்பெரிய அளவில் ஊக்குவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி கிராமப்புற நூலகங்களுக்காக ஐயாயிரம் படிகள் வரை இப்போது ஒரு நூலை வாங்குகிறார்கள். இதனால் பலப் பதிப்பாளர்கள் புதுவாழ்வு பெற்றுள்ளனர்.

 நூலகத் துறையை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு நடவடிக்கைகள் பலவற்றை எடுத்தாலும் அது சோர்ந்து போய்தான் கிடக்கிறது. இதற்கு அடிப்படை காரணம் இளைய தலைமுறையினர் நூலகங்களை பயன்படுத்துவது குறைந்து கொண்டு போவதுதான். நம்முடைய கல்வி முறை மாணவர்களை நூலகங்களை நோக்கி செலுத்துவதில்லை. நம் வீட்டிலிருக்கும் பிள்ளைகள் பொது நூலகம் ஒன்றுக்கு கடைசியாக எப்போது போனார்கள் என்று யோசித்துப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரிந்துவிடும். பள்ளிக் கல்வி துறையோடு நூலகத்துறையும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. வெறும் நிர்வாகம் என்கிற அளவில் மட்டுமல்லாது பள்ளிக் கல்வியின் அங்கமாக நூலகத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சமச்சீர் கல்வி போன்ற புரட்சிகரமான அடிப்படை மாறுதல்கள் செய்யப்படுகின்ற இந்த நேரத்தில் இதற்கான முன்முயற்சியை எடுப்பதற்கு அரசு முன்வர வேண்டும்.

 நமது மாணவர்களின் அறிவை மேம்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதைவிடவும் அதிகமான பங்கு நூலகர்களுக்கு உண்டு. துரதிஷ்டம் என்னவென்றால் நம்முடைய ஆசிரியர்களின் தரம் இப்போது வீழ்ச்சி அடைந்திருப்பது போலவே நூலகர்களின் தரமும் படுபாதாளத்தில் கிடக்கிறது. நூலகர்கள் மனது வைத்தால் தமிழ்நாட்டில் ஒரு சமூக புரட்சியை ஏற்படுத்திவிட முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. ஒவ்வொரு நூலகரும், ஒரேயொரு வாசகரையாவது சிந்திப்பவராக மாற்ற முடிந்தால் தமிழகத்தில் அறிவுச் சூழல் எவ்வளவோ மேம்பட்டு விடும். தற்போது இருக்கும் நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்களை அந்த நூலகத்தில் இருக்கும் நூலகர் முடிவு செய்ய இயலாது என்றபோதிலும், ஒரு நூலகர் நினைத்தால் தனது நூலகத்துக்குள் தான் சிறந்த நூல் என்று நம்புகிற நூல்களையெல்லாம் கொண்டு வந்துவிட முடியும். இதற்காக அவர் தனது கைப்பணத்தை செலவு செய்ய வேண்டிய தேவையே இல்லை. நூலகங்களை மேம்படுத்த வேண்டுமென்றால் முதலில் நூல்களை நேசிக்கிறவர்களாக நூலகர்கள் இருக்க வேண்டியது அவசியம். அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்று அரசு சிந்திக்க வேண்டும்.

 தமிழக நூலகத் துறையை மேம்படுத்துவதற்கு தேசிய அறிவுசார் ஆணையம்( National Knowledge Commission )  நூலகங்கள் குறித்து மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகளை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட தேசிய அறிவுசார் ஆணையத்தின் பத்து பரிந்துரைகளும் செயல்படுத்தப்படாமலேயே கிடக்கின்றன. இதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும் என்று இல்லை. தமிழக அரசு மாநில அளவில் உடனடியாக அந்த பரிந்துரைகளை செயல்படுத்த முடியும். நூலகங்களுக்காக மாநில அளவில் ஆணையம் ஒன்றை உருவாக்குவது; மாநிலத்திலுள்ள பொது மற்றும் தனியார் நூலகங்கள் அனைத்துக்குமான கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்வது; நூலகர்களுக்கு நவீன தொழில் நுட்பத்தில் பயிற்சி அளிப்பது; தேவையான நூலகர்களை நியமிப்பது; அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வது; நூலக மேலாண்மையில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது; பொது மக்களை பெருமளவில் நூலக இயக்கத்தில் பங்கேற்கச் செய்வது; தனியாரின் சேகரத்தில் உள்ள நூல்களை அவரிடமிருந்து பெற்று பொது நூலக இயக்கத்தை வலுப்படுத்துவது; நூலகங்களை பராமரிப்பதில் தனியார் துறையை பங்கேற்கச் செய்வது போன்ற விஷயங்களைத்தான் தேசிய அறிவுசார் ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இவற்றைச் செய்வதில் தமிழக அரசுக்கு எந்தவித தடையும் இருக்கப்போவதில்லை.

         மத்திய அரசு ராஜாராம் மோகன்ராய் அவர்களின் பெயரில் திட்டம் நூலகங்களுக்கான திட்டம் ஒன்றை தற்போது செயல்படுத்தி வருகிறது. அதைப்போல மாநில அளவிலான திட்டம் ஒன்றை உருவாக்குவது அவசியம். இன்று பல்வேறு மாநிலங்களிலும் நூலகங்களில் நல்ல நூல்கள் இடம் பெறுவதற்கு ராஜாராம் மோகன்ராய் பவுண்டேஷனே காரணமாக உள்ளது. அதைப்போல திட்டம் ஒன்றை உருவாக்கிட வேண்டும். எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இதற்கான அறிவிப்பை செய்தால் சிறப்பாக இருக்கும்.

 தமிழக அரசின் ஊக்குவிப்பினால் பதிப்பாளர்கள் இன்று ஓரளவுக்கு பயனடைந்துள்ளனர் என்றபோதிலும், நல்ல பதிப்பாளர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை தமது நூல்களை விற்பனை செய்வதற்கு உரிய கட்டமைப்பு வசதி இல்லாததுதான். நூல்களை வாங்கி விற்கும் விற்பனையாளர்கள் ஒழுங்காக பணம் தராமல் போகும்போது பதிப்பாளர்கள் நொடித்துப்போக நேர்கிறது. இதை தடுத்தால்தான் நல்ல நூல்கள் வெளிவருவதற்கு வாய்ப்பு ஏற்படும். சில பதிப்பகங்கள் ஓட்டல்களில்கூட தமது புத்தகங்களை காட்சிக்கு வைத்துள்ளன. இது ஓரளவுக்கு பயன் தந்திருக்கிறது என்றாலும்கூட இதிலும் பல இடர்பாடுகள் இருக்கின்றன. 

சாப்பிடுவதற்காக வரும் இடங்களில் நூல்களை விற்பனைக்கு வைப்பதைவிடவும், படிப்பதற்காக வருகிற இடங்களில் நூல்களை விற்பனைக்கு வைத்தால் நிச்சயம் நல்ல பலன் உண்டாகும். தாம் விரும்பும் நல்ல புத்தகங்களை எப்படி வாங்குவது என்று தெரியாததால்தான் வாசகர்கள் பலர் நூலகங்களில் புத்தகங்களை களவாடுகிற நிலை ஏற்படுகிறது. நூலகங்களிலேயே நல்ல புத்தகங்களை விற்பனைக்கு வைத்தால் நிச்சயம் நூலகர்களுக்கும் அது உதவியாகத்தான் இருக்கும். தற்போது கன்னிமாரா நூலகத்தில் நிரந்தர புத்தக கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே முறையை பின்பற்றி கிளை நூலகங்கள் வரை நாம் இத்தகைய விற்பனை ஏற்பாடுகளை செய்யலாம். பல நூலகங்களில் புத்தகங்களை வைப்பதற்கே இடமில்லாத சூழல் இருக்கிறது. இதில் விற்பனை மையங்களை எப்படி நடத்துவது என்ற கேள்வி எழலாம். இரண்டு மூன்று ஃஷெல்புகளை மட்டும் இதற்கென ஒதுக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை காட்சிப்படுத்தலாம். புதிதாக வரும் நூல்களுக்கென ஒரு ஃஷெல்பை ஒதுக்கினால் போதும். இதற்கான கட்டமைப்பு வசதிகளை பதிப்பாளர்களே செய்து தர முன்வருவார்கள். எத்தகைய நூல்களை விற்பனை செய்வது என்பதை ஒரு குழுவை நியமித்து முடிவு செய்யலாம். புத்தகங்களை விற்று அதற்கான தொகையை உரிய விதத்தில் சேர்ப்பது என்பது நூலகர்களுக்கு கூடுதல் பணிச்சுமையாக இருக்கும். இந்த சிக்கலை தீர்ப்பதற்கு அங்கே பணத்துக்கு விற்பனை செய்யாமல் ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் தொகையை செலுத்துமாறு கூறலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கேற்ப இந்த திட்டத்தை செயல்படுத்த முனைந்தால் எளிமையான வழிகளை கண்டறிவது சிரமமல்ல.

No comments:

Post a Comment