Friday, March 25, 2016

‘தேர்தல் சூட்டில் உருகும் பூமி’’ ரவிக்குமார்


( 2009 பாராளுமன்றத் தேர்தலின்போது ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை ) 

கோடை வெயிலின் சூடு கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டிருக்கிறது. இதில் தேர்தல் உஷ்ணமும் சேர்ந்து சூட்டைக்கிளப்ப மண்டை காய்ந்துகொண்டிருக்கிறது இந்திய பொதுஜனம். 

ஏற்கனவே கொதித்துக் கிடக்கும் பூமி இந்தக் கூடுதல் வெப்பத்தால் தகிப்பு ஏறித் தவிக்கிறது. தேர்தல் செலவைக் குறைக்கவும், வன்முறை நிகழாமல் தடுக்கவும் தேர்தல் சமயத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது. அந்த விதிமுறைகள் மீறப்படுகின்றனவா என்று கண்காணிக்க பெரிய படையே கிளம்பியிருக்கிறது. ஆனால் அவர்கள் கண்களிலெல்லாம் மண்ணைத் தூவிவிட்டு நமது வேட்பாளர்கள் வாக்காளர்களை பாடாய்படுத்துவது நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.

தேர்தல் காலத்தில் பிரச்சாரம் செய்வதற்கான காலவரம்பை எல்லா வேட்பாளர்களுமே மீறத்தான் செய்கிறார்கள். அதுபோலவே தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள செலவு வரம்பை சுயேச்சைகள் கூட பின்பற்றுவதில்லை. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி பிரச்சாரம் செய்தால் நமது நாட்டின் தேர்தல் இந்தளவுக்கு ‘காஸ்ட்லியாக’ மாறியிருக்காது. என்னதான் தேர்தல் ஆணையம் கண்ணில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு கண்காணித்தாலும் அதை ஏமாற்றுகிற திறமை நம்முடைய வேட்பாளர்களுக்கு இருக்கிறது என்பதுதான் உண்மை.

தேர்தல் காலம் வந்துவிட்டாலே நமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடும். சாதாரண குக்கிராமங்களில்கூட சாரிசாரியாக வாகனங்கள் புழுதிகிளப்பும். இதுவெல்லாம் நமக்கு பழக்கமானவைதான். வரிசை வரிசையாக அணிவகுக்கும் வாகனங்களைப் பார்த்து மக்கள் சந்தோஷப்படுகிறார்களா? அல்லது எரிச்சலடைகிறார்களா? இப்படியெல்லாம் போய் ஓட்டு கேட்டால்தான் மக்கள் போடுவேன் என்று சொல்கிறார்களா? இவைப்பற்றி அரசியல் கட்சிகள் ஏன் சிந்திக்கக்கூடாது? அரசியல் தலைவர்களிடம் கேட்டால், ‘‘அவங்கள நிறுத்தச் சொல்லுங்க. நாங்க நிறுத்துறோம்’’ என்று கூலாகச் சொல்லிவிடுவார்கள்.

கணக்கிலடங்கா வாகனங்களில் சென்று வாக்குச் சேகரிப்பது அரசியல் கட்சிகள் தமக்கிருக்கும் வலிமையை காட்டுவதற்கு பயன்படுத்துகின்ற ஒரு யுக்தியாகும். அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் இந்தச் சமயத்தில்தான் வண்டி, வாகனங்களில் ஏறிக்கொண்டு ஊரை வலம்வந்து தங்களது செல்வாக்கை காட்டமுடியும் என்று நம்புவதால் இத்தகைய சந்தர்ப்பத்தை அவர்கள் தவறவிடுவதில்லை. முன்பெல்லாம் அம்பாசிடர் கார்கள்தான் அதிகமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும். இப்போது அதெல்லாம் அவுட் ஆஃப் பேஷன் ஆகிவிட்டது. சுமோ, ஸ்கார்பியோவுக்கு குறைந்து வேறு எந்த வாகனத்திலும் தொண்டர்கள் ஏறுவதில்லை. வாகன அணிவகுப்பைப் பார்த்து பிரமித்து வாய்பிளந்து நிற்கின்ற ஏழை மக்கள் அந்த ஆச்சரியத்திலேயே வாக்களித்து விடுவார்கள் என அரசியல் கட்சிகள் நம்புகின்றன போலும்.

தேர்தல் ஆணையம் தேர்தல் பிரச்சாரத்திற்கு எவ்வளவு வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி சில வரையறைகளை வகுத்திருக்கிறது. வேட்பாளர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு போகும்போது தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு அருகில் மூன்று வாகனங்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரக் காலத்திலும் ஏராளமாக வாகனங்களை கொண்டு செல்வதற்கு தேர்தல் ஆணையம் கடுமையானக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வாகனங்கள் முறையாக தேர்தல் அதிகாரியின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். அந்த அனுமதி ரசீதை வாகனத்தின் முகப்பில் ஒட்டிவைக்க வேண்டும். அப்படி அனுமதிச்சீட்டு இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றெல்லாம் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

ஒரு பாராளுமன்றத் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மாநில, தேசிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நாற்பது வாகனங்கள் வரை தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு இருபது வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த அளவைவிடவும் தாண்டி வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க கிராம அளவில்கூட தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய கட்டுப்பாடுகள் வரவேற்கப்படவேண்டியவைதான். தேர்தல் செலவைக் குறைப்பது என்ற நோக்கத்தில் மட்டும் இந்தக் கட்டுப்பாடுகளை பார்க்கக்கூடாது. நமது ஜனநாயக அமைப்பை கட்டிக்காப்பாற்றுகிற மாபெரும் பொறுப்பும் இந்த கட்டுப்பாடுகளில் அடங்கியிருக்கிறது.

தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகளில் வாகனங்கள் பற்றிய கட்டுப்பாடு மிகவும் முக்கியமானதாகப் படுகிறது. ஏனென்றால், புவி வெப்பமடைந்து வரும் பிரச்சனை சர்வதேச பிரச்சனையாக மாறியுள்ள இன்றையச் சூழலில் கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. கார்பன் டை ஆக்ஸைடை அதிகம் வெளியேற்றுவதில் வாகனங்கள் பெருமளவு பங்கு வகிக்கின்றன என்பது நமக்குத் தெரியும். தேர்தல் காலத்தில் வாகனப் பயன்பாடு பலமடங்கு கூடிவிடுவதை நாம் அறிவோம். இப்படி பெருமளவில் வாகனங்கள் பயன்படுத்தப்படும்போது ஏராளமாக கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது. உலகில் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தை வகித்து வருகிறது. அமெரிக்காவுக்கு முதலிடம். சீனா இரண்டாவது இடத்திலிருக்கிறது. ரஷ்யாவுக்கு மூன்றாவது இடம். நமது நாட்டில் வாகனக் கட்டுப்பாட்டுக்கு தீவிர முயற்சி எடுக்கப்படாவிட்டால் இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடிப்பது வெகுதொலைவில் இல்லை.

அங்கீகாரம்பெற்ற கட்சிக்கு நாற்பது வாகனங்கள், அங்கீகாரம் பெறாத கட்சிக்கு இருபது வாகனங்கள் என்று தேர்தல் ஆணையம் விதிமுறை வகுத்திருந்தாலும், அந்த வாகனங்களின் தன்மைக் குறித்து அது எந்த வரையறையையும் வகுக்கவில்லை. கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுவது குறித்த கட்டுப்பாடுகள் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இங்கு பயன்படுத்தப் படுகின்ற நான்கு சக்கர வாகனங்கள் எத்தகைய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது குறித்து தேசிய வாகன எரிபொருள் கொள்கை ஒன்று 2003ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற வாகன தர கட்டுப்பாட்டு முறை இங்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வாகனங்கள் மட்டுமே இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் என அரசு எச்சரித்தது. ஈரோ&1 தர அளவுகோல் இந்திய அளவில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது ஈரோ-3 தர அளவுகோல்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் ஏராளமாக வாகனங்கள் தேவைப்படுவதால் ஓட்டை உடைசல் வண்டிகளைக்கூட அப்போது வாடகைக்கு விட்டுவிடுவார்கள். அத்தகைய வாகனங்கள் ஏராளமாக எரிபொருளை குடிப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழலையும் மாசு படுத்துகின்றன. ஏற்கனவே நமக்கு எரிபொருள் பற்றாக்குறை இருக்கிறது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்தால் நமது பொருளாதாரம் தள்ளாட ஆரம்பித்து விடுவதை நாம் அறிவோம். இப்போது நாள் ஒன்றுக்கு இருபத்தேழு லட்சத்து இருபத்திரெண்டாயிரம் பேரல்கள் எண்ணெய்யை நாம் பயன்படுத்தி வருகின்றோம். இந்த தேர்தல் காலத்தில் இந்தப் பயன்பாடு பல மடங்கு கூடும். இதனால் நமது எண்ணெய் இறக்குமதியின் அளவும் அதிகரிக்கும். அது அன்னிய செலாவணி இழப்பில் கொண்டுபோய் விடும். ஆக, வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டுமென்பது வெறும் ஆடம்பரம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது நமது அரசியல் கட்சிகள் தம்மை விபரம்தெரிந்த கட்சிகளாக காட்டிக்கொள்வதற்கு குளோபல் வார்மிங் போன்ற பிரச்சனைகளையும்கூட பேசுகின்றன. இந்த நிலையில், வாகனப் பயன்பாடு குறித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை பிறழாமல் கடைபிடிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் சுற்றுச்சூழல் அமைப்புகள் வலியுறுத்த வேண்டும். புவி வெப்பமடைவது பற்றிய பிரச்சனைகளை இந்த அரசியல் கட்சிகள் எப்படி அணுகப்போகின்றன? தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதுகுறித்து எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ளப்போகின்றன? என்பதைப் பற்றியெல்லாம் தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறவேண்டும் என அரசியல் கட்சிகளிடம் சுற்றுச்சூழல் அமைப்புகள் வலியுறுத்த வேண்டும். சுற்றுச்சூழல் அமைப்புகள் ஒன்றிணைந்து இப்படியான பிரச்சனைகள் குறித்த மாற்றுத் தேர்தல் அறிக்கை ஒன்றை முன்வைத்தாலும் நல்லது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது வாகன பயன்பாடு குறித்து தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மேலும் வலிமைப்படுத்தப்பட வேண்டும். வாகனங்களுக்கு அனுமதி பாஸ் வழங்கும்போது அந்த வாகனங்கள் கார்பன் டை ஆக்ஸைடு பற்றிய தர அளவுகோல்களை நிறைவேற்றுகின்றனவா என்பதை ஆராய்ந்து அதன்பிறகே அனுமதி வழங்கவேண்டும். இதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைகளையும், உதவியையும் தேர்தல் ஆணையம் பெற்றுக்கொள்ளலாம்.

தேர்தல் நேரத்தில் ஊழல், வன்முறை ஆகியவை தலையெடுத்துவிடக் கூடாது. அப்படி அவை தலைதூக்குமேயானால் அது நமது ஜனநாயகத்தை மாசுபடுத்திவிடும் என்று விழிப்போடு தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியதுதான். ஜனநாயகம் மாசு படாமல் பாதுகாக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு நமது சுற்றுச்சூழல் மாசு படாமல் காக்கவேண்டியதும் அவசியம். இதை தேர்தல் ஆணையமும், நமது அரசியல் தலைவர்களும் கருத்தில் கொள்வார்களா?

Saturday, March 19, 2016

ஆணவக் கொலைகள் : ஆட்சியைப் பிடிக்க விரும்புவோர் அளிக்கவேண்டிய வாக்குறுதி - ரவிக்குமார்



ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன் அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பொன்ற 23.02.2015 அன்று வழங்கியிருக்கிறார். மன்மீத் சிங் எதிர் ஹரியானா மாநிலம் என்ற வழக்கில் ( WP 26734/2014 dt 23.02.2015 )தீர்ப்பளித்த நீதியரசர் அவர்கள் காவல்துறைக்கு சில முக்கியமான வழிகாட்டுதல்களை ஆணையாகப் பிறப்பித்திருக்கிறார். அந்தத் தீர்ப்பில் ஊடக நிறுவனங்களுக்கும் ஒரு அறிவுரையை வழங்கியிருக்கிறார். 

மன்மீத் சிங் என்பவர் தனது மனைவியைப் பிரித்துக்கொண்டுபோன அவரது பெற்றோர் அவரைப் படுகொலை செய்துவிட்டனர் என்று தொடுத்த வழக்கில் பின்வரும் உத்தரவை நீதியரசர் கே.கண்ணன் பிறப்பித்திருக்கிறார்:

1. ஆணவக் கொலைகள் அதிகமாக நடக்கும் மாவட்டங்களில் கலப்புத் திருமணம் செய்துகொள்வோரை ஆதரிக்கவும் அவர்களுக்கு ஆலோசனைகளை நல்கவும் ; கலப்புமணம் நடந்தால் கிராமத்தில் பதற்றம் ஏற்படாமல் அமைதியை ஏற்படுத்தவும்,  ஒவ்வொரு கிராமத்திலும் ‘மக்களின் நண்பர்கள் ‘ என்ற பெயரில் அங்கிருக்கும் முற்போக்காளர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும். 

2. ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் ஆணவக் கொலை குறித்த அச்சுறுத்தல்கள் தொடர்பான புகார்களைப் பெறுவதற்கென தனிப் பிரிவுகள் ஏற்படுத்தவேண்டும்.

3. கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதிகளில் ஆணையோ பெண்ணையோ அவர்களின் ஒப்புதலின்றி அவர்களின் பெற்றோருடன் அனுப்பக்கூடாது.

4. ஆணவக் கொலை தொடர்பான வழக்கை எஸ்.எஸ்.பி ஒருவரின் நேரடி மேற்பார்வையில் டி.எஸ்.பி அந்தஸ்தில் உள்ளவர்தான் விசாரிக்கவேண்டும். 

5.பழமையான மரபுகள் கலப்பு மணத்துக்குத் தடையாக இருக்குமெனில் தனி மனிதரின் சுதந்திரத்துக்குத்தான் காவல்துறை முன்னுரிமை அளிக்கவேண்டும்.

6. திருமணப் பதிவு அலுவலகங்களில் பதிவின்போது தம்பதியினரின் பெற்றோர் உடன்வரவேண்டும் எனக் கட்டாயப் படுத்தக்கூடாது. 

ஊடகங்கள் சமூகப் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தியிருக்கும் நீதியரசர் கே.கண்ணன் “ ஊடகங்களில் வெளியிடப்படும் வரன் தேடும் விளம்பரங்கள் பல சாதியப் பெருமிதத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. வருமானத்தை முதன்மையாகக் கருதாமல் அத்தகைய விளம்பரங்களை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்கவேண்டும் எனவும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் நிலையில் நாங்கள் ஆட்சிக்குவந்தால் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதுபோன்ற ஆணைகளைப் பிறப்பிப்போம் என இந்தத் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பார்களா? 

Friday, March 18, 2016

காசு கொடுத்து சூனியம் வைத்துக்கொண்ட கட்சிகள் - ரவிக்குமார்



தமிழ்நாட்டில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க முடியவில்லை என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் அளவுக்கு 'தேர்ச்சி' பெற்றவையாக இங்கே இருக்கும் 'பெரிய' கட்சிகள் உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் இது உச்சநிலைக்குச் சென்றுவிட்டது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது கட்சி சாராதவர்களைக் கெடுத்ததுமட்டுமின்றி கட்சியின் ஊழியர்களையும் காவுகொண்டுவிட்டது. இதனால் கட்சிப் பிடிமானம் கொண்ட வாக்காளர்களின் ( Committed Voters ) அளவு கணிசமாகக் கரைந்துவிட்டது. 

முன்பெல்லாம் இடைத்தேர்தலைத்தான் வாக்காளர்களுக்கு பணம் அதிக அளவில் கொடுக்கப்படும் தேர்தலாகச் சொல்வார்கள். ஆனால் இப்போதோ பொதுத் தேர்தலும் அப்படி ஆகிவிட்டது. கட்சிசாராத வாக்காளர்கள் மட்டுமின்றி கட்சியின் ஊழியர்களும்கூட தேர்தலைப் பணம் ஈட்டும் வாய்ப்பாகப் பார்க்கும் நிலைமை உருவாக்கப்பட்டுவிட்டது. இதனால் கட்சி ஊழியர்களிடம் அரசியல் பிடிமானம் தளர்ந்து சந்தர்ப்பவாதம் தலைதூக்கியிருக்கிறது. கட்சி வாக்குகள் கரைந்துபோய்விட்டதை இடைத் தேர்தல்களில் துலக்கமாகப் பார்க்கமுடிகிறது. 

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதன்மூலம் உடனடி லாபம்பெற்ற கட்சிகள் 'சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ' கதையாகத் தமது கட்சிசார்பு வாக்குகளைப் பறிகொடுத்து நிற்கின்றன. இது கட்சியின் செயல்பாடுவரை எதிரொலிக்கிறது. கட்சியின் மாவட்ட அளவிலான நிர்வாகக் கூட்டங்களுக்கு வருவதற்கேகூட காசுகொடுக்கும் நிலை இன்று பெரிய கட்சிகளில் உள்ளது. 

ஆதரவாளர்களை ஈர்க்கக்கூடிய அரசியல் எதுவும் இல்லாத நிலையில் தனிநபர் வழிபாட்டின்மூலம் அதை பெரிய கட்சிகள் ஈடுகட்டிவந்தன. அந்த ஈர்ப்பு இப்போது குறையத் தொடங்கியதும் பணத்தைக்கொண்டு அதை சரிசெய்யப் பார்க்கின்றன. அவர்களது தந்திரத்துக்கு 2016 தேர்தல் முடிவுகட்டுமா என்பதைத் தேர்தல் முடிவில்தான் பார்க்கவேண்டும்.

பேத்ரீஸ் லிபெர்( Beatrice Libert) கவிதைகள் தமிழில் : ரவிக்குமார்



1. 
ஒருநாள் நீ பிறந்தாய்
பனியின் வெண்மையில் முழுதாய் மறையாத
காலத்தின் கறுமை

நீ அழுதாய் அலறினாய் 
பாடினாய் தொழுதாய்
சிவப்பு விழுங்குகிறது நிறங்கள் அனைத்தையும்
பூமியின் யுகங்கள் அனைத்தையும் கடக்கிறாய்

ஒருநாள் நீ கற்றுக்கொண்டாய் 
க்ரீஸ் பெயிண்ட்டுக்குக் கீழே சிவப்பு இருப்பதை 
வெண்மையின் அடியில் கறுப்பு இருப்பதை

ஒரு வீரன் உன் இதயத்தின்மீது வைத்தான் செந்நிற ரோஜாவை 
அதிலிருந்து 
நீ பார்க்கிறாய் ஆன்ம உணர்வோடு மலர்களை 
அவை தமது ஜொலிப்பை இழக்கின்றன
தாமிர சமையல் பாத்திரங்களாய் களையிழக்கின்றன

ஒரு மின்னல் பொழுதில் நீ இழந்த உன் பெயரை வாரிக்கொள்கிறாய் 
நீ பசியோடிருக்கிறாய், உறைந்திருக்கிறாய், பயந்திருக்கிறாய் 
நீ திரும்பிச்செல்கிறாய் 
செடிகளிடம், புதர்களிடம்
திராட்சைக் கொடிகளிடம் பழுத்துக் குலுங்கும் ஆரஞ்சுகளிடம் 
இனிய பெயர்கொண்ட மரங்களிடம் 
உன்னிடம் மீந்திருக்கும் சக்தியை நுண்திறனை நீ காப்பாற்றிக்கொள்கிறாய்

ஒருநாள் நீ செத்துப்போகிறாய் நீ 
யார் என்பதை அறிந்துகொள்ளாமலே 

2.
நிலைக்கதவருகில் நிற்கலாமென நம்பினாள்
நிலைக்கதவு இல்லை

கதவைத் தட்டலாமென நம்பினாள்
அங்கு கதவும் இல்லை

திரும்பிச்செல்லலாமென முயன்றாள்
சாலையைக் காணவில்லை

3.

அவள் தன் உடையைக் களைந்தாள் 
     இன்னொன்றை 
     இன்னுமொன்றை 
     அடுத்ததை அடுத்ததை 
     நீண்டநேரமாக 
சருமம் வரையில் 
அதுவுமொரு உடைதான்
அதையும் களையவேண்டும்
எப்போதென்பது எவருக்கும் தெரியாது

4. 

அவள் ஊற்று
நீ பாறை
நதி பெருக்கெடுக்கிறது அவளூடாக 
பலவாய் ஆக்குகிறது அவளை 
நீயும் இருக்கிறாய் நீராக கரையாக

இணைந்த நிலங்களை எரியூட்டுகிறாய் 
வறண்ட நிலங்களைப் பயிர்செய்கிறாய் 

அவள் ஊற்று
நீ பாறை
ஒன்றாக செங்குத்தாக 

=======

பேத்ரீஸ் லிபெர்( Beatrice Libert) : பால் எலூவரின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு தனது பதினாறாவது வயதில் கவிதை எழுத ஆரம்பித்த பேத்ரீஸ் லிபெர் ஃப்ரெஞ்ச் மொழி போதிக்கும் ஆசிரியையாகவும் நூலகராகவும் பணியாற்றுகிறார். சிறுகதை ஆசிரியர். ஓவியம், புகைப்படம் முதலான கலைகளிலும் ஈடுபாடு கொண்டவர், விமர்சகராகவும் அறியப்படுபவர். பெல்ஜியம் நாட்டில் Amay என்ற சிறு நகரத்தில் பிறந்தவர், Liege என்ற நகரில் வாழ்ந்துவருகிறார். இந்தக் கவிதைகள் Belgian Women Poets - An anthology, Peter Lang , 2000. என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. 

Thursday, March 17, 2016

ரோக் டால்டன் கவிதைகள் தமிழில்: ரவிக்குமார்






1.
உன்னைப்போலவே 
நானும் நேசிக்கிறேன் வாழ்க்கையை, பொருட்களின் வசீகரத்தை, சொர்க்கமாய்த் தெரியும் ஜனவரி மாதத்து நிலக்காட்சியை 

எனது ரத்தமும் கொதிக்கிறது
நானும் கண்ணீர் மொக்குகளையறிந்த விழிகளால் சிரிக்கிறேன்

நானும் நம்புகிறேன் 
இந்த உலகம் அழகானது, 
ரொட்டியைப்போல கவிதையும் எல்லோருக்கும் உரியது 

எனது நரம்புகள் முடிவதில்லை என்னில், 
அவை கலந்திருக்கின்றன 
வாழ்க்கைக்காக, 
அன்புக்காக, 
சின்னச்சின்ன விஷயங்களுக்காக, 
நிலக்காட்சிக்காக, ரொட்டிக்காக
அனைவருக்குமான கவிதைக்காக
போராடுவோரின் குருதியில் 

2. 
நான் இறந்துவிட்டேன் என அறிந்தால் என் பெயரை உச்சரிக்காதே 
அது மரணத்தை அமைதியைத் தாமதப்படுத்தும் 
உனது குரல் எனது பனிமூட்டத்தில் புலன்களைத் தேடும் கலங்கரைவிளக்கு 

நான் இறந்துவிட்டேன் என அறிந்தால் 
வினோதமான வார்த்தைகளைக் கூறு : பூ, தேனீ, கண்ணீர், ரொட்டி, புயல் 

உனது உதடுகள் கண்டுபிடிக்காதிருக்கட்டும் எனது பெயரிலிருக்கும் எழுத்துகளை
எனக்குத் தூக்கம் வருகிறது, நான் விரும்புகிறேன் அமைதியை 

எனது பெயரைச் சொல்லாதே நான் இறந்த செய்தியை அறியும்போது 
அந்த இருண்ட உலகத்திலிருந்து நான் வருவேன் உன் குரலைக் கேட்பதற்காக 

சொல்லாதே என் பெயரை சொல்லாதே என் பெயரை 
நான் இறந்துவிட்டேன் என அறிந்தால் 
உச்சரிக்காதே என் பெயரை 

3. 
ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பது மகத்தானது அது உங்களுக்கு நிறைய தலைவலிகளைத் தரும் என்றபோதிலும் 

ஏனென்றால் கம்யூனிஸ்ட்டுகளின் தலைவலிகள் வரலாற்றுரீதியானவை, அதாவது அவற்றை நீங்கள் வலி நிவாரணிகளால் போக்கமுடியாது
பூமியில் சொர்க்கத்தை உருவாக்கினாலன்றி. 
அது அப்படித்தான் 

முதலாளித்துவத்தின்கீழ் நம் தலைகள் வலிக்கும், நம் தலைகள் சிதறடிக்கப்படும். 
புரட்சிக்கான போராட்டத்தில் தலை என்பது ஒரு 'டைம் பாம்'
தலைவலியைத் தீர்க்குமென நாம் கட்டியமைக்கும் சோஷலிசம் அதைப் போக்குவதில்லை
அதிகப்படுத்துகிறது 

கம்யூனிசம் என்பது 
சூரியன் அளவுகொண்ட 
ஒரு ஆஸ்பிரின் மாத்திரை



ரோக் டால்டன் (Roque Dalton (El Salvador, 1933 - 1975) எல் சல்வடார் நாட்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் டால்டன் ஒரு புரட்சியாளரும்கூட. அவர் முன்வைத்த அரசியல் கருத்துகளில் முரண்பட்ட அவரது சக போராளிகள் அவருடைய நாற்பதாவது பிறந்த நாளுக்கு நான்குநாட்கள் முன்னதாக அவரை சுட்டுக்கொன்றனர்.  அந்தக் கொலை தவறுதலாக நடந்துவிட்டது என முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் ஒப்புக்கொண்டனர். 

Wednesday, March 16, 2016

சாதி பயங்கரவாதம்: சில தடுப்பு நடவடிக்கைகள் - ரவிக்குமார்



சாதி பயங்கரவாதம் என்பது தலித்துகளுக்கு எதிரானது மட்டுமல்ல பெண்களை முடக்கி சமூகத்தைப் பழமைவாத இருளில் தள்ளுவதாகும். இது சமூகத்தில் அமைதியின்மையை அதிகரித்து முன்னேற்றத்தை வளர்ச்சியைத் தடுக்கும் முட்டுக்கட்டையாகும். இதைத் தடுத்து முறியடிக்கவேண்டியது அனைவரதும் கடமை. 
பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவோம்:

1. தெருக்களின் பெயர்களில் சாதி பின்னொட்டுகள் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்டதுபோல் வணிக நிறுவனங்கள் கல்விக் கூடங்கள் முதலானவற்றின் பெயர்களிலும் சாதி அடையாளங்கள் தடைசெய்யப்படவேண்டும். 

2. சாதி தலைவர்களின் பிறந்தநாள் நினைவுநாள் போன்றவற்றை அரசு விழாக்களாக நடத்துவது நிறுத்தப்படவேண்டும். 

3. ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த சட்ட ஆணையம், வர்மா கமிஷன், உச்சநீதிமன்றம் ஆகியவை வலியுறுத்தியிருப்பதுபோல சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றவேண்டும். 

4. ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் ஐம்பது விழுக்காட்டுக்குமேல் வாக்குகளைப்  பெற்றால்தான் வெற்றி என சட்டத் திருத்தம் செய்யப்படவேண்டும். 

5. சாதி சங்கத்தை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதையும் , சாதி சங்கத்தையும் அரசியல் கட்சியையும் ஒருசேர நடத்துவதையும் தடைசெய்யவேண்டும். சாதி சங்கங்களில் அங்கம் வகிப்போர் எந்தத் தேர்தலிலும் போட்டியிடமுடியாது என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்படவேண்டும். 

இவை ஒருசில ஆலோசனைகள்தான். சமூக அக்கறையுள்ளோர் இன்னும் பலவற்றை முன்மொழியலாம்.

Sunday, March 13, 2016

தேர்தல் முறையை மாற்றுவோம்- ரவிக்குமார்



(2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 ஆம் தேதி ஜூனியர் விகடனில் எழுதிய கட்டுரை ) 

 இந்தியாவின் ஜனநாயகம் உலகப்புகழ் பெற்றது. இதற்கு’ காரணம் நமது தேர்தல் முறை என்று சொல்லப்படுவதுண்டு. 'மக்களின் தீர்ப்பை மகேசனின் தீர்ப்பாக' மதித்து அமைதியாக ஆட்சி மாற்றத்துக்கு வழிவிடும் பக்குவத்தைப் பெற்றவர்கள் நமது அரசியல் தலைவர்கள். ஆனால் இந்தத் தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்ற குரல் இப்போது வலுவாக கேட்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் முறையில் மாற்றம் தேவை எனக்குரல் கொடுப்பவர் நமது தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலஸ்வாமி. இதற்கு முன் தலைமைத் தேர்தல் ஆணையராயிருந்த கிருஷ்ணமூர்த்தியும் இந்தக் கருத்தை வலியுறுத்தியே வந்தார்.

 ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இதுதான் தற்போதிருக்கும் நமது தேர்தல் முறை. அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாவரும் சேர்ந்து பெற்ற வாக்குகளைச் சேர்த்துப் பார்த்தால், பலசமயம் அது வெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகளைவிடக கூடுதலாக இருப்பதுண்டு.எனவே அந்த தொகுதியில் சிறுபான்மை வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெற்று அந்தத் தொகுதியின் பிரதிநிதியாகச் செல்லும் நிலை ஏற்படுகிறது. 'பெரும்பான்மைக்கு அதிகாரம்' என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக்கு இது எதிராக உள்ளது. எனவே இதை மாற்றி விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைக் கொண்டு வர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

 சிறுபான்மை அளவு வாக்குகளைக் கொண்டு வெற்றி பெறும் நிலை ஒன்றிரண்டு தொகுதிகளில் இருந்தால் அதை நாம் அலட்சியப்படுத்திவிடலாம். பல மாநிலங்களில் சுமார் தொண்ணூறு சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி குறைந்த அளவு வாக்குகளில் வெற்றி பெற்றவர்களாக இருக்கின்றனர். பலபேர் இருபது சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் கடந்த மூன்று தேர்தல்களில் சராசரியாக பதினோரு சதவீத எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தான் ஐம்பது சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர்கள். மீதம் 89 சதவீதம் மைனாரிட்டி அளவு வாக்குகளால் வென்றவர்கள்தான். பீகாரில் 82 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 60 சதவீதமும், கர்னாடகாவில் அறுபத்தொன்பது சதவீதமுமான எம்எல்ஏக்கள் மைனாரிட்டி அளவு வாக்குகளைப் பெற்றே ஜெயித்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே இதில் தமிழ்நாடு மட்டும் தான் விதிவிலக்கு. இங்கு 1991ஆம் ஆண்டு தேர்தலில் தொண்ணூறு சதவீதம் சட்டம்ன்ற உறுப்பினர்கள் ஐம்பது விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார்கள்.

 பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது. சுமார் 67 சதவீத எம்.பி.க்கள் குறைந்த அளவு வாக்குகளில் வென்று வந்தவர்களாக உள்ளனர்.

 வெற்றி பெறுகிறவர் ஐம்பது சதவீதத்துக்குக் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நமது தேர்தல் முறையில் இல்லை. இதனால் தான் இந்த நிலைமை. ஒரு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்தத் தொகுதி மக்களில் பெரும்பான்மைப் பகுதியினரின் பிரதிநிதியாக இல்லாமல் ஒரு சிறு தரப்பினரின் பிரதிநிதியாக மட்டுமே இருப்பதற்கு இது வழி வகுக்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அடிப்படையை இது தகர்த்து விடுகிறது.

 இப்போதுள்ள தேர்தல் முறை இன்னொரு ஆபத்துக்கும் இட்டுச்செல்கிறது. ''ஒரு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சாதியைச் சேர்ந்த பிரிவினரின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும் நாம் வெற்றி பெற்று விடலாம்'' என்ற எண்ணத்தை இது வேட்பாளர்களிடம் ஏற்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் போது சாதி, மத அடிப்படையில் செயல்பட இதுவே காரணமாகிறது. 'பரவலான மக்கள் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டிய அவசியமில்லை. குறுகிய சில வாக்குறுதிகளை சென்னாலே போதும்' என அரசியல் கட்சிகள் எண்ணுவதற்கு இதுவே வழிகோலுகிறது.

 இந்த நிலையை மாற்றுவதற்கு இரண்டு விதமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இப்போதுள்ள தேர்தல் முறையிலேயே தேர்தலை நடத்துவது. வெற்றி பெறுகிறவர்கள் எந்தெந்த தொகுதிகளில் மைனாரிட்டி அளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்களோ அங்கெல்லாம் முதலில் வந்துள்ள இரண்டு வேட்பாளர்களை மட்டும் வைத்து மீண்டும் ஒரு வாக்குப்பதிவை நடத்தி அதில் யார் ஐம்பது சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறுகிறாரோ அவரை வெற்றி பெற்றவராக அறிவிப்பது என்பது ஒரு யோசனை.

 பெரும்பாலான தொகுதிகளில் மைனாரிட்டி அளவு வாக்குகளில் வெற்றி பெறும் நிலை இருப்பதால் மறுதேர்தல் என்பது ஏறக்குறைய மாநிலம் முழுமைக்கும் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே இது சிரமம் என்று சில விமர்சனங்கள் வரலாம். இந்த முறையினால் ஏற்படும் காலம் மற்றும் பொருள் செலவைத் தடுக்க முதலிலேயே ஒவ்வொரு வாக்காளரிடத்திலும் மாற்று வாக்கு ஒன்றை செலுத்தும்படி கோருவது. எந்தெந்த தொகுதிகளில் மெஜாரிட்டி வாக்கு கிடைக்கவில்லையோ அங்கு மட்டும் அந்த மாற்று வாக்குகளை எண்ணுவது. எந்திர வாக்குப்பதிவு வந்து விட்ட இன்றைய சூழலில் இது செலவு பிடிப்பதாகவோ, கால தாமதம் ஆவதாகவோ இருக்காது.

 அடுத்ததாக சொல்லப்படுகிற யோசனைதான் விகிதாச்சார பிரதிநிதித்துவம் (Proportional Reservation ) என்பதாகும். இந்திய சட்ட கமிஷனும் இந்த முறையைத் தான் பரிந்துரை செய்திருக்கிறது. நமது தலைமைத் தேர்தல் ஆணையர் இதைத்தான் வலியுறுத்துகிறார். இந்த முறையை பட்டியல் முறை (List system ) என்று குறிப்பிடுகின்றனர்.

 நபர்களை நிறுத்துவதற்கு பதிலாக அரசியல் கட்சிகளை முன்னிறுத்தித் தேர்தலை நடத்துவது, அரசியல் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் இடங்களை வழங்குவது என்பதே இந்தத் திட்டம். இதில் தனி நபர்களின் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் என்பதால் கூடுதலாக ஒரு அம்சத்தை சட்டக்கமிஷன் கூறியுள்ளது. வாக்காளர்களிடம் இரண்டு வாக்குகளைத் தந்து ஒன்றை அரசியல் கட்சிக்கும், மற்றதை வேட்பாளருக்கும் அளிக்க கோருவது. கட்சிகள் வாங்குகிற வாக்குகளின் அடிப்படையில் இடங்களை ஒதுக்கி அதன்பிறகு வேட்பாளர் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் நபர்களைத் தேர்வு செய்வது.

 விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் மெஜாரிட்டி அரசாங்கம் உருவாவதற்கு வாய்ப்பு குறைவு. கூட்டணி அரசாங்கமே சாத்தியமாகும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். பட்டியல் முறை என்பதும் கூட ஆட்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தை ஊக்குவித்து விடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். இன்னும் கல்வியறிவற்றவர்கள் நிரம்பியிருக்கும் நமது நாட்டிற்கு இது சரிப்பட்டு வராது என்பதே அவர்களது கருத்து.

 நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால் இந்த விகிதாச்சார பிரதிநித்துவத்தை செயல்படுத்துவது எவ்வளவு கஷ்டம் என்பது புரிந்து விடும். தற்போது 172 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்றுள்ளன. இவற்றில் பல கட்சிகள் எப்போதாவது ஒருமுறை தான் தேர்தலில் போட்டியிடும். 'பதிவுக்காக சராசரியாக வாரம் மூன்று கட்சிகள் விண்ணப்பிக்கின்றன'' என்று கோபாலஸ்வாமி குறிப்பிடுகிறார். பலபேர் வருமானவரி விலக்கு பெறுவதற்காகத்தான் அரசியல் கட்சிகளை ஆரம்பிக்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்திருக்கிறார். நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தினாலன்றி விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்பதே உண்மை.

 ஆகவே ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற வைக்கும் ஏற்பாடே எளிதானது. ஜனநாயகத்தை பாதுகாப்பது. இது மைனாரிட்டி வாக்கினால் ஒருவர் வெற்றி பெறுவதைத் தடுப்பது மட்டுமின்றி அரசியல் கட்சிகள் பரந்த அளவிலான பிரச்சனைகளில் கவனம் செலுத்தவும் வழி வகுக்கும். சாதி, மத செல்வாக்கை கட்டுப்படுத்தும்.

 இந்த ஆலோசனைகள் சட்ட அறிஞர் சுபாஷ் காஷ்யப்பின் பொறுப்பில் அமைந்த குழுவால் பரிசீலிக்கப்பட்டன. அரசியலமைப்புச் சட்ட மறு ஆய்வுக்குழுவின் கீழ் தேர்தல் சீர்த்திருத்தங்களை ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட அந்தக்குழுவின் தலைவராக ஆர்.கே.திரிவேதி இருந்தார். பி.ஏ.சங்மா, மோகன் தாரியா, என்.என்.வோரா, பேராசிரியர் ஆர்.பி.ஜெயின் உள்ளிட்டோர் அதில் உறுப்பினர்களாக இருந்தனர். அந்தக்குழு ''ஐம்பது சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றவரே ஒரு தொகுதியின் பிரதிநிதியாக வரவேண்டும். அதற்கான தேர்தல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்'' எனப் பரிந்துரை செய்தது. அதுமட்டுமின்றி வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அந்தக்குழு கூறியுள்ளது.

 தலைமைத் தேர்தல் ஆணையம் இந்த ஆலோசனைகளை 2004ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே மத்திய அரசுக்கு அனுப்பி விட்டது. ஆனால் அரசாங்கம் அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டது. ஜனநாயகத்தை வலுப்படுத்தும் எந்த காரியத்தையும் ஆட்சியாளர்கள் அவ்வளவு சுலபமாக செய்து விட மாட்டார்கள். அவர்களைச் செயல்பட வைக்கும் ஆற்றல் மக்களுக்குத்தான் இருக்கிறது.

Tuesday, March 8, 2016

வரம்பற்ற பேச்சும் வெறுப்புப் பேச்சும்: நீதிபதி கடஜுவின் வழக்கை முன்வைத்து சில குறிப்புகள் ... - ரவிக்குமார்



உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது முகநூல் பக்கத்தில் காந்தியைப் பற்றியும் சுபாஷ் சந்த்ர போஸ் குறித்தும் தெரிவித்த கருத்துகளுக்காக அவர்மீது கண்டனத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்ற இரு அவைகளும் நிறைவேற்றியுள்ளன. அந்தத் தீர்மானம் தனது பேச்சு சுதந்திரத்தைப் பறிப்பதாக உள்ளது எனவே அதை ரத்துசெய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கட்ஜு மனுசெய்திருந்தார். அந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் நாரிமனை உச்சநீதிமன்றம் ஆமிக்கஸ் கூரியாக நியமித்தது. 

08.03.2016 அன்று இந்த வழக்கில் வாதிட்ட நாரிமன் " அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 105 நாடாளுமன்றத்தில் பேசும் பேச்சுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. அதில் நீதிமன்றங்கள் தலையிடமுடியாது என ஆறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வும் உறுதிசெய்துள்ளது" எனக் கூறியுள்ளார். 

இந்த வழக்கு பேச்சு சுதந்திரம், வெறுப்புப் பிரச்சாரம் என்ற இரண்டு முக்கியமான பிரச்சனைகளைக் கவனப்படுத்தியிருக்கிறது: 

1. பேச்சு சுதந்திரம்: 

சட்டமியற்றும் அவைகளில் மக்கள் பிரதிநிதிகள் பேசும் பேச்சுக்கும் சாதாரண குடிமகன் ஒருவர் பேசும் பேச்சுக்கும் வேறுபாடு உள்ளது. குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்பு 19 வழங்கியிருக்கும்  பேச்சுரிமைக்கு reasonable restrictions உள்ளன. அத்தகைய கட்டுப்பாடு சட்டமியற்றும் அவைகளில் இல்லை. இதுதான் இப்போது நீதிமன்றம் சொல்லும் கருத்து. 

மக்கள் பிரதிநிதிகூட சுதந்திரமாகப் பேசவேண்டுமென்றால் அவை நடவடிக்கையின்போதுதான் பேசமுடியும். அதாவது அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பேச்சு சுதந்திரம் அவரது பதவி சார்ந்ததோ அந்த அவைகளின் புவியியல் இருப்பு சார்ந்ததோ அல்ல, அது அவை நடவடிக்கையை மட்டுமே சார்ந்தது. இதுவும்கூட ஒருவிதத்தில் reasonable restriction என்றுதான் கூறவேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சு சுதந்திரத்துக்கு இரண்டு பிரிவுகளை ஏற்படுத்துவது எப்படி சரியாக இருக்கும்? சாதாரண குடிமகனுக்கும் அதேவிதமான immunity வழங்கப்படவேண்டும் அல்லது சட்டமியற்றும் அவைகளுக்கு இருக்கும் immunity ஐ ரத்துசெய்யவேண்டும். 

சட்டமியற்றும் அவைகளில் நடக்கும் விவாதங்களின்போது எவ்வித மனத் தடையுமின்றி உறுப்பினர்கள் பேசுவதற்கு ஏதுவாகவே இந்த immunity வழங்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் சொல்கிறது. சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் நடைபெறும் விவாதங்களைப் பார்ப்போர் இந்த சமாதானத்தை ஏற்கமாட்டார்கள். 

நாடாளுமன்றத்தின் அதிகாரம் பெரிதா அல்லது நீதிமன்றத்தின் அதிகாரம்
பெரிதா என்ற கோணத்தில் இதை அணுகக்கூடாது. குடிமக்களுக்கு இல்லாத சுதந்திரத்தை அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிக்கு மட்டும் வழங்குவது எப்படி சமத்துவமாக இருக்கமுடியும் என்ற கோணத்திலிருந்து இதைப் பார்க்கவேண்டும்.  

reasonable restrictions என்ற விதத்தில் குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தை முடக்குவது சரியல்ல என்பதே எனது கருத்து. இப்படிச் சொல்லும்போது  ' வெறுப்புப் பேச்சுகளை' எப்படி அனுமதிப்பது என்ற கேள்வி உடனடியாக எழும். 

2. வெறுப்புப் பிரச்சாரம்: 

வெறுப்புப் பிரச்சாரம் என்பது அரசியல் ஆதாயம் தேடுவோரின் முதன்மையான கருவியாக மாறியிருக்கும் சூழலில் பேச்சு சுதந்திரத்தையும் வெறுப்புப் பேச்சுகளையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டியது அவசியம். மார்க்கண்டேய கட்ஜுவின் விமர்சனம் கடுமையானது என்று சொல்லலாமே தவிர அதை hate speech என்று கூறமுடியாது. ஆனால் அவரைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிய அவைகளில் வெறுப்புப் பேச்சால் புகழ்பெற்ற பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் immunity நாடாளுமன்ற அவைகளால் வந்ததல்ல, அவர்களது அரசியல் சார்பால் வந்தது. 

வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்றப்படவேண்டும் என ICCPR என்ற ஐநா ஒப்பந்தம் கூறுகிறது. அதில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இப்போது IPC ல் 153 A, 295 & 295 A முதலிய பிரிவுகள் இருக்கின்றனவே புதிதாக சிறப்பு சட்டம் எதற்கு என சிலர் கேட்கலாம்.வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுப்பதற்கு IPC ல் தற்போதிருக்கும் அந்த சட்டப் பிரிவுகள் போதுமானவையல்ல. சிறப்பு சட்டம் இயற்றுவதும் அதை உறுதியோடு நடைமுறைப்படுத்துவதும்தான் இன்றைய தேவை. அதை நோக்கிய விவாதங்களை முன்னெடுக்குமாறு ஊடகங்களை வேண்டுகிறேன்.

Monday, March 7, 2016

ரவிக்குமார் கவிதைகள்


1. பெயரற்றது

* மொழி தோற்றுப்போகும் என ஒப்புக்கொள்கிறவர்களால் மட்டுமே 
கேட்கமுடியும் 
மௌனத்தின் உரையாடலை

* நேசம் என்பதொரு சொல்
நேசம் என்பதொரு உணர்வு
நேசம் என்பதொரு மாயை
நேசம் என்பதொரு வர்த்தகப் பெயர்

* அடைத்துக் கிடக்கும்
வீட்டுக்குள்ளும்
வருகிறது போகிறது 
காற்று

2. விண்ணப்பம்

நோயாளிகளை உற்பத்தி செய்யுங்கள்
மருத்துவர்களுக்கு 
வேலைகொடுங்கள்
குற்றவாளிகளை உற்பத்திசெய்யுங்கள்
நீதிமான்களுக்கு 
வேலைகொடுங்கள்
கையேந்திகளை உற்பத்திசெய்யுங்கள்
கருணாமூர்த்திகளுக்கு 
வேலைகொடுங்கள்

பாவிகளை உற்பத்திசெய்யுங்கள்
மீட்பர்களுக்கு 
வேலை கொடுங்கள்

Wednesday, March 2, 2016

பண்டங்களா தலைவர்கள்? நூகர்வோரா வாக்காளர்கள்?



( 27.02.2016 இரவு சன் டிவி விவாதமேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நான் முன்வைத்த கருத்துகளின் சாரம் ) 

தலைவர்கள் பண்டங்களா? வாக்காளர்கள் நுகர்வோர்களா? இப்போது வெளியிடப்படும் விளம்பரங்கள் தனி மனிதர்களை அரசாங்கத்துக்குத் தலைமையேற்று வழிநடத்தும் தலைவர்களாக அல்லாமல் brand களாக வர்த்தகப் பெயர்களாக மாற்றுகின்றன. இதனால் அரசியல் களம் வணிகப் போட்டிக்கான இடமாக ஆக்கப்படுகிறது. 

அன்புமணியை முன்னிறுத்தி வெளியிடப்பட்டிருக்கும் விளம்பரத்தில் பாமக என்ற பெயரே இல்லை. ஓரமாக சின்னம் மட்டும் உள்ளது. அவரது கடந்த காலமும் கட்சி சார்பும் துடைக்கப்பட்டு புத்தம் புது product ஆக அவரை முன்வைக்கிறார்கள். இது வாக்காளர்களை விழிப்புணர்வுபெற வைப்பதா? ஏமாற்றுவதா? என்பதை மக்கள்தான் முடிவுசெய்யவேண்டும். 

வாக்காளர்களை விழிப்புணர்வுகொண்ட குடிமக்களாக உணரச்செய்வதுதான் இன்றைய தேவை, ஆனால் இந்த விளம்பரங்கள் அவர்களை செயலூக்கமற்ற நுகர்வோர்களாக ( passive consumers ) மாற்ற முயற்சிக்கின்றன. 

இந்த விளம்பரங்களுக்கு சமூக வலைத்தளங்களில் எப்படியான எதிர்வினைகள் வருகின்றன என்பதைப் பாருங்கள். ஒவ்வொரு இளைஞரையும் இந்த விளம்பரங்கள் டிஸைனராக மாற்றிவிட்டன. அவர்கள் இவற்றைக் கேலிசெய்வதன்மூலம் தமது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். 

virtual reality க்கு மாற்று இன்னொரு virtual reality ஐ உருவாக்குவதல்ல, நாமும் மெய்நிகர் யதார்த்தத்தில் சஞ்சாரம் செய்வதல்ல இதற்கு மாற்று. வேர்க்கால்மட்ட அரசியல் செயல்பாடுதான் இதற்கான தீர்வு. அதைத்தான் மக்கள் நலக் கூட்டணி மூலமாக முன்னெடுத்துள்ளோம்.