Wednesday, February 10, 2016

விதவைப் பெண்கள் வாழ்வுரிமையைப் பாதுகாப்போம் - ரவிக்குமார்



விதவைகள்/ கணவனால் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து விதவைப் 'பெண்கள் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அதன் சார்பில் சில கோரிக்கைகளை முன்வைத்து அவற்றைத் தேர்தல் அறிக்கையில் சேர்த்துக்கொள்ளுமாறு அரசியல் தலைவர்களை சந்தித்துவருகின்றனர். அவர்கள் அளித்துள்ள கோரிக்கைகள் முக்கியமானவை. 

இந்தக் கூட்டமைப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும்  11 அமைப்புகள் உள்ளன. அவற்றின் பொறுப்பாளர்கள் அனைவரும் விதவைகள். அவர்கள் எப்படி விதவை ஆனார்கள் எனக் கேட்டேன். எல்லோருமே மதுவால் விதவை ஆனதாகத் தெரிவித்தார்கள். 

நாகப்பட்டினத்தில் செயல்படும் ' விதவைப்பெண்கள் வாழ்வுரிமை இயக்கத்தின்' பொறுப்பாளர் மூகாம்பிகை தனது கணவர் மதுவுக்கு அடிமையாகி குறைந்த வயதிலேயே இறந்துவிட்டதாகக் கூறினார். அவரோடு வந்திருந்த இந்திரஜோதி( கரூர்) ராமேஸ்வரி ( வத்தலகுண்டு) பெர்ஸி ( பெரம்பலூர்) செல்வி ( தரங்கம்பாடி) ஆகியோரின் வாழ்க்கைக் கதைகள் கண்ணீர் மல்கச்செய்தன. 

விதவை ஆகிவிட்டோமே என முடங்கிப்போய்விடாமல் தம்மைப்போன்ற பெண்களின் நல்வாழ்வுக்காக இயக்கம் கட்டிப் போராடும் இந்தப் பெண்களைப் பார்க்கும்போது பெருமையாகவும் இருந்தது.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய அளவில் 59 கோடி பெண்கள் இருப்பதாகவும் அதில் 5.5 கோடி விதவைகள் என்றும் குறிப்பிட்டுள்ள இந்தக் கூட்டமைப்பின் அறிக்கையில் - 

* தற்போது தமிழக அரசால் வழங்கப்படும் விதவை உதவித் தொகையை ஆயிரம் ரூபாய் என்பதிலிருந்து 3000 ஆக உயர்த்தவேண்டுமென்றும், 

* விதவைகள் பாகுபாடு வன்கொடுமைத் தடுப்பு சட்டம் இயற்றப்படவேண்டும்; 

*இரண்டு ஆண்டுகளுக்குமேல் கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள் அனைவருக்கும் விதவைகளுக்கான நலத் திட்டங்கள் அனைத்தையும் வழங்கவேண்டும்;

*குடியின் காரணமாக கணவனைப் பறிகொடுத்த பெண்களுக்கு உடனடி நிவாரணமாக ஐந்து லட்சம் ரூபாயும் மாதாந்திர உதவித்தொகையாக ஐந்தாயிரம் ரூபாயும் தரவேண்டும் 
    - என்பவை உள்ளிட்ட பல கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. 

இந்தக் கோரிக்கைகளை மக்கள் நல கூட்டணி தலைவர்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதோடு அக்கூட்டணியின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறச் செய்வேன் என அவர்களிடம் கூறினேன். 

தன்னம்பிக்கை கொண்ட அந்த சகோதரிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்! 

No comments:

Post a Comment