Thursday, December 31, 2015

நிராசை - ரவிக்குமார்

  

ஆசையாகத்தான் இருக்கிறது

இன்னொரு வீடு எரிக்கப்படாது
இன்னொரு கழுத்து அறுக்கப்படாது
இன்னொரு மானம் பறிக்கப்படாது 
இன்னொரு பாதை மறுக்கப்படாது
இன்னொரு கதவு மூடப்படாது
இன்னொரு வாய்ப்பு பறிக்கப்படாது
எனச் சொல்ல 

ஆசையாகத்தான் இருக்கிறது

எல்லோரது குரலும் கேட்கப்படும்
எல்லோரது குறையும் தீர்க்கப்படும்
எல்லோரது காயமும் ஆற்றப்படும் 
எல்லோரது கண்ணீரும் துடைக்கப்படும்
எல்லோரது பேச்சும் மதிக்கப்படும் 
எனச் சொல்ல 

ஆசையாகத்தான் இருக்கிறது 

நிரபராதிகள் இனம் காணப்படுவார்கள்
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்
அயோக்கியர்கள் அகற்றப்படுவார்கள்
நல்லவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்
எனச் சொல்ல 

எனக்கும்
ஆசையாகத்தான் இருக்கிறது 
இந்த வருடத்தைப்போல இருக்காது 
அடுத்த ஆண்டு 
எனச் சொல்ல

Wednesday, December 30, 2015

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொல்கத்தா ப்ளீனம்: வரவேற்கத்தக்க முடிவுகள்!


இந்தியாவெங்குமிருக்கும் கட்சியின் முழுநேர ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் ஊதியத்தை நாட்டில் நிலவிவரும் குறைந்தபட்ச ஊதியத்துக்கு ஏற்ப உயர்த்தி வழங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருப்பதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க செய்தி. 

அக்கட்சியின் உறுப்பினர்களில் சுமார் இருபது விழுக்காடு வரை எஸ்.சி சாதிகளைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர் எனவும் கட்சியின் அதிகாரப் பொறுப்புகளில் அவர்களுக்கு உரிய பங்கினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதையொட்டி கட்சியின்  மாநிலக் குழுக்கள், மத்தியக் குழு ஆகியவற்றில் சமூகரீதியான பிரதிநிதித்துவம் எப்படி உள்ளது என ப்ளீனத்தில் ஆய்வுசெய்யப்பட்டதாகவும் தோழர் பிரகாஷ் காரத் கூறியதாக இந்து ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது. இதுவும் வரவேற்கத்தக்கதே! கட்சி துவக்கப்பட்டு அரை நூற்றாண்டைக் கடந்த பின்னரும் அக் கட்சியின் பொலிட்பீரோவில் எஸ்.சி பிரிவினர் ஒருவரும் இடம்பெறவில்லை என அக்கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றபோதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இடதுசாரிக் கட்சிகளில் தலித்துகளுக்கு உயர் பொறுப்புகள் வழங்கப்பட்டால் அதை சிறப்பாக நிறைவேற்றும் திறமையும் அர்ப்பணிப்பும் அவர்களுக்கு உண்டு என்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தேசிய செயலாளராக பொறுப்பு வகிக்கும் தோழர் டி.ராஜா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 

இடதுசாரிக் கட்சிகள் தமிழ்நாட்டில் தீண்டாமையை ஒழிக்க தனி அமைப்புகளை உருவாக்கியிருப்பதைப்போல எல்லா மாநிலங்களிலும் உருவாக்கவேண்டும். அவர்கள் ஆட்சியிலிருந்த மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் அத்தகைய அமைப்புகள் உள்ளனவா? 

ஆண்டின் மரணம் - ரவிக்குமார்



செத்துக்கொண்டிருக்கிறது 
ஒரு ஆண்டு
மணி மணியாக
நொடி நொடியாக 
 
காலத்தைத் தடுத்து நிறுத்தினாலன்றி 
காப்பாற்ற முடியாதெனக்
கைவிரித்துவிட்டார்கள் 

செத்துக்கொண்டிருக்கிறது .... 
கைவிடப்பட்ட ஒரு மூதாட்டியைப்போல
நொடி நொடியாக 

அஸ்தமிக்கும் ஆண்டினருகில் அமர்ந்திருக்கிறேன்
மரணத்தைவிடக் கொடுமையாயிருக்கிறது
உயிர் அடங்குவதைக்
கவனித்துக்கொண்டிருப்பது 

நினைவுகூர்ந்து மகிழ்ச்சியடைய 
எதுவுமில்லை. எல்லாம் துயரம். 

' என் புத்திரர்களைக் கொன்றுவிட்டார்கள்! 
செம்மரக் காட்டில் கட்டிவைத்து சுட்டார்கள்; 
என் மூத்த மகனைக் கொன்றார்கள்
வீட்டுவாசலில் 
நெற்றியில் சுட்டார்கள்; 
மாட்டின்பெயரால் ஒரு மகனைக் கொன்றார்கள்' 

' என் புதல்வியரைக் கொலைசெய்தார்கள் 
இரவில் பகலில் வீட்டில் சாலையில் 
ஓடும் பேருந்தில் ஒதுக்குப்புற கட்டிடத்தில்' 

' எத்தனை பிணங்கள் எத்தனை பிணங்கள்' 
ஆண்டின் வாய் 
தானே அரற்றியது

'இறுதி விருப்பத்தைச் சொல்' எனக் கேட்டேன்
கசியும் விழிகளால் 
சுவரைத் துழாவியது  

அருகில் சென்றேன், 
வண்ணத்துப் பூச்சிகளோடு சிரித்துக்கொண்டிருக்கும்
சிறுமியின் ஓவியம்
அருகில் - 
விருது ஒன்றைத் தாங்கியிருந்த
சட்டகத்தைக் 
கழற்றிய வெற்றிடம்

Tuesday, December 29, 2015

நவீன கன்னட இலக்கியம் தமிழைவிட முன்னே இருக்கிறது- ரவிக்குமார்

கன்னட தலித் இலக்கியத்துக்கும் தமிழ் தலித் இலக்கியத்துக்கும் இடையிலான ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் விளக்கமுடியுமா? என கன்னடப் பேராசிரியையும் தமிழருமான மலர்விழி கேட்டார் அதற்கு நான் ஆங்கிலத்தில் அளித்த பதிலின் தமிழாக்கம்:




" இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. சொல்லப்போனால் தமிழ் தலித் இலக்கியம் கன்னட தலித் இலக்கியத்துக்கு நிறையவே கடன்பட்டிருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே பணியாற்றிக்கொண்டிருந்த பாவண்ணன் எனது வேண்டுகோளின் அடிப்படையில் சித்தலிங்கையாவின் ஊரும் சேரியும், அரவிந்த மாளகத்தியின் கவர்ன்மெண்ட் பிராமணன் ஆகிய சுய சரிதைகளையும், இதோ இந்த அரங்கில் இருக்கிறாரே மொகள்ளி கணேஷ் அவரது பம்பரம் உள்ளிட்ட சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்தார். அவற்றை நான் விடியல் பதிப்பகத்தின்மூலம் வெளியிடச் செய்தேன். அந்த சிறுகதைத் தொகுப்புக்கு புதைந்த காற்று என நான்தான்  தலைப்பிட்டேன். நானும் இன்னும் சில நண்பர்களுமாக சேர்ந்து நடத்திய நிறப்பிரிகை இதழின் சார்பாக தலித் இலக்கியச் சிறப்பிதழ் ஒன்றைக் கொண்டுவந்தேன். அதில் சித்தலிங்கையாவின் நீண்ட பேட்டி இடம்பெற்றது. நான் நடத்திய தலித் என்ற இலக்கிய இதழில் தேவனூரு மகாதேவாவின் மிக முக்கியமான படைப்பான குசுமபாலெவின் தமிழ் மொழிபெயர்ப்பைத் தொடராக வெளியிட்டேன். நஞ்சுண்டன் மொழிபெயர்த்தார். 

மராத்தி தலித் இலக்கியத்தைவிட கன்னட தலித் இலக்கியம் தான் தமிழ் தலித் எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருந்தது. இதை நன்றியோடு கூறிக்கொள்கிறேன். 

கன்னடத்தைப் போலவே தமிழ் தலித் எழுத்தாளர்கள் பெரும்பாலோர் யதார்த்தவாத எழுத்துமுறையையே கையாளுகிறார்கள். அவர்களது சித்திரிப்பு, தொனி போன்றவற்றில்கூட பெரிதாக வேறுபாடு இல்லை. 

ஆனால் தமிழ் தலித் இலக்கியம் வலுவான தத்துவார்த்த பின்னணியைக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு கன்னடம், மராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்  தலித் இலக்கியம் தொடர்பான விவாதங்களை முன்னெடுத்த என் போன்றோருக்கு இருந்த மார்க்சியப் பின்னணி. மார்க்சிய லெனினிய இயக்கத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த நானும் சில தோழர்களும் ரஷ்யாவின் தகர்வுக்குப் பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு அதுவரை சோஷலிசம் குறித்து சொல்லப்பட்டுவந்த கோட்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தினோம். அந்த சிக்கலை விளங்கிக்கொள்ள மார்க்சிய மைய நீரோட்டத்தால் புறக்கணிக்கப்பட்ட சிந்தனையாளர்களைப் பயின்றோம். 

அந்தப் பின்புலத்திலிருந்து வந்த நாங்கள்தான் தமிழில் தலித் இலக்கியம் குறித்த விவாதங்களை முன்னெடுத்தோம் என்பதால் மிஷெல் ஃ பூக்கோ, எட்வர்ட் செய்த், பூர்தியூ,  முதலானோரின் சிந்தனைகளோடும், ஹெகல், பகூனின் உள்ளிட்ட கார்ல் மார்க்சுக்கு முந்திய சிந்தனைகளோடும் இணைத்து தலித் கருத்தியலை நாங்கள் பேசினோம். அரசு குறித்த அம்பேத்கரது பார்வை பகூனினின் கருத்துகளோடு ஒத்துப்போவதை நான் சுட்டிக் காட்டினேன். இத்தகைய அணுகுமுறை இந்தியாவின் பிற மொழிகளில் இல்லை. இது தமிழ் தலித் இலக்கியத்துக்கு இருக்கும் சிறப்பு. 

கருத்தியல் தளத்தில் இருக்கும் இந்த அனுகூலம் இன்னும் படைப்புகளில் சரிவர வெளிப்படவில்லை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் தலித் இலக்கியம் படைக்கப்படுகிறது. ஆனால் தேவனூரு மகாதேவாவைப் போல ஒரு படைப்பாளி தமிழில் உருவாகவில்லை. அந்தவிதத்தில் கன்னட தலித் இலக்கியம் தமிழைவிட முன்னே நிற்கிறது. 

பொதுவாகவும்கூட நவீன கன்னட இலக்கியம் தமிழைவிட முன்னால்தான் இருக்கிறது. இங்கே வந்து சிறப்பித்த ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் சந்திரசேகர கம்பாரைபோல, யு.ஆர்.அனந்தமூர்த்தியைப்போல, சிவராம காரந்த்தைப்போல ஒருத்தரைக்கூட தமிழில் சொல்லமுடியாது. ஆற்றல்வாய்ந்த கன்னட படைப்பாளிகளுக்கு என் வணக்கம். 

சாகித்ய அகாடமி: பெங்களூர் ஆய்வரங்கம்

நாடுமுழுதும் ' அவார்டு வாப்ஸி' என விருதுகளைத் திருப்பித் தரும் போராட்டம் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் சூழலில் தென்னிந்திய மொழிகளில் தலித் இலக்கியம் குறித்துப் பேசுவதற்காக இங்கே நாம் கூடியிருக்கிறோம். இந்த மாநிலத்தில் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் கல்புர்கி அவர்களுக்கு என் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து விருதுகளையும் பதவிகளையும் துறந்த கன்னட தலித் எழுத்தாளர்கள் அரவிந்த மாளகத்திக்கும் தேவனூரு மகாதேவாவுக்கும் என் வணக்கம். 

நான் சபிக்கப்பட்ட ஒரு மாநிலத்திலிருந்து வந்து குற்றவுணர்வோடு உங்கள் முன் நிற்கிறேன். வளமான தொன்மையான இலக்கியப் பாரம்பரியம் கொண்டது தமிழ் என சொல்லக் கேட்டிருப்பீர்கள். அது உண்மைதான். ஆனால் சகிப்பின்மைக்கு எதிராக நாடெங்கும் எழுந்த எதிர்ப்பில் விருதுபெற்ற தமிழ் எழுத்தாளர்கள் ஒருவரும் பங்கேற்கவில்லை. இது தமிழ் இலக்கிய உலகின்மீது நீங்காக் கறையாகப் படிந்து கிடக்கிறது. 

( இன்று - 29.12.2015- சாகித்ய அகாடமி சார்பில் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்கில் தலித் புனைவுகள் என்ற தலைப்பில் நான் ஆற்றிய ஆங்கில உரையின் துவக்கப் பகுதி ) 


Monday, December 28, 2015

வடியாத கருணை

வடியாத கருணை: தலித் பெண்ணுக்கு ஊடகவியலாளர் தன்யா ராஜேந்திரன் உதவி 

மழை வெள்ளத்தில் தனது குடிசையை இழந்து இரண்டு கைக்குழந்தைகளோடு பரிதவித்த வடக்குமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண்ணுக்கு அந்த வீட்டைப் புதுப்பித்துக்கொள்வதற்காக ஊடகவியலாளர் தன்யா ராஜேந்திரன் பத்தாயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மகாலட்சுமியின் வீடு சேதமடைந்தது பற்றி ட்விட்டர் மூலம் நான் விடுத்த செய்தியை அறிந்து மூன்று பேர் சேர்ந்து ஏற்கனவே 13000/- ரூபாய் அளித்துள்ளனர். அந்த செய்தியைப் பார்த்த தன்யா அவர்கள் அந்த கிராமத்தில் வேறு எவருக்கும் அப்படி உதவி தேவைப்படுகிறதா எனக் கேட்டார். இந்தப் பெண்ணின் விவரங்களைக் கூறினேன். அதன் அடிப்படையில் அவரது வங்கிக் கணக்குக்கு பத்தாயிரம் ரூபாயை அனுப்பியிருக்கிறார். 

வெள்ளத்தின்போது கவிதா முரளிதரன் உள்ளிட்ட அவரது நண்பர்களோடு இணைந்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அவர் சென்னைக்கும் கடலூர் மாவட்டத்துக்கும் அனுப்பினார். பெங்களூரில் இருந்தபடி தமிழ்நாட்டுக்கு உதவிக்கரம் நீட்டும் தன்யா அவர்களுக்கு நன்றி. 

Saturday, December 26, 2015

புத்தகத்தின் நிறை - ரவிக்குமார்


புத்தகத்தின் நிறை
- ரவிக்குமார்

பொருட்களின் நிறை 
எப்படி வருகிறதென 
அறிவியலார் சொல்லக்கூடும்
ஆனால் 
பொருட்களுக்கான விதி
புத்தகத்துக்குப் பொருந்தாது

புத்தகத்தின் எடையை 
காகிதங்களைக்கொண்டு 
தீர்மானிக்க முடியாது

ஒரு ஊர் சூறையாடப்பட 
ஒரு புத்தகம் காரணமானதுண்டு
ஒரு நாட்டையே 
உடைத்து நொறுக்கிய 
புத்தகங்களை அறிவோம் நாம்

இன்று ஒரு புத்தகம் கிடைத்தது
'இழந்த மாலைகள் 
இழந்த வாழ்வுகள்'
ஈழத் துயரம் கசியும் கவிதைகள்

கையில் எடுத்தபோது 
கனக்கவே இல்லை

படிக்கத் தொடங்கினேன் 
பாரம் தாங்காது 
செத்துக்கொண்டிருக்கிறேன் 

- 26.12.2015 


Monday, December 21, 2015

பெண்களை அர்ச்சகராக நியமிக்கவேண்டும் - ரவிக்குமார்



( 26.09.2008 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி )

2008 செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி நீதிபதி கே.சந்துரு  வழங்கியுள்ள தீர்ப்பு முக்கியமானது (W.P.(MD) No. 9704 of 2007 M.P. (MD) Nos. 1 of 2007 and 1 of 2008). மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த நல்லுத்தேவன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு துர்க்கையம்மன் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்த பின்னியக்காள் என்பவர் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு அது. அந்தக் கோயிலில் பின்னியக்காளின் தந்தை பின்னத்தேவர் என்பவர் பூசாரியாக பணியாற்றி வந்தார். அவர் 2004ஆம் ஆண்டுவாக்கில் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவரது ஒரே மகளான பின்னியக்காள் கோயில் பூஜைகளை செய்து வந்தார். பின்னத்தேவர் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறந்து விட்டார். அவருக்குப் பிறகு தொடர்ந்து பின்னியக்காளே கோயில் பூஜைகளை நடத்தி வந்தார். இந்நிலையில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பின்னத்தேவருக்கு ஆண் வாரிசு எவரும் இல்லாத காரணத்தால் பூஜை செய்யும் உரிமை அவரது குடும்பத்தைச் சார்ந்த பிற தாயாதிகளுக்குத்தான் வரவேண்டும். அதை ஒரு பெண் செய்யக்கூடாது என்று பிரச்சனை கிளப்பினார். அதற்கு அந்த ஊர்க்காரர்களும் ஆதரவு தெரிவித்தார்கள். இதனிடையே தாசில்தார் முன்னிலையில் கிராமத்தார்களின் கூட்டம் நடத்தப்பட்டு அந்தக் கோயிலின் பூசாரியாக ஆண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த முடிவு செல்லாது என அறிவித்துத் தன்னையே தொடர்ந்து பூசாரியாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பின்னியக்காள் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. சந்துரு அவர்கள் அந்தக் கோயிலில் பூசாரியாக பெண் ஒருவர் இருக்கக்கூடாது என சட்டம் எதுவும் இல்லை. இந்த விஷயத்தைத் தாசில்தார் தீர்மானிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் அந்தக் கோயிலின் வழிபாட்டுக்குரிய தெய்வமாகப் பெண் தெய்வமான துர்க்கையம்மன்தான் உள்ளது. அந்தத் தெய்வத்துக்கு பூஜை செய்ய ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

‘‘அதிர்ஷ்ட வசமாக இந்தக் கோயில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட ஒன்று அல்ல. இந்தியாவின் தென் பிராந்தியங்களில் அமைந்துள்ள உப பண்பாடுகளைச் சேர்ந்த தெய்வங்கள் மனு ஸ்மிருதியின் தளைகளிலிருந்து விடுபட்டவையாகும். எனவே பெண்ணை வீட்டு வேலைகளோடு மட்டுமே அடக்கி வைத்திருக்கும் நிலைமை இங்கு எழவில்லை. புகழ் பெற்ற தத்துவ அறிஞர் ஒருவர் குறிப்பிட்டதுபோல பெண்கள்தான் இந்த பிரபஞ்சத்தின் பாதியை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். மனிதகுலம் முன்னேறிச் செல்லவேண்டுமென்றால் அது ஆண், பெண் என்ற இரண்டு கால்களாலும் நடந்தால்தான் சாத்தியம். கடவுளின் சன்னதிகள் ஆண், பெண் பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமானவையாக விளங்க வேண்டும்’’ என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அவர், பின்னியக்காளே தொடர்ந்தும் அந்தக் கோயிலில் பூசாரியாக பணி புரியலாம் எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தைத் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார். அந்தச் சட்டம் குறித்துத் தமிழக சட்டப்பேரவையில் பேசியபோது, ‘‘இந்து அறநிலையத்துறைக்கு உட்படாத கிராமக் கோயில்களுக்கும்கூட இந்தச் சட்டம் பொருந்தக்கூடியதாக அமைக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் பெண்களும் அர்ச்சகராவதற்கு இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட வேண்டும்’’ என்று நான் கோரிக்கை விடுத்தேன். இப்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தையேகூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. 

தமிழ்நாட்டில் மடங்கள், சமணக் கோயில்கள் உட்பட இந்து அறநிலையத்துறையின் கீழ் 38,422 கோயில்கள் உள்ளன. அதில் ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் வருகிற கோயில்கள் 160. பத்தாயிரத்துக்கும் குறைவாக வருமானம் வருகிற கோயில்கள் 34,415 ஆகும். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வராத கிராமக்கோயில்கள் எவ்வளவு உள்ளன என்பது துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஆறு மையங்களில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் மொத்தம் 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில் நாற்பது பேர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஐம்பத்தைந்து பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், எண்பத்தெட்டு பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும், இருபத்துநான்கு பேர் இதர வகுப்புகளையும் சேர்ந்தவர்கள். அவர்களுள் பெண்கள் எவரும் கிடையாது.

ஆகம விதிகளின்படி பூஜை செய்வது பரம்பரை உரிமையாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வேத காலத்தில் பெண்களும் ஆண்களுக்கு சமமாக உரிமை பெற்றிருந்தார்கள் எனச் சொல்லப்பட்டாலும், அதற்குப் பிறகு பெண்களுக்கு வேதங்களைப் படிப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டது. அதனால் பூஜை செய்கிற உரிமையையும் அவர்கள் இழந்தார்கள். இன்று ஆண்களுக்குச் சமமாக அனைத்துத் துறைகளிலும் அவர்கள் உரிமைகளையும், வாய்ப்புகளையும் பெற்றபோதிலும் மதம் சார்ந்த நிறுவனங்களுக்குள் அவர்கள் பாரபட்சமாகவே நடத்தப்படுகிறார்கள். அதன் ஒரு அடையாளம்தான் பெண்கள் அர்ச்சகராக முடியாது என்ற நிலைமை ஆகும்.

நீதிபதி சந்துரு அவர்கள் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு நல்லுத்தேவன்பட்டி கிராமத்தில் உள்ள துர்க்கையம்மன் கோயிலுக்கானதுதான் என்றபோதிலும், அதை அனைத்துக் கோயில்களுக்கும் பொருத்திப்பார்க்க முடியும். தென்னிந்தியாவில் உள்ள கோயில்கள் மனுஸ்மிருதியில் இருந்து விடுபட்டவை என்று அவர் கூறியிருப்பது மிகவும் முக்கியமானதொரு கூற்றாகும். தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இந்தத் தீர்ப்பை தமிழக அரசு எடுத்துக்கூறுவது பயனுள்ளதாய் இருக்கும்.

இன்றைய சூழலில் பாதுகாப்பு போன்ற காரணங்களைச் சொல்லி அரசாங்கங்கள் உருவாக்குகிற சில சட்டங்கள் ஜனநாயகத்தின் எல்லையை சுருக்கிக் கொண்டிருக்கிற நிலையில் இத்தகைய தீர்ப்புகளே அதை விரிவுபடுத்தவும், வலிமையாக்கவும் உதவுகின்றன. நீதிபதி சந்துரு அவர்களே, இப்படியான தீர்ப்புகள் பலவற்றை தொடர்ந்து நீங்கள் வழங்க வேண்டும். இந்திய நீதித்துறையில் புகழ் பெற்று விளங்கிய நீதிபதிகளின் வரிசையில் உங்கள் பெயரும் இடம் பெறுவது தமிழர்களுக்கு, தமிழ் நாட்டுக்குப் பெருமை.

-----------------------------

Sunday, December 20, 2015

நூலகங்களைக் காப்போம்!



வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நூலகங்களில் ஆயிரக் கணக்கான நூல்கள் சேதமடந்துள்ளன. சென்னையில் மட்டும் ஏழு நூலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் தனி நபராகவோ அல்லது ஒரு குழுவாகவோ ஏதேனும் ஒரு நூலகத்தைத் தத்தெடுத்துக் கொள்ளலாம். அதற்குக் குறைந்தபட்சம் ஆயிரம் நூல்களை வழங்கலாம். 

எனது வேண்டுகோளை ஏற்று சென்னை அரங்கநாதன் சப்வே வுக்கு அருகிலுள்ள புதுத் தெரு நூலகத்தை சுமார் ஆறு லட்ச ரூபாய் செலவில் புனரமைத்துத்தர அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (AIBEA) பொதுச்செயலாளர் திரு சி.ஹெச்.வெங்கடாசலம் ஒப்புக்கொண்டிருக்கிறார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் சேதமுற்ற நூலகங்களுக்கு புத்தக அடுக்குகள் சிலவற்றை வாங்கித்தர பெங்களூரைச் சேர்ந்த திரு நவீன் மெத்தில் என்பவர் முன்வந்திருக்கிறார். 

கேரள மாநிலத்தில் 'கிராமத்துக்கு ஒரு நூலகம்' என்ற திட்டத்தைப் பிரச்சாரம் செய்துவரும் திரு சுஜய் அவர்கள் சென்னையில் சேதமுற்ற நூலகங்களுக்கு நூல்களை சேகரித்துத்தர முன்வந்திருக்கிறார். 

நமது முயற்சியை ஒன் இந்தியா இணைய இதழ் மூலம் அறிந்த போட்டித் தேர்வுகளுக்கான நூல்களை வெளியிட்டுவரும் பதிப்பாளர் திரு சக்திவேல் திங்களன்று முதல் தவணையாக 50 நூல்களைத் தருவதற்கு முன்வந்துள்ளார். 

நாளை (திங்கள் 21.12.2015 ) காலை சுமார் 11.30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் இருக்கும் மாவட்ட நூலக அலுவலரை சந்தித்து முதல் தவணை நூல்களை வழங்கவுள்ளோம். என்னுடன் பத்திரிகையாளர் திரு ஸ்ருதி சாகர் யமுனன், எழுத்தாளர் மருதன், பதிப்பாளர் 'ஆழி' செந்தில்நாதன் ஆகியோரும் இணைந்துகொள்வதாக உறுதியளித்துள்ளனர். 

இந்தத் திட்டத்தில் பங்களிக்க விரும்பும் நண்பர்கள் அங்கே வருமாறு அல்லது தொலைபேசி/ மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறேன். 

அன்புடன்
ரவிக்குமார்
ஆசிரியர்,மணற்கேணி 

தொடர்புக்கு 94430 33305 
மின்னஞ்சல் : manarkeni@gmail.com

Friday, December 18, 2015

பிம்பங்களின் அரசியல்- ரவிக்குமார்



வெள்ளம் பாதித்த விருகம்பாக்கம் முதலான சில இடங்களில் தந்தி டிவி ' மக்கள் யார் பக்கம்?' நிகழ்ச்சிக்காக தேர்தலைப் பற்றிக் கேள்வி கேட்டபோது பதில் சொன்னவர்களிடம் தலைகாட்டிய கோபத்தைப் பார்த்தவர்கள் இளையராஜாவின் எதிர்வினையை வேறுவிதமாகப் புரிந்துகொள்ளக்கூடும். 

வெள்ளத்தோடு அதைப்பற்றிய நியூஸ் வேல்யூவும் வடிந்துவிட்டதாகக் கருதிய காட்சி ஊடக காமிராக்கள் தங்களுக்கு எப்போதும் செய்திச் சுரங்கமாக இருக்கும் சினிமா குப்பையை சீய்க்க ஆரம்பித்துவிட்டன. அதன் அடையாளம்தான் சிம்பு- அனிருத் பாடல் பிரச்சனை 

இளையராஜா பதில் சொல்லியிருந்தால் அதில் நியூஸ் வேல்யூ இந்த அளவுக்கு இருந்திருக்காது. அனிருத்தைவிட இளையராஜா மோசம் என்று 'நிரூபித்து'விட்டார்கள் 

கணங்களில் துடித்துக்கொண்டிருக்கும் காட்சி ஊடகப் போட்டியில் பலியிடப்படுகிறது ஊடகவியலாளர்களின் தன்மானம். அவர்களின் அறச் சீற்றம் ஊடக மூலதன அரசியலுக்கு எதிராகவும் திரும்பவேண்டும்.

Thursday, December 17, 2015

அர்ச்சகர் நியமனம்: சன் நியூஸ் விவாத மேடை

அனைத்துசாதியினரும் அர்ச்சகராவதற்கு வகைசெய்யும் தமிழக அரசின் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு: சன் நியூஸ் விவாதமேடை நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். 



https://m.youtube.com/watch?v=LOsqVVeOVU8

Wednesday, December 16, 2015

மகளிரையும் அர்ச்சகராக்குக!

மகளிரையும் அர்ச்சகராக்கும் வகையில் சட்டத்  திருத்தம் செய்யவேண்டும் என நான் 2006 ஆம் ஆண்டே சட்டப்பேரவையில் வலியுறுத்தினேன். 

25-7-2006 அன்று தமிழக சட்டப்பேரவையில் திருத்திய வரவு-செலவுத் திட்டம், 2006-2007ன் மீதான பொது விவாதத்தில் கலந்துகொண்டு பேசியதில் ஒரு பகுதி (முற்பகல் 11-10 )

திரு. து. ரவிக்குமார்: ”அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கின்ற வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஒரு சட்டம், இப்பொழுது இயற்றப்பட்டிருக்கின்றது. (மேசையைத் தட்டும் ஒலி) அந்தச் சட்டத்தின் அடிப்படையிலே சாதிப் பாகுபாடு களையப்படுகிறது.  ஆனால், பாலினப் பாகுபாடு களையப்படவில்லை.  அந்தச் சட்டத்திலே பெண்களும் அர்ச்சகராகலாம் என்கின்ற விதியினைச் சேர்த்து, (மேசையைத் தட்டும் ஒலி) மகளிருக்கு, தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் அந்தக் கருவறைகளை நீங்கள் திறந்துவிட வேண்டுமென்று அன்போடு உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.”

அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குங்கள் என்பது எல்.இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரை! - ரவிக்குமார்




பாரம்பரியமாக அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவதை ஒழித்து கல்வி, பயிற்சி ஆகிய தகுதிகளின் அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்படவேண்டும் என்ற பரிந்துரையை முதலில் வழங்கியவர் மறைந்த தலித் தலைவர்  எல்.இளையபெருமாள் ஆவார். இந்தியாவில் மணடல் கமிஷன் நியமிக்கப்படுவதற்கு முன்னர் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட கமிஷன் எல்.இளையபெருமாள் தலைமையிலான ஒரு நபர் கமிஷன். committee on untouchability, Economic and Educational Development of the Scheduled Castes என ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட அந்தக் குழு பொதுவாக ’இளையபெருமாள் கமிட்டி’ என்றே அழைக்கப்படுகிறது. அந்தக் குழுவின் சார்பில் அவர் இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்து தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை 1969 ஆம் ஆண்டு மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பித்தார்.

இளையபெருமாள் கமிட்டியின் அறிக்கையை மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை என்றபோதிலும் அப்போது தமிழ்நாட்டில் இருந்த திமுக அரசு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட அர்ச்சகர் நியமனம் குறித்த பரிந்துரையின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சட்டத்துக்கு திருத்த சட்டம் ஒன்ற 1970 ஆம் ஆண்டு கொண்டுவந்தது. அதை எதிர்த்து அர்ச்சகர்கள்,மடாதிபதிகள் சார்பில் 12 வழக்குகள் தொடுக்கப்பட்டன. பராசரன், பல்கிவாலா என மூத்த வழக்கறிஞர்களை நியமித்து அந்த திருத்த சட்டத்துக்குத் தடைபோட முயன்றார்கள். நீதித்துறை வரலாற்றில் ’சேஷம்மாள் மற்றும் இதரர் எதிர் தமிழக அரசு’ என அந்த வழக்கு அறியப்படுகிறது.

சேஷம்மாள் வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் சமூக சீர்திருத்தத்தை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கில்தான் இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (அதை கீழே தந்திருக்கிறேன்)

அர்ச்சகர் நியமனம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இப்போது தீர்ப்பளித்திருக்கும் நிலையில் தலைவர் எல்.இளையபெருமாள் அவர்களை நன்றியோடு நினைவுகூர்வோம்.

சேஷம்மாள் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பக்கம் 6 ல் இருக்கும் பகுதி இது:

The Principal Act of 1959 was amended in certain respects by the Amendment Act of 1970 which came into, force on January 8, 1971. Amendments were made to sections 55, 56 and 116 of the Principal Act and some consequential provisions were made in view of those amendments. The
Amendment Act was enacted as a step towards social reform on the recommendation of the
Committee on Untouchability, Economic and Educational Development of the Scheduled Castes.

The Statement of Objects and Reasons which are reiterated in the counter-affidavit filed on behalf of
the State of Tamil Nadu is as follows :
 
"In the year 1969 the committee on untouchability, Economic and Educational Development of the Scheduled Castes has suggested in its report that the hereditary
priesthood in the Hindu Society should be abolished, that the system can be replaced by an ecclesiastical Organisation of men possessing the requisite educational qualifications who may be trained in recognised institutions in priesthood and that the line should be open to all candidates irrespective of caste, creed or race. In Tamil Nadu Archakas, Gurukkals and Poojaries are all Ulthurai servants in Hindu temples. The duties of Ulthurai servants relate mainly to the performance of poojas, rituals and other services to the deity, the recitation of mantras, vedas, prabandas, the varams and similar invocations and the performance of duties connected with such performance and recitations. Sections 55 and 56 of the Tamil Nadu Hindu Religious and Charitable, Endowments Act, 1959 (Tamil Nadu Act 22 of 1959) provide for
appointment of office holders and servants in the religious institutions by the trustees by applying the rule of hereditary succession also. As a step towards social reform Hindu temples have already been thrown open to all Hindus irrespective of caste........
 
In the light of the recommendations of the Committee and in view of the decision of this Court in
Gazula Dasaratha Rama Rao v. State of Andhra Pradesh & Ors.(1) and also as a further step towards social reform the Government considered that the here- ditary principle of appointment of all office holders in the Hindu temples should be abolished and accordingly it proposed to amend sections 55, 56 and 116 of the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act, 1959 (Tamil Nadu Act XXII of 1959).

Tuesday, December 15, 2015

மழை வெள்ளம்: நூலகங்களைப் புனரமைப்போம்! - ரவிக்குமார்




சென்னையில் பெய்த கனமழையாலும், வெள்ளத்தாலும் பொதுநூலகங்கள் பல மூழ்கிப்போயின. அவற்றை சீர்படுத்தவும் சென்னை, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த நூலகங்களுக்குப் புதிய புத்தகங்களை வழங்கவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன். 

சேதமடைந்த நூலகங்கள்: 

முதல்கட்டமாக இந்த மாவட்டங்களில் சேதமடைந்த நூலகங்களின் பட்டியல் அந்தந்த மாவட்ட நூலக அலுவலர்களின் உதவியோடு தயாரிக்கப்பட்டது. சென்னை புதுத் தெருவில் உள்ள நூலகக் கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளது. சில நூலகங்களில் புத்தகங்களை வைப்பதற்கான அடுக்குகள் தேவைப்படுகின்றன. பாதிக்கப்பட்ட நூலகங்கள் அனைத்துக்கும் நூல்கள் தேவைப்படுகின்றன. 

சுத்தப்படுத்தப்பட்ட நூலகங்கள்: 

சென்னை அசோக்நகர், சிஐடி நகர் நூலகங்கள் சேறும் சகதியும் நிரம்பிக் கிடந்தன. அவற்றை சுத்தம் செய்வதற்கு தன்னார்வலர்கள் தேவை என நான் ட்விட்டரில் விடுத்த வேண்டுகோளைப் பார்த்து பலர் தொடர்புகொண்டனர். எனது வேண்டுகோள் தந்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. அதன்மூலமும் பலர் சென்னை மாவட்ட நூலக அலுவலதைத் தொடர்புகொண்டனர். அறுபது தன்னார்வலர்களின் பங்கேற்புடன் இரண்டு நூலகங்களும் சுத்தப்படுத்தப்பட்டு இப்போது செயல்படத் தொடங்கிவிட்டன. 

தேவைப்படும் உதவிகள்: 

சென்னை, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூலகங்களுக்கு புத்தக அடுக்குகளும், புதிய புத்தகங்களும் தேவைப்படுகின்றன.  

அறிவுப் பசி போக்குங்கள்: 

மழை வெள்ளப் பாதிப்பை அறிந்து தன்னார்வத்துடன் உணவும் உடைகளும் பிற பொருட்களும் கொடுத்து உதவியவர்கள் தன்னார்வலர்களும் நிறுவனங்களும்தான். வயிற்றுப் பசி போக்கியதைப்போல அறிவுப் பசி போக்குவதற்கு அவர்கள் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 

தொடர்புக்கு: 

உதவிசெய்ய முன்வருவோர் 94430 33305 என்ற கைபேசியிலோ, manarkeni@gmail.com என்ற மின்னஞ்சலிலோ என்னைத் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்
ரவிக்குமார் 
ஆசிரியர், மணற்கேணி

Sunday, December 13, 2015

பெனடிக்ட் ஆண்டர்ஸன் (1936-2015)காலமானார் - ரவிக்குமார்



தேசியம் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாட்டை முன்வைத்த சிந்தனையாளர் பெனடிக்ட் ஆண்டர்சன் (1936-2015) இன்று (13.12.2015) காலமானார். அவரது ஆய்வுகளின் மையமாக விளங்கிய இந்தோனேஷியாவில் தங்கியிருக்கும்போது உறக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது என நியூயார்க் டைம்ஸ் செய்தி கூறுகிறது. 

" கடந்த இருபது ஆண்டுகளாக மார்க்சியத்தின்மீதான ஈர்ப்பு குறைந்திருக்கிறது என்றபோதிலும் பிரச்சனைகள் முடியாத காரணத்தால் மார்க்சியத்தின் தேவையும் முடிந்துவிடாது" என்று நம்பிக்கை தெரிவித்த மார்க்சியர் அவர். 

" யுத்தத்தின்மூலம் புதிய நாடுகளை வெல்வது சாத்தியமில்லை என்பது நிதர்சனமாகிவிட்டது. இப்போது தேசங்களை அச்சுறுத்துவது அன்னிய நாடுகளல்ல, உள்நாட்டுச் சிதைவுதான்."எனக் குறிப்பிட்ட அவர் " ரஷ்யாவிலும், செக்கோஸ்லேவேக்கியாவிலும் அதுதான் நடந்தது. அது இந்தியாவிலும் நிகழக்கூடும். நாடுகள் இனி பெரிதாக முடியாது, சிறியவையாக மாறுவதே சாத்தியம்" என்று 2009 ஆம் ஆண்டில் நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்திருந்தார். 

தேசியத்தின் உருவாக்கத்துக்கும் அச்சுத் தொழில்நுட்பத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பை அவர் எடுத்துக்காட்டினார். தேசியம் குறித்த அவரது பார்வை ஆசிய நாடுகளுக்கு அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு மிகவும் பொருந்தக்கூடியது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் அவரது உலகப்புகழ்பெற்ற நூலான Imagined Communities தமிழில் எப்போதோ மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழ்ச் சிந்தனையுலகம் அந்த அளவுக்கு நுண்ணுணர்வு கொண்டதாக இல்லை. 

தேசியம் என்ற கருத்தாக்கம் குறுந்தேசிய வெறியாக மாற்றப்பட்டு சீரழிக்கப்படும் இன்றைய சூழலில் அந்த நூலை முன்வைத்து தீவிரமான விவாதங்களை முன்னெடுக்க இனியாவது இடதுசாரிகள் முன்வரவேண்டும். 

Saturday, December 12, 2015

ட்விட்டர் மூலம் வந்த உதவி - ரவிக்குமார்



சிதம்பரத்தை அடுத்த வடக்குமாங்குடியிலிருக்கும் தலித் தெருவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரின் குடிசை இந்த மழையில் மிகவும் சேதமடைந்துவிட்டது. அவரது கணவரும் மகன்களும் இறந்துவிட்டனர். அவரது குடிசையோடு அவரைப் படமெடுத்து ட்விட்டரில் பகிர்ந்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டு அமெரிக்காவிலிருந்து தொடர்புகொண்ட ஒரு தமிழ் இளைஞர் அந்த மூதாட்டியின் குடிசையை சரிசெய்ய தான் உதவ விரும்புவதாகத் தகவல் அனுப்பினார். 


மகாலட்சுமி என்ற அந்த மூதாட்டிக்கு வங்கிக் கணக்கு இருந்தது. அவரது பாஸ் புத்தகத்தைப் படமெடுத்து ட்விட்டரில் அனுப்பினேன். அமெரிக்க இளைஞர் அந்தக் கணக்கில் உடனடியாக மூவாயிரம் ரூபாயை அனுப்பினார். அந்தத் தொகை அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டதை படம் எடுத்து ட்விட்டர் மூலமே அனுப்பி வைத்தேன். அந்த இளைஞருக்கு மிகுந்த மன நிறைவு.


நான் எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும் அவர் தனது பெயரைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். அந்த நல்ல மனிதருக்கு என் நன்றி. 

Monday, December 7, 2015

தமிழக வெள்ளம்: இளைஞர்களின் தொண்டு = அரசியல்வாதிகள்மீதான வெறுப்பு



சென்னை, கடலூர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இளைஞர்கள் செய்யும் நிவாரணப் பணிகள் அரசாங்கத்தின் தேவையையே மறக்கடித்துவிட்டது. இளைஞர்களின் இந்த அர்ப்பணிப்பில் தார்மீக ஆவேசம் வெளிப்படுவதைக் காண்கிறேன். அது கருணையால் உந்தப்பட்டதல்ல, மாறாக அரசியல்வாதிகள்மீதான கோபத்தால் எழுந்த உணர்வு. 

இளைஞர்கள் மட்டுமல்ல அரசியல் கட்சிகளைச் சாராத பொதுமக்கள் எல்லோரிடமும் இந்தக் கோபம் வெளிப்படுகிறது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜு சிலநாட்களுக்குமுன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருப்பதைப்போல இந்த அரசியல்/ சமூக அமைப்பை மாற்றியமைக்கிற ஒரு புரட்சிதான் இதற்குத் தீர்வு. 

அரசியல்வாதிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் சுயபரிசீலனை செய்துகொண்டு ஜனநாயகத்தின் மாண்பைக் காப்பாற்ற முன்வரவேண்டும். 

தனிநபர் துதிக்கும், பிம்ப வழிபாட்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். 

இலவசங்களாலும், பணத்தாலும் மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இனி அரசியலில் இடம் இருக்காது. 

Tuesday, December 1, 2015

2005 ஆம் ஆண்டு பெய்த மழையில் தமிழக அரசு கற்ற பாடம் என்ன? -ரவிக்குமார்



2005 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ஆரம்பித்து டிசம்பர் முதல் வாரம் வரை நான்கு கட்டங்களாகப் பெய்த கடும் மழையால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. அந்த மழை வெள்ளத்தில் 497 பேர் உயிரிழந்தனர். 1520 கால்நடைகள் இறந்தன. தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 62 பேர் உயிரிழந்தனர். 

2005 ஆம் ஆண்டு மழை வெள்ளத்திலும் அதிகம் பாதிக்கப்பட்டது சென்னைதான். வடகிழக்குப் பருவமழை காலத்தில் சென்னையில் 753.1 மிமீ மழை பெய்யவேண்டும். ஆனால் அந்த ஆண்டில்  சென்னையில் 1984.5 மிமீ மழை பெய்தது. அது 164% அதிகமாகும். அக்டோபர் மாதம் 27,28 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் 436.90 மிமீ மழை பெய்தது. 

அன்றைக்கு ஆட்சியிலிருந்த அதிமுக அரசு அப்போது மத்தியில் ஆட்சி நடத்திய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசிடம் 13684.16 கோடி ரூபாய் நிதி உதவி கேட்டது. 2.58 லட்சம் டன் அரிசியும் 43200 கிலோ லிட்டர் மண்ணெணையும் கேட்டது. 

மத்திய அரசோ முதல் தவணையாக 500 கோடி அடுத்து 500 கோடி அதன்பின்னர் 808.35 கோடி என மொத்தமாக 1808.35 கோடி நிவாரணம் வழங்கியது. அத்துடன் 2.44 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் 21 ஆயிரம் கிலோலிட்டர் மண்ணெண்ணையும் வழங்கப்பட்டது. 

வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சரும் நிதி அமைச்சரும் ஹெலிகாப்டரில் உடனடியாகப் பார்வையிட்டனர். மத்திய அரசின் அதிகாரிகளைக் கொண்ட குழு இரண்டுமுறை வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தது. 

2005 ஆண்டில் பெய்த மழையைவிட இப்போது சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்துவரும் மழை அதிகம்தான். இன்னும் எத்தனை கட்டங்களாக மழை பொழியும் என்பதை நாம் இப்போது சொல்ல முடியாது. ஆனால் 2005 ஆம் ஆண்டைப்போல இந்த ஆண்டு மழையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்படவில்லை. 

2005 ஆம் ஆண்டு மழை வெள்ள அனுபவத்திலிருந்து தமிழக அரசு ஏதாவது கற்றுக்கொண்டதா? அதை வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததா? தத்தளிக்கும் சென்னையையும் பிற மாவட்டங்களையும் பார்க்கும் மக்களே அதை முடிவுசெய்துகொள்ளட்டும். 

( இந்தப் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் தமிழக அரசு வெளியிட்ட Annual Report on Natural Calamities 2005-2006 என்ற அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை) 

ஏரியில் கட்டிய வீடு மட்டுமா மூழ்கிக் கிடக்கிறது? - ரவிக்குமார்



"ஏரியில் குளங்களில் வீடு கட்டிவிட்டு வெள்ளம் வந்துவிட்டது என்பது சரியா?" என டிவி விவாதங்களில் சில அன்பர்கள் கேட்கிறார்கள். ஏரி, குளம் என்பவை இயற்கையாக உருவானவையா? அவற்றையும் செயற்கையாக மனிதர்கள்தானே உருவாக்கினார்கள்? ஏரி குளத்தைத் தூர்த்து கட்டிய கட்டிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கவுமில்லை, மற்ற இடங்களில் கட்டிய வீடுகளை வெள்ளம் சூழாமலும் இல்லை. 

நகரங்களில் உட்கார்ந்துகொண்டு நகரமயம் மோசம் என்பதும், கிராமங்களில் மழையை கொடையாகப் பார்க்கிறார்கள் என்பதும் கிர்ரமங்களை தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் நகரவாசிகள் சிலரின் பாசாங்கு. 

நகரமயம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல தவிர்க்கக்கூடாததும் ஆகும். நகரங்களில் இருப்பவர்கள் பிளாட்பாரங்களிலா வாழ முடியும்? அவர்களுக்கு வீடு வேண்டாமா? எல்லோரும் குன்றுகளின்மீதா வீடு கட்டமுடியும்? 

கடல்மீதே கட்டிடம் கட்டி வாழ்கிற காலம் இது. இயற்கை நேசம் என்ற பெயரில் அபத்தமாகப் பேசுவதை நிறுத்துவோம். திட்டமிட்ட நகரமயத்தை வலியுறுத்துவோம். 

மழைக்காலத்திலாவது மது விற்பனையை நிறுத்தக்கூடாதா?



சென்னையிலும்,  மழை வெள்ளத்தால் தொடர்ந்து அல்லல்பட்டுவரும் பிற மாவட்டங்களிலும் மருத்துவமனைகள் திறந்திருக்கின்றனவோ இல்லையோ டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கின்றன; அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கிறதோ இல்லையோ தட்டுப்பாடில்லாமல் மது கிடைக்கிறது. 

குடிமகன்கள் மழைக்காலக் குளிரைப் போக்க அளவுக்கதிகமாக மது அருந்தக்கூடும். அப்படி குடிப்பவர்கள் இப்போது விழுந்து கிடக்க பிளாட்பாரங்கள் கூட இல்லை. விழுந்தால் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பது நிச்சயம். 

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை ஏற்கனவே 200 ஐ எட்டிக்கொண்டிருக்கிறது. இப்படி தொடர்ந்துகொண்டிருக்கும் மது விற்பனையால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. 

தமிழக அரசு மனமிரங்கி டிசம்பர் 5 வரையிலாவது மழை வெள்ள பாதிப்புக்காளாகிவரும் பகுதிகளில் மது விற்பனையை நிறுத்தக்கூடாதா?