Friday, October 30, 2015

மாட்டிறைச்சி அரசியல் - ரவிக்குமார்







அவர்கள்
திரிசூலங்களோடு பாய்ந்தார்கள்
அந்த முதியவனை 
வீட்டுக்குள்ளிருந்து இழுத்துவந்தார்கள்
நெஞ்சைப் பிளந்து
இதயத்தைப் பிடுங்கியெடுத்துக் காட்டினார்கள்
' இதோ இவன் மறைத்து வைத்திருந்த மாட்டிறைச்சி'

**

அவர்கள்
சேரிக்குள் நுழைந்தார்கள்
அந்தச் சகோதரியைப் 
பிடித்திழுத்து நிர்வாணமாக்கி
ஊர்வலம் விட்டார்கள்
கத்தியால் அவள் மார்பை அரிந்தெடுத்துக்
கூவினார்கள்
' இதோ இவள் ஒளித்து வைத்திருந்த
மாட்டிறைச்சி'

**

அவர்கள்
நள்ளிரவில் வந்தார்கள்
பெட்ரோல் ஊற்றி
தீப்பந்தத்தை வீசினார்கள்
கருகிக் கிடந்த குழந்தைகளின் சடலங்களைக் காட்டிக் 
கும்மாளமிட்டார்கள்
' இதோ இவர்கள் சமைத்து வைத்திருந்த
மாட்டிறைச்சி'

**

அவர்கள்
அவனைப் பின்தொடர்ந்தார்கள்
கடத்திச் சென்று
கழுத்தை அறுத்தார்கள்
முண்டத்தை வீசியெறிந்து  சொன்னார்கள்
' இதோ இவர்கள் சாப்பிட்டு மீந்த
மாட்டிறைச்சி'


**
வனவாசிகளுக்கு சேவை செய்தவரைக் 
குழந்தைகளோடு எரித்தவர்கள் 
குற்றம்சாட்டினார்கள்
' பரங்கியரின் உணவு 
மாட்டிறைச்சி '

**

ஒரு கையில் 
நியாயத் தராசைப் பிடித்திருந்தவன்
இன்னொரு கையால் எழுதினான் :
' கர்ப்பிணிப் பெண்களின்
வயிற்றைக் கிழித்தவர்கள்
நிரபராதிகள்.
அவர்கள் கொலைசெய்யவில்லை 
மாட்டிறைச்சியைத் தேடினார்கள் '







Wednesday, October 28, 2015

எதிர்ப்பின் அறம் :

’ஆன்லைன் பெட்டிஷனும்’ அறம் குறித்த ஒரு கேள்வியும்

-ரவிக்குமார் 

 

’ ஆன்லைன் பெட்டிஷன்’ எனப்படும் இணையவழி மனு செய்யும் போராட்டம் சர்வதேச அளவில் இப்போது பிரபலமாகிவிட்டது. ஒரு பிரச்சனை குறித்து உடனடியாகக் கருத்து திரட்டுவதற்கு உகந்த வழியாக அது கருதப்படுகிறது. இந்தப் போராட்டத்துக்கு உதவும் விதமாக ஏராளமான இணைய தளங்கள் இப்போது உருவாகிவிட்டன. Change.org என்பது அவற்றுள் புகழ்பெற்ற ஒரு தளமாகும். 

இந்தத் தளங்கள்மூலம் அனுப்பப்படும் ஏதேனும் ஒரு மனுவில் உங்கள் பெயரை நீங்கள் இணைத்திருந்தால் அதன்பின்னர் உங்கள் மின்னஞ்சலுக்கு எல்லாவிதமான மனுக்களையும் அந்தத் தளம் அனுப்பிக்கொண்டிருக்கும். அப்படித்தான் இன்று Change.org தளத்திலிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் இரண்டு மனுக்கள் இணைக்கப்பட்டிருந்தன. மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு மனு , மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்யக்கூடாது என இன்னொரு மனு. எது உங்களுக்கு உடன்பாடோ அதில் கையெழுத்திடுங்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தடை செய்யவேண்டும் என்ற மனுவை ஷிவானி ஷர்மா என்பவரும், தடை செய்யக்கூடாது என்ற மனுவை சன்கேட் சாப்ராவும் துவக்கியிருந்தனர். முதல் மனு ஏழு மாதங்களுக்கு முன்னர் துவக்கப்பட்டது. இரண்டாவது மனு ஒரு மாதத்துக்கு முன்னர் துவக்கப்பட்டது. இரண்டு மனுக்களையும் ஒன்றாக ஏன் சுற்றுக்கு அனுப்புகிறார்கள் என்ற ஐயத்தைவிடவும் இத்தகைய தளங்களுக்கான அறம் குறித்த கேள்வியை என்னுள் எழுப்பியது. 

ஆம்னஸ்டி இண்டர்நேஷனல், ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற அமைப்புகள்தான் முதலில் இத்தகைய இணையவழிப் போராட்டங்களை ஆரம்பித்தன. அதிகாரத்துவ அரசாங்கங்களால் எவரேனும் கைது செய்யப்பட்டால், அல்லது ஒரு அத்துமீறல் நடந்தால் அதை உலகின் கவனத்துக்கு எடுத்துச் சென்று ஐநா முதலான சர்வதேச அமைப்புகளையும், அரசாங்கங்களையும் வலியுறுத்தும் விதமான மனுக்களை அனுப்புமாறு இந்த மனித உரிமை அமைப்புகள் கோருவது வழக்கம்.அந்த மனுக்கள் ஆதிக்கக் கருத்தியலுக்கு எதிராகவே இருக்கும். 

இணையப் பெருக்கத்துக்குப் பின்னர் ‘ஆன்லைன் பெட்டிஷன் ‘ என்பது பிரபலமானதொரு எதிர்ப்பு வடிவமாக மாறிவிட்டதால் அதற்கான இணையதளங்கள் பெருகியபின்னர் எவரும் எளிதாகஇப்படி ஆன்லைன் பெட்டிஷனை உருவாக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தளங்கள் போராட்டங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்ததால்தான் பிரபலமடைந்தன, அந்தப் பிரபலத்தை இப்போதுஆதிக்கக் கருத்தியலைப் பரப்புவதற்காகவும் அவை பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றன. இதுவொரு அறம் பிறழ்ந்த ஆபத்தான போக்கு எனத் தோன்றுகிறது. மாட்டிறைச்சி என்பதன் பெயரால் இப்போது இந்தியாவெங்கும் வன்முறை ஏவப்படுகிரது. கொலைகள் நடக்கின்றன.மாநில அரசுகளின் உணவகங்கள்கூட சோதனை என்ற பெயரால் அச்சுறுத்தப்படுகின்றன. இது சர்வதேச ஊடக கவனத்தைப் பெற்றிருக்கிறது.இந்தச் சூழலில் மாட்டிறைச்சி உண்பதைத் தடைசெய்யவேண்டும் என வலியுறுத்தும் ஒரு மனுவை Change.org தளம் ஊக்குவித்து சுற்றுக்கு விடுவதன்மூலம் சகிப்புத் தன்மையற்ற பாசிச செயலுக்கு அது துணைபோயிருக்கிறது. பத்திரிகை சுதந்திரத்தைப் பறியுங்கள் என ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு கேட்டால் அது எத்தகைய அநீதியோ அத்தகைய அநீதிதான் Change.org செய்திருப்பதும். 

மனித உரிமைகளுக்கு எதிரான, பாசிசத்துக்குத் துணைபோகிற , அறம் பிறழ்ந்த Change.org தளத்தின் இந்தச் செயலைக் கண்டிப்போம். எதிர்காலத்தில் ஆன்லைன் பெட்டிஷன் தளங்கள் இத்தகைய மனுக்களை சுற்றுக்கு அனுப்புவதில்லை என்ற உறுதிமொழியை அவற்றிடம் பெறுவோம். இத்தகைய தளங்களுக்கென அறம்சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கச் செய்வோம். நமது எதிர்ப்பை mail@change.orgஎன்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிப்போம்.

Wednesday, October 14, 2015

மணற்கேணி - ஆய்வரங்குக்கு வாருங்கள்



மணற்கேணி தமிழ் ஆய்வுலகுக்கும் அறிவுலகுக்கும் ஆற்றிவரும் பங்களிப்பு எத்தகையது என்பதற்கு மணற்கேணி இதழ்களில் வெளியான நேர்காணல்களே சான்று. 

தமிழ்ச் சிறுபத்திரிகைகள் ஆங்கில ஏடுகளில் வெளிவரும் நேர்காணல்களை மொழிபெயர்த்து வெளியிடுவது வழக்கம். அதற்கு மாறாக மணற்கேணியில் வெளியான நேர்காணல்கள் இரண்டின் ஆங்கில வடிவத்தை The Hindu நாளேடு Sunday Magazine ல் வெளியிட்டது. 

இதுவரை மணற்கேணியில் பின்வரும் ஆளுமைகளின் நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. 

1. மினி கிருஷ்ணன்
2. ஃ ப்ரான்ஸுவா குரோ
3. இந்திரா பார்த்தசாரதி
4. கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்
5. செஹ்பா சர்வார்
6. சாமியா பஷிர்
7. சூஸன் ஹாரீஸ் 
8. சோனியா கமால் 
9. பேராசிரியர் கே. ராஜன்
10. டெஸ்மோண்ட் பொப்பி ஆராச்சி
11. திலிப் சக்ரவர்த்தி 
12. பண்டிதர் நாகலிங்கம்
13. எம். ஏ. நுஃமான்
14. கவிஞர் கே.சச்சிதானந்தன் 
15. பேராசிரியர் இ. அண்ணாமலை 

மணற்கேணி ஆறாவது ஆண்டில் நுழையும்  இந்த நேரத்தில் அது நடந்து வந்த பாதையை மதிப்பிடவும் இனி நடக்கவேண்டிய திசையை சுட்டிக்காட்டவும்தான் இந்த ஆய்வரங்கம். 

ஆய்வரங்குக்கு வாருங்கள்! ஆலோசனைகளைத் தாருங்கள் ! 

Monday, October 12, 2015

சாகித்ய அகாடமி விருதும் தமிழ் எழுத்தாளர்களும்

தமிழ் எழுத்தாளர்கள் எவரும் சாகித்ய அகாடமி விருதைத் திருப்பிக் கொடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தைப் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விருதுபெற்ற தமிழ் எழுத்தாளர்களில் சிலர் ஒரு கூட்டறிக்கையினை வெளியிட்டுள்ளனர். அந்தப் பெருந்தன்மைக்காக அவர்களைப் பாராட்டுவோம். 

கவிஞர் கே.சச்சிதானந்தனிடம் நான் எடுத்த நேர்காணலில் இடம்பெற்றுள்ள ( மணற்கேணி இதழ் 26 ) இந்தப் பதிலை நம் எழுத்தாளர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். 
========

* ரவிக்குமார்: நோபெல் பரிசுக்காக உங்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.இப்போது பாரத் ரத்னா விருது குறித்து சர்ச்சைகள் நடக்கின்றன. எந்தவொரு விருது வழங்கப்பட்டாலும் அதன்கூடவே சர்ச்சையும் எழுவது இங்கே வழக்கமாகிவிட்டது. இத்தகைய விருதுகளைத் தேர்வு செய்வதில் இன்னும் ஜனநாயகப்பூர்வமான முறைகள் கடைபிடிக்கப்படவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

** கவிஞர் கே. சச்சிதானந்தன்: ஒருநிறுவனம் ஓரளவுக்குத்தான் அந்த தேர்வை கட்டுப்படுத்தமுடியும். சாகித்ய அகாடமியில் எனது அனுபவங்களிலிருந்து சொல்கிறேன்.அங்கே 23 பேர்கள் ஒரு விருதைத் தேர்வு செய்வதில் சம்பந்தப்படுகிறார்கள். உள்ளேயிருந்து 10 உறுப்பினர் கொண்ட ஆலோசனைக்குழு, அடுத்து வெளியேயிருந்து 10 உறுப்பினர் கொண்ட குழு கடைசியில்  3 பேரைக்கொண்ட நடுவர் குழு. இந்த 23 பேரும் ஒரே கருத்தோடு இருப்பார்கள் எனக் கூற முடியாது. பெரும்பாலும் இந்த விருது பொருத்தமானவர்களுக்குத்தான் போகிறது.தகுதியில்லாதவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்ற புகார் சில மொழிகளில்தான் எழுகிறது, பொருத்தமில்லாதவர்களென்றால் தேர்வுசெய்யப்பட்டவர்களைவிடவும் தகுதி வாய்ந்தவர்கள் இருப்பதாகச் சொல்லப்படுவதைக் குறிப்பிடுகிறேன். இப்படிப் புகார் எழும்பும் மொழிகளில் தமிழ் ஒன்று. தமிழ், பஞ்சாபி, ராஜஸ்தானி போன்ற மொழிகளில் இந்தப் புகார்கள் எழுகின்றன.

மாநில ஒருங்கிணைப்பாளரைத் தேர்வு செய்த பின்னர் மற்றதை அவர் பொறுப்பில் விட்டுவிடுகிறார்கள். சில நேரங்களில் அவர் ஒரு குழுவின் நலனை மட்டும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறார்.அதனால்தான் இந்தப் பிரச்சனை. மலையாளத்தில் இந்த விருது தகுதியில்லாத ஒருத்தருக்குக்கூட வழங்கப்பட்டதில்லை. அதற்கு இங்கு இருக்கும் விழிப்புணர்வு ஒரு காரணம். நடுவர்களும் இங்கே பொறுப்போடு நடந்துகொள்கிறார்கள். சில மொழிகளில் மிகவும் சாதாரணமான ( mediocre) எழுத்தாளர்கள்கூட இந்த விருதைப் பெற்றுவிடுகிறார்கள்.

சில எழுத்தாளர்கள் அடுத்த விருது எப்போது வழங்கப்படுகிறது என்பதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். நான், அடுத்த கவிதையை அடுத்த வரியை சிந்திக்கிறேன்.

Thursday, October 8, 2015

கவிதையில் வாழ்பவன் - ரவிக்குமார்



அவர்கள் அவனைப் பிடித்தபோது
அவனிடம்
ஒரு துப்பாக்கியும் 
ஒரு பையும் தான் இருந்தன
குழந்தைகள் வைத்திருப்பதுபோன்ற 
நாய்க் காது பை
பச்சை நிறத்தில் ஒரு நோட்டுப் புத்தகம் அதில் எழுதப்பட்டிருந்தன 
நான்கு கவிகளின்
அறுபத்தொன்பது கவிதைகள்

துப்பாக்கியில் ரவைகள் இல்லை
பையில் ஒரு ரொட்டித் துண்டு இல்லை
குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லை 

இத்தனை நாள் எப்படி உயிரோடிருந்தான்
எதனைக்கொண்டு சண்டை போட்டான்

எப்படியெப்படியோ விசாரித்துப் பார்த்தார்கள் 
சிரித்தானே தவிர பதில் சொல்லவில்லை

அலுத்துப்போன சிப்பாய்கள் 
ஆணையின்படி அவனை சுட்டுக்கொன்றார்கள்

பச்சை நிற நோட்டுப் புத்தகம்
அதிலிருந்த
அறுபத்தொன்பது கவிதைகள்

தாகிக்கும்போது தண்ணீராகும்
பசித்திருக்கும்போது உணவாய் மாறும்
துப்பாக்கியில் போடும் தோட்டாக்களாய் உருவெடுக்கும் 

சுட்டுக் கொன்றார்கள்

ஆனால்,
பச்சை நிற நோட்டுப் புத்தகத்தில் 
படியெடுத்து வைத்த கவிதை வரிகளில்
இன்னமும் அவன் 
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான் 

( அக்டோபர் 9 - சே குவேராவின் 48 ஆவது நினைவு நாள்) 


 



ஸ்வாத்லேனாவுக்கு நோபல்: பனிப்போர் காலம் திரும்புகிறதா? - ரவிக்குமார்




ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஷோலகோவ், போரிஸ் பாஸ்டர்நாக், சோல்செனித்ஸின், ப்ராட்ஸ்கி ஆகியோர் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் ஷோலகோவ் தவிர மற்ற அனைவருமே சோவியத் யூனியனின் ஆட்சிமுறையைக் கடுமையாக விமர்சித்தவர்கள். அவர்களைப்போல படைப்பிலக்கியவாதி இல்லையென்றாலும் சோவியத் ஆட்சி முறையை விமர்சிப்பவர்தான் 2015 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றிருக்கும் ஸ்வாத்லேனா அலெக்ஸீவிச். 

1987 ஆம் ஆண்டு ப்ராட்ஸ்கிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அது பனிப்போர் காலம் ( Cold War period ) முடிவை நெருங்கிய நேரம். அதன்பின்னர் கோர்ப்பசேவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1990 ல் வழங்கப்பட்டது. அது பனிப்போர் காலத்தின் முடிவை அறிவித்தது. அதன்பின்னர் ஒருதுருவ உலகம் என்ற நிலை, அதில் அமெரிக்காவின் மேலாதிக்கம். இப்போது அது மாறத் தொடங்கியிருக்கிறது. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. உக்ரைன் அதற்கொரு அடையாளம். 

இப்போது ஸ்வாத்லேனாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் நோபல் பரிசு பனிப்போர் காலம் மீண்டும் தலையெடுத்துள்ளதன் அறிகுறியாகவே தோன்றுகிறது. சோஷலிச அரசுகள் குறித்த அவரது விமர்சனங்கள் ப்ராட்ஸ்கியை நினைவூட்டுகின்றன. அதிகாரத்துவம் எதிர்க்கப்படவேண்டும். ஆனால் அது ஏகாதிபத்தியத்துக்கு சேவை புரிவதாக திரிந்துவிடக்கூடாது. ஸ்வாத்லேனா ஆற்றப்போகும் ஏற்புரையைப் படிக்க ஆவலாக இருக்கிறேன். யுத்தத்தின் மனிதத்தன்மையற்ற முகத்தை அவர் திறந்து காட்டும்போது அமெரிக்காவின் முகமும் அதில் தென்படுகிறதா எனப் பார்க்கவேண்டும். 

இலக்கிய அரசியலைப் புரிந்துகொள்ள அரசியல் இலக்கியங்களைத்தானே தேடிப்போகவேண்டும். 

Wednesday, October 7, 2015

நோபல் பரிசை அடோனிசுக்குக் கொடுக்கவேண்டும் - ரவிக்குமார்


 
இந்திய  எழுத்தாளர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்க சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பிக் கொடுத்துக்கொண்டிருக்கும் சந்தடியில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு யாருக்குக் கிடைக்கப்போகிறது என்று பேசுவதற்கு இங்கு எவரும் இல்லை. இந்த ஆண்டு விருது பெரும் வாய்ப்பு உள்ள ஐந்துபேரின் பெயர்களை வால்  ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டிருக்கிறது. அதில் ஸ்வேத்லேனா  அலெக்ஸீவிச் என்ற எழுத்தாளரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறது. பத்திரிகையாளராக இருக்கும் ஸ்வேத்லேனா  அலெக்ஸீவிச் ஆப்கானிஸ்தான் போரில்  கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் குடும்பத்தினரைப் பேட்டிகண்டு எழுதிய புத்தகம் முக்கியமானதெனச் சொல்கிறார்கள் . அவருக்கு ஒருவேளை நோபல் பரிசு கொடுக்கப்பட்டால் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு உரைநடை நூலுக்காகப்  பரிசு பெறுபவராக அவர் இருப்பார். 
 
வால்  ஸ்ட்ரீட் ஜர்னலின் பட்டியலில் கடைசியாக அடோனிஸின்  பெயர் இருந்தபோதிலும் அவருக்கு இந்த ஆண்டாவது நோபல் பரிசு கொடுக்கவேண்டும் என்பது எனது கருத்து.“ கவிஞன் எனச் சொன்னால் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன் என அர்த்தம். உண்மையில் நான் எதுவும் எழுதவே இல்லை. கவிதை என்பது துவக்கமும் முடிவும் இல்லாத ஒரு செயல்பாடு. அது துவக்கத்துக்கான, முடிவற்ற துவக்கத்துக்கான ஒரு உறுதிமொழி” எனக் குறிப்பிடும் அடோனிஸின் கவிதைகள் பல தொகுப்புகளாக வெளிவந்துள்ளன, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது பெயர் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காகப் பலமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் பாரிஸ் நகரில் வாழ்கிறார். 

நான் மொழிபெயர்த்து மணற்கேணி வெளியிட்டிருக்கும் ' குரல் என்பது மொழியின் விடியல் ' என்ற அரபுக் கவிதைகளின் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ' பாலை ' என்ற நீண்ட கவிதையைப் படித்துப் பாருங்கள் நான் சொல்வதன் நியாயம் புரியும். அந்தக் கவிதையிலிருந்து ஒரு பகுதி: 
 
அவன் கவிதை ஒன்றை எழுதினான்

 ” சாலை எங்கே தொடங்குகிறதென்பதோ சூரியனுக்கு எதிரே எனது  நெற்றியை எப்படி வைத்துக்கொள்வது என்பதோ எனக்குத் தெரியவில்லை”

அவன் கவிதை ஒன்றை எழுதினான்

 “ என் எதிர்காலம் ஒரு பாலை என் ரத்தம் ஒரு கானல்”

அவன் கவிதை ஒன்றை எழுதினான் அது என்னை மிருதுவாக்கியது

அவன் கவிதை ஒன்றை எழுதினான் என் சகோதரனைக் கொலைசெய்து என்னைத் 

தகுதியுள்ளவனாக்கிக்கொள்ளும்படி

அவன் கவிதை ஒன்றை எழுதினான் அது எதிர்காலம் ஒன்றை முன்மொழிந்தது

எவரும் எதிர்பாராத சாத்தியம் என எண்ணிப் பார்க்காத

அவன் கவிதை ஒன்றை எழுதினான் 

அது உண்மைக்கும் அதற்கும் இடையில் மொழியை ஒரு திருடனைப்போல இடைநீக்கம் செய்துவிட்டது

அவன் கவிதை ஒன்றை எழுதினான் 

அது மெழுகுவர்த்தியைப்போல இருக்குமாறு நிலவிடம் சொன்னது

அவன் கவிதை ஒன்றை எழுதினான் 

அது சூரியனின் முகத்தை வானத்துடன் குழப்பிவிட்டது

அவன் கவிதை ஒன்றை எழுதினான் 

அது அவனைக் கொன்றுவிட்டது

Tuesday, October 6, 2015

சாதி பயங்கரவாதம் : ஒரு வேண்டுகோள் - ரவிக்குமார்



கோகுல்ராஜ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரின் பேட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது குறித்து நான் எழுதிய முகநூல் பதிவில் ஊடக அறம் மீறப்பட்டிருப்பது பற்றி சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கு மதிப்பளித்து நேற்று (05.10.2015) நேர்படப் பேசு விவாதத்தில் அதை பேசுபொருளாக எடுத்தார்கள். நானும் கலந்துகொண்டேன். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கும் அந்த நிகழ்ச்சியை நெறியாள்கை செய்த தோழர் குணசேகரன் அவர்களுக்கும் நன்றி. 

இந்த விவாதத்தில் நான் எழுப்பிய பிரச்சனைகள் / முன்வைத்துள்ள தீர்வுகள் தொடர் நடவடிக்கைகளைக் கோருபவை. அந்த விவாதத்தைப் பார்த்தவர்களும் பார்க்காதவர்களும் நான் அந்த நிகழ்ச்சியில் வலியுறுத்திய பின்வரும் விஷயங்களை இன்னும் பரவலான தளத்துக்கு எடுத்துச்செல்லவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்: 

1. சாதிய வன்முறை,  'வன்கொடுமை'  (atrocity ) என்ற விளக்கத்தைத் தாண்டி பயங்கரவாதம் ( terrorism ) என்ற கட்டத்தை எட்டியுள்ளது.  தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்திய அளவில்  மத வன்முறையால் பறிக்கப்பட்ட உயிர்கள், ஏற்பட்ட பொருள் சேதங்களோடு ஒப்பிட்டால் சாதியின் பெயரால் நடந்த கொலைகளும், ஏற்பட்ட பொருளிழப்புகளும் அதிகம். இதற்கு கடந்த பத்தாண்டுகளாக வெளிவந்துள்ள NCRB அறிக்கைகளே ஆதாரங்களாக உள்ளன. எனவே சாதி பயங்கரவாதம் ( caste terrorism ) என்ற வகைப்பாட்டை மத்திய மாநில அரசுகள் உருவாக்கவேண்டும். பயங்கரவாத சட்டங்களின் விளக்கங்களின் கீழ் இதைக் கொண்டுவருவதற்கும், casteism also terrorism என்ற உலகளாவிய பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் ஜனநாயக சக்திகள் முன்வரவேண்டும். 

2. தமிழகக் காவல்துறையில் சாதி பயங்கரவாதிகளைக் கண்காணிக்கவும் அத்தகைய செயல்கள் நடக்காமல் தடுக்கவும் , சாதி பயங்கரவாதக் குற்றங்கள் நிகழ்ந்தால் அதில் ஈடுபட்டவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும் உதவும் வகையில் கியூ பிரிவு போல ஒரு சிறப்புப் பிரிவு உருவாக்கப்படவேண்டும். சாதியவாதிகளால் நடத்தப்படும் உதிரி இயக்கங்கள், அவர்களது வெறுப்புப் பிரச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அந்த சிறப்புப்பிரிவு கண்காணித்து விவரங்களைத் திரட்டி நடவடிக்கை எடுக்கவேண்டும். சமூக அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் மனித உரிமை அமைப்புகள் இதற்காகத் தமிழக அரசை வலியுறுத்தவேண்டும். 

3. சாதி பயங்கரவாதம் , வெறுப்புப் பிரச்சாரம் என்பவை தமிழ்நாட்டில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டு ஊடகங்கள் இவை தொடர்பான செய்திகளை வெளியிடுவது குறித்த அறம் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளை ( Ethical Standards ) உருவாக்கிக்கொள்வது அவசியம். இதற்காக சுய கட்டுப்பாட்டு அமைப்புகளை உருவாக்கவேண்டும். அச்சு ஊடகங்களில் Readers Editor என்ற பொறுப்பு இருப்பதுபோல காட்சி ஊடகங்களில்  Viewers Editor என்ற பொறுப்பு உருவாக்கப்படவேண்டும். இதற்காக  ஊடக நிறுவனங்களை வலியுறுத்தவேண்டிய கடமை பத்திரிகையாளர்களுக்கும் பத்திரிகையாளர்  சங்கத்தினருக்கும் இருக்கிறது.

Sunday, October 4, 2015

கொலைக் குற்றவாளியின் பிரச்சாரத்துக்கு ஊடகம் உதவலாமா?



கோகுல்ராஜ் படுகொலையில் காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியின் பேட்டியை  Exclusive என முக்கியத்துவம் தந்து புதிய தலைமுறைத் தொலைக்காட்சி இன்று முழுதும் ஒளிபரப்பி வருகிறது. இந்தப் பேட்டியைப் பார்க்கும் எவருக்கும் முதலில் எழும் கேள்வி ' டிவி நிருபர்களால் சந்திக்க முடிகிற அந்தக் குற்றவாளியை போலீஸால் பிடிக்க முடியாதா? ' ஒரு ஊடகவியலாளருக்கு இருக்கும் வாய்ப்பு காவல்துறைக்கு இருக்காது. பூலான்தேவி, வீரப்பன், என போலீஸால் தேடப்பட்டுவந்த குற்றவாளிகளை பத்திரிகையாளர்கள் சநித்துப் பேட்டிகண்ட சம்பவங்கள் ஏற்கனவே நடந்ததுண்டு. எனவே இதில் வியப்படைய ஏதுமில்லை. 

 லெஸ்லீ உட்வின் என்பவர் இயக்கிய india's daughter ' என்ற ஆவணப்படத்தில் டெல்லி நிர்பயா வழக்கின் முதன்மைக் குற்றவாளியை சிறை அதிகாரிகளின் அனுமதி பெற்று சந்தித்து எடுத்த பேட்டி இடம்பெற்றிருந்தது. அதனால், அந்தப் படத்தை இந்தியாவில் திரையிட மத்திய அரசு தடை விதித்தது.  தன்னை நியாயப்படுத்திகொள்ள இந்தப் படம் குற்றவாளிக்கு உதவுகிறது. அது அந்த வழக்கை பாதிக்கும் என மத்திய அரசு விமர்சித்தது. தண்டனை பெற்று சிறையிலிருக்கும் குற்றவாளியின் பேட்டியை ஒளிபரப்புவதே வழக்கை பாதிக்கும் என்றால்  இதுவரை கைதுசெய்யப்படாமல் தலைமறைவாக இருக்கும் கொலைக் குற்றவாளியின் பேட்டி நிச்சயம் ஒப்பீட்டளவில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும். இந்த சட்ட ரீதியான பிரச்சனை ஒருபுறமிருக்க,  ஊடக அறம் தொடர்பான கேள்வி ஒன்று இதில் எழுகிறது. குற்றத்தின் தீவிரத்தைப் பார்க்காமல் அதைப்பற்றி கேள்வி எழுப்பாமல் குற்றவாளியின் பிரச்சாரத்துக்கு ஊடகம் ஒத்துழைக்கலாமா? என்பதே அந்தக் கேள்வி. 

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஓயாது ஒளிபரப்பப்பட்ட பேட்டி குற்றவாளியைப்பற்றிய நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தவே முயற்சித்தது.  கொலை வழக்கை திசைத் திருப்பும் விதமாகவும், கொல்லப்பட்ட கோகுல்ராஜை அவதூறு செய்வதாகவும் குற்றவாளி பேசியவற்றை எவ்விதத் தணிக்கையும் இல்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். இது ஊடக அறம் சார்ந்ததுதானா ? என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். 

கோகுல்ராஜ் ஒரு கலவரத்தில் கொல்லப்படவில்லை, ஆத்திரத்தில்  ஒரு கணநேர ஆவேசத்தில் அந்தக் கொலை நடக்கவில்லை. ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் செய்வதைப்போல நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட பயங்கரவாதப் படுகொலை அது. அந்தக் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்தாலும் வெறுப்புப் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் ஒருத்தரின் பேட்டியை எந்த விமர்சனமும் இல்லாமல் ஒளிபரப்புவது சட்ட விரோதம் என்பதைவிட அறம் தவறிய செயல் என்றே சொல்லத் தோன்றுகிறது.