Monday, September 28, 2015

சாதிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுங்கள் - ரவிக்குமார்

 

தோழர்களே! நாம் இங்கே  குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காக ஒரு கோரிக்கைக்காகக் கூடியிருக்கிறோம். விஷ்ணுப்ரியா மரணத்தையும் கோகுல்ராஜின் படுகொலையையும் சிபிஐ விசாரிக்க தமிழக அரசு அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக் கூடியிருக்கிறோம். இந்த வழக்குகளில் மட்டும் அல்ல கடந்த நான்கு ஆண்டுகளாகவே தலித் மக்களுக்கு எதிரான எந்தவொரு வன்கொடுமையையும் தடுப்பதற்கு இந்த அரசு போதிய அக்கறைகாட்டவில்லை. ஒவ்வொரு நாளும் தலித்துகள் தாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். ஆணவக் கொலைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 2014 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 72 தலித்துகள் படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். இதை மத்திய அரசு நிறுவனமான தேசிய குற்ற ஆவண மையத்தின் அறிக்கை கூறுகிறது. சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்தாடும் மாநிலமாக பீகாரைத்தான் சொல்வார்கள். ஆனால் அந்த பீகாரில் கூட இத்தனை தலித்துகள் கொல்லப்படவில்லை.53 பேரோ என்னவோதான் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பீகாரைவிட மோசமான நிலைக்குத் தமிழ்நாடு போய்விட்டது.

டிஎஸ்பி பொறுப்பிலிருந்த விஷ்ணுப்ரியா ஏன் சாகிறார்? காவல் துறையில் ஏராளமான தலித்துகள் இருக்கிறார்கள். கான்ஸ்டபிள், சப் இன்ஸ்பெக்டர் பதவிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தலித்துகள் நியமிக்கப்படுகிறார்கள். காவல்துறையில் கீழ்மட்டத்தில் இட ஒதுக்கீடு ஓரளவு பின்பற்றப்படுகிறது. ஆனால் எஸ்பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என உயர் பதவிகளில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருப்பதில்லை. காவல்துறை மட்டுமல்ல வருவாய்த் துறையிலும் அப்படித்தான்.

கஷ்டப்பட்டுப் படித்து ஐ ஏ  எஸ், 
ஐ பி எஸ் தேர்வுகளில் வெற்றிபெற்று தலித்துகள் வேலைக்கு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகள் கொடுக்கப்படுவதில்லை. மாவட்ட ஆட்சியர் பதவிகளில் , மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பதவிகளில் அவர்களை அதிக நாட்களுக்கு பணிசெய்ய அனுமதிப்பதில்லை. செயலாளர்களாகப் போனாலும் அதிகாரம் இல்லாத பதவிகளைத்தான் தருவார்கள். வருவாய்த் துறை செயலாளராக , நிதித்துறை செயலாளராக , உள்துறை செயலாளராக தலித்துகளை நியமிப்பது கிடையாது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இதற்காக முதலமைச்சரிடத்தில் தலைவரும் நானும் சென்று எத்தனையோமுறை மனுகொடுத்தோம் , தலித் அதிகாரிகளை அதிகாரமுள்ள பதவிகளில் அமர்த்துங்கள் என்று கேட்டோம். அவர்களது திறமையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்தோம் . ஆனால் அவர்கள் செய்யவில்லை. 

திமுக ஆட்சியாக இருந்தாலும் அதிமுக ஆட்சியாக இருந்தாலும் தலித் அதிகாரிகளின் நிலை இதுதான். எதற்காக இப்படி தலித் அதிகாரிகளைப் புறக்கணிக்கிறார்கள் ? அவர்களிடம் திறமை இல்லையா ? அவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் புகார் இருக்கிறதா ? விஷ்ணுப்ரியாவின் தோழி மகேஸ்வரி கேட்டாரே 'எவரிடமாவது ஒரு டீ  வாங்கிக் குடித்தோம் என்று சொல்ல முடியுமா ? திறமை இல்லை என்று சொல்ல முடியுமா ?' என்று கேட்டாரே. அதற்கு யாராவது பதில் சொன்னார்களா ? இப்போது விஷ்ணுப்ரியாவைப் பற்றி எத்தனையோ அவதூறு செய்திகளைப் பரப்புகிறார்கள் . ஆனால் அவர் திறமை இல்லாதவர் என எவராது சொல்ல முடிகிறதா ? அவர் முறைகேட்டில் ஈடுபட்டார் என குற்றம் சாட்ட முடிகிறதா ? அப்புறம் ஏன் இந்தப் புறக்கணிப்பு ? ஏன் இந்த அவமதிப்பு ? சாதி ரீதியாகப் பாகுபாடு காட்டுவதால்தானே ? வேறு என்ன காரணம் இருக்கிறது? 

ஆட்சியாளர்களே நீங்கள் இப்படியெல்லாம் செய்வீர்கள் எனத் தெரிந்துதான் இந்தியாவுக்குத் தன்னாட்சி வழங்கப்போகிறோம் உங்கள் கருத்து என்ன என்று அப்போதிருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வட்டமேசை மாநாடு கூட்டி அம்பேத்கரை அழைத்துக் கேட்டபோது நிர்வாகத்திலே எங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ற பிரதிநிதித்துவம் வேண்டும், காவல்துறையில் நீதித்துறையில் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என அம்பேத்கர் கேட்டார். 1930 ஆம் ஆண்டிலேயே கேட்டார். அதன் அடிப்படையில்தான் சுதந்திர இந்தியாவிலும் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார். அப்படிப் பெற்றுத் தந்தும் கூட தலித்துகளை இந்தப் பாடு படுத்துகிறீர்கள் , இந்த  இட ஒதுக்கீடும் இல்லாது போனால் என்ன ஆகும் ? வருவாய்த் துறையிலே காவல் துறையிலே உயர் பதவிகளில் சாதிப் பாகுபாடு தொடரும் வரை இப்படி விஷ்ணுப்ரியாக்கள் சாவதும் தொடரத்தான் செய்யும். எனவே அதைப்  போக்குவதற்கு இந்த அரசாங்கம் முன்வரவேண்டும்.அப்போதுதான் இதை ஜனநாயக ஆட்சி என்று சொல்ல முடியும். அப்போதுதான் இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலே இந்த ஆட்சியாளர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது எனக் கூற முடியும்.  

தலித்துகள்மீதான தாக்குதலை சாதி அடிப்படையிலான வன்முறையை வன்கொடுமை என அரசாங்கம் அழைக்கிறது. அட்ராசிட்டி (atrocity ) என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். தீண்டாமைக் கொடுமைகளை, சாதிய ரீதியான பாகுபாடுகளை நாம் வன்கொடுமை என்ற வகைப்பாட்டில் வைக்கலாம். ஆனால் சாதிவெறியின் அடிப்படையில் செய்யப்படும் திட்டமிட்டப் படுகொலைகளை வன்கொடுமை atrocity எனச் சொல்வது பொருத்தமாக இல்லை. அந்த வன்முறையின் தீவிரத்தை எடுத்துச் சொல்வதாக இல்லை. இந்தப் படுகொலைகளைப் பயங்கரவாதக் குற்றமாக அரசு பார்க்க வேண்டும். நேற்று கூட நமது பிரதமர் அமெரிக்காவில் பேசியிருக்கிறார். பூமி வெப்பமடைவதும் பயங்கரவாதமும் தான் இன்று உலகை அச்சுறுத்தும் பிரச்சனை என்று பேசியிருக்கிறார். பயங்கரவாதக் குற்றங்களை புலனாய்வு செய்வதற்காக மத்திய அரசு தேசிய புலனாய்வு அமைப்பு என ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறது. நாட்டில் எங்காவது குண்டு வெடித்தால் உடனே அந்த அமைப்பு புலனாய்வு செய்ய வந்துவிடும் மாநில அரசின் அனுமதிகூட தேவையில்லை பயங்கரவாதக் குற்றத்தை அந்த அளவுக்கு இந்த அரசாங்கம் தீவிரமானதாகப் பார்க்கிறது. 

பயங்கரவாதக் குற்றம் என்பதற்கு என்ன விளக்கம் சொல்கிறார்கள் ? " பொதுமக்களுக்கு எதிராக ஒரு அரசியல் நோக்கத்துக்காகவோ அல்லது மதம் சார்ந்த நோக்கத்துக்காகவோ அல்லது ஒரு கருத்தியலின் அடிப்படையிலோ திட்டமிட்ட முறையில் வன்முறையைப் பயன்படுத்தி கொலை செய்வது அல்லது அச்சத்தை ஏற்படுத்துவது அல்லது பிளவினை உண்டாக்குவது அல்லது பொது அமைதிக்குக் கேடு செய்வது - அதுதான் பயங்கரவாத நடவடிக்கை " என்று வரையறை செய்திருக்கிறார்கள். கோகுல்ராஜ் படுகொலை எப்படி நடந்தது ? அவர் பொறியியல் பட்டதாரி , அவர் எந்தப் பெண்ணையும் காதலிக்கவில்லை, அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்துகொள்ளவில்லை, வீட்டைவிட்டு ஓடிவிடவில்லை. நண்பர்களாகப் பழகியிருக்கிரார்கள்.அவரைப் பிடித்துப் போய் அவரை மிரட்டி தற்கொலை செய்துகொள்வதாகக் கடிதம் எழுதவைத்து , தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அவரை மிரட்டிப் பேசவைத்து அதை வீடியோ எடுத்து அதற்குப் பிறகு தலையை அறுத்துப் படுகொலை செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நடக்கும் ஆணவக் கொலைகளுக்கும் , சாதிவெறிப் படுகொலைகளுக்கும் கோகுல்ராஜ் படுகொலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இன்று உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் 
ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகள் கையாளும் டெக்னிக்கைப் பயன்படுத்தி கோகுல்ராஜைக் கொலை செய்திருக்கிறார்கள். அவர்களைப் போலவே பேச வைத்து வீடியோ செய்து அதன் பிறகு கழுத்தை அறுத்திருக்கிறார்கள். இது வெறும் வன்கொடுமை என்ற விளக்கத்தில் அடங்காது. இது பயங்கரவாதக் குற்றம் . இத்தகையப் படுகொலைகளை வன்முறையை சாதிப் பயங்கரவாதம் என்றுதான் அழைக்கவேண்டும். இப்படியான குற்றங்களை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கவேண்டும் என நாம் வற்புறுத்தவேண்டும். சாதிய வன்கொடுமை அல்ல , இது சாதிப் பயங்கரவாதம். மதத்தின் அடிப்படையில் செய்தால்தான் பயங்கரவாதமா ? சாதியின் அடிப்படையில் செய்யப்படும் இப்படியான திட்டமிட்டப் படுகொலைகள் பயங்கரவாதம் ஆகாதா ? இதனால் மக்களிடையே பிளவு உண்டாகவில்லையா ? இதனால் பொதுமக்களிடம் அச்சம் உருவாகவில்லையா ? இந்த சாதிப் பயங்கரவாதிகளை அனுமதித்தால் அது தலித்துகளுக்கு மட்டும் ஆபத்து இல்லை, ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஆபத்து. ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகள் எப்படி சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் கொன்று ஒழிக்கிறார்களோ அப்படி இந்த சாதிப் பயங்கரவாதிகள் தமது சுய நலத்துக்காக தன்னுடைய சாதியைச் சேர்ந்தவர்களையும் கொலை செய்வார்கள். இந்த சாதிப் பயங்கரவாதத்தை ஒழிக்கத் தவறினால் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்காது என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். அதற்கு இந்தப் போராட்டம் வழிவகுக்கும் என நம்புகிறேன், வணக்கம். 

(28.09.2015 அன்று கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரை )




Wednesday, September 16, 2015

இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணையே தேவை!


கலப்பு விசாரணை நீதிமன்றம் அமைக்கலாம் என்னும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது!

தொல்.திருமாவளவன் அறிக்கை
============

    ஐ.நா.மனித உரிமை கவுன்சில் அறிக்கை இலங்கை இனப்படுகொலை குறித்து
சரியான தீர்வை முன்மொழியும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்து
வந்தது. ஆனால், அதைத் தகர்க்கும் வகையில் சர்வதேச வல்லுநர்களும்
இலங்கையைச் சேர்ந்தவர்களும் இணைந்த நீதிமன்றம் அமைத்து போர்க் குற்றங்களை
விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் அறிக்கையில்
குறிப்பிடப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

உள்ளக விசாரணையே போதும் என அமெரிக்கா முன்மொழியப் போவதாகக் கூறப்படும் தீர்மானத்துக்கு இந்த அறிக்கை முன்னோட்டமாக உள்ளதோ என்கிற ஐயம்
ஏற்படுகிறது.இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை மனித உரிமை கவுன்சில் அறிக்கை உறுதிப்படுத்தி யிருக்கிறது; அதற்குப் பொறுப்பானவர்களை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது; இலங்கையின் உள்நாட்டு விசாரணை அறிக்கைகள் எதுவும் சுதந்திரமானவையாக இல்லை என்று
விமர்சித்திருக்கிறது; புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசும் முழுமையான
நம்பிக்கையைத் தரவில்லை என குறை கூறியிருக்கிறது என்ற போதிலும் இந்த
அறிக்கையில் இனப்படுகொலை நடைபெற்றதாக ஓரிடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
அது மட்டுமின்றி, இலங்கையில் தற்போதிருக்கும் விசாரணை கமிசன் சட்டத்தின் கீழ் அல்லாமல் புதிய சட்டம் ஒன்றின் அடிப்படையில் விசாரணை அமைப்புஉருவாக்கப்பட வேண்டும் எனக் கூறியிருப்பது இந்தக் கலப்பு விசாரணை
நீதிமன்றம் இலங்கையில்தான் அமைக்கப்பட வேண்டும், அதுவும் இலங்கையின்
சட்டத்தின்கீழ்தான் அமைக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமை கவுன்சில்
கருதுகிறது என்பதையே உணர்த்துகிறது.  

இது இனப்படுகொலைக்காளான தமிழர்களின்நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கும் வகையில் உள்ளது.
இலங்கையில் தற்போதிருக்கும் சட்டங்களும் இலங்கை அரசும் நடுநிலையான
விசாரணையை மேற்கொள்வதற்கோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கோபோதுமானவை அல்ல என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலே தெரிவித்திருக்கும் நிலையில் கலப்பு நீதிமன்றம் என்ற ஆலோசனை எவ்விதத்திலும் நீதியை
வழங்குவதற்குப் பயன்படாது.  எனவே, ஏற்கனவே ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் சுதந்திரமான, சர்வதேச
விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
சார்பில் வலியுறுத்துகிறோம்.


இன்று மகத்தான தீர்மானம் ஒன்றை சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தமிழக
அரசும் அதற்கு ஒரு மனதாக ஆதரவு அளித்த அரசியல் கட்சிகளும் ஐ.நா. மனித
உரிமை கவுன்சில் அறிக்கையில் முன்மொழியப்பட்டிருக்கும் கலப்பு நீதிமன்றம்
என்ற ஆலோசனையை நிராகரிக்குமாறும், சுதந்திரமான சர்வதேச விசாரணையை
வலியுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.




Monday, September 14, 2015

இனப்படுகொலை: சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கூட்டறிக்கை

இலங்கை இனப்படுகொலை தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என ஐநா மனித உரிமைக் கவுன்சிலை வலியுறுத்தி நிகாரகுவா நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், ஐநா பொது அவையின் முன்னாள் தலைவருமான பிராக்மன், மேதாபட்கர், வித்யா ஜெயின், ஃப்ரான்சஸ் ஹாரிசன்,கல்லம் மக்ரே உள்ளிட்ட 62 பேர் கையொப்பமிட்டு கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

"இலங்கையில் 2009  ஆம் ஆண்டு போர்முடிவுக்கு வந்த பின்னரும்கூட இனமுரண்பாட்டைத் தீர்ப்பதற்கோ போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதற்கோ இலங்கை அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதனால்தான் ஐநா மனித உரிமைக் கவுன்சில்,  தானே ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. அந்தக் குழுவுக்கும் இலங்கை அரசு  போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை. அதன் பிறகே ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டுவந்தது" என்பதை சுட்டிக்காட்டியிருக்கும் அந்தக் கூட்டறிக்கை யுத்தம்  முடிந்த பிறகும்கூட தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையும் வன்முறையும் தொடர்ந்துகொண்டிருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறது. 

தேர்தல் நடைபெற்று புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சிங்கள மக்களுக்கு பயனளிக்கக்கூடிய சீர்திருத்தங்கள் பலவற்றை மேற்கொண்ட இலங்கை அரசு வடகிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவத்தைக்கூட விலக்கிக்கொள்ளவில்லை என்பதை இந்தக் கூட்டறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது. 

*போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை முதலானவற்றை விசாரிக்க சர்வதேச சட்டத்தைப் பயன்படுத்துதல்; 

*விசாரணைப் பொறியமைவு எத்தகையதாக இருக்கவேண்டும் எபன்பதை பாதிக்கப்பட்டோரிடம் கலந்தாலோசித்து முடிவுசெய்தல்; 

*சாட்சிகளைப் பாதுகாத்தல்; 

*விசாரணைக் குழுவின் முக்கியமான பொறுப்புகளில் தகுதியான நபர்களை ஐநாவே நியமித்தல் 

          - உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்தக் கூட்டறிக்கை எழுப்பியுள்ளது.

எஸ்.விஸ்வநாதன் என்ற அபூர்வ மனிதர்



பேராசிரியர் கல்புர்கி படுகொலையைக் கண்டித்து இன்று மாலை சென்னையில் சரிநிகர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மூத்த பத்திரிகையாளரும் தி இந்து ஆங்கில நாளேட்டின் முன்னாள் Readers Editor உம் ஆன திரு எஸ்.விஸ்வநாதன் அவர்களை சந்தித்தேன். இந்தியன் எக்ஸ்பிரஸில் week end என்ற பக்கங்களை அவர் தயாரித்த காலத்திலிருந்து அவரை நான் அறிவேன். அவர் Frontline ல் பணியாற்றியபோது சாதிக் கலவரங்கள் நடந்த இடங்கள் பலவற்றுக்கும் அவரை அழைத்துச் சென்ற நினைவு மனதில் எழுந்தது. 

தமிழ்நாட்டில் தலித்துகள் மீதான தாக்குதல்களை ஆவணப்படுத்தும் விதமாக அமைந்த அவரது கட்டுரைகளைத் தொகுத்து Dalits in Dravidian Land என நவயானா பதிப்பகத்தின் மூலம் நூலாக வெளியிட்டதையும் அதற்கு முன்னுரை எழுத எனக்கு அவர் வாய்ப்பளித்ததையும் இன்றும் பெருமையாகக் கருதுகிறேன். 

பணி ஓய்வு பெற்றாலும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் வந்திருந்தது அவருள் இருக்கும் கடப்பாடும் அறச்சீற்றமும் குறைந்துவிடவில்லை என்பதைக் காட்டியது. ஊடகத் துறையில் பணியாற்றும் இன்றைய தலைமுறையினர் முன்னுதாரணமாக அவரை எடுத்துக்கொள்ளவேண்டும். 

இன்னும் பல்லாண்டுகள் ஆரோக்கியமாக அவர் வாழவேண்டும் என வாழ்த்துகிறேன். 

பிரபா ஶ்ரீதேவன் : நீதித்துறையில் விட்ட பணியை இலக்கியத் துறையில் தொடருங்கள்



சூடாமணி சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்ட நிகழ்வில் அதன் மொழிபெயர்ப்பாளர் பிரபா ஶ்ரீதேவன் பேசியது நெகிழவைத்தது. அந்தக் கதைகளின்மீது மட்டுமல்ல இலக்கியத்தின்மீது அவருக்கு இருக்கும் வேட்கையை அந்தப் பேச்சில் உணரமுடிந்தது. அவர் பேசியவிதம் அவரே ஒரு படைப்பாளியாகவும் இருப்பார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. 

வாதம் என்ற பெயரில் அடுக்கப்படும் வறண்டுபோன வார்த்தைகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும்படி சபிக்கப்பட்ட நீதிபதி பதவியில் இருந்தவர், அவரிடமிருந்து ஈரம் மாறாத சொற்கள் நிதானமாக ஒவ்வொன்றாய் வந்து விழுந்தபோது அந்த மேடையில் திரு கே.சந்துரு அவர்கள் சிரத்தையோடு கொண்டுவந்து அலங்கரித்திருந்த நாகலிங்கம் பூக்களின் குளிர்ச்சியும் மணமும் நினைவுக்கு வந்தன. 

பிரபா ஶ்ரீதேவன் அவர்களின் தீர்ப்புகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். குறிப்பாக பஞ்சமி நிலம் குறித்த தீர்ப்பைச் சொல்லவேண்டும். தனது தீர்ப்புகளில் கே.சந்துருவைப்போலவே இவரும் இலக்கிய மேற்கோள்களைப் பயன்படுத்தக்கூடியவர்,  அவரைப்போலவே மனிதநேய அணுகுமுறை இவரிடமும் தென்படக் கண்டிருக்கிறேன். 

பட்டப் படிப்பில் ஆங்கில இலக்கியத்தைப் படித்தவர் என அறிமுகப்படுத்தும்போது சொன்னார்கள். அவர் பேசியதைக் கேட்டபோது அவருக்குப் பிடித்த இலக்கிய வடிவம் கவிதையாகத்தான் இருக்கும் எனத் தோன்றியது. 

Seeing in the Dark நூலில் அவர் எழுதியிருக்கும் மொழிபெயர்ப்பாளர் குறிப்பு முக்கியமானது. சூடாமணியின் கதைகள் அவை எழுதப்பட்ட காலத்தோடு எப்படி பிணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் அந்தக் கதைகள் எப்படி உலகளாவிய தன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதையும் சொல்லியிருக்கிறார். 

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பலரோடு ஒப்பிட பிரபா ஶ்ரீதேவனின் மொழிபெயர்ப்பு உயிர்த்துடிப்போடும் மூலப் பிரதிக்கு விசுவாசமாகவும் இருக்கிறது. 

நீதியும் இலக்கியமும் ஒருவிதத்தில் ஒற்றுமைகொண்டவை. மனிதகுலத்தின் சுதந்திரத்தை விரிவுபடுத்துபவை. பிரபா ஶ்ரீதேவன் நீதித்துறையில் விட்ட பணியை இலக்கியத் துறையில் தொடர வாழ்த்துகிறேன்.

Saturday, September 12, 2015

புரட்சிப் பாடகர் கத்தர் தேர்தலில் போட்டியிடவேண்டும்!



வாரங்கல் பாராளுமன்றத் தொகுதிக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் புரட்சிப் பாடகர் கத்தரை நிறுத்துவதென தெலுங்கானா மாநில கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. கத்தர் இதற்கு ஒப்புதல் தருவாரா எனத் தெரியவில்லை. வெற்றி தோல்வியைப்பற்றிக் கவலைப்படாமல் கத்தர் இதற்கு ஒப்புக்கொள்ளவேண்டும். 

கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பாராளுமன்ற முறைக்கு வெளியிலிருந்து அதை விமர்சித்தவர்கள் தமது நிலைபாடு பற்றி ஆய்வுசெய்யவேண்டும். 

இந்தியப் பாராளுமன்றத் தேர்தல்முறை, ஜனநாயகம் ஆகியவற்றை உலகமயமாதல் உச்சத்திலிருக்கும் இந்தத் தருணத்தில் மீளாய்வுசெய்யவேண்டியது இடதுசாரிகளின் உடனடிக் கடமையாகும். 

சர்வாதிகார அச்சுறுத்தல் உலகமெங்கும் அதிகரித்துவருகிறது. அதன் அடையாளத்தை இந்தியாவிலும் பார்க்கிறோம். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான கருத்தியலை உருவாக்க திறந்த மனத்துடனான உரையாடல் அவசியம். அதை கம்யூனிஸ்ட் கட்சிகள் உணர ஆரம்பித்திருப்பதன் அடையாளமாக கத்தருக்கான அழைப்பைப் பார்க்கலாமா? 

http://www.siasat.com/news/cpi-m-asks-gaddar-decide-warangal-ls-bypoll-833007/




Thursday, September 10, 2015

ஒரு தலையங்கமும் சில கேள்விகளும் -ரவிக்குமார்



காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை ஏற்றுக்கொள்வதில் காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கு இருக்கும் தயக்கம் குறித்து The Hindu நாளேடு Sceptical Old Guard என்ற தலையங்கத்தை இன்று ( 11.09.215) வெளியிட்டிருக்கிறது. 

காங்கிரஸ் தலைவராக மேலும் ஒரு ஆண்டு நீடிக்க சோனியா காந்திக்கு காங்கிரஸ் செயற்குழு வழங்கிய அனுமதியை எதிர்வரும் பீகார் சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து ராகுலைப் பாதுகாக்கும் யுக்தியாகவும் அந்தத் தலையங்கம் சித்திரித்திருக்கிறது. "தலைவர் பதவியை சலுகையாகவோ பொது சேவையை தியாகமாகவோ " பார்க்கக்கூடாது என அறிவுரை வழங்கவும் அது தவறவில்லை. 

இதைத் தலையங்கமாக எழுதியதைவிட ராகுல் காந்திக்கு தனிப்பட்ட கடிதமாக எழுதியிருக்கலாம். ஏனெனில் புறவயப்பட்ட பார்வை இதில் இல்லை. இன்று காங்கிரஸ் கட்சிக்கு என்ன தேவை என்பதை சுட்டிக்காட்டுவதற்கு 2014 தேர்தலில் அது ஏன் இப்படியொரு தோல்வியை சந்தித்தது என்ற கேள்வியைக் கேட்டாகவேண்டும். அந்தக் கேள்வியைக் கேட்டால் UPA-2 ன் மக்கள்விரோத செயல்பாடுகளை விமர்சிக்கவேண்டியிருக்கும். காங்கிரஸ் கட்சியின் ஆதரவுத் தளமாக இருந்த மக்களின் வாழ்க்கையைச் சூறையாடும்விதமாக மன்மோகன் சிங் ஆட்சியின் பொருளாதாரக் கொள்கைகள் இருந்ததைப் பேசவேண்டியிருக்கும். தற்போதைய பாஜக அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய தேர்தல் வெற்றி காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளின் விளைவு என்பதைச் சொல்லவேண்டியதிருக்கும். அவற்றைப் பேசாமல் ராகுல் காந்திக்கு அறிவுரை வழங்குவதற்காக ஒரு தலையங்கத்தை இந்தியாவின் முன்னணி நாளேடு எழுதுவதென்பது அதிர்ச்சியளிக்கிறது. 

அடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியைப் புத்துயிர்ப்புப் பெற வைப்பதற்கு அக்கட்சி தனது கருத்தியலை மறு கண்டுபிடிப்புச் செய்யவேண்டும். தலித், ஆதிவாசிகளை வெறும் வாக்குவங்கிகளாகப் பார்ப்பது; போலி மதச்சார்பின்மை பேசி சிறுபான்மையினரை ஏய்ப்பது; உலக வங்கி, ஐ.எம்.எஃப் முதலான நிறுவனங்களின் முகவர்களாகச் செயல்படும் Technocrats கையில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பது முதலான போக்குகளிலிருந்து விடுபடவேண்டும். 

இரண்டுமாதம் விடுப்பு எடுத்துக்கொண்டுபோய் அதன்பிறகு வந்து வாய்ச்சவடால் பேசிவிட்டால் அடுத்த பிரதமராகிவிடலாம் என நினைப்பது அரசியல் முதிர்ச்சியிமையின் வெளிப்பாடு மட்டுமல்ல, மக்களை கிள்ளுக்கீரையாக எண்ணும் இறுமாப்பும்கூட. 

காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கும் ராகுல் காந்திக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது எனக் காட்டவேண்டும் என உண்மையிலேயே அந்தக் கட்சி கருதுமேயானால் அவர் மன்மோகன் சிங்கின் வாரிசு அல்ல நேருவின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர் என்பதையாவது தெளிவுபடுத்தவேண்டும். 

The Hindu தலையங்கம் He has a lot to learn from Prime Minister Modi எனக் குறிப்பிட்டிருக்கிறது. அது முற்றிலும் தவறு. மோடியிடமிருந்து கற்பது காங்கிரசை இன்னொரு பாஜகவாக மாற்றுவதற்கே இட்டுச்செல்லும். அதை எந்தவொரு காங்கிரஸ் தொண்டரும் ஏற்கமாட்டார். 

கூனல் பிறை: உரைநடைக் கவிதைகள்- இந்திரா பார்த்தசாரதி



ஆங்கிலத்தில் ‘உரைநடைக் கவிதைகள்’ (prose poems) என்ற மரபு உண்டு. ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய ‘A city night piece’ ம், சார்ல்ஸ் லாம்ப் எழுதிய ‘Dream children’ம் இந்த இலக்கிய வரையறைக்குள் அடங்கும். தமிழில் இந்த மரபின் வரவு தேன்மொழியால் துவக்கப்பட்டிருக்கிறது.

தேன்மொழியின் கதைகள் அனைத்தும் கவிதையாக எழுதப்பட்டிருக்க வேண்டியவை. காரணம், அவர் எழுத்தினின்றும், இயற்கையையும், கதை மாந்தர்களையும், நிகழ்வுகளையும் பிரித்துப் பார்க்க இயலாது. மூன்றும் ஒன்றோடு ஒன்று சார்ந்தே இயங்குகின்றன. 

’ஒரு சின்ஞ்சிறிய மலர் கூட என்னிடம் கரைக் கடந்த உணர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறன’ என்றான் வேர்ட்ஸ்வொர்த். அது போல் தேன்மொழியின் கதைகளில் நாணற்புதர்கள், ஊமத்தம் பூக்கள், வாடாமல்லி மலர்கள், பாம்புகள் அனைத்துமே வாசகனிடம் இயல்பாக, அவைகள் அஃறிணைப்பொருள்கள் என்ற எண்ணம் ஏற்படாதபடி உரையாடுகின்றன. 

’நம்புவதா, நம்பாமாமிலிருப்பதா’ என்ற ஐயத்தைத் தோற்றுவிக்கும் ,புதுமைப்பித்தன் வகைப்படுத்திய ‘கயிற்றரவு’ நிகழ்வுகளை, மிக அற்புதமாகக் கையாளுகிறார் தேன்மொழி. கதையின் கவிதைப் பரிமாணத்துக்கு இது கூடுதலான வடிவத்தைத் தருகிறது. 

வறுமை, சமூக ஏற்றத் தாழ்வுகள் போன்ற பி5ரச்னைகளை இலக்கியத்தில், நம்மை நேரடியாக வந்துத் தாக்கும் யதார்த்தத்  துடன் சித்திரிப்பது ஒரு வகை. உருவக்க் குறியீட்டு முறையில் கவிதை நயத்துடன் சொல்வது இன்னொரு வகை. சத்யஜித் ரே
படங்களில் நாம் காணும் கவிதை உத்தி தேன்மொழிக் கதைகளிலும் நாம் காண முடிகின்றது.

தேன்மொழிக்கு என் வாழ்த்துக்கள்.

ரவிக்குமார் கவிதைகள்

1.

' கொளுத்து ' என்று தமிழில்தான் கத்தினார்கள்
'கொல்லு' என்றும் தமிழில்தான் கூவினார்கள்
சாதியைச் சொல்லி தமிழில்தான் கேலிசெய்தார்கள்

'காப்பாத்துங்க' என்று அலறியது தமிழில்தான்
' கொழந்தப் புள்ளங்க' என்று கெஞ்சியதும் தமிழில்தான் 
' கடவுளே ஒனக்குக் கண்ணு இல்லியா' என்று அரற்றியதும்
' அநியாயம் செஞ்சவுங்களுக்கு நீதான் கூலி கொடுக்கணும்' என்று வேண்டியதும் தமிழில்தான் 

தமிழ்னு சொல்றோமே 
அது சாதி மொழியா?  
நீதிமொழியா?

2.

எரிக்கப்பட்ட வீடுகளின் 
கரி படிந்த சுவர்களில் 
எழுதிவையுங்கள்
எரித்தவர்களின் பெயர்களோடு
மௌனசாட்சிகளாய் இருந்தவர்களின்
பெயர்களையும்

Tuesday, September 8, 2015

பொருளாதார மந்தநிலையும் பிரதமரின் ஆலோசனையும் - ரவிக்குமார்



இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றன. திரு மோடி பிரதமராகப் பதவியேற்றபோது இருந்த 25 ஆயிரம் புள்ளிகளுக்குக் குறைவான நிலைக்கு பங்குச் சந்தை வந்துவிட்டதாக இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. ஒரு டாலருக்கு 66.83 ரூபாய் என்ற அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ந்திருக்கிறது. 

கவலையளிக்கும் பொருளாதார நிலையை ஆய்வு செய்வதற்காக இந்தியப் பிரதமர் திரு மோடி இன்று தொழிற்துறையினரையும் பொருளாதார நிபுணர்களையும் நேற்று (08.09.2015) சந்தித்திருக்கிறார். 
துணிச்சலாக முதலீடுகளை அதிகப்படுத்துங்கள் என அவர்களிடம் பேசியிருக்கிறார். கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கவேண்டும் எனத் தொழில்துறையினர் கேட்டிருக்கின்றனர். 

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு நாம் கூடுதல் விலை கொடுக்கவேண்டியதிருக்கும். அதே நேரத்தில் இது ஏற்றுமதிக்கு சாதகமானது என சிலர் கூறுகின்றனர். சீன பணமான யுவானின் மதிப்பை அந்த நாடு குறைத்ததால் ஏற்றுமதி வாய்ப்புகள் அந்த நாட்டை நோக்கிச் செல்லும் வாய்ப்பு அதிகரித்தது. அதுபற்றிய கவலை இந்திய ஏற்றுமதியாளர்களிடம் எழுந்தது. சீனாவைப் பின்பற்றி  இந்திய ரூபாயின் மதிப்பை நமது அரசு குறைக்கவேண்டும் (Devaluation) என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால் நமது அரசாங்கம் குறைக்காமலேயே ரூபாய் வீழ்ச்சி அடைந்துவருகிறது. இதை ஏற்றுமதிக்கு சாதகமாகத் திருப்புவது சாத்தியமா என்பதை நாம் சிந்திக்கவேண்டும். "ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்தால் ஏற்றுமதி காப்பற்றப்படும்" என ஸ்டேட் பேங்க்கின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியிருப்பது சரியானதுதானா? என்பதையும் ஆராயவேண்டும். 

பருத்தி ஏற்றுமதியில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. ரூபாயின் வீழ்ச்சி பருத்தி ஏற்றுமதியை அதிகரிக்க உதவக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் ரூபாயின் மதிப்பு குறைவது ஜவுளித் துறையில் ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரும் நட்டத்தையே உண்டாக்கும் என  நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் அங்கு நாம் சீனாவுடன் போட்டிபோடவேண்டியுள்ளது. 

முதலாளிகள் வலியுறுத்துவதுபோல தாராளமயத்தை, தனியார்மயத்தை துரிதப்படுத்துவதால் மட்டும் அன்னிய முதலீடுகளை ஈர்த்துவிடமுடியாது. இன்றைய சிக்கலிலிருந்து மீள்வதற்கு வேளாண் துறைக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என்ற ஆலோசனையை அரசு பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. 

அரசின் பொருளாதாரக் கொள்கையை விமர்சிப்பதுமட்டுமே இன்றைய சிக்கலை எதிர்கொள்வதற்குப் போதாது. மாற்றுகளை முன்மொழியவேண்டும். இடதுசாரிப் பார்வைகொண்ட பொருளாதார அறிஞர்கள் அதை நோக்கிக் கவனம் குவிப்பது அவசியம். குறிப்பாக தாமஸ் பிக்கெட்டி அவர்கள் Top Incomes - A global Perspective என்ற நூலில் முன்வைத்துள்ள விவரங்களும் அவரது கருத்தாக்கமும் இன்றைய இந்திய சூழலைப் புரிந்துகொள்ள உதவுமா என்பதை பரிசீலிக்கவேண்டும். 

கல்லூரிகளில் பாகுபாடு


தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையில் தலித் ஆசிரியர்கள் மிகவும் குறைவாக உள்ளனர் என்ற தகவல் All India Survey on Higher Education (AISHE) வெளியிட்டிருக்கும் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. உயர்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 8.35% மட்டும்தான் எஸ் சி பிரிவினர். பிற்படுத்தப்பட்டோர் 54.57% உள்ளனர். 

கல்லூரிகளில் தலித் மாணவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதற்கும் தலித் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.

Slavoj Zizek on Zen Buddhism

What is it like to be you?  What are your conclusions on Zen?  

Slavoj Zizek:

I don't know because I am not myself. I do all my work to escape myself. I don't believe in looking into yourself. If you do this, you just discover a lot of shit. I think what we should do is throw ourselves out of ourselves. The truth is not deep in ourselves. The truth is outside.

Regarding Zen, this is also the cause of my ethical disagreement with Zen Buddhism. The way Zen Buddhism is perceived today is as telling ourselves we must not throw ourselves fully into reality, that we must not attach ourselves too much to earthly objects. Since external reality is just a flow of appearances. I believe on the contrary, that we should fully attach ourselves to earthly objects. If you write a book, forget about everything else, throw yourself into it. If you are in love, go to the end, sacrifice everything for the object of love. This is why we today no longer want to fall in love. We want it controlled, like safe sex. But what I like in love is precisely the fall. I feel alive only when I fall. And this goes up to the beginning: I think Hegel already knew that Adam's fall was the greatest achievement, the greatest event in history.

ஒரு கட்சி ஆட்சியில் தமிழ்நாட்டின் உயர்கல்வி நிலை!


உயர்கல்வி பயிலக்கூடிய 18 முதல் 23 வயது வரையிலான மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேருக்கு மகராஷ்டிராவில் 35 கல்லூரிகளும் ஆந்திராவில் 48 கல்லூரிகளும் கர்னாடகாவில் 44 கல்லூரிகளும் கேரளாவில் 34 கல்லூரிகளும் புதுச்சேரியில் 61 கல்லூரிகளும் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் ஒருலட்சம் பேருக்கு 33 கல்லூரிகள்தான் இருக்கின்றன. 

தமிழ்நாட்டில் இருக்கும் கல்லூரிகளில் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தென் இந்திய மாநிலங்களிலேயே அதிக அளவில் உயர்கல்வி தனியார் மயமான மாநிலமாகத் தமிழ்நாடுதான் இருக்கிறது. ஆந்திராவில் 419 அரசுக் கல்லூரிகளும் கர்னாடகாவில் 600 அரசுக் கல்லூரிகளும் மகராஷ்டிராவில் 721 அரசுக் கல்லூரிகளும் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் 314 அரசுக் கல்லூரிகள் மட்டும்தான் இருக்கின்றன. 

இந்தப் புள்ளி விவரங்கள் மத்திய அரசின் மனிதவளமேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்டிருக்கும் AISHE 2012-13 அறிக்கையில் இடம்பெற்றுள்ளவையாகும். 

அறுபது ஆண்டுகால ஒரு கட்சி ஆட்சியில் தென்னிந்தியாவிலேயே உயர்கல்வி ஏழை எளிய குடும்பத்தினருக்கு மறுக்கப்பட்ட மாநிலமாக, உயர்கல்வியைத் தனியாருக்குத் தாரைவார்த்துக்கொடுத்த மாநிலமாக, கல்வித் தரம் சீரழிக்கப்பட்ட மாநிலமாகத் தமிழகம் உள்ளது. 

இந்த நிலை மாற வேண்டாமா? இளைஞர்களே சிந்திப்பீர்!

ஒரு கட்சி ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம்!

உயர்கல்வி செழிக்க திட்டம் தீட்டுவோம்!

Sunday, September 6, 2015

எனது தமிழாசிரியர் திரு ஞானஸ்கந்தன்!





சிதம்பரம் ஶ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயாவில் நான் படித்தபோது எனக்கு பத்து, பதினொன்றாம் வகுப்புகளில் தமிழாசிரியராக இருந்தவர் திரு ஞானஸ்கந்தன். நடராஜர் கோயில் தீட்சதர் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கணத்தில் ஆழ்ந்த புலமைகொண்டவர். வகுப்பில் அவருக்குப் பிடித்த மாணவனாக நான் இருந்தேன். ஈற்றடியை எழுதிப்போட்டு வெண்பா எழுதச் சொல்வார். எல்லோருக்கும் முதலில் எழுதவேண்டும் அவரிடம் பாராட்டு பெறவேண்டும் என்ற துடிப்பில் மனம் பரபரக்கும். 

நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சிதம்பரம் கீழவீதியில் இருக்கும் அவரது வீட்டைத் தேடிச்சென்று அவரை சந்தித்தேன். என்னை அவருக்கு நினைவில்லை, ஆனால் அன்புடனும் பழைய மாணவன் ஒருவன் தேடிவந்து சந்திக்கிறானே என்ற பெருமிதத்துடனும் பேசினார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இவை. 

எனக்கிருக்கும் தமிழ்ப் பற்றுக்குக் காரணமானவர்களில் தமிழாசிரியர் திரு ஞானஸ்கந்தன் அவர்களும் ஒருவர். அவரை வணங்குகிறேன்! 


Friday, September 4, 2015

அரசியல் தீண்டாமையெனும் ஆபத்து -ரவிக்குமார்



அம்பேத்கரின் 125 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி " அம்பேத்கர் தான் வாழ்ந்த காலத்தில் சமூகத் தீண்டாமைக்கு ஆட்பட்டார், மறைந்த பின்னர் அரசியல் தீண்டாமைக்குப் பலியாக்கப்பட்டார்" என்று குறிப்பிட்டார். மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சி அம்பேத்கர் சர்வதேச மையத்தை அமைப்பதற்கு கடந்த இருபது ஆண்டுகளாகக் காலந்தாழ்த்தி வந்ததையே பிரதமர் அப்படி சாடினார். அரசியல் தீண்டாமை என்றால் என்ன? பிரதமர் மோடி குறிப்பிட்ட புறக்கணிப்பு என்பது அதன் ஒரு அங்கம் மட்டும்தான். 

இன்று ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் சிரிய நாட்டைச் சேர்ந்த அகதிகள் பிரச்சனை அதிகம் விவாதிக்கப்பட்டது. துருக்கிக் கடற்கரையில் சடலமாகக் கரை ஒதுங்கிய மூன்று வயது சிரிய நாட்டுக் குழந்தையொன்றின் புகைப்படம் அந்த விவாதத்தின் மையமாக இருந்தது. அந்தப் புகைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக மேலும் சில ஆயிரம் சிரிய அகதிகளைத் தமது நாட்டுக்குள் அனுமதிக்கப்போவதாக பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் இன்று அறிவித்துள்ளார். 

கொல்லப்பட்ட ஒரு தலித் குழந்தையின் புகைப்படம் இப்படியான தாக்கத்தை இந்தியர்களின் மனதில் ஏற்படுத்துமா? வெண்மணியில் கரிக்கட்டைகளாகக் கிடந்த தலித் குழந்தைகளைப் பார்த்து எத்தனை இதயங்கள் இளகின? அன்றைய ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்? அரசியல் கட்சிகள் என்ன செய்தன? அதுகுறித்த விவாதம் சட்டப் பேரவையில் எப்படி நீர்த்துப்போகச் செய்யப்பட்டது என்பதை அந்த ஆவணங்களைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். அது அரசியல் தீண்டாமையின் அடையாளம்! 

'அரசியல் தீண்டாமை'க்கு அம்பேத்கர் மட்டுமல்ல தலித்துகள் ஒவ்வொருவரும்  பலியிடப்படுகிறார்கள். தலித் வரலாறு இருட்டடிப்புச் செய்யப்படுவதும் , தலித் தலைவர்கள் வரலாற்றிலிருந்து மறைக்கப்படுவதும்கூட அரசியல் தீண்டாமையின் அடையாளங்கள்தான். 

தமிழ்நாட்டில் 'அரசியல் தீண்டாமை' முன்னிலும் வெளிப்படையாகத் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் அரசியல் கட்சிகள் சாதித் தமிழர்களின் ஓட்டு கிடைத்தால் போதும் அதை வைத்தே ஆட்சி அமைத்துவிடலாம் எனக் கருதுவது அதன் அடையாளம் தான். எல்லா வாக்குகளுக்குமே பணம் கொடுக்கிறார்கள் என்றாலும் சாதித் தமிழர்களின் வாக்குகளுக்கு இருப்பதாகக் கருதப்படும் சமூக மதிப்பு தலித் வாக்குகளுக்கும் இருக்கிறது என அரசியல் கட்சிகள் நினைக்கவில்லை. பணம் கொடுத்து வாங்கப்பட்டாலும் பிற சாதிகளுக்கு அரசியல் பிரதிநிதித்துவமும் அதிகாரமும் வழங்கப்படுகிறது. அரசியல் ஓர்மையற்ற தலித் வாக்குகள் பண்டங்களாக மட்டுமே கருதப்படுகின்றன. 
மாநிலத்தின் மக்கள் தொகையில் இருபது சதவீதத்துக்குக் கூடுதலாக இருக்கும் தலித்துகளை இத்தனை கேவலமாகக் கருதும் நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. 

தற்போது வலுப்பெற்றுவரும் அரசியல் தீண்டாமை தலித் மக்களுக்கு 'பாதிக்கப்பட்டவர்கள் (victims) என்ற அடையாளத்தைக்கூடத் தருவதில்லை. அதனால்தான் தலித்துகளின்மீது இரக்கம்கூட வருவதில்லை. அரசியல் தீண்டாமை 'ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு; எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு' என்ற அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தின்மூலம் அம்பேத்கர் உத்தரவாதப்படுத்தியிருக்கும் அரசியல் சமத்துவத்தையும் அழித்துவிடும். இது சமூகத் தீண்டாமையைவிடக் கொடுமையானது. 

அரசியல் தீண்டாமையை அகற்றுவது ஜனநாயக சக்திகளின் கடமையென்றாலும் அதற்கான முன்முயற்சிகளை எடுக்கவேண்டிய பொறுப்பு தலித் இயக்கங்களையே சாரும். 

Thursday, September 3, 2015

ஓர் அமைதி விரும்பியின் சமூக நீதி - ரவிக்குமார்


நான் ஓர் அமைதி விரும்பி
எதன்பொருட்டும் அதை இழக்கமாட்டேன் 

நான் ஒரு பூனை வளர்த்தேன்
ஒரு கோழியும் வளர்த்தேன்
பூனைக்கு நானே பால் ஊற்றி வைப்பேன்
கோழி தன் தீனியைத் தானே தேடும் 

இரண்டின்மீதும் அன்பு எனக்கு

நான் சாப்பிடும்போது பூனை உரசும்
கவளம் ஒன்று வைக்காதுபோனால்
கத்திக் கத்தி கவனத்தை ஈர்க்கும் 
கோழிக் கூண்டைக் காலையில் திறந்தால் தானே வந்து இரவில் அடையும்

இரண்டின்மீதும் சம அன்பு எனக்கு 

முட்டை வைத்து அடை காத்து 
குஞ்சு பொரித்தது கோழி 
பாலைக் குடித்து சோற்றைத் தின்று கொழுகொழுவென்றிருந்தது பூனை

நள்ளிரவொன்றில் சப்தம் கேட்டு 
தூக்கம் கலைந்து துடித்து எழுந்தேன் 
கோழிக்கூண்டில்தான் ஒரே களேபரம் 
குஞ்சுகளையும் கோழியையும் அடித்துத் தின்ன துரத்துது பூனை 

வந்தது கோபம் 

தடியை எடுத்தேன் போட்டேன் ஒன்று 
குறி தவறி கோழி சுருண்டது 
மதிலுக்கு அப்பால் பூனை பாய்ந்தது 
குய்யோ முறையோவெனக் குஞ்சுகள் சத்தம் 
ஒண்ணு ரெண்டு மூணு நாலு 
போட்ட போடில் எல்லாம் காலி 

அமைதி திரும்பியது 
தூக்கம் சுழற்றியது

நானோ அமைதி விரும்பி
எதன்பொருட்டும் அதை இழக்கவே மாட்டேன்

Wednesday, September 2, 2015

கூனல் பிறை நூலுக்கு விருது!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2014 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த சிறுகதைத் தொகுப்பாக தேன்மொழி எழுதி மணற்கேணி பதிப்பகம் வெளியிட்ட  ' கூனல் பிறை' தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியை தோழர் ச. தமிழ்ச்செல்வன் சற்றுமுன்னர் தெரிவித்தார். நூலைத் தேர்வுசெய்த நடுவர்களுக்கும், தமுஎகச தோழர்களுக்கும் நன்றி. 

கூனல் பிறை நூலை தற்போது நடைபெற்றுவரும் மதுரைப்புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தகாலயம், அன்னம் ஆகிய ஸ்டால்களில் வாங்கலாம்.
======
கூனல் பிறை நூலுக்கு அம்பை எழுதியிருக்கும் பின் அட்டைக் குறிப்பு:
=====
" உணர்வுகள், உறவுகள், அகம், புறம், மனிதர்கள், மிருகங்கள், உயிருள்ளவை, உயிரற்றவை இவை அனைத்தும் ஒன்றிப் பிணைந்து வாழ்க்கையுடன் கலக்கும் மாயம் தேன்மொழியின் எழுத்தில் இருக்கிறது. பாம்புகள், ஓவியங்கள், நாணல் காடுகள், பாலைவனங்கள், குதிரைகள், பூக்கள், பழங்கள், பேய்கள் கூட எளிதாக உருமாறி நம் அருகே வருகின்றன. அன்பைத் தருகின்றன; அன்பை யாசிக்கின்றன. உடல் நலிவுற்று மகளுடன் தங்கி பாசத்தையும் தொல்லையையும் தரும் அப்பா, கதை சொல்லும் ஆத்தாக்கள், சோறு பொங்காமல் பனிரெண்டு வயதுப் பெண்ணிடம் ‘போய் வாரேன், பத்திரமா இரு’ என்று கூறி வீட்டை விட்டுப் போய்விடும் கோபக்கார அம்மாக்கள், சைக்கிள் ஓட்டத் தெரியா கணவனுடன் டபுள்ஸ் போய் வாழ்க்கை எல்லாம் விழுந்து எழுந்தும், பாதுகாப்புத் தரும் நாணல் காடாய் அவனை உருவகித்து அவனைக் காதலிக்கும் மனைவி, மனைவிக்கு எந்த ஊறும் நேராதபடி சாராயம் காய்ச்சும் கணவனை இழந்தபின் மகன்களும் பேரன்களும் அவளைச் சாராய வழக்கில் மாட்டிவிட்டதும் ஊமத்தைக் காய்களை இடுப்பில் கட்டிக்கொண்டு தனி நடை போகும் கிழவி, உறவாட வரும் பேய்கள் என்று அலை பொங்குவது போல எளிதாக மேலே ஓங்கிஓங்கி எழும் கதைகள் இவை. மெத்தென்று சில சமயத்திலும் அசுர வலியுடன் சில சமயங்களிலும் மனத்தை முட்டும் கதைகள். இக்கதைகள் உருவாக்கும் உலகை விட்டு வெளியே வந்த பிறகும் அது இதமாயும் இம்சை தந்தபடியும் நம்மைத் தொடருகிறது."