Saturday, August 15, 2015

மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மக்களிடம்தான் இருக்கிறது! - ரவிக்குமார்



இங்கே கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்!

சுதந்திர நாளை இந்த நாடு கொண்டாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் நாம் இங்கே கூடியிருக்கிறோம். நாம் இங்கே கூடியிருப்பதைப்போல மக்கள் கூடுவதற்கு உலகில் பல நாடுகளில் சுதந்திரம் இல்லை. அண்டையிலே இருக்கிற இலங்கையில் மக்கள் இப்படி சுதந்திரமாகக் கூடி தாம் விரும்பும் கருத்துகளை விவாதிக்க முடியாது, ராணுவம் வந்துவிடும். பாகிஸ்தானிலோ, பங்களாதேஷிலோ, மியான்மரிலோ இப்படி கூட்டம் நடத்த முடியாது. எத்தனையோ நாடுகள் சர்வாதிகாரிகளின் ராணுவ ஆட்சியின் கீழ் இருக்கின்றன. அந்த நாடுகளோடு ஒப்பிட்டால் நாம் சுதந்திரம் உள்ள குடிமக்களாகத்தான் இருக்கிறோம். எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும் அவற்றுக்காக நாம் போராடினாலும் ஒப்பீட்டளவில் இந்த நாடு சுதந்திரமான நாடுதான், நாமும் ஒப்பீட்டளவில் சுதந்திரமான மக்கள்தான். 

இந்த சுதந்திரத்துக்கு அடிப்படை நமது அரசியலமைப்புச் சட்டம். நேற்று நாட்டு மக்களுக்கு 69 ஆவது சுதந்திரதின செய்தியை வழங்கிய நமது குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்ஜி அவர்கள் தனது உரையில் பல்வேறு விஷயங்களைக் கூறிவிட்டு ஒரு முக்கியமான சிக்கலைப்பற்றிக் கவலை தெரிவித்திருக்கிறார். 

'நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவான சட்டமன்ற நாடாளுமன்றங்கள், நிர்வாகத் துறை, நீதித்துறை ஆகிய மூன்று உறுப்புகளும் இன்று கடுமையான அழுத்தத்துக்கு, நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றன' என்று நம் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார். இங்கே கூடியிருக்கிற மனித உரிமை ஆர்வலர்கள் அப்படிச் சொன்னால் அதில் வியப்பேதுமில்லை; பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் அப்படிச் சொன்னால் அதில் புதுமை ஒன்றுமில்லை, சொல்லியிருப்பவர் நம் நாட்டின் முதல் குடிமகன். 

அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றித் தந்த அம்பேத்கர் அந்த சட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசும்போது குறிப்பிட்ட ஒரு கருத்தை குடியரசுத் தலைவர் தனது உரையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்:          " அரசியலமைப்புச் சட்டம் ஒரு அரசுக்குத் தேவையான நீதித்துறை, நிர்வாகம், சட்டமியற்றும் அவைகள் என்ற உறுப்புகளைத்தான் வழங்கமுடியும். அந்த உறுப்புகளின் செயல்பாடு மக்களும் அவர்களால் உருவாக்கப்படும் அரசியல் கட்சிகளும் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பதில்தான் அடங்கியிருக்கிறது. " என்பதுதான் அம்பேத்கர் 1949 ஆம் ஆண்டு தெரிவித்த கருத்து. 

மக்களாகிய நாம் என்ன செய்கிறோம்? தேர்தலில் யாருக்காவது வாக்களித்துவிட்டு அத்துடன் மறந்துவிடுகிறோம். நாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதி தனது கடமையைச் செய்யாவிட்டாலும்கூட அடுத்த தேர்தல்வரை காத்திருக்கிறோம். தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறவர்களுக்கு மட்டும்தான் பொறுப்பு இருக்கவேண்டும் என்பதல்ல, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்துக்கும்கூட பொறுப்பு இருக்கிறது. மக்களின் பெயரால் செயல்படும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. 

இங்கே சகோதரி லூசினா குறிப்பிட்டார். 1999 ஆம் ஆண்டில் எட்டாம் வகுப்பில் தோல்வியடைந்த இருளர் சமூகப் பெண்ணைப் பார்த்தபோது எழுந்த எண்ணம்தான் அந்த சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகத் தனியே ஒரு அமைப்பு உருவாக்கப்படுவதற்குக் காரணம் என்று அவர் சொன்னார். அப்படியொரு பெண்ணைப் பார்த்தால் ஒரு அரசியல் கட்சி என்ன செய்திருக்கும்? அதிகபட்சம் அரசாங்கத்தைக் கண்டித்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கும். பெரும்பாலானவர்கள் அரசாங்கத்தைக் கண்டித்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் புனித அன்னாள் சபை அப்படி செய்யவில்லை. மாற்றத்தை அதுவே முன்னெடுத்தது. அதனால்தான்  பதினைந்தே ஆண்டுகளில் இருளர் சமூகத்திலிருந்து ஒரு மாணவி மருத்துவக் கல்லூரியில் சேரக்கூடிய நிலை, பட்டதாரிகள் பலபேர் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 

அத்தியூர் விஜயாவின் பெயரால் இன்று விருது வழங்கப்படுகிறது. பழங்குடி இருளர்கள் ஒரு சங்கமாக உருப்பெறக் காரணமாக இருந்தவர் விஜயாதான். அவருக்கு நடந்த கொடுமைகளைக் கேள்விப்பட்டு அந்தப் பிரச்சனையை பேராசிரியர் கல்யாணி கையிலெடுத்தார், அவருக்கு நாங்களெல்லாம் துணையாக இருந்தோம். திருநெல்வேலியில் பிறந்தவர் கல்யாணி, அவர் இங்கேயிருக்கும் இருளர்களுக்காகப் பாடுபடுகிறார். எங்கெங்கோ இருந்து பலரை விழுப்புரம் மாவட்டத்தை நோக்கி ஈர்க்கும் மையமாக மாறியிருக்கிறார். அவரது பணி பெருமைக்குரியது. அவர் இருளர் மக்களுக்காகப் பாடுபடவேண்டும் என நினைத்ததால் மட்டும் இந்த சங்கம் உருவாகிவிடவில்லை, போலீஸ்காரர்களின் அச்சுறுத்தலுக்கோ, பணம் தருகிறோம் என்ற ஆசை வார்த்தைகளுக்கோ பலியாகாமல் 'கல்யாணி சார் சொல்வதைத்தான் கேட்பேன்' என்று உறுதியாக இருந்தாரே விஜயா அந்த உறுதியால்தான் இந்த சங்கம் பிறந்தது. கல்யாணி உங்களுக்கு உண்மையாக இருப்பதைப்போல பழங்குடி மக்களாகிய நீங்கள் அவருக்கு உண்மையாக இருக்கிறீர்களே அதனால்தான் இந்த மாற்றம் நடந்திருக்கிறது. 

மாற்றம் அவரால் வரும் இவரால் வரும் என்கிறார்கள்; அந்தக் கட்சியால் வரும் இந்தக் கட்சியால் வரும் என்கிறார்கள். அதையெல்லாம் நம்பாதீர்கள். மாற்றம் உங்களால்தான் வரும். கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் நீங்கள்தான் அதிகாரத்தை வழங்குகிறீர்கள். நீங்கள் மனம் வைத்தால்தான் மாற்றம் நிகழும். இன்று இருளர் சமூகத்தில் நிகழ்ந்திருக்கிற மாற்றம் நீங்கள் மனம் வைத்ததால்தான் சாத்தியமானது. அத்தகைய மாற்றத்தை சாதித்துக் காட்டிய உங்களது மன உறுதியை மதித்துதான் நீதிநாயகம் சந்துரு அவர்கள் இங்கே வந்திருக்கிறார். 
அதிகாரம் மக்களாகிய உங்களிடமிருந்துதான் பிறக்கிறது. அம்பேத்கரை மேற்கோள்காட்டி இதைத்தான் குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். 

இன்றைக்கு நமது சுதந்திரத்துக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடியை எப்படி தீர்ப்பது? அரசின் உறுப்புகளான நீதி, நிர்வாகம், சட்டமியற்றும் அமைப்புகளுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை யார் சரிசெய்வது? மக்களும் மக்களால் உருவாக்கப்படும் அரசியல் இயக்கங்களும்தான் அதைச் செய்யவேண்டும். ஆனால் மக்களால் உருவாக்கப்பட்டு மக்களின் பெயரால் நடத்தப்படும் அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை அடைந்துவிட்டால் அரசின் உறுப்புகளை ஆதிக்கம் செய்ய வாய்ப்புப் பெற்றுவிட்டால் தமக்கு அதிகாரம் வழங்கிய மக்கள்மீதே அதிகாரத்தை அடக்குமுறையை ஏவுகிற நிலையைப் பார்க்கிறோம். அதற்கு நீதி அமைப்பும், நிர்வாக அமைப்பும் துணைபோகிறபோதுதான் சமூக நெருக்கடி அதிகரிக்கிறது. 

இதை நாம் அனுமதிக்கக்கூடாது இன்று ஏற்பட்டிருக்கிற நெருக்கடி இப்போது நமக்கு இருக்கும் சுதந்திரத்தையும் பறித்துவிடக்கூடாது; நாட்டில் இப்போதிருக்கும் சனநாயகத்தையும் செயலிழக்கச்செய்துவிடக்கூடாது. அதை மக்கள்தான் தடுத்து நிறுத்தவேண்டும். 

அதிகாரத்தை வழங்குகிற நாம்தான் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். நம் கையிலிருக்கும் அதிகாரத்தின் பலத்தை, ஆற்றலின் தன்மையைப் புரிந்துகொள்வோம்; அதுபற்றிய விழிப்புணர்வை அதிகரித்துக்கொள்வோம். நமக்கான மாற்றத்தை நாமே உருவாக்க உறுதியேற்போம், நன்றி. வணக்கம்! 

( 15.08.2015 அன்று விழுப்புரம் போதி அய். ஏ.எஸ் அகாடமியில் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் பேசியதன் சுருக்கம்) 



No comments:

Post a Comment