Thursday, July 23, 2015

தோழர் ஆர். நல்லகண்ணு நினைவுகூர்ந்த பாய்ச்சலூர் பதிகம்



நேற்று ( 22.07.2015) மாலை சென்னயில் நடைபெற்ற ஆணவக் கொலைக்கு எதிரான கருத்தரங்கில் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் பேசும்போது நான் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது முதன்முதல்லாக அவரைச் சந்தித்த நிகழ்வை நினைவுக்கூர்ந்தார்.

" தோழர் ரவிக்குமாரை அவர் மாணவராக இருந்தபோதே எனக்குத் தெரியும். சிதம்பரத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநாடு நடந்தபோது நான் ஒருவார காலம் அங்கு தங்கியிருந்தேன். அப்போது அவர் என்னை வந்து பார்ப்பார். பிறகு தோழர் மகேந்திரனோடு தொடர்பில் இருந்தார். அதற்குப் பின்னால் நிறப்பிரிகை என்று ஒரு பத்திரிகை நடத்தினார். அதில் உத்தரநல்லூர் நங்கை என்பவர் பாடிய பாய்ச்சலூர் பதிகம் என்பதை வெளியிட்டிருந்தார்கள். அந்தப் பாடல் இப்போதும் பொருத்தமானது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் ஒருத்தி பாய்ச்சலூர் என்ற கிராமத்தினரைப் பார்த்துப் பாடுவதாக அமைந்தது அந்தப் பதிகம். மனிதர்களில் பேதம் பார்க்கிறீர்களே உங்கள் வேதம் எங்கே போனது? மரங்களை எரித்தால் ஒவ்வொரு மரம் ஒவ்வொரு வாசனையைத் தருவதுபோல மனிதர்களை எரித்தால் வேறு வேறு வாசம் வீசுமா? " என்றெல்லாம் அந்தப் பாடலில் வரும். " என்று தோழர் ஆர்.என்.கே பேசினார். 

1970 களின் பிற்பகுதியில் சிதம்பரத்தில் நடைபெற்ற விவசாயத் தொழிலாளர் சங்க மாநாட்டின்போதுதான் அவரைப் போய் நான் பார்த்தேன். அதுவரை திராவிடக் கட்சிகளின் தலைவர்களையே நெருங்கிப் பார்த்திருந்த எனக்கு அவரது எளிமை வியப்பளித்தது. அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் AISF அமைப்புடன் தொடர்பில் இருந்தேன். தோழர் சி. மகேந்திரன் அப்போது அந்த அமைப்புக்குப் பொறுப்பாக இருந்தார். அதைத்தான் தோழர் ஆர்.என்.கே குறிப்பிட்டார். 

1995 ல் வெளிவந்த நிறப்பிரிகை இலக்கிய இணைப்புக்காக பொ.வேல்சாமி பாய்ச்சலூர் பதிகம் குறித்து ஒரு முன்னுரையை எழுதி அந்தப் பதிகத்தையும் அனுப்பினார். 500 பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்ட அந்த இலக்கிய இணைப்பை தோழர் ஆர்.என்.கே படித்திருப்பதோடு அதைத் துல்லியமாக நினைவில் வைத்திருப்பது அரசியல் தலைவர்களில் அவர் வேறுபட்டவர் என்பதற்கு இன்னொரு சான்று. 

No comments:

Post a Comment