Sunday, July 19, 2015

குடி என்பது பொருளாதார பிரச்சனை- ரவிக்குமார்



( 19.07.2015 அன்று நடைபெற்ற விசிக மாநில செயற்குழுவில் பேசியதன் ஒரு பகுதி) 

செப்டம்பர் 17 முதல் மதுஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்வது எனத் தீர்மானம் போட்டிருக்கிறோம். குடிப்பதை நாம் ஒழுக்கப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. குடிப்பவர்கள் கெட்டவர்கள் குடிக்காதவர்கள் நல்லவர்கள் என்று கருதவில்லை. குடி முதன்மையாக ஒரு பொருளாதாரப் பிரச்சனை. ஒடுக்கப்பட்ட மக்கள் உழைத்து சம்பாதிக்கும் பணம் அவர்களிடம் மிச்சம் மீதி ஏதுமில்லாமல் இந்த மதுவால் உறிஞ்சப்படுகிறது. கிராமங்களில் தலித்துகளில்தான் அதிகம் விதவைகள் இருக்கிறார்கள், பெண்கள் குடும்பத் தலைவராக இருக்கும் குடும்பங்கள் தலித்துகளில் அதிகம். அதற்கு முக்கியமான காரணம் குடிதான். தலித் ஆண்கள் குடித்தே குறை வயதில் செத்துப்போகிறார்கள். 

நாடு முழுவதும் மதுவிலக்கைக் கொண்டுவரவேண்டும் என்பதுதான் அம்பேத்கரின் நோக்கம். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 47 அதைத்தான் வலியுறுத்துகிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்தது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ' மதுவிலக்கு விசாரணைக் குழுவின்' பரிந்துரைகளின்படி திட்டங்கள் தயாரிக்கப்பட்டு 1958 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த இலக்கு நிர்ணயித்தார்கள். ஆனால் அது கைகூடவில்லை. மீண்டும் நீதிபதி தேக் சந்த் தலைமையில் ஒரு குழுவை நியமித்தார்கள். அந்தக் குழு நாடெங்கும் ஆய்வு செய்து சுமார் 1200 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அளித்தது. அதன் அடிப்படையில் 1970 ஆம் ஆண்டுக்குள் பூரண மதுவிலக்கு என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வரி வருவாய் வேண்டும் என்ற காரணத்தைச் சொல்லி பல்வேறு மாநில அரசுகளும் கள், சாராயக் கடைகளைத் திறந்தன. தமிழ்நாட்டில் அப்போது ஆட்சியிலிருந்த திமுக அரசு பல்வேறு அரசியல் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி சாராயக் கடைகளையும் கள் கடைகளையும் திறந்தது. 

மத்திய அரசால் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் சமூக பொருளாதார கணக்கெடுப்பின் விவரங்களைப் பார்த்தால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தலித் மக்களிடம் இருந்த நிலம்கூட இப்போது இல்லை எனத் தெரிகிறது. அதற்குக் காரணம் குடிதான். சொத்தை இழந்து சுய மரியாதையை இழந்து தலித் மக்கள் இப்படி அல்லல்படுவதற்கு முக்கிய்ச் காரணம் இந்தக் குடிதான். 

தலித்துகளை ஓட்டாண்டிகளாக்கிய இந்த மது தான் இடைநிலைச் சாதிகளை செல்வந்தர்களாக்கியிருக்கிறது. கள்ளச் சாராய விற்பனையானாலும் சரி நல்ல சாராய விற்பனையானாலும் சரி அதனால்
பொருளாதார லாபம் அடைகிறவர்கள் தலித் அல்லாதவர்கள்தான். ஆனால் அதனால் அதிகம் பாதிக்கப்படுவதோ தலித் மக்கள்தான். எனவே இந்தப்
பிரச்சாரத்தை கிராமங்கள்தோறும் நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும். 

No comments:

Post a Comment