Friday, March 27, 2015

’பலி ஆடுகள்’ நாடக நிகழ்வுக்குத் தடை!

கருத்துரிமைப் பறிப்பில் புதுவைப் பல்கலைக் கழகம்!

தொல்.திருமாவளவன் கண்டனம்

உலக நாடக நாளான இன்று ( 27.03.2015 ) புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியின் சார்பில் அந்தத் துறையின் தலைவரும் புகழ்பெற்ற நாடக இயக்குனர்களில் ஒருவருமான டாக்டர் கே.ஏ.குணசேகரன் அவர்களது இயக்கத்தில் ‘ பலி ஆடுகள் ‘ என்ற நாடகத்தை நிகழ்த்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நாடகம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அரங்கேற்றப்பட்டதாகும். எல்லா சமூகங்களிலும் பெண்களே பலி ஆடுகளாக ஆக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை கல்வெட்டு ஒன்றை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த நாடகம் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டபோது ஊடகங்களால் பாராட்டப்பட்ட பெருமை கொண்டது.

கடந்த இரண்டு மாதங்களாக அந்த நாடகத்துக்கான ஒத்திகைகளிலும் பயிற்சிகளிலும் மாணவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். உலக நாடக நாளையொட்டி கடந்த மூன்று நாட்களாக புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. அதில் புகழ்பெற்ற நாடக ஆசிரியர்களான பேராசிரியர்கள் இந்திரா பார்த்தசாரதி, டாக்டர் அ.ராமசாமி,இலங்கையிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்புலத் தலைவர் திரு சிதம்பரநாதன், பேராசிரியர் அறிவுநம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கிவருகின்றனர். அதன் நிறைவு நாளான இன்று மாலை அந்த நாடகம் நிகழ்த்தப்படுவதாக இருந்தது.

இந்நிலையில் நேற்று ( 26.03.2015) இரவு சுமார் ஒன்பது மணியளவில் டாக்டர் கே.ஏ.குணசேகரன் அவர்களைத் தொலைபேசியில் அழைத்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ’ நீங்கள் போடவிருக்கும் நாடகம் பிராமணர்களை விமர்சிப்பதாக இருப்பதாக எனக்கு ஃபோன் வந்தது. அந்த நாடகத்தைப் போடக்கூடாது.நிறுத்திவிடுங்கள்’ என்று ஆணையிட்டிருக்கிறார். துணைவேந்தர் அனுமதி மறுத்ததால் அந்த நாடகம் இன்று நடத்தப்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

புதுச்சேரிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என ஆசிரியர்களும் மாணவர்களும் போராட்டங்களை நடத்திவருகின்றனர். அவர் தனது கல்வித் தகுதி குறித்துப் பொய்யான விவரங்களைக் கொடுத்திருக்கிறார் என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னரும் ஆட்சியிலிருக்கும் சில அரசியல்வாதிகளின் ஆதரவின் காரணமாகவே அவர் பதவியில் இன்னும் நீடித்து வருகிறார். இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைப் பள்ளியில் நடக்கவிருந்த நாடக நிகழ்வை சாதியைக் காரணமாகச் சொல்லி தடை விதித்திருக்கிறார். இது மிகவும் கண்டனத்துக்குரியது.

பலி ஆடுகள் நாடகத்துக்கு புதுச்சேரிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் விதித்த தடையை உடனே நீக்கவேண்டும். அந்த நாடகத்தை பல்கலைக்கழகத்தில் நடத்த அனுமதிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.



No comments:

Post a Comment