Sunday, January 18, 2015

எள்ளலைக் கொல்லும் ‘நம்பிக்கை’ - ரவிக்குமார்


16.01.2015

பிற மதத்தவரைக் கேலி செய்தால் அவமதித்தால் முகத்திலே குத்து விழுவதை எதிர்பார்க்கத்தான் வேண்டும்” என போப்பரசர் தெரிவித்திருக்கிறார். “ என் அம்மாவை இழிவுபடுத்தும் வார்த்தைகளை ஒருவர் சொன்னால் அவரது மூக்கில் குத்து விழும்” என்று குறிப்பிட்ட போப்பரசர் ” எவரும் ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபடக்கூடாது. இன்னொருவரின் நம்பிக்கையை அவமதிக்கவோ கேலிசெய்யவோ கூடாது”  என்று தெரிவித்திருக்கிறார். இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு பிலிப்பைன்ஸுக்குச் செல்லும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இந்தக் கருத்துகளை தெரிவித்திருக்கிறார். “ கடவுளின் பெயரால் கொலை செய்வது பிறழ்ச்சி” எனவும் அவர் கூறியிருக்கிறார். (http://time.com/3668875/pope-francis-charlie-hebdo/ )
சார்லி ஹெப்தோ பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பத்திரிகையாளர்கள், கேலிச் சித்திரக்காரர்கள் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கருத்து சுதந்திரம் குறித்த விவாதம் உலகெங்கும் எழுந்துள்ளது. பாரிஸ் நகரில் பதினைந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டு பயங்கரவாதத்துக்கு எதிரான பேரணியை நடத்தியுள்ளனர். அதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் போப்பரசர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். 

போப்பரசரின் கருத்து மதவாதிகளுக்கு ஊக்கம் தருவதாக இருப்பது கவலை அளிக்கிறது. ’நம்பிக்கை’ என்பதன் பெயரால்தான் இன்று பெரும்பாலான வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. இந்த வன்முறைகளில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டது மட்டுமின்றி கோடிக்கணக்கான மக்கள் தமது நாடுகளைவிட்டு விரட்டப்பட்டு ஏதிலிகளாக அலையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் இந்த வன்முறைகள் யாவும் நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லைக்கொண்டுதான் நியாயப்படுத்தப்படுகின்றன. 

” மத சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் அடிப்படை உரிமைகள்” என போப்பரசர் கூறியிருக்கிறார். கருத்து சுதந்திரம் என்பது விமர்சிப்பதற்கான, சிரிப்பதற்கான சுதந்திரத்தையும் உள்ளடக்கியதுதான். எள்ளல் என்பதை நாகரிகமான விமர்சன முறையாகத்தான் உலகம் அங்கீகரித்து வந்திருக்கிறது. சார்லி ஹெப்தோ பத்திரிகைமீது தாக்குதல் நடத்தப்பட்ட ஃப்ரான்ஸ் நாட்டில் எள்ளலை விமர்சனமாகக் கையாண்ட புகழ்பெற்ற எழுத்தாளர் வரிசை ஒன்று இருப்பதை வரலாற்றறிஞர் ரோபர் டார்ண்டன் சுட்டிக்காட்டியிருக்கிறார். ரெபெலே, புஸ்ஸி ரபுதின்,பூமார்ஷெ,ஷாம்ஃபோர், வோல்தேர்- என  அந்த வரிசையைப் பட்டியலிட்டிருக்கிறார். எள்ளலை மிக ஆற்றலோடு கையாண்ட வோல்தேர் அதை கிறித்தவ பழமைவாதிகளுக்கு எதிராக எப்படிப் பயன்படுத்தினார் என்பதையும், “ நகைப்பை நம் பக்கம் கொண்டுவரவேண்டும்” என்ற அவரது புகழ்பெற்ற வாசகத்தையும் டார்ண்டன் சுட்டிக்காட்டியிருக்கிறார். (http://www.nybooks.com/blogs/nyrblog/2015/jan/09/charlie-hebdo-laughter-terror/ ) எள்ளலை அடிப்படையாகக்கொண்ட ரெபெலேவின் எழுத்துகளது முக்கியத்துவத்தை மிகைல் பக்தினின் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. 

நம்பிக்கையின் பெயரால் மிகப்பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன்றைய சூழலில் போப்பரசரின் கருத்து ஜனநாயகத்துக்கும், கருத்துரிமைக்கும், படைப்பு சுதந்திரத்துக்கும் எதிரானதாகவே வெளிப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டும் விதமாக அமைந்துள்ள அவரது கருத்துகளை சார்லி ஹெப்தோ தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி மதவாதத்தைக் கையிலெடுத்திருக்கும் எல்லோருமே ஆதரிப்பார்கள். இந்தியாவில் மதச் சிறுபான்மையினராக இருக்கும் கிறித்தவர்களுக்கு எதிராக போப்பரசரின் கருத்து பயன்படுத்தப்பட்டால் நாம் வியப்பதற்கில்லை.

No comments:

Post a Comment