Friday, November 7, 2014

சாதிப் பெரும்பான்மைவாதம் என்ற ஆபத்து - ரவிக்குமார்



‘‘சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் செய்ய வேண்டும்’’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு
 உள்ளது. அதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளும் அந்தக் கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்த ஆரம்பித்து விட்டன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பிரதிநிதித்துவம் செய்யும் பெரும்பாலான கட்சிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ள காரணத்தால் மத்திய அரசும் இதைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. இதை ஏற்காவிட்டால் ‘ பிற்படுத்தப்பட்டோரின் எதிரி‘ என்று வர்ணிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக காங்கிரஸ் அரசு இதற்கு ஒப்புக்கொண்டுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் பிரச்சனையை இப்போது அமைச்சர்களின் குழு ஒன்றின் ஆய்வுக்காக மத்திய அரசு அனுப்பியிருக்கிறது.
       சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வதுகுறித்து மத்திய அமைச்சரவையில் ஒருமித்த கருத்து இல்லை. எம்.எஸ்.கில், கபில் சிபல், ஆனந்த் சர்மா அகியோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஆனால் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமோ தற்போதைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது இதைச் சேர்ப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை எடுத்துக்கூறியதாகத் தெரிகிறது.  
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட ஒரு நடைமுறையாகும். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகையைக் கணக்கெடுத்து அறிவிப்பதென்பது ஏறத்தாழ 1871லிருந்து நடந்து வருகிறது. சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு மத்திய அரசு இதைச் செய்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1931ஆம் ஆண்டுவரை சாதி வாரியாகக் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதற்கு அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டாம் உலக யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தும்போது இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது. அப்போது சாதி வாரியாகக் கணக்கெடுப்பு செய்வதா? இல்லையா? என்று மத்திய அரசு ஆலோசித்தது. அப்படி சாதி வாரியாகக் கணக்கெடுப்பதால் மக்களிடையே பிரிவினை உணர்வுதான் அதிகரிக்கும். எனவே, அது தேவையில்லை என்று அப்போது முடிவு செய்த மத்திய அரசு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை மட்டும் சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வது என்றும் மற்றவர்களை அவ்வாறு கணக்கெடுப்பதில்லை என்றும் முடிவு செய்தது. அந்த நடைமுறைதான் இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதை மாற்ற வேண்டும். மீண்டும் சாதிவாரியாக மக்கள் தொகையைக் கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என்ற குரல்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியினரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. 
       அண்மையில் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ‘ சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்யப்படாத நிலையில் பிற்படுத்தப்பட்டோரின் மக்கள்தொகை எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?‘ எனக் கேட்டிருந்தது. அப்போதிலிருந்தே இக்கோரிக்கையைப் பல்வேறு அரசியல் கட்சிகளும் முன்வைக்கத் தொடங்கிவிட்டன. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அது மேலும் தீவிரமடைந்துவிட்டது. தூங்கிக் கிடந்த பூதம் ஒன்றை உசுப்பிவிட்ட கதையாக இப்போது இந்தக் கோரிக்கை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. 
       1955 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தியிருந்தது. 2399 சாதிகளைப் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகப் பட்டியலிட்டிருந்த அந்த அறிக்கை அவற்றுள் 837 சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனக் குறிப்பிட்டிருந்தது. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையமோ எஸ் சி / எஸ் டி பிரிவினரின் மக்கள்தொகை அல்லாது இந்தியாவில் 54 சதவீதம்பேர் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வதாகவும் 3743 சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனவும் கூறியிருந்தது.
      மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைபடுத்தப்படுவதற்கு முன்னால் பிற்படுத்தப்பட்டவரின் மக்கள் தொகையை சரியாகக் கணக்கிடுவதற்காக சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரில் இருக்கும் எண்ணிக்கை பலம் கொண்ட சாதியைச் சேர்ந்தவர்கள் இந்தக் கோரிக்கையை அதிகமாக வலியுறுத்துகின்றனர். லாலுபிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ், நிதிஷ்குமார் போன்றவர்கள் இதை வலியுறுத்துவது அதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.
சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வது என்பது இடஒதுக்கீட்டைத் தீர்மானிப்பதற்காக மட்டும் அல்ல. அது சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படுவதோடும் தொடர்பு கொண்டுள்ளது. இப்போது பிற்படுத்தப்பட்டோருக்கு பல்வேறு சமூக நலத்திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கான நிதியை அந்த சமூகத்தினரின் மக்கள் தொகைக்கு ஏற்பவே ஒதுக்க வேண்டியுள்ளது. 1931ஆம் ஆண்டு கணக்கெடுப்பை வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் யூகமாக ஒரு விழுக்காட்டை கற்பனைசெய்து அதற்கேற்பத்தான் இப்போது  நிதி ஒதுக்குகிறார்கள். பிற்படுத்தப்பட்ட சாதியினரின் உண்மையான மக்கள் தொகை சரியாகத் தெரிந்தால் அதனடிப்படையில் தமக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அந்த சமூகத்தினர் எதிர்பார்க்கிறார்கள். 
பிற்படுத்தப்பட்ட பிரிவினரிடையே இருக்கின்ற எண்ணிக்கை பலம் குறைந்த சில சாதிகளும் தமக்கு உள்ஒதுக்கீடு வேண்டுமென்பதற்காக சாதிவாரி இடஒதுக்கீட்டை வலியுறுத்துகின்றன. பெரிய சாதியினரோடு இடஒதுக்கீட்டு உரிமைக்காக போராடித் தமது பங்கை அவர்கள் பெறுவது சாத்தியம் இல்லை. எனவே எண்ணிக்கை பலம் குறைந்த சாதியினருக்கு இடஒதுக்கீட்டில் ஒரு தொகுப்பை ஏற்படுத்தி உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் நரிக்குறவர், நாவிதர் முதலானோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் தமக்கு உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கேட்டுவருகின்றனர். அதற்காக சாதிவாரி இடஒதுக்கீடு அவசியம் என்று அவர்கள் கருதுகின்றனர். தாழ்த்தப்பட்டவர்களிலேயும் இதுதான் நிலை. அவர்களிலும் எண்ணிக்கை பலம் குறைந்த சாதியினர் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்வதால் தம்மை சாதிவாரியாக கணக்கெடுப்பு செய்து உள்ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்கின்றனர். அண்மையில் அருந்ததியினருக்கு அளிக்கப்பட்ட உள்ஒதுக்கீடு இதற்கு ஒரு சான்றாகும்.
சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வதால் சில நன்மைகள் இருந்தபோதிலும், சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. இடஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவ உரிமையாகக் கருதப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல. தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு அவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ப இருந்தாலும் அது பிரதிநிதித்துவம் ஆகாது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவும், தீண்டாமை என்னும் கொடுமைக்கு அவர்கள் தொடர்ந்து ஆளாக்கப்படுவதை உணர்ந்து அதற்கான இழப்பீடாகவும்தான் அவர்களுக்கான இடஒதுக்கீடு என்பது வழங்கப்படுகிறது. கல்வி, பொருளாதாரம் ஆகிய தளங்களில் பிற்படுத்தப்பட்டோரும் இதேவிதமான புறக்கணிப்புகளுக்கு ஆளான போதிலும் சமூக தளத்தில் அவர்கள் அத்தகைய இழிநிலையை அனுபவிப்பதில்லை. எனவே இந்த இரண்டு பிரிவினருக்குமான இடஒதுக்கீட்டை ஒரேவிதமாகப் பார்ப்பதில் பிரச்சனை இருக்கிறது.
இடஒதுக்கீட்டைச் சர்வரோக நிவாரணியாக கருதுகிற ஒரு போக்கு நம்மிடையே அதிகரித்து வருகிறது. இடஒதுக்கீட்டைக்கொண்டு இந்தியாவிலிருக்கும் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்துவிட முடியாது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி இப்போது அளிக்கப்படும் இடஒதுக்கீடானது ஒரு சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கிடைப்பதாக இல்லை. அவர்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் இடஒதுக்கீடு வழங்கப்படாத காரணத்தால் ஒரு சமூகத்தின் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே அதை அனுபவிக்கக்கூடிய சூழல் இருக்கிறது. மண்டல் குழு பரிந்துரைகளையட்டி உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட புகழ் பெற்ற தீர்ப்பு இடஒதுக்கீட்டின் அளவை ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் போகக்கூடாது என்று வரையறுத்ததை நாம் அறிவோம். அதுமட்டுமிறி இந்த இட ஒதுக்கீடு என்பது அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டும்தான் பொருந்தும். இன்று எல்லாமே தனியார்மயம் ஆகிவரும் சூழலில் இதற்கு எந்த அளவுக்கு மதிப்பிருக்கும் என்பதும் ஒரு கேள்வியாகும். 
சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்ட சென்னை உயர்நீதிமன்றம் அத்துடன் இன்னொரு கருத்தையும் சொல்லியிருக்கிறது. சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யப்பட்டால்தான் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் நீதிபதிகள் கூறியிருக்கின்றனர். ஒருவேளை சாதிவாரி கணக்கெடுப்பு செய்யப்பட்டால் அந்த விவரங்கள் வெளியானவுடன் நிச்சயமாக அடுத்த கோரிக்கை முன்வைக்கப்படும். இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும் என்ற அந்த கோரிக்கை முன்னிலும் வலுவாக முன்வைக்கப்படும்.
       சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவையில்லை என்று சொல்பவர்கள் இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள்: இது மக்களிடையே பிரிவினை உணர்வை அதிகமாக்கிவிடும், இது சிறிய சாதிகளுக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.இரண்டாவது காரணத்தை அமைச்சர் எம்.எஸ்.கில்லும் கூறியிருக்கிறார். மக்களிடையே இப்போது சாதி உணர்வே இல்லை என்று கூறிவிடமுடியாது. ஏற்கனவே இந்திய சமூகம் சாதியாகத்தான் பிரிந்துகிடக்கிறது. அதனால்தான் அம்பேத்கர், ’ இந்தியாவில் சமூகம் என்பதே இல்லை. இங்கு இருப்பது சாதிகளின் தொகுப்பு மட்டும்தான்’ என்று சாடினார். ஆனால் வரவர சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்பது மறுக்கமுடியாத ஒரு உண்மையாகும். இந்தியாவில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இந்த அளவுக்கு சாதிகள் இல்லை என்றே தெரிகிறது. பிரிட்டிஷ் காலத்தில் மெக்கன்ஸி என்ற வெள்ளைக்கார அதிகாரியால் தொகுக்கப்பட்ட வலங்கை, இடங்கை சாதிகளின் சரித்திரம் என்ற நூலில் இருநூறு சாதிகளுக்கும் குறைவாகவே தமிழ்நாட்டு சாதிகளின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு சாதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சாதி உணர்வு அதிகரிப்பதே அதற்குக் காரணம் எனச் சொல்லலாம். சாதிவாரிக் கணக்கெடுப்பு அந்த சாதி உணர்வை அதிகரிக்கச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 
சிறிய சாதிகள் பாதிக்கப்படும் என்ற அச்சமும் நியாயமானதே. ஏற்கனவே எண்ணிக்கை பலம் கொண்ட சாதிகள் இந்த நாட்டை ஆள்வதற்குத் தங்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று கூறி வருகின்றன. நமது தேர்தல் அமைப்பு முறை எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாகும். அதிக எண்ணிக்கையிலான ஆதரவைப் பெறுகிறவர்கள்தான் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகின்றனர். எனவே, பெரும்பான்மை வாதம் என்பது இங்கு எளிதில் தலைதூக்கக்கூடிய சூழல் உள்ளது. அப்படித்தான் மதப்பெரும்பான்மை வாதம் இந்திய அரசியலில் தீவிரம் பெற்றது. அதனால் ஏற்பட்ட சீரழிவுகளைக் கடந்த இருபது ஆண்டுகளாகப் பார்த்துவிட்டோம். இப்போது சாதிப்பெரும்பான்மை வாதம் அதேபோல தலைதூக்கக் கூடிய ஆபத்து இந்த சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பினால் ஏற்படக்கூடும். மதப்பெரும்பான்மை வாதத்தைவிட சாதிப்பெரும்பான்மை வாதம் ஆபத்தானதாகும்.இதை நாம் மறந்துவிடக்கூடாது.
       அப்படியானால் சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டுமா? வேண்டாமா? அதற்கு என்னதான் பதில் என்ற கேள்வி எழலாம். 1881 மற்றும் 1891 ஆம் ஆண்டுகளில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செய்தபோது தமிழ்மக்களை ‘சாதியற்ற திராவிடர்கள்‘ எனப் பதிவுசெய்துகொள்ளுமாறு அயோத்திதாசப் பண்டிதர் வற்புறுத்தினார். ’ஆயிரம் உண்டிங்கு சாதி’ என்றபோதிலும் ’அன்னியர் வந்து புகல் என்ன நீதி?’ எனக்கேட்டார் பாரதி. அவர்களைப்போன்ற சீர்திருத்தவாதிகள் இன்று இல்லை. மேலும் மேலும் சாதிவெறி கொண்டவர்களாகவே மக்கள் மாற்றப்படுகிறார்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டுமா என்பதைவிட சாதி வேண்டுமா என்ற கேள்வியே முக்கியமானது. அந்தக் கேள்வியை முன்வைத்து அரசாங்கம் சிந்திக்கவேண்டும்

No comments:

Post a Comment