Wednesday, October 29, 2014

கொள்ளிக்கட்டையால் தலை சொறியும் இந்துத்துவ அமைப்புகள்



ராஜேந்திர சோழன் முடிசூட்டிய ஆயிரமாவது ஆண்டைக் கொண்டாடப்போவதாக சங்கப் பரிவார அமைப்புகள் அறிவித்திருப்பதை நகைமுரண் என்றுதான் சொல்லவேண்டும். ராஜேந்திர சோழன் கி பி 1017 ஆம் ஆண்டில் இலங்கைமீது படையெடுத்து சிங்கள அரசனாக இருந்த ஐந்தாம் மஹிந்தவை சிறைபிடித்து தமிழ்நாட்டுக்கு இழுத்து வந்தவன். இலங்கை முழுவதையும் தனது ஆட்சியின்கீழ் கொண்டுவந்தவன். இலங்கையை வெற்றிகொள்வதில் தனது தந்தை ராஜராஜன் பாதியில் விட்ட பணியை முடித்தவன். மத்தியில் ஆளும் பாஜக அரசோ இலங்கையை நட்பு நாடாகப் பார்க்கிறது. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது. 

ராஜேந்திர சோழனைக் கொண்டாடுவது தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசியலுக்குப் பயன்படுவதைக்காட்டிலும் சிங்கள எதிர்ப்புணர்வை அதிகரிக்கவே உதவும்.

Monday, October 27, 2014

தமிழ்நாட்டில் தலித் ஒருவரை முதல்வராக்குவது எப்போது?



தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருந்தபோதிலும் இப்போதே அதற்கான அணிசேர்க்கைகள் உருவாகத் தொடங்கிவிட்டன. யார் முதல்வர் என்ற கேள்வி ஊடகங்களில் உலாவரத் தொடங்கிவிட்டது. 

தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகிவிட்டதென்றும் அதை நிரப்புவதற்கு இந்த நடிகர் வருவாரா அந்த நடிகர் வருவாரா என்றும் ஊடக மாயைகள் உருவாக்கப்படுகின்றன. சினிமாவை வைத்தே பக்கங்களை நிரப்பும் அச்சு ஊடகங்களும், சினிமாவின் நீட்சியாகவே செயல்படும் காட்சி ஊடகங்களும் திரைப்படத் துறையிலிருந்து ரட்சகர்களைக் கண்டுபிடிக்க நினைப்பதில் வியப்பில்லை. ஆனால் நாம் அதற்கு இன்னும் எத்தனைகாலம் பலியாகிக்கொண்டிருப்பது? என்ற கேள்வியை யார் கேட்டுக்கொள்கிறார்களோ இல்லையோ தலித்துகள் கேட்டுக்கொண்டாகவேண்டும்.

இந்தியாவில் தலித் மக்கள்தொகை இருபது விழுக்காட்டுக்குமேல் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பிற்படுத்தப்பட்டோர் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கு முன்பே தலித்துகள் அமைப்பாகத் திரண்டு போராடிய நீண்ட வரலாறுகொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஆனால் ஆந்திராவிலும், உத்தரப்பிரதேசத்திலும், மஹராஷ்டிராவிலும், ஏன் வெறும் 16% தலித் மக்கள்தொகைகொண்ட பீஹாரிலும்கூட தலித் ஒருவர் முதலமைச்சராக முடிந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அதைப்பற்றிப் பேசக்கூட முடியாத நிலை. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த இழிநிலைத் தொடர்வது? தலித் ஒருவரை முதல்வராக்குவோம் என அறிவிக்கும் கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என எப்போது தமிழ்நாட்டு தலித்துகள் உறுதிபூணுகிறார்களோ அப்போதுதான் இந்த நிலை மாறும். அந்த அரசியல் தற்சார்பு நிலையை உருவாக்குவதே இன்று தலித் இயக்கங்களின் முதன்மையான பணி. 

Saturday, October 25, 2014

பீஹாரும் தமிழகமும்: பாஜக காலூன்றுவதைத் தடுக்க திராவிடக் கட்சிகள் செய்யவேண்டியது என்ன? - ரவிக்குமார்



பிற்போக்குத் தனத்தின் எடுத்துக்காட்டாக நாம் பீஹாரைச் சொல்வது வழக்கம். ஆனால் பலவிதங்களில் பீஹாருக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒற்றுமை உண்டு. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் அரசியல் எழுச்சி, அதன் விளைவாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்பவற்றில் பீஹாருக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒற்றுமையைக் காணலாம். பீஹாரில் உயர்சாதியினர் சுமார் 14% முஸ்லிம்கள் 17% தலித்துகள் 16% பிற்படுத்தப்பட்டோர் சுமார் 51% உள்ளனர்.பீஹாரின் மக்கள் தொகையில் 85% கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். 

வளர்ச்சியில் முதல் இடத்தைப் பிடித்து அண்மையில் பீஹார் மிகப்பெரிய வியப்பை உண்டாக்கியது. அதை ஊடகங்களும் உரத்துப் பேசின. ஆனால் அதைவிடவும் மிகப்பெரிய ஆச்சர்யம் பீஹாரில் தலித் ஒருவர் முதலமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். பீஹாரை ஆண்டுகொண்டிருந்த ஐக்கிய ஜனதா தளம் பாராளுமன்றத் தேர்தலில் மிகமோசமான தோல்வியை சந்தித்த பிறகு பீஹார் அரசியலில் சில திருப்பங்கள் ஏற்பட்டன. அரசியலில் எதிர்த் துருவங்களாக இருந்த ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் கைகோர்த்தன. எவரும் எதிர்பார்க்காத விதத்தில் தலித் ஒருவர் முதல்வராக்கப்பட்டார். 

தமிழ்நாட்டோடு ஒப்புநோக்கினால் பீஹாரில் தலித்துகளின் எண்ணிக்கை சுமார் 5% குறைவு. அங்கு சாதிய ஒடுக்குமுறை அதிகம். ஆனால் அந்த மாநிலத்தில் தலித் ஒருவர் முதல்வராக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் அதை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை. 

பீஹாரைப்போலவே தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் அரசியலும் இப்போது ஒரு திருப்புமுனையில் நிற்கிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அரசியல் அதிகாரத்தில் பங்கு தருவதற்கு இங்கிருக்கும் திராவிடக் கட்சிகளுக்கு மனம் இல்லை. ஓட்டுக்குக் காசு கொடுப்பது, இலவசங்களைக் கொடுப்பது என்ற மலிவான உத்திகள் மூலம் தலித்துகளின் வாக்குகளை வாங்கிவிடலாம் என அவை கருதுகின்றன. இப்போதைக்கு அந்த உத்திகள் வெற்றியைக்கூட தரலாம். ஆனால் எப்போதும் தலித்துகளை இப்படி ஏமாற்ற முடியாது. 

தலித்துகளுக்கு அதிகாரத்தில் பங்கு என்ற திட்டத்தை யாரேனும் முன்வைத்தால் அப்போது இந்த இலவசங்களும் பணமும் செல்லாமல் போய்விடும். ஒவ்வொரு தேர்தலிலும் தலித்துகளின் வாக்குகள்தாம் தமிழ்நாட்டின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கின்றன. இதை திராவிடக் கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும். 

தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் பாஜக இப்போதைக்கு வழக்கமான தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் உத்தியையே பின்பற்றிவருகிறது. இங்குள்ள பிற்படுத்தப்பட்டோரின் கட்சிகளோடுதான் அது கூட்டணி அமைத்திருக்கிறது. ஆனால் அந்தக் கூட்டணி சட்டமன்றத் தேர்தலுக்குத் தொடரக்கூடிய வாய்ப்பு இல்லை. எனவே அது தனது தேர்தல் உத்தியை மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

பிரபலமான நடிகர்களைக் கட்சியில் சேர்த்தால் வெற்றிபெறலாம் என்பது தவறான வழிமுறையாகும். தனது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும் அந்த வழிமுறையை பாஜகவுக்கு யார் சொல்லித் தந்தார்கள் எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவேண்டுமெனில் அது தலித்துகளை நோக்கித்தான் தனது கவனத்தைத் திருப்பியாகவேண்டும்.பீஹாரில் நித்திஷ்குமார் கையாண்ட உத்தியை பாஜக தமிழ்நாட்டில் கையில் எடுக்கவேண்டும். அதைத் தவிர அக்கட்சிக்கு வேறு வழியில்லை. 

தலித் அஸ்திரத்தை பாஜக கையிலெசடுப்பதற்கு முன்னால் தமிழ்நாட்டிலிருக்கும் திராவிடக் கட்சிகள் விழித்துக்கொள்வார்களா? ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அரசியல் அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் விதத்தில் பரந்துபட்ட சமூக அணிசேர்க்கையை உருவாக்குவார்களா? அப்படியானதொரு ஜனநாயக அணுகுமுறையைக் கையிலெடுக்காமல் தொடர்ந்தும் தலித்துகளின் ஆதரவைப் பெற முடியாது என்பதை இப்போதாவது திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் புரிந்துகொள்வார்களா? 

Friday, October 17, 2014

பறை இசையின் பெருமைபேசும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!


பறை இசை தமிழர் இசையென்றும் ஆற்றல் மிக்க இசையென்றும் இப்போது அது சாதி எல்லைகளைக் கடந்து மையநீரோட்டத்துக்கு வந்துவிட்டதென்றும் நீங்கள் முன்வைக்கும் கருத்துகள் மகிழ்ச்சி தருகின்றன. நீங்கள் மெய்சிலிர்க்க விவரிக்கும் பறை இசையை தலித் ஒருவரின் இறுதிச் சடங்கிலோ அல்லது தலித் தெருவில் நிகழும் ஒரு கொண்டாட்டத்திலோ அல்லது தலித்துகளின் கோயில் விழாவிலோ 
பிறர் இசைப்பதாக உங்களால் கற்பனை செய்தாவது பார்க்கமுடியுமா? 

பறை உங்களுக்கு இசைக்கருவி ஆனால் ஒரு தலித்துக்கு அது இழிவின் குறியீடு. போர்ப்பறை என்பதெல்லாம் அதை மறைத்துக்கொள்ள ஒரு உபாயம் அவ்வளவே! பறை அடித்துதான் ஜீவிக்கவேண்டுமென்ற நிலை கிராமப்புறத்தில்கூட இன்று எவருக்கும் கிடையாது. பறை அடித்து சம்பாதிக்கும் கூலி டாஸ்மாக்குக்குத்தான் சென்று சேர்கிறது. 

தோழர் மணிமாறன் அவர்களே! 'சாவுக்கு பறை அடிக்கமாட்டோம் ' என்று சத்தியம் செய்வதில் பயனில்லை. அதற்குப்பதிலாக, தலித் எவருக்கும் பறை அடிக்க பயிற்சி தரமாட்டேன் என உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். 

உயர்நீதிமன்றம் ஒலி மாசு என்ற அடிப்படையில்தான் தப்பாட்டத்துக்கும் செண்டை மேளத்துக்கும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதன் அடிப்படையில் பட்டாசுகளுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. தப்பாட்டம் குறித்த கட்டுப்பாடுகளைக் கறாராக நடைமுறைப்படுத்தும் காவல்துறை ஒலிமாசு குறித்த விதிகளைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். 

Wednesday, October 8, 2014

லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதை


நான் நண்பனை நேசித்தேன்
அவன் போய்விட்டான் என்னைவிட்டு
சொல்வதற்கு ஒன்றும் இல்லை
தொடங்கியதுபோலவே மிருதுவாக
கவிதை இத்துடன் முடிகிறது
நான் நண்பனை நேசித்தேன்

தமிழில்:ரவிக்குமார்

லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதை



வழிகள் 
========
கை மணிக்கட்டில் ஒரு வெட்டு
ஒரு வாய் அமிலம்
மூளையைத் துளைக்கும் ஒரு தோட்டா
- மரணம் தாயைப்போல வரும்
உன்னைத் தன் கரங்களில் ஏந்திக்கொள்ளும்

தமிழில் : ரவிக்குமார்

ஹரியானாவில் தலித்துகள் காங்கிரசைத் தோற்கடிக்கப்போகிறார்கள்?



ஹரியானாவின் மக்கள் தொகையில் சுமார் 20% தலித்துகள் உள்ளனர். அவர்கள் இதுவரை காங்கிரஸ் கட்சியைத்தான் ஆதரித்து வந்தார்கள். ஆனால் காங்கிரஸோ அந்த மாநிலத்தில் இருக்கும் ஜாட் சாதியினருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. தலித்துகளுக்கு எதிராக அம் மாநிலத்தில் அதிகரித்துவரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறியதோடு சாதிய வன்முறையில் ஈடுபடும் ஜாட்டுகளுக்கு ஆதரவாக அவர்களை ஊக்குவித்துவருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மிர்ச்பூரில் தலித் குடும்பம் ஒன்று வீட்டோடு வைத்து உயிரோடு எரிக்கப்பட்டது. அந்த கொடூர சம்பவத்தின் தாக்கம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2012 ஆம் ஆண்டில் மட்டும் ஹரியானாவில்  19 தலித்துகள் கொல்லப்பட்டனர், 67 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர் என என்சிஆர்பி அறிக்கை குறிப்பிடுகிறது. 

தலித்துகளின் காங்கிரஸ் எதிர்ப்பு பாஜகவுக்குத்தான் பயன்தரப்போகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதுதான் நடந்தது. அதற்காக காங்கிரஸுக்கு வாக்களிப்பது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொளவதற்கு சமம். 

தம்மை வெறும் வாக்குவங்கியாகக் கருதி ஏமாற்றிவரும் காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் இந்தத் தேர்தலில் தலித்துகள் பாடம் கற்பிப்பார்கள். 

Sunday, October 5, 2014

மேக்நாத் சாஹா (1893-1956)



சுன்ரி என்ற தீண்டாத சாதியின் உள்சாதியாக பட்டியல்படுத்தப்பட்ட சாஹா சாதியில் 1893 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் நாள் பிறந்தவர் மேக்நாத் சாஹா . தற்போது பங்களாதேஷ் என அழைக்கப்படும் அன்றைய கிழக்கு வங்கத்தில் சியோரடாலி என்ற கிராமத்தில்தான் சாஹா பிறந்தார். அம்பேத்கர் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த சாஹாவுக்கும் அம்பேத்கருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.  அம்பேத்கரைப் போலவே பல்வேறு சமூக இடர்களை சந்தித்தவர். சிறந்த அறிவாளி. சாஹாவும் அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அம்பேத்கர் இறந்த அதே ஆண்டில் அவரும் இறந்தார். 

பள்ளிப் பருவம்: 

சாஹாவின் தந்தை சிறிய கடை ஒன்றை நடத்திவந்தார். சாஹா சிறு வயதிலேயே அறிவுத் திறனோடு விளங்கினாலும் நல்ல பள்ளியில் அவரைப் படிக்கவைக்கும் அளவுக்கு சாஹாவின் குடும்பத்துக்கு வசதியில்லை. ஆனால் அவரது அறிவாற்றலைக் கண்டுகொண்ட அவரது தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அந்த கிராமத்திலிருந்து ஆறு மைல் தொலைவிலிருந்த சிமுலியா என்ற ஊரிலிருந்த நடுநிலைப் பள்ளியில் சாஹாவை சேர்க்கும்படி அவரது தந்தையிடம் சொன்னார்கள். சிமுலியாவில் டாக்டராக இருந்த அனந்த் குமார் என்பவர் தனது வீட்டில் தங்கி வீட்டுவேலைகளைச் செய்தபடி சாஹா படித்துக்கொள்ளட்டும் என்று சொன்னதால் அங்கு சாஹா சேர்க்கப்பட்டார். 

அவரது வகுப்பில் முதல் மாணவனாய்த் தேர்ச்சிபெற்ற சாஹா தனது 12 ஆவது வயதில் டாக்கா நகரத்திலிருந்த தனியார் பள்ளிக்கு உயர்கல்விக்காகச் சென்றார். அங்கு சிறிதளவு உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆனால் சாஹாவின் அண்ணன் மாதம் ஐந்து ரூபாய் அனுப்பி தனது தம்பியைப் படிக்க வைத்தார். அங்கு சிறந்த மாணவனாய் இருந்தபோதிலும் சில மாதங்களுக்குமேல் நீடிக்க முடியவில்லை. கவர்னர் பள்ளியைப் பார்வையிட வந்த நாளில் செருப்பு அணியாமல் பள்ளிக்குப் போனதால் அந்தப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் அவரது திறமையை அறிந்த இன்னொரு தனியார் பள்ளி அவரை சேர்த்துக்கொண்டது. 

கல்லூரிப் படிப்பு: 

பள்ளிப் படிப்பை முடித்த சாஹா 1911 ஆம் ஆண்டு கல்கத்தாவிலிருந்த பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். பிஎஸ்சி படிக்கும்போது ஜெர்மன் மொழியைக் கற்றார். வகுப்பில் இரண்டாவது ரேங்க் எடுத்து பட்டப் படிப்பை முடித்தார்.அதன்பின்னர் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1916 இல் கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ரேங்க்கில் பாஸ் செய்ததால் அங்கேயே கணிதத் துறையில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் சில மாதங்களிலேயே இயற்பியல் துறைக்கு மாறினார். 

ஆராய்ச்சி: 

ரேடியேஷன் ப்ரஷ்ஷர், குவாண்டம் தியரி ஆகியவை குறித்து அவர் வெளியிட்ட கட்டுரைகள் அவருக்கு 1918 ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றுத் தந்தன. 1920 ஆம் ஆண்டு அவர் ionization theory of gases  குறித்த தனது முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். Astrophysics இல் அவரது ஆய்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 

Astro Physics இல் தேர்ந்த விஞ்ஞானியாக இருந்த சாஹா நட்சத்திர மண்டலம் குறித்து thermal ionization of elements என்ற அடிப்படையில் உருவாக்கிய சாஹா சமன்பாடு ( Saha Equation) என்பது அந்தத் துறையில் அதன்பின் செய்யப்பட்ட ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக அமைந்தது. சூரியக் கிரணத்தின் எடையையும் அழுத்தத்தையும் கண்டறிவதற்கான கருவியையும் சாஹா உருவாக்கினார். சுதந்திர இந்தியாவில் இந்திய நதிகளை ஒழுங்கமைக்கும் திட்டங்களை வகுத்தார். அம்பேத்கருடன் இணைந்து அவர் உருவாக்கியதுதான் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம். 

தாய்மொழிவழிக் கல்வியே சிறந்தது: 

1917 ஆம் ஆண்டு கவர்னர் ஜெனரலால் அமைக்கப்பட்ட கல்கத்தா யுனிவர்சிட்டி கமிஷன் கேட்ட கேள்விகளுக்கு விரிவாகத் தனது கருத்துகளை சாஹா பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருப்பது:
" தற்போது இருக்கும் ( ஆங்கிலவழிக்கல்வி) முறை மிகவும் இயற்கைக்கு மாறான ஒன்றாகும்.மாணவர் இயற்கையாகக் கற்றுக்கொள்வதை இங்கே மறக்கும்படி செய்யப்படுகிறார். ஒவ்வொரு வார்த்தையையும் மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய அந்நிய மொழியில்சிந்திக்கும்படி அவர் நிர்ப்பந்திக்கப்படுகிறார். ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ள போதுமான அவகாசம் கொடுப்பதற்குப் பதிலாக 13 - 14 வயதுகொண்ட ஒரு ஆங்கிலேய பையன் பேசுவதைப்போல சரளமாக ஆங்கிலத்தில் பேசும்படி மாணவர்களை நாம் நிர்ப்பந்திக்கிறோம். அதன் விளைவு- அவர் எல்லாவற்றையும் மனதுக்குள் மொழிபெயர்த்து மனப்பாடம் செய்யவேண்டியதாகிறது. அந்தப் பழக்கத்திலிருந்து அவர் பிறகு விடுபடவே முடிவதில்லை"

தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்ல ஜனநாயக வகுப்பு:

கல்கத்தா யுனிவர்சிட்டி கமிஷனுக்கு விஞ்ஞானி மேக்நாத் சாஹா அளித்த பதிலில் பல்கலைக் கழகத்தில் விடுதியில் தங்கிப் பயின்ற தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் அனுபவித்த கொடுமைகளையும் எடுத்துரைத்திருக்கிறார்: 

" ஜனநாயக வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ( இவர்களை தாழ்த்தப்பட்ட பிரிவினர் - depressed class- என அழைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. )போதுமான அளவில் சிறப்புக் கவனம் எடுக்கப்படவேண்டும். தற்போது கல்லூரி விடுதிகள் பிராமணர்கள், கயஸ்தா, வைத்யா, நபசாக் ஆகிய ஒருசில பணக்கார வகுப்பினரின் தனியுரிமையாக இருக்கின்றன என்பது பரவலாக சொல்லப்பட்டுவரும் ஒரு குற்றச்சாட்டு. ஜனநாயக வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களை விடுதிகளில் சேர்ப்பதில்லை. அப்படியே சேர்த்தாலும் அங்கு அவர்கள் உரிமையோடு இருக்கமுடிவதில்லை, மற்றவர்களின் தயவில்தான் இருக்கவேண்டிய நிலை. அவர்களோடு ஒரே அறையில் தங்குவதற்கும் ஒரே இடத்தில் சாப்பிடுவதற்கும் யாராவது ஒரு உயர்சாதி மாணவன் மறுப்புத் தெரிவித்தால் அந்த துரதிர்ஷ்டம் கொண்ட ஜனநாயக வகுப்பு மாணவனை அங்கிருந்து வெளியேற்றிவிடுகிறார்கள். அவன் தனது அறையிலேயே உணவருந்தும்படி செய்யப்படுகிறான்.அப்படியான பல சம்பவங்களை நான் நேரில் கண்டிருக்கிறேன்" என சாஹா அதில் எழுதியிருக்கிறார். அவரே அந்தக் கொடுமைகளை அனுபவித்தவர்தான் என்பதை அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது. 

தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு தனி விடுதிகளைக் கட்டும் முயற்சியையும் சாஹா கடுமையாக எதிர்த்தார்:

" பொதுப் பணத்தில் கட்டப்பட்ட கல்லூரி விடுதிகளில் மற்றவர்களைப்போலவே தங்களுக்கும் உரிமை உண்டு எபன ஜனநாயக வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் கருதுகின்றனர். சுயமரியாதையோடும் கண்ணியத்தோடும் வாழ்வதற்குத் தங்களை அனுமதிக்கவேண்டும் என அவர்கள் கேட்கிறார்கள்.அவர்களுக்கென்று தனியே விடுதிகளைக் கட்டினால் அது சாத்தியமாகாது. அப்படி தனி விடுதி கட்டவேண்டுமென்றால் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு விடுதி என்ற அடிப்படையில் ஒவ்வொரு கல்லூரியிலும் குறைந்தது இருபத்தைந்து விடுதிகளாவது கட்டவேண்டியிருக்கும். " என்று அவர் கேலியாக சுட்டிக்காட்டினார். சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் அது பொருந்துகிறது! 

சுபாஷ் சந்திர போஸுடனான உறவு:

இந்தியாவின் எதிர்காலத்தை நிர்மாணிக்க பல்வேறு திட்டங்களை வகுக்கவேண்டும் என விரும்பிய சாஹா அப்போது பிரபலமாக விளங்கிய சுபாஷ் சந்திர போஸ் அவர்களையும் விஞ்ஞானிகள் பலரையும் இணைத்து 1938 ஆம் ஆண்டு The National Planning Committee என்ற அமைப்பை உருவாக்கினார். 1949 இல் அது தானே கலைவதற்குள் சுதந்திர இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கென 27 வால்யூம்கள் கொண்ட ஒருங்கிணைந்த திட்டங்களை தயாரித்திருந்தது. ஆனால் நேரு அவற்றைப் பொருட்படுத்தவேயில்லை என்பது வேரனையளிக்கும் உண்மை. 

அணுசக்தி ஆய்வுக்கு அடித்தளம் இட்டவர்:

இந்தியாவின் அணுசக்தி ஆய்வுக்கு முதலில் அடிகோலியவரும், அணுசக்தியை அமைதிப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும் என வாதாடியவரும், நேரு காலத்தில் அணு ஆராய்ச்சி ரகசியமாக்கப்பட்டதையும், அணு சக்திக் கமிஷன் உருவாக்கப்பட்டதையும் எதிர்த்துப் போராடியவருமான மேக்நாத் சாஹாவை  அணுசக்தி குறித்து விவாதிப்போர்கூட நினைவுகூர்வதில்லை  என்பது வேதனையானது. 

செவ்வாய்க் கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பி சாதனை படைத்திருக்கும் நமது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி இன்னும் சாதியைக் கடக்கவில்லை என்பதற்கு இப்போதும் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும் மேக்நாத் சாஹாவின் பெயரே சாட்சி ! 





Thursday, October 2, 2014

குப்பையில் வீசப்பட்ட கொள்கை - ரவிக்குமார்

 

நமது காலத்தை எலக்ட்ரானிக் யுகம் என்று சொல்லலாம்.மின்னணு சாதனங்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் இப்போது கற்பனைகூட செய்துபார்க்க முடியாது. உணவைப்போல அத்தியாவசமானதாகிவிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை அவற்றின் பயன்பாடு முடிந்தும் நாம் வீசியெறிந்துவிடுகிறோம். அவை மின்னணுக் கழிவுகளாக மாறுகின்றன. நமது வீட்டில் சேரும் குப்பைக் கூளங்களை ஒழித்துக்கட்டவே நாம் இன்னும் பழகவில்லை. அப்படியிருக்கும்போது மின்னணுக் கழிவுகளைக் கையாள்வதுபற்றி நமக்கு என்ன விழிப்புணர்வு இருக்க முடியும்?

குப்பையாக வீசியெறியப்படும் எலக்ட்ரானிக்சாதனங்களிலும் விலைமதிப்புமிக்க பொருட்களும் இருக்கவே செய்கின்றன. நாம் பயன்படுத்தும் லேப்டாப் கம்ப்யூட்டரை எடுத்துக்கொண்டால் அதில் சுமார் அறுபது விதமான பொருட்கள் இருக்கின்றன. அவற்றுள் பலவற்றை நாம் மீண்டும் பயன்படுத்த முடியும். மின்னணு சாதனங்களில் தாமிரம்வெள்ளி முதலான உலோகங்கள் மட்டுமின்றி தங்கமும்கூட பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில் தோண்டியெடுக்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளியில் மூன்று சதவீதம் இப்படியான மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. 

                    உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் பல்லாடியம் என்ற உலோகத்தில் பதின்மூன்று சதவீதமும்கோபால்ட் என்ற உலோகத்தில் பதினைந்து சதவீதமும் இப்படி மின்னணு சாதனங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் அபூர்வமான உலோகம் என சொல்லப்படும் ஹஃப்னியம் போன்ற உலோகங்களும்கூட மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இச்சாதனங்கள் கழிவுகளாக மாறும்போது இந்த உலோகங்களைப் பிரித்தெடுப்பது லாபமான ஒரு தொழிலாகும். அந்தத் தொழில் உலகின் பல்வேறு இடங்களில் இப்போது நடந்து வருகிறது என்றபோதிலும்அவை சுகாதாரமான முறையில் செய்யப்படவில்லை. இந்தியாவில் இந்த சுகாதாரமற்ற பணியில் குழந்தைகள் பெருமளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

உலக அளவில் எலக்ட்ரானிக் கழிவுகள் மலைமலையாக குவிந்து வருகின்றன. ஐ.நா. சபையின் அறிக்கையின்படி ஆண்டு ஒன்றுக்கு ஐம்பது மில்லியன் டன்கள் இப்படி கழிவுகளாக உருவாகின்றன என்று தெரியவந்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அது 65 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என மதிப்பிட்டுள்ளனர். உலக அளவில் அமெரிக்காதான் எலக்ட்ரானிக் கழிவுகளை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கிறது. அதற்கு அடுத்து சீனாசீனாவுக்கு அடுத்ததாக இந்தியா.

     நம் நாட்டின் எலக்ட்ரானிக் நகரம் என அழைக்கப்படும் பெங்களூருவில் மட்டும் ஆண்டொன்றுக்கு இருபதாயிரம் டன் மின்னணுக்கழிவுகள் உற்பத்தியாவதாக அஸ்ஸோசம் (ASSOCHAM ) அறிக்கை தெரிவிக்கிறது. 2020 இல் இந்திய அலவில் தற்போது இருக்கும் கம்ப்யூட்டர் கழிவுகளின் அளவு 500 மடங்கு அதிகரிக்கும் எனவும் அது எச்சரித்திருக்கிறது. 

ஐ.நா. சபை 2020ஆம் ஆண்டில் உலகெங்கும் எந்த அளவுக்கு எலக்ட்ரானிக் கழிவு இருக்கும் என்பதைக் கணக்கிட்டிருக்கிது. பழைய கம்ப்யூட்டர்களால் சேரும் எலக்ட்ரானிக் கழிவு 2007ஆம் ஆண்டில் இருந்ததைவிட சுமார் நானூறு சதவீதம் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவில் அது ஐநூறு சதவீதம் அதிகரிக்கும் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. மொபைல் போன்களால் உருவாகும் மின்னணுக் கழிவு சீனாவில் 2007ஆம் ஆண்டில் இருந்த அளவைவிட 2020இல் ஏழு மடங்கு அதிகரிக்கும் என்றும்ஆனால் அது இந்தியாவில் பதினெட்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் ஐ.நா.வின் அறிக்கை எச்சரித்திருக்கிறது. நமது உள்நாட்டில் உருவாகும் எலக்ட்ரானிக் கழிவுகள் ஒருபுறம் என்றால்அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலிருந்து இங்கே வந்து ரகசியமாகக் கொட்டப்படும் கழிவுகள் இன்னும் ஏராளம்.

ஐ.நா. சபையால் தயாரிக்கப்பட்டிருக்கும் அறிக்கைஉலக நாடுகளை மூன்று வகையாகப் பிரித்திருக்கிறது. முதல் பிரிவில் இருக்கும் கென்யாஉகான்டாபெருசெனகல் ஆகிய நாடுகள் எலக்ட்ரானிக் கழிவுகளை முன்னதாகவே வகைப்படுத்தி கையாளக்கூடிய திறன் கொண்டவை என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாவது பிரிவில் இந்தியாவும்சீனாவும் உள்ளன. இங்கும் அத்தகைய கட்டமைப்பு வசதி உள்ளது என ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. மூன்றாவது பிரிவிலிருக்கும் தென்னாப்பிரிக்காமொராக்கோகொலம்பியாமெக்சிகோபிரேஸில் ஆகிய நாடுகளில் எலக்ட்ரானிக்கழிவுகளை கையாளக்கூடிய திறன் இருந்தாலும்அதற்கான தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொள்வதில் பிரச்சனை இருக்கிறது என்று ஐ.நா. அறிக்கை குறிப்பிடுகிறது. 

எலக்ட்ரானிக் கழிவுகளை ஒழித்து கட்டுவதற்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கடைபிடிக்கப்படும் சட்டம் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மின்னணு சாதனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களே மின்னணுக் கழிவுகளை ஒழித்துக் கட்டுவதற்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அந்த சட்டமாகும். மின்னணு சாதனங்களை விற்பவர்களே அப்பொருட்கள் கழிவாக மாறும்போது மீண்டும் அவற்றைப் பெற்றுக்கொள்ளவும் முன்வரவேண்டும். அவர்களே மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்து ஆபத்தில்லாத முறையில் அவற்றை ஒழித்துக்கட்டுவதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் அங்குள்ள நடைமுறை. இந்த நடைமுறையை நமது நாட்டிலும் கடைபிடித்தால் நல்லது.

நான் எம்.எல்.ஏ வாக இருந்தபோது எலக்ட்ரானிக் கழிவுகளைக் கையாளுவது குறித்து கொள்கை ஒன்றை உருவாக்கவேண்டும் என சட்டப்பேரவையில் வலியுறுத்தினேன். அதை ஏற்று 2010 ஆம் ஆண்டு எலக்ட்ரானிக் கழிவுக் கொள்கை ஒன்றை தமிழக அரசு உருவாக்கியது. அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, மேற்பார்வையிடுவது ஆகிய பொறுப்புகள் சுற்றுச்சூழல் துறையிடம் அளிக்கப்பட்டது. எலக்ட்ரானிக் கழிவுகள் அதிகம் சேராமல் பார்த்துக்கொள்வது, சேர்ந்தவற்றை மறு சுழற்சி செய்வது, உற்பத்தியாளர்களே கழிவுகளை சேகரித்து ஆபத்தில்லாத முறையில் அவற்றை அழிப்பது என பல நல்ல அம்சங்கள் அந்தக் கொள்கையில் இடம்பெற்றிருந்தன. 

   தமிழக அரசு உருவாக்கிய எலக்ட்ரானிக் கழிவுக் கொள்கை இப்போது நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கான எந்தவொரு தடயமும் தற்போதைய அரசின் கொள்கைவிளக்கக்குறிப்பில் இடம்பெறவில்லை. கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் பலவற்றுக்கும் நேர்ந்த கதிதான் இந்த எலக்ட்ரானிக கழிவுக் கொள்கைக்கும் நடந்திருக்கிறது போலும்.

   மலைபோலக் குவிந்துகிடக்கும் குப்பைகளால் சென்னை போன்ற பெரு நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தங்கள் பகுதியில் குப்பைகளைக் கொட்டக்கூடாது என்ற போராட்டம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சாதாரண குப்பைகளைவிட எலக்ட்ரானிக் குப்பைகளால் வரும் பாதிப்பு மிக மோசமானதாயிருக்கும். சரியான்முறையில் மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் சென்னை மிகப்பெரிய எலக்ட்ரானிக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாறிவிடுவது திண்ணம்.


( 26.5.2014ல் எழுதப்பட்டது )