Sunday, August 31, 2014

பள்ளிப் பருவம்



பள்ளிப் பருவம் நூலுக்கு ரவிக்குமார் எழுதிய பதிப்புரை:



பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் பெற்றோர்கூடத் தம் பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறவேண்டும் என விரும்புகிற காலம் இது. அதனால்தான் ஆட்சியாளர்கள் ‘சமச்சீர் கல்வி’யைப் பற்றி அக்கறை செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. சமூக, பொருளாதார பாகுபாடுகளைப் பள்ளிகளுக்குள் அனுமதித்துக்கொண்டு, அதைப்பற்றிக் கவலைப்படாமல்,  பாடத் திட்டங்களை மட்டும்  ஒரேமாதிரியாக அமைத்துவிட்டால் கல்வியில் சமத்துவம் வந்துவிடும் எனக் கூறுவது கல்வியில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை மறைப்பதற்கானதொரு தந்திரம் என்றுதான் சொல்லவேண்டும்.தமிழ்நாட்டில், ‘சமச்சீர் கல்வி’ குறித்த கல்வியாளர்களின் பேச்சுகள்கூட பாடத் திட்டங்களைத் தாண்டிச் செல்லாதது நமது துரதிர்ஷ்டம்.  

குடும்பம் என்கிற நுண்அமைப்புக்கும் அரசு என்ற பேரமைப்புக்கும் உள்ள தொடர்புகளைப் பல்வேறு சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அதுபோலவே கல்விக்கும் அதிகாரத்துக்குமான உள்ளிணைப்புகளும் அறிஞர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  

” ஏற்றத்தாழ்வுகளை  நியாயப்படுத்தும் இடமாகப் பள்ளி இருக்கிறது” என ஃப்ரான்சு நாட்டைச் சேர்ந்த சிந்தனையாளர் பியர் பூர்தியூ குறிப்பிட்டது இந்தியச் சூழலுக்கு மிகவும் பொருந்தும். “ நிஜத்தின் ஏற்றத்தாழ்வுகளை தரத்தின் ஏற்றத்தாழ்வுகளாகப் பள்ளி உருமாற்றுகிறது ” என அவர் குறிப்பிட்டார். “ அதை நாம் நமது கல்விச் சூழலில் வைத்து ஆராயமுடியும். 

கவிஞர் ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி, .ராமசாமி, இமையம், பேராசிரியர் கல்யாணி, . பஞ்சாங்கம் -ஆகிய ஆறு ஆளுமைகள் தமது பள்ளிப் பருவம் குறித்து எழுதியிருக்கும் கட்டுரைகள்  கொண்ட இந்த நூலின் மூலமாகத் தமிழ்நாட்டில் கடந்த நூறு ஆண்டுகளில் பள்ளிக் கல்வி எப்படியெல்லாம் உருமாறி வந்திருக்கிறது  என்பதையும்; அக்காலத்தில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, ராஜபாளையம், விருத்தாசலம் எனத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிய வாழ்க்கை நிலைகளையும் அறியலாம். பள்ளியில்/கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள்/ பணியாற்றிவருபவர்கள் தமது பள்ளிப் பருவத்தை நினைவுகூர்ந்து எழுதிய இந்தக் கட்டுரைகள் மணற்கேணி இதழில் அவ்வப்போது வெளியிடப்பட்டவையாகும்.

 நுண்ணுணர்வுகொண்ட வாசகர் எவரும், தன்வரலாறுகளாகத் தோற்றம் தரும் இக்கட்டுரைகளைத்  தமிழக வரலாற்றின் பகுதிகளாகவும்,  அரசு, சமூக ஆதிக்கம் குறித்த ஆய்வுகளின் அங்கமாகவும் விரிவுபடுத்திப் பார்க்கமுடியும். 

சமத்துவக் கல்வியை வலியுறுத்தும் நோக்கில் ‘நிகரி – சமத்துவ ஆசிரியர்’ விருதுகளை ஆண்டுதோறும் வழங்கிவரும் மணற்கேணி, கல்வி குறித்த நூல்கள் பலவற்றைத் தொடர்ந்து வெளியிட இருக்கிறது. அதன் துவக்கமே இந்தத் தொகுப்பு.
- ரவிக்குமார்
31.08.2014

Saturday, August 30, 2014

பள்ளிப் பருவம்

மணற்கேணி பதிப்பகத்தின் அடுத்த வெளியீடு




கவிஞர் ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி, அ.ராமசாமி, இமையம், பேராசிரியர் கல்யாணி, க. பஞ்சாங்கம் 


ஆகிய ஆறு ஆளுமைகள் தமது பள்ளிப் பருவம் குறித்து எழுதியிருக்கும் இக்கட்டுரைகள் மூலமாகத் தமிழ்நாட்டில் கடந்த நூறு ஆண்டுகளாகப் பள்ளிக் கல்வி எப்படி இருந்தது என்பதையும்; அக்காலத்தில் மயிலாடுதுறை, திருநெல்வேலி, ராஜபாளையம், விருத்தாசலம் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிய வாழ்க்கை நிலைகளையும் அறியலாம். தன்வரலாறுகளாகவும் தமிழக வரலாற்றின் பகுதிகளாகவும் விளங்கும் இந்த நூல் இலக்கிய வாசகர்களுக்கும் சமூகவியல் ஆய்வாளர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் கையேடாக விளங்கக்கூடியது! 


மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்க இதைவிடப் பொருத்தமான நூல் வேறெதுவும் இருக்காது. 


96 பக்கங்கள் 80/- ரூபாய்

பத்துப் பிரதிகளுக்குமேல் வாங்குபவர்களுக்கு 30% கழிவு தரப்படும். 


நூலை சென்னை, ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களில் பாரதி புத்தகாலயம் கடைகளிலும் , விஜயா பதிப்பகம் மற்றும் கருத்துப்பட்டறை விற்பனையகத்திலும் பெறலாம். 



Friday, August 29, 2014

கால நிர்வாகம் லேனா கலாஃப் டுஃபாஹா தமிழில்: ரவிக்குமார்



என்ன ஆகியிருக்கும்? 
பாங்கொலி அழைக்கும் அதிகாலைக்கும் விடிந்த நாளுக்கும் இடையிலான சிறு வெளிச்சத்தில் எல்லாமே பறிபோய்விடும் என உங்களுக்குத்  தெரிந்திருந்தால் 
நீண்ட காலமாக உருப்பெற்றுவந்த    சுனாமி உங்கள் வாழ்க்கையின் கரைக்கு வந்து 
உங்கள் உலகின் கல்லையும் இரும்பையும் விழுங்கிவிடும் எனத் தெரிந்திருந்தால் 

என்ன ஆகியிருக்கும்? 
குளியலறைக்குப் போவதற்காக செருப்பில் கால்களை நுழைக்கும்போது 
மீண்டும் கண்ணாடியின் முன்னால் நின்று சவரம் செய்துகொள்ளப்போவதில்லை என்பது உங்களுக்குத் 
தெரிந்திருந்தால் 
முகவாயை அந்த நீலத் துண்டால் மீண்டும் துடைத்துக்கொள்ளப்போவதில்லைஎன்பது தெரிந்திருந்தால்
ஜன்னலுக்கு அப்புறமாக இருக்கும் எலுமிச்சை மரங்களில் பாடும் பறவைகளின் சங்கீதத்தை அலட்சியப்படுத்தும் சந்தர்ப்பம் இனிமேல் வராது எனத் தெரிந்திருந்தால் 


உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும்போது கடைசியாக ஒருமுறை சுவர்களைத் தொட்டு விடைபெற்றிருப்பீர்களா? 
உங்கள் தேநீர்க் கோப்பையில் மிதக்கும் புதினா இலைகளின் நறுமணத்தை உள்ளிழுத்து நெஞ்சில் நிரைத்திருப்பீர்களா? 
சுமந்துசெல்ல முடியாத பொருட்களை இனி வாழ்நாள் முழுதும் தேவைப்படும் என்பதால் எடுத்துச் சென்றிருப்பீர்களா? 
இந்த நூற்றாண்டின் மறுபகுதியில் உங்களது பேரப்பிள்ளைகள் 
உங்கள் வீட்டைப் பார்த்தபடி நடக்கத்தான் முடியும்
பெயர் மாற்றப்பட்ட அந்தத் தெருவழியாக போகும்போது 
ஜன்னல் கதவுகளில் பிய்ந்து தொங்கும் வண்ணம்பூச்சுகளைப் பார்க்கத்தான் முடியும் 
என்பது முன்னதாகவே உங்களுக்குத் தெரிந்திருந்தால் 
ஓடுவீர்களா? 
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினைப்பீர்களா? 
காத்துக்கொண்டிருந்தே செத்துப்போவீர்கள் எனத் தெரிந்திருந்தால் 
மறதியின் புதைகுழியை நோக்கி நீண்டபயணம் மேற்கொள்வீர்களா? அல்லது
அதில் தலைகுப்புறப் பாய்வீர்களா? 


 Lena Khalaf Tuffaha writes poetry and literary translation. She has lived in and travelled across the Arab world, and many of her poems are inspired by the experience of crossing borders: cultural, geographic, political, borders between peace and war, the present and the living past. Her work has appeared in the journal Magnolia, Exit 13 magazine, Al-Ahram weekly, and the Seattle Times. Several of her poems are forthcoming in the online journal Human, based in Turkey, and in the print anthology Being Palestinian, to be published by Oxford Press in 2015. She lives with her family in Redmond, Washington, in the United States.


Thursday, August 28, 2014

இவர்தான் சந்துரு!


தொகுப்பு: நிதர்ஸனா

=========


நீதியரசர் கே. சந்துரு குறித்து அறிய விரும்புவோர் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம். 


அரிய புகைப்படங்களோடு 

128 பக்கங்கள். விலை: 100/- ரூபாய்


சந்துரு அவர்களின் நேர்காணல்கள், கட்டுரைகள் அவரைப்பற்றி ஐயா பழ. நெடுமாறன், 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன், தோழர் ஜி. ராமகிருஷ்ணன், தோழர் சி. மகேந்திரன், ஞாநி, 'இந்து' என். ராம் ஆகியோரின் கட்டுரைகள். 


இந்த நூல் செப்டம்பர் 7 ஆம் தேதி திண்டிவனம் தாய்த் தமிழ்ப் பள்ளியில் வெளியிடப்படவுள்ளது. பாரதி புத்தகாலயத்திலோ அல்லது நேரடியாகப் பணம் அனுப்பியோ நூலைப் பெறலாம். பத்துப் பிரதிகளுக்குமேல் வாங்குபவர்களுக்கு 30 % கழிவில் எமது செலவில் நூல்கள் அனுப்பிவைக்கப்படும். 


இந்த நூலின் விற்பனைமூலம் கிடைக்கும் தொகை முழுவதும் திண்டிவனம் தாய்த் தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சிக்கு அளிக்கப்படுகிறது. 



Monday, August 25, 2014

மாயா ஏஞ்சலு கவிதை



அமெரிக்கா
=========
தமிழில்: ரவிக்குமார் 


அவளது வாக்குறுதியின் தங்கம் அகழப்படவில்லை

அவளது நீதியின் எல்லை
வகுக்கப்படவில்லை

அவளது மிதமிஞ்சிய விளைச்சல்
பழங்கள் தானியங்கள்

பசியாற்றவில்லை வலிபோக்கவில்லை

அவளது பெருமிதம் மிக்க அறிவிப்புகள்

காற்றில் பறக்கும் இலைகள் 

தென்பகுதியில் கறுப்பினத்தவரோடு நட்பு கொண்டிருக்கிறது மரணம்

இந்த நாட்டை அறிந்து கொள்ளுங்கள் எனக் கதறுகின்றன செத்துப்போன நூற்றாண்டுகள் 

எவரும் குறைசொல்லாத புனிதப் பலகைகளை நடுங்கள்
" அவள் ஒளிமயமான எதிர்காலத்தைக் கொன்றாள்
ஆன்மாவை சீரழித்தாள்
பொய்க் கதைகளால் தன் பிள்ளைகளை மூடினாள்" 

உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன் 
இந்த நாட்டை அறிந்துகொள்ளுங்கள்








Sunday, August 24, 2014

மாயா ஏஞ்சலு கவிதைகள்



1. பாவப்பட்டவள்


உனக்குக் கிடைத்திருக்கிறாள் இன்னொரு காதலி
எனக்குத் தெரியும்
என்னைப்போலவே உன்னை வணங்குபவள்
உனது சொற்களைத் தங்கமாக நினைத்துத் தாங்குபவள்
உனது ஆன்மாவைப் புரிந்துகொண்டதாய் நினைத்திருப்பவள்
என்னைப்போலவே 
ஒரு பாவப்பட்ட பெண்

நீ இன்னொரு இதயத்தை நொறுக்குகிறாய்
எனக்குத் தெரியும்
நான் செய்வதற்கு ஏதுமில்லை
அவளிடம் சொன்னால் தவறாக நினைப்பாள்
என்னைத்தான் விரட்டுவாள்
என்னைப்போலவே 
ஒரு பாவப்பட்ட பெண்

நீ அவளையும் கைவிடுவாய்
எனக்குத் தெரியும் 
எது உன்னைப் பிரித்ததென்று 
அவளுக்குத் தெரியாது
அழுவாள் திகைப்பாள்
என்ன நேர்ந்ததென்று
அப்புறம் 
அவளும் பாடத் தொடங்குவாள் 
இந்தப் பாடலை
என்னைப்போலவே
பாவப்பட்ட பெண்


2. வெளிறிப்போன நாள்

வெளிறிக் கனத்துத் தொங்குகிறது
நீ இல்லாத நாள்
முள்முடியை கேசத்தால் நெய்த சட்டையை
அணிந்திருக்கிறேன்
எவரும் அறியார்
உன்னைப் பிரிந்திருக்கும்போது
தனித்திருக்கும் என் இதயத்தை

3. கடக்கும் காலம் 

உன்னுடைய தோல் விடியலைப் போன்றது
என்னுடையது அந்தியைப் போன்றது

ஒன்று நிச்சயமான முடிவின் துவக்கம்
மற்றது உறுதியான துவக்கத்தின் முடிவு


Wednesday, August 13, 2014

மாமிசம் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்


மாமிசம்
மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் 
தமிழில்: ரவிக்குமார் 

" மாமிசம் தொகுப்பிலுள்ள எல்லா கதைகளுமே அரசியல் கதைகள்தான். அரசியல் பண்பாட்டு கதைகள்.  அரசியலை பேசாத அரசியல் கதைகள். கோஷமில்லை.  ஊர்வலம், போராட்டம், ஆர்ப்பாட்டம், அணிவகுப்பு, கொடி பிடித்தல்.  வறட்சியான தத்துவங்களின் முழக்கமில்லை.  ஆனாலும் இவை முழுமைபெற்ற ஒப்பீடற்ற அரசியல் கதைகளாக இருக்கின்றன.  பசியால் செத்தவர்களுடைய, அரசியல். அகதியாக்கப்பட்டவர்களுடைய, சந்தேகத்தால் கடத்தப்பட்டவர்களுடைய, சர்வாதிகாரத்தின் பெயரால், ஜனநாயகத்தின் பெயரால் கொல்லப்பட்டவர்களுடைய கதைகள். இக்கதைகளில் வருபவர்கள் முன்மாதிரிகளோ, தியாகிகளோ அல்ல. சராசரி மனிதர்கள்.  இம்மனிதர்களின் அதிகபட்ச ஆசையும், அதிகபட்ச தேவையும், சோறும் உயிரோடிருப்பதும்தான்.  இரண்டுமே சாத்தியமில்லாமல் இருக்கிறது.  சர்வதேச சமூகத்தை அறிவதற்கு இக்கதைகள் ஒளிச்சுடராக இருக்கின்றன.  சமூக வாழ்வை புரிந்துகொள்வதற்கான சிறந்த கருவி இலக்கியப்படைப்புகள்தான்.  ஒரு வரலாற்று ஆசிரியன், சமூகவியலாளன் செய்ய முடியாததை இலக்கிய படைப்புகளால் செய்ய முடியும் என்பதை நுண்ணுணர்வுள்ள வாசகன் அறிவான். இக்கதைகளைப் படித்த பிறகு முதலில் தோன்றுவது-தமிழில் தற்போது எழுதப்படுவது கதை அல்ல- கதை போன்ற ஒன்று என்பதுதான்."

                                                             -  இமையம் (முன்னுரையில் ) 

சிதைவுகளிலிருந்து பாடுகிறோம்

சிதைவுகளிலிருந்து பாடுகிறோம்   
( மஹ்மூத் தர்வீஷுக்கு) 

- கே. சச்சிதானந்தன்
தமிழில்: ரவிக்குமார் 

           நாடாக இருந்தாய்
           புகையாகிப் போனாய்
                    - மஹ்மூத் தர்வீஷ்

சிதைவுகளுக்கிடையிலிருந்து பாடுகிறேன் 
வாழ்வின் பாடலை
பாலையில் பாடுகிறேன் 
மழையின் பாடலை

ரொட்டிக்காகக் கைகளை நீட்டினோம்
துப்பாக்கிக் குண்டுகளைக் கொடுத்தார்கள்
மலர்களுக்காக நீட்டிய கைகளில் கத்திகளைத் தந்தார்கள் 
எங்கள் நாட்டைக் கேட்டு கைகளை ஏந்தினோம் 
எங்களைக் குருதியில் தள்ளினார்கள்

நாங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கிறோம்
புலப்படாததையும் பார்க்கிறோம்

அலிபாபா மந்திரத்தை மறந்தான் 
குகை மூடியே கிடக்கிறது
அலாவுதின் விளக்கில் பூதம் எதுவுமில்லை
ஷெராஸட் கதைகள் தீர்ந்துபோன தன் தலையை 
சுல்தானின் வெறிகொண்ட வாளுக்கு சமர்ப்பிக்கின்றாள்

அடிமைகளின் விலங்குகளால் வானையும் பூமியையும் அளக்கிறோம் 
சிலுவையால் நிலத்தை உழுகிறோம் 

ஆலிவ் மரங்கள் கூறுகின்றன
கொடுமையான யுத்தங்களின் கதைகளை
கோதுமை வயல்களில் விளைகின்றன கண்ணிவெடிகள்
செடார் மரங்கள் பகையோடு பார்க்கின்றன 
திராட்சைகளைப் பிழிந்தால் 
ரத்தம் சொட்டுகிறது

புராணங்களின் நாட்டுப்புறக் கதைகளின் மௌனம்
நாம் மூர்ச்சையாகும்வரை நமது நெஞ்சில்  அடர்கின்றன
வறண்ட நதிகளின்
மண்ணும் சேறும் நமது நரம்புகளில் நிறைக்கின்றன
காணாமல் போய்விட்ட நமது வீடுகளின் முற்றங்களும் சுவர்களும் நமது எலும்பு மஜ்ஜையில் மிதக்கின்றன 

குழந்தைகளைக் கேளுங்கள் 
எங்கே அவர்களது வீடுகளென்று 
மழையாகப் பொழிந்துவிடாத 
இடி திருடப்பட்டுஊமையாகிப்போன 
மின்னல்வெட்டும் 
மேகங்களுக்கிடையில் இருப்பதாக வானத்தைக் காட்டுவார்கள் 

கள்ளிச் செடியிடம் சூரியனைப் பற்றிக் கேட்டோம்
அவை கிசு கிசுத்தன ' அஸ்ஸிரியா பாபிலோனியா சுமேரியா '
சோளச் செடியிடம் சொர்க்கத்தைப்பற்றிக் கேட்டோம் அவை பனியில் புதைந்த வானம்பாடிகளின் பாடலைப் பற்றிப் பேசின

மரங்கள் எங்களைப் பித்துப்பிடிக்கச் செய்தன
நாம் எடுத்துக்கொண்டோம் 
ஒரு கிளையை வரவேற்பறைக்கு ஒரு கிளையை கட்டிலுக்கு
பாலை மணலில் 
காற்று எழுதிய ஆரூடத்தை நாம் படிக்க முயன்றோம்

சூரியக் கடவுளே
நாங்கள் எப்போது உனது ஆலயத்தை எழுப்புவது? 
எங்கள் பிள்ளைகள் தமது களிமண்ணால் தண்ணீரால் எப்போது உன்னை வனைவது?

தினந்தோறும் பிரசவ வலியில் துடிக்கும் எமது பெண்கள் 
சவுக்குகளின் சங்கிலிகளின் அடையாளங்களில்லாத குழந்தைகளை எப்போது பிரசவிப்பார்கள்?

Friday, August 8, 2014

உடுமலை நாட்கள்: ஜம் ஜம் ஸ்டுடியோ ஹக்கிம்



இன்று காலையிலிருந்து ஏனோ உடுமலைப்பேட்டையில் நான் தங்கியிருந்த நாட்கள் நினைவில் நிழலாடிக்கொண்டே இருக்கின்றன. 1983 இன் பிற்பகுதியிலிருந்து 1985 ஏப்ரல் வரை நான் உடுமலைப்பேட்டையில் தங்கியிருந்தேன். அங்கிருந்து பெதப்பம்பட்டி வழியாக ஆனைக்கடவு என்றும் ராமச்சந்திராபுரம் என்றும் அழைக்கப்படும் ஒரு சிறு கிராமத்தில் இருந்த நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிக் கிளை ஒன்றில் எனக்கு வேலை. தினமும் பேருந்துப் பயணம். ஒரு டவுன் பஸ்ஸும் அஜீஸ் என்ற தனியார் பஸ் ஒன்றும் தான் அந்த ஊருக்குப் போகும். அந்தப் பேருந்துகளின் ஓட்டுனர்கள் பொறுமைசாலிகள். 23 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க சுமார் ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொள்வார்கள். 


வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கென்று உடுமலையில் ஒரு லாட்ஜ் இருந்தது. முதலில் ஒரு மாதம் அங்குதான் தங்கியிருந்தேன். அப்போது இரவில் சாப்பிடுவதற்காக செட்டிநாடு மெஸ் ஒன்றுக்குப் போவேன். கூட்டம் நெரியும் அந்த மெஸ்ஸில் இடம் கிடைப்பது அத்தனை எளிதாக இருக்காது. அப்போதெல்லாம் அந்த மெஸ்ஸை ஒட்டி இருக்கும் ஸ்டுடியோ ஒன்றின் வாசலில் காத்திருப்பேன். அப்படிக் காத்துக்கொண்டிருந்த ஒரு இரவில் ஸ்டுடியோவுக்குள்ளிருந்து இலக்கியம் குறித்த உரையாடல் அதில் ஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்' குறித்த விவாதம். பசி மறந்து ஸ்டுடியோவுக்குள் போனேன். மூன்று நான்குபேர் நான் நுழைந்ததைக்கூடப் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். சற்று நேரம் கழிந்த பின்னர் ஒரு அந்நியனின் இருப்பு உறுத்திய பாவனையில் ஒருத்தர் என்னை நோக்கிக் கேட்டார் " என்னங்க போட்டோ எடுக்கணுமா?" நான் இல்லை என்பதுபோல தலையாட்டினேன். " மெஸ்ல சாப்ட வந்தேன். நீங்க பேசிக்கிட்டிருந்தது சுவாரஸ்யமா இருந்தது" என்றேன். 'உட்காருங்க'என்று சொல்லிவிட்டு அவர்கள் மீண்டும் தங்கள் பேச்சைத் தொடர ஆரம்பித்துவிட்டார்கள். ஆதவன் காட்டும் உலகம் எனக்கு அன்னியப்பட்டதாகத் தோன்றினாலும் அவரது பாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் எனக்கு நெருக்கமாய் இருப்பதாக உணர்ந்திருக்கிறேன். அதை அவர்களிடம் பகிர்ந்துகொண்டதும்   அவர்களது உரையாடலுக்குள் நானும் மூழ்கிப்போனதும் எப்படி நடந்ததென்று தெரியவில்லை. மெஸ்ஸை மூடப்போகிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டபோதுதான் மீண்டும் பசியெடுத்தது. நான் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் ஸ்டுடியோவை மூடிவிட்டு அவர்கள் காத்திருந்தார்கள். அதன்பின்னர் ஒவ்வொருவராக என்னுடன் அறிமுகம் செய்துகொண்டார்கள். மோகன், செல்லமுத்து, அலிப், பார்த்தசாரதி, ஹக்கிம். அந்த ஸ்டுடியோவின் உரிமையாளர் தான் ஹக்கிம். 


சிதம்பரத்தைப்பற்றியும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைப்பற்றியும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள்.ஆனால்,  பிஏபிஎல் படித்துவிட்டு வங்கியில் குமாஸ்தாவாக இருக்கும் ஒரு நபர் " வக்கீல் தொழில் உனக்கு சரியா வராது. வேலைக்குப் போயிடுன்னுன்னு என் ப்ரொஃபசர் சொன்னார்" என்று அதற்குக் காரணம் சொன்னால் கேட்பவர்களுக்கு வினோதமாகத்தானே இருக்கும். அந்த வினோதம்தான் என்னை நோக்கி அவர்களை ஈர்த்திருக்கவேண்டும். நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். அதன்பிறகு, ஒரு நாளென்றால் நண்பர்களோடு கழியும் அந்த மாலை நேரம் மட்டும்தான் என்று எனக்கு ஆகிப்போனது. 


ஹக்கிம் ஒரு ஸ்டுடியோ உரிமையாளர் மட்டுமல்ல, நல்ல புகைப்படக் கலைஞர். கலர் போட்டோ அவ்வளவாகப் பிரபலம் ஆகாத காலம் அது. அவர் எடுக்கும் கறுப்பு வெள்ளைப் படங்கள் அற்புதமாக இருக்கும். ஒருமுறை திருமூர்த்தி மலைக்குச் சென்று போட்டோ எடுத்துக்கொண்டோம். அவற்றைப் பிரிண்ட் போடும்போது நானும் டார்க் ரூமில் அவரோடு இருந்து அலச அலச படம் உருப்பெறும் அதிசய கணத்தை அனுபவித்தேன். 


ஹக்கிம் ஒரு எழுத்தாளரைப் பற்றிப் பேசினால் அவர்மீது நமக்கு பக்தி வந்துவிடும். அவர் ஒரு புத்தகத்தைப் பற்றி சொன்னால் அதைப் படிக்காமல் இருப்பதைப்பற்றிய குற்ற உணர்வு உண்டாகிவிடும். 


உடுமலைப் பேட்டையிலிருந்த எங்கள் நண்பர்கள் குழுவில் ஹக்கிம் தான் மூத்தவர். ஒடிசலான உயரமான உருவம். பெரிய ஃப்ரேம் கண்ணாடி. எப்போதும் புகையும் சிகரெட். கண்ணியமான சிரிப்பு தவழும் முகம். அவர் நடத்திவந்த ஸ்டுடியோவின் வருமானத்தின்மூலம் வறுமையைத் துரத்தமுடியாத அளவுக்குப் பெரிய குடும்பம்.


உடுமலை நண்பர்களோடு கழித்த மாலைப் பொழுதுகள் மறக்க முடியாதவை. தாஜ் ஹோட்டலின் சிக்கன் சூப், தளி ரோட்டில் விற்கும் மசால் பொறி- எதுவும் மறக்கவில்லை. கல்பனா தியேட்டருக்கு முன்னாலிருக்கும் கிரவுண்டில்  அடித்த காற்றை இந்த கணத்தில் என் முகத்தில் உணர்கிறேன். 


1985 இல் உடுமலையைவிட்டு வரும்போது அவ்வப்போது அங்கே போகவேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் ஒரு சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை. ஹக்கிமையும் மோகனையும் பார்ப்பதற்காகவே உடுமலைக்குப் போகவேண்டும். திஜாவையும் ஆதவனையும் பற்றிப்பேச என்னைப்போலவே அவர்களிடமும் விஷயங்கள் மிச்சமிருக்கும்.