Monday, June 30, 2014

மணற்கேணி 23



மறைந்த தமிழறிஞர்களின் நினைவைப் போற்றும்விதமாக ஒவ்வொரு இதழிலும் ஒருவர் குறித்த சிறப்புப் பகுதியை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இந்த இதழில் ஆ. பூவராகம் பிள்ளை குறித்த சிறப்புப் பகுதி. அதில் அவர் எழுதிய இரண்டு கட்டுரைகள் மற்றும் அவரைப் பற்றி அவரது மாணவர்களான இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரின் பதிவுகள். 

சிலப்பதிகாரம் குறித்த விவாதத்தை முன்மொழிந்து இந்திரா பார்த்தசாரதி எழுதியிருக்கும் கட்டுரை, அதுகுறித்து  வீ.எஸ்.ராஜம், நாக.இளங்கோவன், கி.நாச்சிமுத்து,க.பஞ்சாங்கம் ஆகியோர் எழுதிய கட்டுரைகள்

ஜார்ஜ் ஹார்ட் முதலான அயல்நாட்டுத் தமிழறிஞர்களின் முடிவுகளை மறுக்கும்விதமாக சங்க இலக்கியத்தில் சாதி, தீண்டாமை குறித்த தமிழறிஞர் வீ.எஸ்.ராஜம் அவர்களின் ஆய்வுத் தொடரின் இறுதிப் பகுதி. 

பேராசிரியர் செ.வை.சண்முகம் அவர்கள் தமிழ் இலக்கணம் தொடர்பாக எழுதிவரும் தொடர்க் கட்டுரை

ஊடகத் தமிழ் குறித்த திரு. மாலன் அவர்களின் கட்டுரை

தமிழில் அதிகம் அறியப்படாத கலை வரலாறு என்னும் துறையில் புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தும் ஜான் எஃப். மோஸ்டெல்லரது ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம்

தமிழில் முதன்முறையாக மொழிபெயர்க்கப்படும் சிரியாவைச் சேர்ந்த கவிஞர் நிஸார் கப்பானியின் ஒன்பது கவிதைகள்

இவற்றோடு நீதியரசர் கே.சந்துரு எழுதிய 'அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்' என்ற நூலின் வெளியீட்டு விழாவில் 'இந்து' என்.ராம், ஞாநி, தொல். திருமாவளவன் ஆகியோர் ஆற்றிய உரைகள் சந்துரு அவர்களின் ஏற்புரை

தனி இதழ்: 70/- ஆண்டு சந்தா : 420/-

கோவையில் விஜயா பதிப்பகத்திலும், சேலத்தில் பாலம் புத்தகக் கடையிலும், சென்னையில் பனுவல் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளிலும் மணற்கேணி கிடைக்கும். மணற்கேணி பதிப்பக நூல்களையும் இந்தக் கடைகளில் வாங்கலாம். hillkart.com மூலமாகவும் பெறலாம்


இதழ் வேண்டுவோர் பின்வரும் கணக்கில் தொகையை செலுத்திவிட்டு முகவரியைத் தெரிவிக்கவும். 

Account details: 

Manarkeni publication
Syndicate Bank ,
Pondicherry Branch 
Current account number : 96013070002032
IFSC code : Synb0009601


Saturday, June 28, 2014

ரவிக்குமார் கவிதை

இடி தாக்கவேண்டுமெனில்
மழை இருக்கவேண்டுமென்ற தேவை இல்லை

வெண்மணியில் இடி தாக்கியபோது 
மழையா பெய்தது?

காற்று மனிதர்களின் ஈரத்தையும் உறிஞ்ச
பயணிக்கும் பேருந்துக்குள்ளும்
இடி தாக்குமென்று மேலவளவில் கண்டோம்

தாமிரபரணிக் கரையில் பரமக்குடி சாலையில்
இடி தாக்கியபோது மழைக்கான தடயம்
எவர் நினைவிலும் இல்லை

இடி எங்கும் விழும்
எவ்வடிவிலும் தாக்கும்
ஒருத்தனுக்கு ரயில் வடிவில்
ஒருத்திக்கு வெற்றிலைக் கொடிக்காலில்
சிறுமி ஒருத்திக்குப் 
பள்ளி செல்லும் பாதையில்
வீதியில் 
விடுதியில் 
வேலைசெய்யும் இடத்தில்

நேற்றும்கூட விழுந்தது இடி
துக்கித்தோர் அழக் குழுமும் முன்பாக
சோகத்தின் மௌனத்தை உடைத்துச் சிதறடித்து

ஏன் இந்த இடி
எளியோர்மீது மட்டும் விழுகிறது? 

Friday, June 27, 2014

செல்வா கனகநாயகம், தான் தொகுத்து வெளியிட்டிருக்கும் In Our Translated World: Contemporary Global Tamil Poetry

செல்வா கனகநாயகம், தான் தொகுத்து வெளியிட்டிருக்கும் In Our Translated World: Contemporary Global Tamil Poetry என்ற நூலில் தனக்குப் பிடித்தமான கவிதைகளையும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் தந்திருக்கிறார். 


எந்தவொரு தொகுப்பும் எல்லோரையும் திருப்தியுறச் செய்வதாக இருக்க முடியாது என்ற உண்மை இந்தத் தொகுப்புக்கும் பொருந்தும் என்றபோதிலும் எம்.ஏ.நுஃமானின் கவிதைகள்- போர் குறித்த  விமர்சனமாய் முன்வைக்கப்பட்டவை- இதில் இடம்பெறாமல் போனது ஏன் என்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. கவிதை, சமகாலக் கவிதை, உலகக் கவிதை என எல்லாவிதமான பகுப்புகளுக்குள்ளும் அடங்கக்கூடியவை நுஃமானின் அந்தக் கவிதைகள். 


செல்வா கனகநாயகத்தின் முயற்சியைப் பாராட்டுகிறேன். அந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எனக்குப் பிடித்த ஈழத்துக் கவிஞர்களில் ஒருவரான சிவசேகரத்தின் ஒரு கவிதையை இங்கே தருகிறேன்:

Monday, June 23, 2014

அம்பேத்கர் ஒரு ப்ராக்டிகல் ஜீனியஸ் ! - 'இந்து' என்.ராம்



( நீதியரசர் கே.சந்துரு அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. முழுமையான உரைக்கு மணற்கேணி 23 ஆவது இதழை வாசிக்கவும்) 


கொலம்பியா யுனிவர்சிடியில்தான் நான் ஒரு வருஷம் ஜர்னலிசம் படித்தேன். அங்கிருக்கும்போதுதான் முதன்முறையாக டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருடைய பெருமை ஓரளவுக்குப் புரிந்தது. முழுமையாகப் புரிந்தது என்று சொல்லமுடியாது, கொலம்பியாவில் இருந்தபோது அவர் மிகப்பெரிய அறிவுஜீவி, பல கஷ்டங்களை சமாளித்து, தடைகளைமீறி அவர் ஒரு அரசியலமைப்பு சட்ட ’எக்ஸ்பர்ட்டாக’ ஆனார் அவர் அங்கு ஆசிரியர் கல்லூரியில் படித்தார் என்ற விவரம் நான் நேரில் போனபோதுதான் எனக்குத் தெரிந்தது. அங்கு இன்னமும் அவரை மிகுந்த மரியாதையோடு குறிப்பிடுகிறார்கள். ஆனால், சமுதாயம் பற்றிய அவருடைய புரட்சிகரமான கருத்துகளை நான் அப்போது அறியவில்லை. எந்தத் தலைவரையும் விட அவரது காலத்தில் டாக்டர் அம்பேத்கர் புரட்சிகரமான கருத்துகளை முன்வைத்தார் என்பது பிறகுதான் எனக்குப் புரிந்தது.


அம்பேத்கர் ஒரு ’ப்ராக்டிகல் ஜீனியஸ்’. நமக்கு ’ஐடியாஸ்’ இருக்கலாம் ’ஐடியலிஸம்’ இருக்கலாம் ஆனால் அதை எந்த அளவுக்கு முன்னால் கொண்டுபோகவேண்டும், நடைமுறைப்படுத்தவேண்டும் ’ஈரடி பின்னால்’ என்று சொல்வார்களே அப்படி எப்போது பின்வாங்கவேண்டும் என்ற அரசியல் தந்திரம் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால்தான்  இன்றைக்கும் அவர் மதிக்கப்படுகிறார். அவர் 1956 இல் காலமானார், நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை- அவர் வாழ்ந்த காலத்தைவிட இன்றைக்கு அவர் மிகவும் மதிக்கப்படுகிறார், ’ஹி ஸ்டேண்ட்ஸ் டாலர் தென் ஹிஸ் லைஃப் டைம்’. எவ்வளவு தலைவர்களைப்பற்றி இப்படிச் சொல்ல முடியும்? எதனால் இப்படிச் சொல்கிறோம்? சமுதாயப் பிரச்சனைகளை ஆழமாகப் பரிசீலிக்கக்கூடிய அவரது ஆற்றல். சமூகப் பிரச்சனைகளை அணுகிய விதத்தில் வெளிப்பட்ட அவரது முற்போக்கான புரட்சிகரமான அணுகுமுறை. அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி உருவாக்கவேண்டும் என்பதில் அவரது பங்களிப்பு.


வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட அம்பேத்கர் நூற்றாண்டு கமிட்டியில் நான் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டேன். அப்போதுதான் அம்பேத்கரின் எழுத்துகளைப் படிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் அவரது நூல்கள் கிடைப்பதுகூட கஷ்டம்.


இன்றைக்கு, ’சாதியை ஒழிப்பது எப்படி’ என்கிற அம்பேத்கரின் மிகமுக்கியமான கட்டுரையை - சாதியை சீர்திருத்துவதல்ல அதை வேரோடு பிடுங்கியெறிவது, ஒழிப்பது எப்படி என்கிற கட்டுரை-  அதை நவயானா பபளிகேஷன் ஒரு அனட்டேட்டட் எடிஷனாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதில் ஒரு அற்புதமான முன்னுரையை அருந்ததி ராய் எழுதியிருக்கிறார். அதை இப்போது படித்தேன். சாதி என்ற விஷயத்தில் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இருந்த வேறுபட்ட நிலைபாடுகளை அருந்ததி ராய் தனது முன்னுரையில் எடுத்துக்காட்டியிருக்கிறார். 


அது அம்பேத்கர் 1936 இல் பேசுவதற்காகத் தயாரித்த உரை. அதை அவர் வழங்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு எதிர்ப்பு. அதில் அவர் சொல்கிறார், ’இந்த சாதி ஒழிப்பு என்கிற விஷயத்தில் இந்துக்களுக்கும் தீண்டாதாருக்குமிடையில் சமரசம் என்பதே சாத்தியமில்லை’ என்று சொல்கிறார். இந்து மதம் என்பது வர்ணாஸிரம தர்மத்தை, சாதியை அடிப்படையாகக் கொண்டது என்பதைச் சொல்கிறார். அதுவொரு முக்கியமான ஆவணம், அதை இப்போது பலபேர் மறந்துவிட்டார்கள். சுதந்திர இயக்கத்தில் சமூக முன்னேற்றத்தைப் பற்றி கவனப்படுத்திய மிக முக்கியமான பங்களிப்பு அந்த உரை. அது இன்றைக்குத்தான் விளங்குகின்றது.

Saturday, June 21, 2014

நிஸார் கப்பானி கவிதை தமிழில்: ரவிக்குமார்

கோடை
கடற்கரையில் கிடக்கிறேன்
உன்னை நினைத்தபடி

நான் உன்னைப்பற்றி உணர்ந்ததைக்
கடலிடம் சொன்னேனா என்ன

கரைகளைத் துறந்து
கிளிஞ்சல்களைத் துறந்து
மீன்களைத் துறந்து
அது
என் பின்னால் வருகிறது

Wednesday, June 18, 2014

ஆதிதிராவிட நலத்துறைப் பள்ளிகளை சிறப்புப் பள்ளிகள் என அறிவிப்பு செய்க!



===================


*  ஆதிதிராவிட நலத்துறைப் பள்ளிகளில் NCERT பாடநூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பயிற்றுவிக்கவேண்டும்.


 * ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் மூன்று மொழிகளைக் கற்றுக்கொடுப்பதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! 


=====================


தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் 1095 பள்ளிகளில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்குத் தமிழ்வழியிலேயே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இரண்டாவது மொழியாக ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. தமிழ்வழியில் பயின்றால்தான் பாடங்களை நன்றாகப் புரிந்து படிக்கமுடியும் எனக் கல்வியாளர்கள் வலியுறுத்திவருவதை நாம் அறிவோம். ஆனால் அந்த அறிவியல் உண்மை ஆதிதிராவிடநலத்துறைப் பள்ளி மாணவர்களிடம் ஏனோ பலிக்கவில்லை. அவர்கள் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் அரசாங்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களோடுகூட போட்டிபோட முடியாத நிலையில் தனியார்பள்ளி மாணவர்களோடு போட்டிபோடுவதுகுறித்து நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. 


இதன்விளைவாக அந்தப் பள்ளிகளில் பயிலும் தலித் மாணவர்கள் உயர்கல்வி பெறுவது வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.  இந்தப் புறக்கணிப்பு ( Exclusion ) சமூகரீதியில் மோசமான விளைவுகளையும் உண்டாக்குகிறது.


கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறை போன்றவை மட்டுமே இந்தப் பின்னடைவுக்குக் காரணம் எனக் கூற முடியாது. இன்னும் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று : ஆங்கிலம். 


இந்தியாவில் ஆங்கிலம் என்பது மொழியாக மட்டுமின்றி வாய்ப்புகளை அடைவதற்கான வாசலாகவும் உள்ளது. ஆங்கிலம் படிக்காதவர்களுக்கு வாய்ப்புகளின் வாசல் அடைக்கப்பட்டுவிடுகிறது. ( வாய்ப்பு என்பது வேலை வாய்ப்பு மட்டுமல்ல) தமிழ்வழிக் கல்விக்கான போராட்டங்கள் தாய்மொழிக்கல்வியை வலியுறுத்துவதோடு நிற்பதில்லை, ஆங்கிலத்துக்கு எதிரான மனநிலையையும் உருவாக்குகின்றன. அத்தகைய போராட்டங்கள் நமது மாநிலத்தில் அரசுப்பள்ளிகளையே பெரிதும் பாதிக்கின்றன. 


தமது ஏழ்மை நிலையின் காரணமாக அரசுப் பள்ளிகளை மட்டுமே நம்பியிருக்கும் தலித் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பைப் பெற்றாலும் அங்கே பெரும்பாலும் பயிற்றுமொழி ஆங்கிலமாக இருப்பதால் திக்குமுக்காடிப் போகின்றனர். சில கல்லூரிகளில் தமிழ்வழியில் பயிலலாம் என்றாலும் ஆய்விதழ்கள், நூல்கள் முதலானவை ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் இருக்கின்றன. இன்றைய சூழலில் செவ்வியல் தமிழ் இலக்கியத்தைப் பயிலும் மாணவர்கள்கூட ஆங்கிலத்தில் போதிய திறன் இல்லாமல் அந்தப் பாடங்கள் தொடர்பான ஆய்வுகளை அறிந்துகொள்ள முடியாது. எனவே ஆங்கிலத்தை மறுப்பது எவ்விதத்திலும் சரியானதல்ல. 


ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களை நடத்துவதற்குத் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லை. இந்தக் குறையைக் களைவதற்கு அரசு உடனடி கவனம் செலுத்தவேண்டும். அந்தப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் வருவதற்கு இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள் ஆகியவற்றைக் கொடுப்பது மட்டும் போதாது. முதலில் அந்தப் பள்ளிகள் தரமானவையாக இருக்கவேண்டும். சிறப்புப் பள்ளிகள் என்ற நிலையில்தான் அந்தப் பள்ளிகளை ஆதி திராவிடர் நலத்துறை நடத்துகிறது. மற்ற அரசுப் பள்ளிகள் அளவுக்குக்கூட அவற்றின் கல்வித் தரம் இல்லாவிட்டால் அவற்றை அந்தத் துறை நடத்தவேண்டிய தேவையே இல்லை. 


ஆங்கில மொழியைக் கற்பித்தல் தொடர்பாக ஆராய்ந்த தேசிய அறிவுசார் ஆணையம் ( National Knowledge Commission ) ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. +2 முடிக்கும் ஒரு மாணவர் தாய் மொழி, ஆங்கிலம் இரண்டிலும் திறன் பெற்றவராக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு அதற்காகப்பல்வேறு வழிகாட்டுதல்களைத் தந்துள்ளது. ஆனால் அவற்றை இங்கே விவாதிக்கக்கூட எவருக்கும் அக்கறை இல்லையென்பது கசப்பான உண்மை. 


1. ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளை சிறப்புப் பள்ளிகள் எனத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். 


2. அந்தப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பிலிருந்து தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றோடு மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்பிக்க ஆவனசெய்யவேண்டும். அது மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற அண்டை மாநில மொழிகளாகவோ அல்லது இந்தியாகவோ அல்லது சீனம், ஃபிரெஞ்ச் முதலான அயல்நாட்டுமொழிகளாகவோ இருக்கலாம். 


3. அந்தப் பள்ளிகளில் இப்போதிருக்கும் சமச்சீர்க் கல்வித்திட்ட பாடநூல்களைவிடவும் தரமான NCERT பாடநூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பயிற்றுவிக்கவேண்டும். 

Sunday, June 15, 2014

திண்டிவனம் தாய்த் தமிழ்ப் பள்ளிக்கு உதவுங்கள்!



பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகக்கூடக் கற்பிக்கமாட்டோம் என மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகத்தினர் வழக்கு தொடுத்திருப்பதையொட்டி ஆவேசமான பதிவுகள் முகநூலில் வெளிவந்தன. தமிழை வளர்ப்பதற்கு அரசு என்ன செய்யவேண்டும் என்ற ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. நாமும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்தால் நன்றாக இருக்கும். 


ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்போம் ஆனால் இங்கே நம்மை நம்பிவந்த ஈழத் தமிழ் அகதிகளின்முகாம்களை எட்டிக்கூடப் பார்க்கமாட்டோம்; தமிழ்வழிக் கல்விக்காகக் குரல் கொடுப்போம் ஆனால் தாய்த் தமிழ்ப் பள்ளிகளை நடத்துவோர் எப்படி கஷ்டப்பட்டாலும் கண்டுகொள்ளமாட்டோம் என்பது தமிழர்களாகிய நமது பொது நடைமுறையாக இருக்கிறது. அதை முதலில் மாற்றவேண்டும். 


திண்டிவனத்தில் பேராசிரியர் கல்யாணி தாய்த் தமிழ்ப்பள்ளியொன்றை நடத்தி வருகிறார். அங்கு பயிலும் 170 மாணவர்கள் 17 ஆசிரியர் மற்றும் ஊழியர்கள், 5 ஆதரவற்ற முதியோர் என 192 பேருக்கு மதிய உணவு  வழங்கப்படுகிறது. சாதாரண உணவுக்கு 1000/- ரூபாயும் வடை பாயாசத்துடன் சிறப்பு உணவு வழங்க 2500/- ரூபாயும் செலவாகிறது.ஒவ்வொருநாளும் அதற்கான செலவை நல்லுள்ளம் கொண்ட யாரோ ஒருவர் ஏற்றுக்கொள்கிறார். மிகுந்த சிரமத்துக்கிடையே அந்த மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 


கடந்த ஆண்டு இதுகுறித்து முகநூலில் எழுதினேன். அதைப் பார்த்த நண்பர்கள் சிலர் உதவினார்கள். எனது மதிப்புக்குரிய பேராசிரியை சி.டி.இந்திரா அவர்களும் ( சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறை தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர்)காட்சிப்பிழை பத்திரிகையின் ஆசிரியர் சுபகுணராஜன் அவர்களும் கணிசமாக உதவினார்கள். 


சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற முனைவர் திரு இளவரசு அவர்கள் இப்போது ஐம்பதாயிரம் ரூபாயை அந்தப் பள்ளிக்கு வழங்கியிருக்கிறார். அவருக்கு நன்றி. 


திண்டிவனம் தாய்த் தமிழ்ப் பள்ளிக்கு உதவ விரும்பும் நண்பர்கள்  9442622970 என்ற எண்ணில் பேராசிரியர் கல்யாணியைத் தொடர்புகொள்ளுங்கள். அல்லது 

Correspondent, Thai Tamil Thodakka Palli,Tindivanam. SB A/C no.444725319,Indian Bank, Tindivanam. Br. Code:393, IFSC code: IDIB000T023, CIF:0144658909


என்ற வங்கிக் கணக்கில் தொகையை செலுத்திவிட்டு அவரிடம் தகவல் சொல்லுங்கள். 

“Violence"

Maya Angelou

When our learned teachers and erudite professors misjudge their research and misspeak their findings, it might be gracious to turn away quietly and whispering adieu, leave their company and quote Shakespeare in Julius Caesar “look on injustice with a serene countenance.”

Upon certain subjects I am able to hold my tongue and hope that time will right”
“wrongs. But there is one matter which calls me to adversarial attention. Too many sociologists and social scientists have declared that the act of rape is not a sexual act at all, but rather a need, a need to feel powerful. They further explain that the rapist is most often the victim of another who was seeking power, a person, who himself was a victim, et cetera ad nauseam. Possibly some small percentage of the motivation which impels a rapist on his savage rampage stems from the hunger for domination, but I am certain that the violator’s stimulus is (devastatingly) sexual.

The sounds of the premeditated rape, the grunts and gurgles, the sputtering and spitting, which commences when the predator spots and then targets the victim, is sexual. The stalking becomes, in the rapist’s mind, a private courtship, where the courted is unaware of her suitor, but the suitor is obsessed with the object of his desire. He follows, observes, and is the excited protagonist in his sexual drama.”

“The impulsive rape is no less sexual, merely less extenuated. The violator who stumbles upon his unprotected victim is sexually agitated by surprise. He experiences the same vulgar rush as the flasher, save that his pleasure is not satisfied with brief shock, he has a surge and moves on to the deeper, more terrifying, invasion.

I am concerned that the pundits, who wish to shape our thinking and, subsequently, our laws, too often make rape an acceptable and even explainable social occurrence. If rape is merely about the possession of power, the search for and the exercising of power, we must simply understand and even forgive the natural human action of sex in the extreme. I believe that profanity directed at the victim of rape or equally lugubrious declarations of eternal love dribbled into the terrified victim’s ear, have less to do with power than with sexual indulgence.

We must call the ravening act of rape, the bloody, heart-stopping, breath-snatching, bone-crushing act of violence, which it is.”

“The threat makes some female and male victims unable to open their front doors, unable to venture into streets in which they grew up, unable to trust other human beings and even themselves. Let us call it a violent unredeemable sexual act.

I remember a reaction by a male friend, when a macho fellow told him that miniskirts were driving him to thoughts of rape.

My friend asked, if a woman wore a micro mini and no underpants would the would-be rapist be able to control himself? He added, “What if her big brothers were standing by holding baseball bats?”

I am concerned that accepting the power theory trivializes and diminishes the raw ugliness of the act, and dulls the razor’s cruel edge of violation.”

# Excerpt From: “Letter to My Daughter.” Random House Publishing,2008

Friday, June 13, 2014

வலசைப் பறவை

வலசைப்  பறவை 
மொழிபெயர்ப்புக் கவிதைகள் 
தமிழில் : ரவிக்குமார் 

இடம் பெற்றுள்ள கவிஞர்கள்:
1. யெஹுதா அமிக்கய்  
2. வான் தாஒ - ஷேங்
3. ச்சாங் ச்சியூ லிங் 
4. வாங் ச்சாங் லிங்
5. ஹா ஜின்
6. மௌரீன் மெக்நீல்
7. மாயா ஏஞ்சலூ
8. அஃபூவா கூப்பர்
9. ஜோர்ஜ் ரெபலோ
10. கலாமு யா சலாம்
11. எதேல்பர்ட் மில்லர்      
12. பெனாசிர் புட்டோ
13. குல்சார் 
14. ஜமீலா நிஷாத் 
15. எஸ் .ஜோசப் 
16. நாம்தேவ் தாசல்
17. வாமன் நிம்பல்கர் 
18. ஜாய் கோஸ்வாமி


இந்த நூலுக்கு திரு.தமிழவன் எழுதிய பின் அட்டைக் குறிப்பு:
ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள பலநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளில் எனக்கு ஏனோ ஒரே குரலே கேட்கிறது- கவிதையின் குரல். பசி, துன்பம்,வேதனை,போராட்டம்,எதிர்ப்பு இவைஎல்லாம் காற்றைக் கவனிப்பது போல் தான் தொனொக்கின்றன.புறநகர் குளத்தில் நடுங்கும் அமைதியின்மை,கல்லைப்போல் ஆற்றுக்குள் விழும் கிராமம், சாண்ட்விச் போன்ற அப்பாவின் நினைவு -இவை எல்லாம் ஒரு ஆச்சரியமான உலகத்தை எனக்குக் காட்டுகின்றன.உலகத்தின் மிகவும் வேதனையான குரல்கள் கவித்துவகுரல்கள் தாம் என்று சொல்லாமல் சொல்லும் கவிதைகள்.மொழிபெயர்ப்பாளன் தனது மொழியைக் காணும்போதுதான் மொழிபெயர்ப்பின் மொழியையும் கண்டடைகிறான். மிகமுக்கியமான தொகுப்பு.
மணற்கேணி வெளியீடான இந்நூலின் விலை 60/- ரூபாய் . அஞ்சல் செலவு இலவசம் 

Sunday, June 8, 2014

திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி நன்றாகவா இருக்கிறது?


சந்தடி மிகுந்த சாலை, இத்துனூண்டு கடை- 300 சதுர அடி இருக்கலாம்- அதற்குள் நிற்கக்கூட முடியாத நெரிசல். கார்பன் வைத்து பில் போடுகிற முதியவர் அந்தக் கடையின் பழமைக்கு அடையாளம். கால் பிளேட் மட்டன் பிரியாணி 90 ரூபாய். கோயில்களில் தொன்னையில் வைத்துக் கொடுக்கும் பிரசாதத்தின் அளவைவிடக் கொஞ்சம் கூடுதல். அவ்வளவுதான்.


 பார்சல் கட்டும் கவுண்டரில் கிண்ணங்களில் வந்து விழுந்துகொண்டேயிருக்கும் பிரியாணியை கண் சிமிட்டும் நேரத்தில் பொட்டலமாகக் கட்டும் கைகளின் லாவகத்தை ரசிக்கலாம்.  பணம் செலுத்தி பில் வாங்கினாலும் ' லேடீஸ் வெய்ட் பண்றாங்க, இதைக் கொஞ்சம் மொதல்ல கொடுங்க' என்று காரணம் சொல்லிக் கெஞ்சுகிறவர்களுக்கு முன்னுரிமை. 


அவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிய பிரியாணியை சூடு மாறாமல் சாப்பிடவேண்டும் என்ற ஆசையில் காரில் ஏசி ஐ நிறுத்திவிட்டுப் பிரித்தேன். இலவச இணைப்பாக கொடுக்கப்பட்ட ரய்த்தாவையும் பிரித்தேன். தலைக் கறி, லிவர் ஆகியவற்றையும் பிரித்து வைத்தேன். பிரியாணியில் நிறைய கறித்துண்டுகள் இருந்தன. ஒரு வாய், இரண்டு வாய்- அதன் சிறப்பு என்ன என்பதைக் கண்டுபிடித்துவிடவேண்டும் என ஒவ்வொரு கவளத்தையும் நிதானமாக சாப்பிட்டுப் பார்த்தேன். தலைக் கறி, ஈரல் எதுவும் சுவையாக இல்லை. உப்பு வேறு தூக்கலாக இருந்தது. பிரியாணியும் என்னை ஈர்க்கவில்லை. 


மசாலா இல்லை. செரிமானம் ஆவதில் பிரச்சனை இல்லை. மற்றபடி தலப்பாகட்டி பிரியாணிக்கென்று எந்த விசேஷமும் இல்லை! 


Thursday, June 5, 2014

நீதி யார் பக்கம் ?



" நீதி நம் பக்கம் இருக்கும்போது நமது போராட்டத்தில் நாம் தோற்போம் என நான் நினைக்கவில்லை" என்றார் அம்பேத்கர். போராட்டங்களின் முடிவுகள் நீதியின் வலிமையால் தீர்மானிக்கப்படும் நாட்டுக்குத்தான் இது பொருந்தும். சாதியின் வலிமையால் தீர்மானிக்கப்படுகிற நாட்டில் இது வெறும் கனவு மட்டுமே. 


இந்திய தலித்துகளின் முன்னால் இருக்கும் கேள்வி: 'நீ போராடாமல் சாகப் போகிறாயா? போராடி சாகப்போகிறாயா? ' என்பதுதான். எதைத் தேர்வுசெய்தாலும் அடையப்போவது மரணம் மட்டும்தான். 


உனக்கொரு பொன்னுலகம் காத்திருக்கிறது என்று சொல்லி அழைத்தார் மார்க்ஸ். தொழிலாளர்கள் திரண்டார்கள்! ' உனக்குப் புதைகுழி காத்திருக்கிறது' என்று அழைத்தால் யார் வருவார்கள்? எனக் கேட்டான் அவன்


' தனது மரணத்தைத் தானே தீர்மானித்துக்கொள்பவர்மீது எவரும் அதிகாரம் செலுத்தமுடியாது' என்றான் இவன்.

Sunday, June 1, 2014

வலதுசாரிகளின் எழுச்சி!


திமுக அணியின் தோல்விக்கான காரணங்களை விவரித்து திமுகவுக்கு ஆலோசனை சொல்லி எழுதப்பட்டிருக்கும் செய்திக்கட்டுரைகளில் பெரும்பாலும் அதற்கான அகநிலைக் காரணிகளே அலசப்பட்டிருக்கின்றன. அதிமுகவின் வெற்றியும்கூட ஊடகங்களால் அப்படித்தான் மதிப்பிடப்படுகிறது. 


வெற்றியோ தோல்வியோ எதுவொன்றுக்கும் அக- புற காரணங்கள் இருக்கும். இரண்டையும் சேர்த்துதான் ஆராயவேண்டும். 


திமுகவின் தோல்விக்கு இளைய தலைமுறை அக்கட்சியை ஏற்காதது ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. இதுவரை பேசப்பட்டுவந்த சமூகநீதி அரசியலை அதனால் பயனடைந்துகொண்டிருக்கும் தலைமுறையே நிராகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதன் விளைவு இது. இட ஒதுக்கீடு தேவையில்லை என அவர்கள் வெளிப்படையாகவே பேசுகின்றனர். தனியார்மயத்தால் உருவான மனோபாவம் இது. தனியார்துறையில் இட ஒதுக்கீடு இல்லாத நிலையில் அதற்கான போராட்டம் எதையும் சமூகநீதி பேசும் கட்சிகள் முன்னெடுக்காத நிலையில் இத்தகைய மனோபாவத்தை மாற்றுவது கடினம். 


இன்னொரு முக்கிய அம்சம் திமுகவின் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்களிடம் மேலோங்கியிருக்கும் சுயசாதி அபிமானம். சமூகநீதி அரசியலை அவர்கள் சாதி அபிமானமாகச் சுருக்கிவிட்டார்கள். இது பல தொகுதிகளில் தோல்விக்குக் காரணமாகியிருக்கிறது. 


பாமக முன்னெடுத்த சாதிவெறிப் பிரச்சாரம் மேலோட்டமாகப் பார்த்தால் தலித்துகளுக்கு எதிரானதாகத் தெரியலாம். அது சமூகநீதி அரசியலுக்கும் ஜனநாயக அரசியலுக்கும் சேர்த்தே குழிபறிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்த விஷயத்தில் இடதுசாரிகளுக்கும் திராவிடர் கழகத்துக்கும் இருந்த தெளிவு திமுக அணிகளிடம் இல்லை. 


இன்று தமிழகத்தை சூழ்ந்துள்ள மிகப்பெரிய ஆபத்து வலதுசாரி மனோபாவத்தின் எழுச்சி! இந்த எழுச்சி இந்துத்துவ அமைப்புகளின் உழைப்பால் உருவானதல்ல. இதற்குப் பெருமளவில் வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகளும்( இவர்களிலிருந்து மைய மற்றும் இடதுசாரித் தமிழ்த்தேசியவாதிகளை வேறுபடுத்திப் பார்ககவேண்டும்), சாதியவாதிகளும் காரணமாகியிருக்கிறார்கள். தமிழகத்தில் வலதுசாரி அரசியலை எதிர்ப்பதென்பது மத அடிப்படைவாதத்தை எதிர்ப்பதோடு முடிந்துவிடாது. இன மற்றும் சாதிய அடிப்படைவாதங்களையும் சேர்த்தே எதிர்த்தாகவேண்டும். 


இந்த நிலையை எதிர்கொள்ள மையநிலை சக்திகளும், இடதுசாரி சக்திகளும் இணைந்து செயல்படவேண்டும். அதற்கான முன்னெடுப்பை அரசியல் தளத்தைக்காட்டிலும் கருத்தியல் தளத்தில்தான் ஆரம்பிக்கவேண்டும். நம் ஆய்வுகள் அதைக் கவனத்தில்கொண்டால் நல்லது.