Thursday, May 8, 2014

வேண்டுகை கே.சச்சிதானந்தன் தமிழில்: ரவிக்குமார்


அன்பு மகனே! இந்தா இந்த ஆரஞ்சுப் பழத்தை எடுத்துக்கொள்

கஃபூரைக் கொன்றுவிடாதே

அவன் என் பேரன்


அன்பு மகனே! இந்த ஆப்பிள் பழத்தை எடுத்துக்கொள்

இஸ்மாயிலை விட்டுவிடு

அவன் என் உறவுக்காரன்


அன்பு மகனே! இந்த திராட்சைகளை எடுத்துக்கொள்

ஓர்ஹானை ஒன்றும் செய்துவிடாதே

அவன் என் பக்கத்துவீட்டில் வசிக்கிறான்


அன்பு மகனே! இந்தா இந்த ஆலிவ்களை கொண்டுபோ

நிஸாரை விட்டுவிடு

அவனும் ஒரு மனிதன் தான்


இந்தக் கிழத்தைச் சுடு

சுதந்திரம் செத்துப்போன நாட்டில்

வாழ்வதற்கு நான் விரும்பவில்லை


கடவுளையும் கொன்றுபோடு

வெறுப்பு ஆட்சிசெய்தால்

கடவுளுக்கு ஏது இடம்.


- எனது மொழியெங்கும் அவளின் ரத்தச் சிதறல்

தோட்டாக்களால் துளைக்கப்பட்ட சொற்களால் நான் இதை எழுதியுள்ளேன்

அதனால்தான் இதில் ரத்தம் ஒழுகுகிறது


கவிதை இதற்கு சாட்சியாக இருக்குமெனில்

அது விஷத்தை சுவாசிக்கட்டும்

No comments:

Post a Comment