Thursday, March 20, 2014

பாஜக, பாமக - சில குறிப்புகள் -------------------------------------------


இன்றுதான் (20.03.2014) தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. காங்கிரஸ் , பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. 


பாஜகவுக்கு இந்தியாவிலேயே அதிகமான கூட்டணிக் கட்சிகள் தமிழ்நாட்டில்தான் கிடைத்திருக்கின்றன. அதை சாத்தியப்படுத்தியதற்காக பாஜகவினர் திரு.குருமூர்த்தி அவர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். தமிழ்நாட்டை அடியொற்றி பிற மாநிலங்களிலும் அவர்களுக்குக் கூட்டாளிகள் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை பாஜகவினர் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. அவர்களால் ட்விட்டரில் பகிரப்படும் செய்திகள் அதைப் பிரதிபலிக்கின்றன.


பாமகவில் அன்புமணி அவர்களின் முடிவே இறுதி முடிவு என்பது உறுதியாகியிருக்கிறது. மருத்துவரின் பிடி தளர்ந்திருப்பது ஒருவிதத்தில் அந்தக் கட்சிக்கும் தமிழ்நாட்டுக்கும்  ஒப்பீட்டளவில் நல்லது என்று கருதுகிறேன்.வெறுப்பு அரசியலிலிருந்து விலகி மோடியை நகல்செய்து வளர்ச்சி, முன்னேற்றம் என பாமகவினர் பேசத் தொடங்கினால் பாவப்பட்ட தலித் மக்கள் தமது குடிசைகளில் பயமின்றிப் படுத்துத் தூங்க முடியும். 


மத்திய அமைச்சராக இருந்தபோது தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள முயன்றவர் அன்புமணி.  அண்மையில் நடத்தப்பட்ட அவரது சாதனை விளக்கக் கருத்தரங்கில் ’ தான் அமைச்சராக இருந்தபோது தலித்துகளின் உரிமைகளுக்காகப் போராடியதாக அவர் பேசியிருந்தார். உண்மையோ அதற்கு நேரெதிரானது. அவரைத்தான் தலித்துகள் காப்பாற்றினார்கள். எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அவரை எதிர்த்துப் போராடியபோது அவருக்கு ஆதரவாக நின்றவர்கள் தோழர் டி.ராஜாவும். அப்போதைய யுஜிசி தலைவர் எஸ்.கே.தோரட் அவர்களும்தான். அந்த இரு தலித்துகளின் ஆதரவு இல்லாவிட்டால் அன்று அந்தப் போராட்டத்தை அன்புமணி எதிர்கொண்டிருக்க முடியாது. அதை மருத்துவரே பல கூட்டங்களில் பேசியிருக்கிறார்.  


அமைச்சராக இருந்த திரு அன்புமணிக்கு டெல்லி அரசியலின் சுவை  தெரியும். அதனால்தான் கட்சியில் மற்றவர்களின் எதிர்ப்பைத் தாண்டி அவர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் விடாப்பிடியாக இருந்திருக்கிறார். கொள்கை என்பதைக்காட்டிலும் அதிகாரத்துக்குச் செல்லவேண்டும் என்பதை முன்னிறுத்தியே அவரது அணுகுமுறை அமைந்திருக்கிறது. அது சரியான அணுகுமுறைதானா என்பதை 2016 இல் அக்கட்சி புரிந்துகொள்ளும். அவர் கனவுகாண்பதுபோல் பாஜக ஆட்சி அமையாவிட்டால் மீண்டும் மருத்துவர் பரிந்துரைக்கும் பழையபாணி கடும்போக்கு அரசியலுக்குத் திரும்புவதுதவிர  அக்கட்சிக்கு வேறு வழியிருக்காது. மருத்துவர் மீண்டும் வெகுண்டெழுந்துவிடக்கூடாது என்பதே நம் அவா. 


பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் ராமநாதபுரம் தொகுதிக்கு நிறுத்தப்பட்டிருப்பவர் திரு.குப்புராமு அவர்கள். RRSPM  என சுருக்கமாக அழைக்கப்படும் ராம்சேது பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். ஆர்.எஸ்.எஸ் காரர் என அறிமுகமானவர். அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது பாஜகவில் அதிகரித்துவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செல்வாக்கைக் காட்டுகிறது. திரு.குப்புராமு போட்டியிடுவதால் இந்து என்ற உணர்வுபெற்றவர்களின் வாக்குகளைப் பெருமளவு அவர் பிரிக்கக்கூடும். அதிமுகவின் வேட்பாளர் திரு அன்வர் ராஜா அவர்களது வெற்றிக்கு அது நிச்சயம்  ஊறுவிளைவிக்கும். இஸ்லாமியர்களின் வாக்குகள் இம்முறை பெருமளவில் திமுகவுக்கே கிடைக்கும் என்பதால்  திமுக வேட்பாளர் வெற்றிபெறுவது ஒப்பீட்டளவில் இப்போது எளிதாகியிருக்கிறது எனக் கருதுகிறேன்.

No comments:

Post a Comment