Sunday, March 30, 2014

தேர்தல் பிரச்சார காலத்தைக் குறைக்கலாமா?



நேற்று இரவு(30.3.2014) பிரச்சாரம் முடிந்து சாப்பிடும் நேரத்தில் தேர்தல்முறை குறித்து விவாதம் வந்தது. எங்கள் தலைவர் சில கருத்துகளை முன்வைத்தார்: "தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து எத்தனையோ ஆலோசனைகள் சொல்லப்பட்டுவருகின்றன. தேர்தலில் நடக்கும் முறைகேடுகள், வன்முறை எல்லாவற்றுக்குமே ஊற்றுக்கண் தேர்தல் பிரச்சாரம்தான். எவ்வளவுதான் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்தாலும் தேர்தல் பிரச்சார காலத்தைக் குறைக்கவில்லையென்றால் தேர்தல் செலவைக் கட்டுப்படுத்தமுடியாது." என்றார். அமெரிக்காவில் நடப்பதுபோல பிரச்சாரத்தை மாற்றி அமைக்க வழி இருக்கிறதா என்றும் விவாதித்தோம். 


எனக்குத் தோன்றும் யோசனைகள்: 


1. வேட்புமனு தாக்கல் முடிந்து வேட்பாளர்கள் பட்டியல் இறுதிசெய்து அறிவிக்கப்பட்ட பிறகே பிரச்சாரம் செய்ய அனுமதிக்கவேண்டும். 


2. சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் மக்களவைத் தேர்தலுக்கு ஒருவாரம் பிரச்சார காலம் இருந்தால் போதும். 


3. காட்சி/அச்சு ஊடகங்களை பிரச்சாரத்துக்கு அதிகம் பயன்படுத்தலாம்.


4. மக்களவை தொலைக்காட்சி சேனலை முதன்மையான பிரச்சார ஊடகமாகப் பயன்படுத்தவேண்டும். 


5. போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரச்சாரத்தை பத்து நிமிடப் படமாகத் தயாரித்து தேர்தல் ஆணையத்திடம் வழங்கவேண்டும். சென்சாருக்குப் பிறகு அதை மக்களவை டிவியில் ஒளிபரப்பவேண்டும். உள்ளூர் சேனல்களையும் பயன்படுத்தலாம். 


6. மக்களவை உறுப்பினருக்கான தேர்தல் செலவு இருபத்தைந்து லட்சமாகக் குறைக்கப்படவேண்டும். 


7. தேர்தல் பிரச்சாரத்தில் ஃப்ளக்ஸ் போர்டுகள் வைப்பதையும் , தோரணங்கள் கட்டுவதையும் முற்றாகத் தடைசெய்யவேண்டும். 

Saturday, March 29, 2014

ஆயிரம் வாக்குகளைவிடவும் மதிப்பு வாய்ந்தது



இன்று திருவள்ளூரில் பாஸ்டர் திரு. மாத்யூ விக்டர் என்பவரை சந்தித்து ஆதரவு கேட்பதற்காகச் சென்றிருந்தோம். அவரது வீட்டின் கூடத்துச் சுவரில் நிறைய ஓவியங்கள் ஒட்டப்பட்டிருந்தன. இவையெல்லாம் யார் வரைந்தவை எனக் கேட்டேன். தனது மகள் வரைந்தவை எனப் பெருமையோடு ஒரு சிறுமியை அறிமுகப்படுத்தினார். அவரது கையைக் குலுக்கிப் பாராட்டினேன். உடனே அந்த சிறுமி உள்ளே ஓடிச்சென்று பூக்கள் நிரம்பிய சிறு கூடை ஒன்றை எடுத்துவந்து எனக்குப் பரிசளித்தார். அதுவும் கலைநயம் மிக்கதாக இருந்தது. அதையும் அவரே தயாரித்திருந்தார். " உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? " எனக் கேட்டேன். " டாக்டர்" என்றார். " சாந்தம் தவழும் உங்கள்  முகத்தைப் பார்த்தாலே பாதி வியாதி குணமாகிவிடும்" என்று வாழ்த்தினேன். 


இன்றைய நாளை அர்த்தமுள்ளதாக்கிய அந்தச் சிறுமிக்கு நன்றி! ' குழந்தைகளால் ஆளப்படும் நாடு' குறித்து அண்மையில் நான் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது. 


தேர்தல் போல சுயமரியாதைக்குச் சவால் விடும் ஒன்று வேறெதுவும் இருக்க முடியாது. அங்கு எந்த அளவுக்கு நீங்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கிறீர்களோ அந்த அளவுக்கு மற்றவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ' பொது வாழ்க்கையில் மானம் பார்க்கக்கூடாது' என்பதைப் புரிந்திருந்தாலும்கூட இந்த நடைமுறை வலிக்கவே செய்கிறது. இன்றைய ரணத்துக்கு இந்தக் குழந்தையின் அன்பு மருந்திட்டது! தேர்தல் முடியும் வரை தினம் இப்படி ஒரு குழந்தையை சந்தித்தால் போதும். இதுவே இன்றைய பிரார்த்தனை! 


Friday, March 28, 2014

நிஸார் கப்பானியின் கவிதை 4 தமிழில் : ரவிக்குமார்


ஒரு மனிதன் காதல் வயப்படும்போது
எப்படி பழைய சொற்களைப் பயன்படுத்தமுடியும்?
ஒருவன்மீது
வேட்கைகொண்ட பெண்  
மொழியியலாளர்களோடும் 
இலக்கண ஆசிரியர்களோடும் 
கிடக்கமுடியுமா?

என் காதலியிடம் நான் 
எதுவும் சொல்லவில்லை
காதலின் அடைமொழிகள் அனைத்தையும்
ஒரு பெட்டியில் நிரப்பினேன் 
மொழிகள் எல்லாவற்றிலுமிருந்தும்
வெளியேறினேன்

நிஸார் கப்பானியின் கவிதை 3 தமிழில்: ரவிக்குமார்


விளக்கைவிட முக்கியமானது வெளிச்சம்

ஏட்டைவிட முக்கியமானது கவிதை

உதடுகளைவிடவும் முக்கியமானது முத்தம்

நம் இருவரைவிடவும் முக்கியமானவை 

நானுனக்கு எழுதிய கடிதங்கள்

உனது அழகை

எனது பைத்தியத்தை

ஊரார் அறிய அவைதான்

ஆவணங்கள்

நிஸார் கப்பானியின் கவிதை தமிழில்: ரவிக்குமார்


உன்னைப்பற்றி அவர்களிடம் சொன்னதேயில்லை
ஆனால் 
என் கண்களுக்குள் நீ நீராடுவதைப் பார்த்திருக்கிறார்கள். 
உன்னைப்பற்றி அவர்களிடம் சொன்னதேயில்லை 
ஆனால் 
என் எழுத்துகளில் உன்னைப் பார்த்திருக்கிறார்கள் 

நேசத்தின் நறுமணத்தை
ஒளித்துவைக்கமுடியாது

நிஸார் கப்பானியின் கவிதை தமிழில்: ரவிக்குமார்



நான் சொற்களால் உலகை வெல்வேன்
தாய்மொழியை
பெயர்ச்சொல்லை வினைச்சொல்லை
வாக்கியத்தை
துடைத்தெறிவேன் உற்பவங்களை
நீரின் சங்கீதத்தை நெருப்பின் செய்தியைக் கொண்ட
புதியதொரு மொழியால் 
எதிர்வரும் யுகத்துக்கு ஒளியைக் கொடுப்பேன்
காலத்தை உன் கண்ணில் நிறுத்துவேன் 
கணத்தை காலத்திலிருந்து பிரிக்கும் கோட்டை அழிப்பேன்

Wednesday, March 26, 2014

புத்துளி'சம்பத் 'நாஞ்சில்' சம்பத் ஆன கதை!

'


நாஞ்சில் சம்பத் என இப்போது அறியப்படும் சம்பத் முன்னர் அவர் பிறந்த ஊரான புத்துளி சம்பத் என்றே அழைக்கபட்டாராம். இந்தத் தகவலை ஆவடி நாசர் இன்று சொன்னார். 

" 1987 ஆம் ஆண்டு சம்பத்தை அழைத்து ஆவடியில் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அப்போது நானும் அண்ணன் மதுராந்தகம் ஆறுமுகமும் நாஞ்சிலாரைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்குப் போயிருந்தோம். அவருக்கு அப்போது ஒருவர் சிகை திருத்திக்கொண்டிருந்தார். அப்போது அண்ணன் ஆறுமுகம் அவர்கள் என்னை அச்சகத்துக்குப் போய் போஸ்டர் ரெடியாகிவிட்டதா என்று பார் எனச் சொன்னார். அதைக் கேட்ட நாஞ்சிலார் ' என்ன போஸ்டர்? எனக் கேட்க ' புத்துளி சம்பத் கூட்டம் போடுகிறோம் என அவர் பாதில் சொன்னார். ' அவன் நம்ம ஊர் பையனாச்சே! நல்லா பேசுவான். அவன் பேரை நாஞ்சில் சம்பத்னு போடுங்க. அவன்கிட்ட நான் தான் அப்படி போடச்சொன்னேன்னு சொல்லுங்க' என்றார் நாஞ்சிலார். ஏற்கனவே போஸ்டர் அச்சாகிவிட்டது. என்றபோதிலும் நாஞ்சில் சம்பத் என்று போட்டு மூன்று பிட் போஸ்டத் அடித்து அமர்க்களமாக அந்த கூட்டத்தை நடத்தினோம். அதிலிருந்து அந்த பெயரே நிலைத்துவிட்டது" என்று அந்தக் கதையை சொன்னார் நாசர். 

இன்று ஆவடியில் நாஞ்சில் சம்பத் வந்து அதிமுகவுக்குப் பிரச்சாரம் செய்துவிட்டுப் போயிருக்கிறார். அந்த கூட்டத்தில் இருநூறுபேர்கூட இல்லையாம்! 

Tuesday, March 25, 2014

சிரிய நாட்டுக் கவி நிஸார் கப்பானியின் கவிதை தமிழில்: ரவிக்குமார்



ஒரு மனிதன் காதல் வயப்படும்போது
எப்படி பழைய சொற்களைப் பயன்படுத்தமுடியும்?
ஒருவன்மீது
வேட்கைகொண்ட பெண்  
மொழியியலாளர்களோடும் 
இலக்கண ஆசிரியர்களோடும் 
கிடக்கமுடியுமா?

என் காதலியிடம் நான் 
எதுவும் சொல்லவில்லை
காதலின் அடைமொழிகள் அனைத்தையும்
ஒரு பெட்டியில் நிரப்பினேன் 
மொழிகளிலிருந்து
வெளியேறினேன்

Saturday, March 22, 2014

நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு விடுமுறை இல்லையென்றது யார்?


திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர் கூட்டம் இன்று ( 22.03.2014) பேரம்பாக்கத்தில் நடைபெற்றுவருகிறது. அதில் கலந்துகொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் திரு. காயல் அகமது சாலி அவர்கள் பேசும்போது " நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு விடுமுறை விடப்படும் என்று அறிவித்தவர் திமுக தலைவர் கலைஞர். நபிகள் பிறந்த மண்ணில்கூட அப்படி விடுமுறை விடப்படுவதில்லை. ஆனால் , அதை ரத்து செய்தவர் ஜெயலலிதா. 




" முஸ்லிம்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும், பின்னர் அவர்களுக்குத் தனியே இட ஒதுக்கீடு வழங்கியதும் கலைஞர்தான். ஆனால் இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தவர் ஜெயலலிதா" எனக் குறிப்பிட்டார். 


நபிகள் பிறந்த நாளான மிலாது நபி மட்டுமின்றி அம்பேத்கர் பிறந்த நாள், உழவர் திருநாள் உள்ளிட்ட ஆறு நாட்களுக்கு விடப்பட்டுவந்த பொது விடுமுறையை ரத்துசெய்து 2003 ஆம் ஆண்டு அதிமுக அரசு ஆணை பிறப்பித்தது. அந்த ஆறு நாட்களை  வரையறுக்கப்பட்ட விடுமுறை என வகைப்படுத்தி அவற்றுள் ஏதேனும் மூன்று நாட்களுக்கு மட்டும் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என சொல்லப்பட்டது. ( http://www.hindu.com/2003/11/29/stories/2003112907310400.htm) அதிமுக ஆட்சி முடிந்தபின் மீண்டும் மிலாது நபி நாளை விடுமுறை நாளாக அறிவித்தது திமுக அரசு. இஸ்லாமிய பெருமக்கள் அதை மறக்கமாட்டார்கள் என நம்பிக்கை தெரிவித்தார் திரு காயல் அகமது சாலி. 


Friday, March 21, 2014

இதுதான் ஆரோக்கியமான போட்டி!



இன்று( 21.03.2014) ஆவடியில் நடைபெற்ற செயல்வீரர் கூட்டத்தில் ஆவடி நகர்மன்றத் தலைவர் நாசர் அவர்கள் ஒரு போட்டியை முன்மொழிந்தார். மாதாவரம் சட்டமன்றத் தொகுதியில் ஆவடியைவிட கூடுதல் வாக்குகளைப் பெற முடியுமா ? என்று சவால் விட்டார். திமுக மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் திரு சுதர்சனம் இருக்கும் தொகுதி அது. இறுதியாக உரையாற்றிய திரு. சுதர்சனம் அவர்கள்,  தனக்கு விடப்பட்ட சவாலாகவே அதை எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். " சவால் என்றால் பந்தயம் இருக்கும். நாசருடைய எடை 139 கிலோ, என்னுடைய எடை 95 கிலோ. ஆவடியைவிட மாதவரம் தொகுதியில் வாக்கு குறைவாகப் பெற்றால் நான் எனது எடையில் 20 கிலோவைக் குறைத்துக்கொள்கிறேன். ஆவடியில் வாக்கு குறைந்து பந்தயத்தில் தோற்றால் நாசர் தனது எடையில்  10 கிலோ குறைக்கவேண்டும். இதுதான் பந்தயம் " என்றார். 


திரு. சுதர்சனம் அவர்கள் வாக்கு வித்தியாசத்தை எடை குறைப்போடு இணைத்துப் பேசிய லாவகம் ரசிக்கத் தக்கதாக இருந்தது. இந்தப் போட்டிதான் உண்மையிலேயே ' ஆரோக்கியமான' போட்டி. 

Thursday, March 20, 2014

பாஜக, பாமக - சில குறிப்புகள் -------------------------------------------


இன்றுதான் (20.03.2014) தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. காங்கிரஸ் , பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. 


பாஜகவுக்கு இந்தியாவிலேயே அதிகமான கூட்டணிக் கட்சிகள் தமிழ்நாட்டில்தான் கிடைத்திருக்கின்றன. அதை சாத்தியப்படுத்தியதற்காக பாஜகவினர் திரு.குருமூர்த்தி அவர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். தமிழ்நாட்டை அடியொற்றி பிற மாநிலங்களிலும் அவர்களுக்குக் கூட்டாளிகள் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை பாஜகவினர் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. அவர்களால் ட்விட்டரில் பகிரப்படும் செய்திகள் அதைப் பிரதிபலிக்கின்றன.


பாமகவில் அன்புமணி அவர்களின் முடிவே இறுதி முடிவு என்பது உறுதியாகியிருக்கிறது. மருத்துவரின் பிடி தளர்ந்திருப்பது ஒருவிதத்தில் அந்தக் கட்சிக்கும் தமிழ்நாட்டுக்கும்  ஒப்பீட்டளவில் நல்லது என்று கருதுகிறேன்.வெறுப்பு அரசியலிலிருந்து விலகி மோடியை நகல்செய்து வளர்ச்சி, முன்னேற்றம் என பாமகவினர் பேசத் தொடங்கினால் பாவப்பட்ட தலித் மக்கள் தமது குடிசைகளில் பயமின்றிப் படுத்துத் தூங்க முடியும். 


மத்திய அமைச்சராக இருந்தபோது தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள முயன்றவர் அன்புமணி.  அண்மையில் நடத்தப்பட்ட அவரது சாதனை விளக்கக் கருத்தரங்கில் ’ தான் அமைச்சராக இருந்தபோது தலித்துகளின் உரிமைகளுக்காகப் போராடியதாக அவர் பேசியிருந்தார். உண்மையோ அதற்கு நேரெதிரானது. அவரைத்தான் தலித்துகள் காப்பாற்றினார்கள். எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அவரை எதிர்த்துப் போராடியபோது அவருக்கு ஆதரவாக நின்றவர்கள் தோழர் டி.ராஜாவும். அப்போதைய யுஜிசி தலைவர் எஸ்.கே.தோரட் அவர்களும்தான். அந்த இரு தலித்துகளின் ஆதரவு இல்லாவிட்டால் அன்று அந்தப் போராட்டத்தை அன்புமணி எதிர்கொண்டிருக்க முடியாது. அதை மருத்துவரே பல கூட்டங்களில் பேசியிருக்கிறார்.  


அமைச்சராக இருந்த திரு அன்புமணிக்கு டெல்லி அரசியலின் சுவை  தெரியும். அதனால்தான் கட்சியில் மற்றவர்களின் எதிர்ப்பைத் தாண்டி அவர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் விடாப்பிடியாக இருந்திருக்கிறார். கொள்கை என்பதைக்காட்டிலும் அதிகாரத்துக்குச் செல்லவேண்டும் என்பதை முன்னிறுத்தியே அவரது அணுகுமுறை அமைந்திருக்கிறது. அது சரியான அணுகுமுறைதானா என்பதை 2016 இல் அக்கட்சி புரிந்துகொள்ளும். அவர் கனவுகாண்பதுபோல் பாஜக ஆட்சி அமையாவிட்டால் மீண்டும் மருத்துவர் பரிந்துரைக்கும் பழையபாணி கடும்போக்கு அரசியலுக்குத் திரும்புவதுதவிர  அக்கட்சிக்கு வேறு வழியிருக்காது. மருத்துவர் மீண்டும் வெகுண்டெழுந்துவிடக்கூடாது என்பதே நம் அவா. 


பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் ராமநாதபுரம் தொகுதிக்கு நிறுத்தப்பட்டிருப்பவர் திரு.குப்புராமு அவர்கள். RRSPM  என சுருக்கமாக அழைக்கப்படும் ராம்சேது பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். ஆர்.எஸ்.எஸ் காரர் என அறிமுகமானவர். அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது பாஜகவில் அதிகரித்துவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செல்வாக்கைக் காட்டுகிறது. திரு.குப்புராமு போட்டியிடுவதால் இந்து என்ற உணர்வுபெற்றவர்களின் வாக்குகளைப் பெருமளவு அவர் பிரிக்கக்கூடும். அதிமுகவின் வேட்பாளர் திரு அன்வர் ராஜா அவர்களது வெற்றிக்கு அது நிச்சயம்  ஊறுவிளைவிக்கும். இஸ்லாமியர்களின் வாக்குகள் இம்முறை பெருமளவில் திமுகவுக்கே கிடைக்கும் என்பதால்  திமுக வேட்பாளர் வெற்றிபெறுவது ஒப்பீட்டளவில் இப்போது எளிதாகியிருக்கிறது எனக் கருதுகிறேன்.

Tuesday, March 11, 2014

ரவிக்குமார் கவிதை 12.03.2014




உன்னிடம் இருக்கிறது ஒருபோதும் தேயா நிலவு, உதிர்ந்து தீராத
நட்சத்திரம், கனவின் நதி , ஆசைக் கடல்
பட்டாம்பூச்சிகளால் நீ தொடுக்கும்
மாலையைக் 
கவிதையென வியக்காதார் யார்? 

வாழ்வின் சாம்பலில் 
என் குழந்தையின் ரத்தத்தைப் பிசைந்து
வனைகிறேன் ஒரு பொம்மையை
வரலாற்று நெருப்பில்
அரைகுறையாய் வெந்து கிடக்கும்
என் முன்னோர்கள்
விளையாட 

இதைக் கவிதையென்று சொல்வோர் யார்? 

Sunday, March 9, 2014

லாங்ஸ்டன் ஹ்யூஸ் கவிதை தமிழில்: ரவிக்குமார்


நான் உனக்கென செய்தது கொஞ்சம்

நீ எனக்குச் செய்ததும் அவ்வளவுதான்


நாம் ஒத்துப்போகாமலிருக்கக் 

காரணங்கள் நிறையவே உண்டு


எனினும்

என்னிடம் கொஞ்சம் சக்தி இருக்கிறது


நீ காலத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்போது

நான் தருணம் ஒன்றைப் பற்றிக்கொள்கிறேன்


ஆனால்

உனது காலம் ஒரு கல்

எனது தருணமோ

ஒரு மலர்


09.03.2014

Monday, March 3, 2014

எஸ் சி/ எஸ் டி வன்கொடுமைத் தடுப்புத் திருத்த மசோதா - அவசர சட்டம்

எஸ் சி/ எஸ் டி வன்கொடுமைத் தடுப்புத் திருத்த மசோதாவை அவசர சட்டமாகப் பிறப்பிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டால் அது நடைமுறைக்கு வரும். புதிய குற்றங்கள் சில வன்கொடுமைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்புக்கும் இதில் வகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா பல மாதங்களாகக் கிடப்பில் இருந்தது. காங்கிரஸ் அரசு நினைத்திருந்தால் முன்பே இதை சட்டமாக்கியிருக்க முடியும். பத்து இருபது தொகுதிகளுக்காக தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றிய காங்கிரஸ் அதில் காட்டிய அக்கறையில் ஒரு சதவீதத்தைக் காட்டியிருந்தால்கூட இது முன்னரே சட்டமாகியிருக்கும். அவசர சட்டம் எனக் காரணம் காட்டி இதை பாஜக எதிர்க்கும். ஒருபுறம் தலித்துகளை ஏமாற்ற நினைக்கும் காங்கிரஸ் இன்னொருபுறம் தலித்துகளைப் பகைவர்களாகப் பார்க்கும் பாஜக- இதில் யாரோ ஒருவரோடு சேரப்போகும் மாநிலக் கட்சிகள்.  இவர்களுக்கிடையில் தான் தனது கூட்டாளியைத் தேர்வுசெய்யவேண்டும் என்ற மோசமான நிலையில் தலித்துகள்! நல்ல ஜனநாயகம்! பேஷ் பேஷ் !!