Monday, October 21, 2013

இந்திய ஜனநாயகத்தை எதிர்நோக்கும் சவால்!

dn

இந்திய ஜனநாயகத்தை எதிர்நோக்கும் சவால்!

  ரவிக்குமார்

மக்களவைத் தேர்தல் இப்போது நடந்தால் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக்கணிப்பு ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. பாஜக இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளால் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என்றபோதிலும், அடுத்த ஆட்சியை உருவாக்கும் பலம் மாநிலக் கட்சிகளின் கையில் இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி அதன் உற்சாகத்தைக் குறைக்கவே செய்திருக்கும். காங்கிரஸ் கட்சி களத்திலேயே இல்லை எனும் அளவுக்கு அதன் பலம் ஒவ்வொருநாளும் குறைந்துகொண்டே போகும் நிலையில், அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது பா.ஜ.கவா அல்லது மாநிலக் கட்சிகளா என்ற வினா இப்போது முதன்மை பெற்றிருக்கிறது.
  வெளியாகிவரும் கருத்துக்கணிப்புகளைப் பார்த்தால் கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் 206 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் 2014 தேர்தலில் 100 இடங்களைக்கூட தொட முடியாது என்ற நிலையே உள்ளது. அதற்கு முதன்மையான காரணம் 2009 க்குப் பிறகு அதன் ஆட்சிமுறையில் ஏற்பட்ட மாற்றம்தான்.
  கடந்த மக்களவைத் தேர்தலில் 206 இடங்கள் கிடைத்ததுமே அது தனிக்கட்சி ஆட்சி என்ற திமிரோடு செயல்பட ஆரம்பித்துவிட்டது. 2004 இல் செய்ததுபோல கூட்டணிக் கட்சிகளை அரவணைப்பதிலோ, நல்ல ஆட்சியைத் தரவேண்டும் என்பதிலோ அக்கறை காட்டாமல் அதிகாரத்துவத்தோடு ஆட்சி நடத்த ஆரம்பித்துவிட்டது. கூட்டணி ஆட்சிக்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தைக்கூட அது வகுக்கவில்லை. தான் எடுக்கும் கொள்கை முடிவுகளை வழிமொழிவதே கூட்டணிக்கட்சிகளின் தலைவிதி என்பதுபோல் அது நடந்துகொண்டது.
  பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு உள்ளிட்ட அதன் பொருளாதாரக் கொள்கைகளாலும்  விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாததாலும்  இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் பாகிஸ்தான்,சீனா ஆகியவற்றை மட்டுமின்றி இலங்கையைக்கூட எதிர்கொள்ள முடியாத பலவீனமான அயலுறவுக்கொள்கையாலும்  காங்கிரஸ் மட்டுமல்ல அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகளும் பாதிப்புக்குள்ளாயின.
  கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கி வெற்றி வாய்ப்பைக் கொண்டுவரக்கூடிய ஆளுமைகொண்ட தலைவர் எவரும் இப்போது காங்கிரஸில் இல்லை. காங்கிரஸ்காரர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் காந்தி அந்த எதிர்பார்ப்பை ஈடேற்றும் தலைவராக உருப்பெறவில்லை. தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கைவிட ராகுல் காந்தி பரவாயில்லை என்று மக்கள் நினைக்கிறார்களே தவிர அவர் இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய ஆற்றல் பெற்றவர் எனக் கருதவில்லை. ஊழலுக்கு எதிரான நேர்மையாளர் எனவும், கலகக்கார இளைஞர் எனவும் தன்னைக் காட்டிக்கொள்வதற்காக மத்திய அரசு கொண்டுவந்திருந்த அவசர சட்டம் குறித்து அவர் சொன்ன கருத்துகளும், அதைச் சொன்ன முறையும் அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுவதாகவே அமைந்துபோனது காங்கிரஸின் துரதிர்ஷ்டம்தான்.
  அனுபவம் வாய்ந்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு ராகுலை தலைவராக முன்னிறுத்தியதும் காங்கிரஸின் இன்னொரு தவறு என்று சொல்லலாம். பிரதமர் வேட்பாளரெனப் பேசப்பட்ட  பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக்கப்பட்டார். அந்த வரிசையில் வைத்து  ஊடகங்களால் பேசப்பட்ட ப.சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே போன்றவர்கள் மூலமாகவே ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் எனப் பேச வைத்து அவர்களைப் போட்டியிலிருந்து காங்கிரஸ் விலக்கிவிட்டது. காங்கிரஸின் இந்த நடவடிக்கை இன்னும் பரம்பரை ஆட்சியைத்தான் காங்கிரஸ் விரும்புகிறது என்ற விமர்சனத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
  பாஜகவை ஆட்சியில் அமர்த்துவார் என்ற எதிர்பார்ப்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நரேந்திர மோடியாலும்கூட பாஜக ஆதரவு அலையை ஏற்படுத்த முடியவில்லை என்பதையே கருத்துக் கணிப்பு காட்டுகிறது. அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பாஜகவுக்கான ஆதரவு சற்றே உயர்ந்திருக்கிறது என்றபோதிலும் ஆட்சி அமைக்கும் என்கிற நம்பிக்கையை அது ஏற்படுத்தவில்லை.
  மக்களவைத் தேர்தலில் இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில் ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் பாஜகவுக்கு சொல்லிக்கொள்ளும்படியிலான அமைப்பு ரீதியிலான பலம் கிடையாது. சரியான கூட்டணி அமையாமல் ஒரு சில இடங்களில் கூட வெற்றிபெற வாய்ப்பில்லாத நிலைமை. கூட்டணி அமைவதும் கூட சிரமமாகத் தோன்றுகிறது.
 தற்போது பாஜகவுக்குக் கிடைக்குமெனக் கணிக்கப்பட்டிருக்கும் 162 இடங்கள் என்ற எண்ணிக்கை குறையலாமே தவிர அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. 1999 இல் வாஜ்பாய் தலைமையில் அந்தக் கட்சி ஆட்சி அமைத்த போதும்கூட அதற்கு 182 இடங்கள்தான் கிடைத்தன. ஆனால் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த கட்சிகள் 117 இடங்களைப் பெற்றன. இப்போதோ பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு வெறும் 24 இடங்கள் மட்டும்தான் கிடைக்கும் எனக் கணிப்புகள் கூறுகின்றன.
  கருத்துக் கணிப்பில் ஹரியானா, பிகார், கர்னாடகா ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு அதிகபட்ச இடங்கள் கிடைத்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் வேண்டுமானால் ஒரு சில இடங்கள் கூடலாம். ஆனால் அங்கு தனது இடங்களை அதிகரிக்கும் நோக்கில் முஸôஃபர்நகரிலும், அயோத்தியிலும் பாஜக மேற்கொண்டுவரும் மதவாத நடவடிக்கைகள் மற்ற இடங்களில் அதன் வெற்றி வாய்ப்புகளைப் பாதிப்பது மட்டுமின்றி அதற்குக் கூட்டாளிகள் கிடைப்பதையும் கெடுப்பதாகவே இருக்கும்.
  காங்கிரஸ் கட்சியின் இழப்பு பாஜகவுக்கு லாபமாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் பாஜக இருந்தால் அது ஏமாந்துதான் போகும். 2014 இல் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் வெற்றி வாய்ப்புள்ள கூட்டணியை அமைப்பது ஒன்றுதான் பாஜகவின் முன்னாலிருக்கும் ஒரே வழி. 1999 இல் ஆட்சி அமைத்தபோது தேர்தலுக்கு முன்பே பாஜகவின் தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 24 கட்சிகள் இருந்தன. ஆனால் மோடியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திக்கொண்டு தற்போது அப்படியொரு கூட்டணியை பாஜகவால் அமைக்க முடியுமா என்று பார்த்தால் முடியாது என்றே தோன்றுகிறது.
  பாஜகவில் இருந்தபோது அவருடைய ஆதரவாளராகக் கருதப்பட்ட எடியூரப்பாகூட இப்போது தனது கட்சியை பாஜகவுடன் இணைக்க முன்வரவில்லை. மோடியை தனது நண்பர் எனக் குறிப்பிட்ட தமிழக முதல்வரோ அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அவரைச் சந்திக்கக்கூடச் சம்மதிக்கவில்லை. பாஜகவுக்கு புதிய கூட்டாளிகள் கிடைப்பதில் இருக்கும் சிக்கலையே இவை காட்டுகின்றன.
 பொருளாதார நிலையை ஆராயும் வல்லுனர்கள் 1989 ஆம் ஆண்டில் இருந்தது போன்ற ஒரு நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது என்று கவலை தெரிவிக்கிறார்கள். பொருளாதாரத்தில் மட்டுமல்ல அரசியலிலும் அந்த இடத்துக்குத்தான் இந்தியா வந்திருக்கிறது. பாஜக, காங்கிரஸ், மாநிலக் கட்சிகள் என மூன்று பெரும் பிரிவுகளாக இந்திய அரசியல் களம் பிரிந்து நிற்கிறது.
 தற்போது தேசியக் கட்சிகளைவிடவும் மாநிலக் கட்சிகளுக்கே மக்கள் முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது தெரிகிறது. அதே நேரத்தில் மாநிலக் கட்சிகள் இணைந்து நிலையானதொரு ஆட்சியை வழங்க முடியுமா என்ற கேள்வி வாக்காளர்கள் மனதில் இருக்கத்தான் செய்கிறது.அந்த ஐயத்தைப் போக்கவேண்டியது மாநிலக் கட்சிகளின் கடமை.
 மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு மாற்றை முன்மொழிவதற்கான முன்முயற்சியை தற்போது இடதுசாரிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாநில நலனை முன்னிறுத்தி அரசியல் செய்யும் மாநிலக் கட்சிகளுக்கும் தேசிய பார்வைக்கு முன்னுரிமை அளிக்கும் இடதுசாரிகளுக்கும் கொள்கை அளவில் உடன்படும் அம்சங்களைவிட முரண்படும் அம்சங்களே அதிகம்.  அதுமட்டுமின்றி திரிணாமுல் காங்கிரûஸயும், பகுஜன் சமாஜ் கட்சியையும் தவிர்த்துவிட்டு அவர்கள் ஏற்படுத்த நினைக்கும் கூட்டணி எந்த அளவுக்கு எடுபடும் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
  தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லது பாஜக என எந்தக் கட்சியோடும் கூட்டுசேரக் கூடியவை என திரிணாமுல் காங்கிரஸ்,பகுஜன் சமாஜ் தி.மு.க,அ.தி.மு.க உள்ளிட்ட சுமார் இருபது மாநிலக் கட்சிகளை கருத்துக் கணிப்பில் வகைப்படுத்தியிருக்கிறார்கள். அது இக்கட்சிகளின் சாணக்கியம் எனப் பார்க்கப்படுவதைக் காட்டிலும் சந்தர்ப்பவாதமாகவே மக்களால் கருதப்படும். அத்தகைய நம்பகமற்ற நிலை வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டால் தற்போது மாநிலக் கட்சிகளுக்கு இருக்கும் அவர்களது ஆதரவில் ஒரு பகுதி பாஜகவை நோக்கி நகரக்கூடும்.
  மாநில நலன்களைப் பாதுகாக்கக்கூடிய, மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஒன்றை மத்தியில் அமைப்பதற்கான அரிய வாய்ப்பு இப்போது மாநிலக் கட்சிகளுக்குக் கிடைத்துள்ளது.அரசியல் சாணக்கியத்தோடு  அதை மாநிலக் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளுமா அல்லது சந்தர்ப்பவாதச் சகதியில் மூழ்கிப்போகுமா என்பதை அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கிறது இந்திய ஜனநாயகம்.

கட்டுரையாளர்: பொதுச் செயலாளர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.

No comments:

Post a Comment