Tuesday, October 15, 2013

மொழித் திறனை மேம்படுத்த ........

..

தெற்கு லண்டனில் இருக்கும் பள்ளி ஒன்று தனது மாணவர்கள் slang எனப்படும் கொச்சை மொழியைப் பள்ளியில் பயன்பட்த்த்தக்கூடாது எனத் தடை விதித்திருக்கிறது. மாணவர்கள் "ain't", "like" "coz" "innit", "bare", "extra" "you woz" "we woz" போன்ற சொற்களைப் பயன்படுத்தக்கூடாதென்று கூறியுள்ள பள்ளி நிர்வாகம் basically என ஒரு வாக்கியத்தைத் துவக்குவதோ  என முடிப்பதோ தவறு எனவும் அறிவித்துள்ளது. மாணவர்களின் மொழித் திறனை அதிகரிக்கும் நோக்கிலேயே இது செய்யப்படுகிறது என அவர்கள் விளக்கமளித்துள்ளனர். 

இன்று புதுச்சேரிப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைக்குச் சென்றிருந்தேன். அங்கு பேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்களைச் சந்தித்தேன். எங்களது உரையாடல் தமிழ் உரைநடை குறித்துத் திரும்பியது. முனைவர் பட்ட ஆய்வேடுகளின் அவல நிலை குறித்து அவர் கவலை தெரிவித்தார். வள்ளலாரின் உரைநடையிலிருக்கும் நவீனத்துவக் கூறுகள் பற்றி நான் அவரோடு சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். ஏற்கனவே தமிழ் உரைநடை சீரழிந்துகிடக்கிறது. அதுவும் ஆய்வேடுகளில் பயன்படுத்தப்படும் மொழியே மோசமாக இருக்கிறது. ஊடகங்களும், திரைப்படங்களும் இன்னும் மோசமாக அதை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. ' சூப்பர்' ' சான்ஸே இல்ல' போன்ற சொற்கள் இல்லாமல் இப்போதைய இளைய தலைமுறையால் பேசமுடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. சமூக வலைத்தளங்களும் அதை வலுப்படித்திவருகின்றன. 

லண்டன் பள்ளியின் நடவடிக்கையைப் பின்பற்றித் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் அதுபோலத் தடைவிதித்தால் என்னமாதிரியான slang குகளை நாம் தடுப்பது? திரைப்படத் தமிழில் தல, ஊத்திகிச்சி, மட்ட, புட்டுக்கிச்சி, சரக்கு என நூற்றுக்கணக்கில் slang குகள் உருவாகிவிட்டன. வட்டார வழக்கு, சாதி வழக்கு, பிறமொழிக் கலப்பு ஆகியவற்றை slang என்று எண்ணிய காலம் மாறிவிட்டது. கல்லூரித் தேர்வுகளில்கூட மாணவர்கள் இத்தகைய கொச்சை மொழியைப் பயன்படுத்துகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களது மொழித்திறன் நசிந்துவிட்டது என பேராசிரியர் அ. ராமசாமி என்னிடம் வருத்தப்பட்டார். 

லண்டன் பள்ளியைப்போல தடை விதிக்காவிட்டாலும் மாணவர்களின் மொழித் திறனை மேம்படுத்த நாம் சிலவற்றைத் திட்டமிடவேண்டும். குறிப்பாக காட்சி ஊடகங்களில் பணிபுரிவோரது பங்கு இதில் முக்கியம். நண்பர்கள் தமது ஆலோசனைகளை இங்கே பகிர்ந்துகொள்ளும்படி அழைக்கிறேன். 

No comments:

Post a Comment