Tuesday, October 1, 2013

காந்தியிடம் கற்போம்

:

” உயிரை இழக்க எவன் துணிகிறானோ அவனே அதைக் காக்க முடியும்”

ரவிக்குமார்

இன்று ( அக்டோபர் 02)  காந்தியடிகளின் பிறந்த நாள்.எந்தவொரு சந்தர்ப்பத்துக்கும் பொருந்தக்கூடிய மேற்கோள்களை நாம் காந்தியடிகளின் எழுத்துகளிலிருந்து தேர்ந்தெடுக்கமுடியும். தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் பதவி இழக்கவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அரசியல் தலைவர்கள் எளிமையாக வாழவேண்டியதன் தேவை குறித்து காந்தியடிகள் கூறியவற்றைப் பலரும் மேற்கோள் காட்டுவார்கள். ’காந்தி ஸ்பெஷலிஸ்ட்’ என வர்ணிக்கத்தக்க அளவுக்கு காந்தியைத் தனது’இன்ட்டலக்சுவல் ப்ராபர்ட்டி”யாக மாற்றியிருக்கும் ராமச்சந்திர குஹா, 2016 ஆகஸ்டு 13 இல் ஹிந்து நாளேட்டில் தான் எழுதிய கட்டுரை ஒன்றை இன்று ட்விட்டரில்பகிர்ந்திருந்தார். “‘Bapu in Beliaghata “ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையின் இறுதியில் அவர் தந்திருக்கும் மேற்கோள் லாலு பிரசாத் யாதவ் , ரஷீத் மஸூத் ஆகியோரின் தண்டனை குறித்த பேச்சுகள் ஊடகப் பரப்பை நிறைத்துவரும் இன்றைய சூழலுக்குப் பொருத்தமானது என அவர் நினைத்திருக்கலாம்.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று அவரைச் சந்தித்து வாழ்த்துபெறுவதற்காக வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்களிடம் அவர் கூறிய அந்த வார்த்தைகள் முக்கியமானவைதான்: “ இன்று நீங்கள் உங்கள் தலைகளில் முள்முடிகளைத் தரித்திருக்கிறீர்கள்.அதிகார பீடம் அருவருப்பானது. அங்கு நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். நீங்கள் மிகவும் உண்மையாகவும்,அகிம்சையோடும்,எளிமையாகவும், சகிப்புத்தன்மையோடும் இருக்கவேண்டும். நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சோதனைக்கு ஆளானீர்கள்.சொல்லப்போனால் அதுவொரு சோதனையே அல்ல. ஆனால் இப்போது உங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் சோதனை முடிவற்றது. நீங்கள் பணத்தின் கவர்ச்சிக்கு ஆட்பட்டுவிடக்கூடாது. கடவுள் உங்களுக்கு உதவட்டும்! நீங்கள் கிராமப்புற மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் உதவுவதற்காகத்தான் இந்தப் பதவிகளுக்கு வந்திருக்கிறீர்கள்” என்று காந்தியடிகள் அவர்களிடம் சொன்னார்.

அதிகார வெறி, பணத்தாசை போன்றவற்றைக்காட்டிலும் காந்தியின் வார்த்தைகள் பயன்படக்கூடிய முக்கியமான இரண்டு பிரச்சனைகள்:  தீண்டாமை ஒழிப்பும், மகளிர் பாதுகாப்பும் ஆகும். தீண்டாமையை ஒழிப்பதற்காக நேரடியாக அவர் பல தீர்வுகளை முன்மொழிந்திருக்கிறார். அதுபோலவே பெண்கள் பிரச்சனையிலும் பலவற்றைத் தீர்வுகளாக முன்வைத்திருக்கிறார்.  இந்தப் பிரச்சனைகள் பல அம்சங்களில் ஒத்த தன்மை கொண்டவை என்பதால் ஒன்றுக்குச் சொன்னதை மற்றதற்குப் பயன்படுத்த முடியும். பெண்னியவாதிகள் கூறிய கருத்துகள் பலவும் தலித் பிரச்சனைக்குப் பயன்படக்கூடியதாக இருப்பது அதனால்தான்.

பெண்களின் பாதுகாப்புக்கென காந்தியடிகள் சொல்லியிருக்கும் ஒரு கருத்து ஒவ்வொரு நிமிடமும் சாதிய வன்கொடுமைகளும், பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்றையச் சூழலுக்கு மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது. அதை இங்கே தருகிறேன்:

“ ஆணோ அல்லது பென்ணோ சாவைப் பற்றிய பயத்தையெல்லாம் விட்டொழித்திருந்தால் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளுவது அவர்களாலே முடியும். உண்மையில் சாவுக்கு அதிகமாக நாம் பயந்துவிடுகிறோம். இதனால் முடிவில் அதிகமானதாயிருக்கும் உடல் வலுவுக்குப் பணிந்துபோய்விடுகிறோம்.படையெடுத்து வந்தவனுக்குச் சிலர் முழந்தாளிட்டு வணங்கிவிடுவார்கள். சிலர் லஞ்சம் கொடுக்க முற்படுவர்.சிலர் வயிற்றினாலேயே ஊர்ந்து செல்வதற்கும் மற்ற அவமானகரமான முறைகளுக்கும் உடன்படுவர்.சில பெண்கள் சாவதற்குப் பதிலாகத் தங்கள் உடலையே ஒப்படைத்தும் விடுவார்கள்.குற்றம்கூறும் உணர்ச்சியுடன் இதை நான் எழுதவில்லை.மனித சுபாவத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறேன்.நமது வயிற்றினாலேயே நாம் ஊர்ந்து சென்றாலும் சரி, அல்லது ஒருவனுடைய காம இச்சைக்கு ஒரு பெண் இடங்கொடுத்துவிட்டாலும் சரி, இழிவானதொன்றைச் செய்வது உயிர்மேல் வைத்திருக்கும் ஆசையைத்தான் காட்டுகிறது. ஆகையால் உயிரை எவன் இழக்கிறானோ அவனே அதைக் காக்க முடியும். “தேனத்யக்தேன புக்ஜீதா” . ஒவ்வொருவரும் இந்த ஒப்பற்ற சுலோகத்தை மறவாமல் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.இதில் வெறும் வாயளவு நம்பிக்கை போதாது.அது உள்ளத்தின் ஆழத்தில் ஊடுருவி நிற்கவேண்டும். வாழ்வின் இன்பத்தை அனுபவிக்க வாழ்வின்மீதிருக்கும் ஆசையை ஒருவர் விடவேண்டும். அதுவே நமக்குச் சுபாவமாகிவிட வேண்டும்” ( மகாத்மா காந்தி நூல்கள் ,இரண்டாம் தொகுப்பு, தமிழாக்கம்: ரெ.வெங்கடராஜுலு, காந்தி நூல் வெளியீட்டுக் கழகம்,சென்னை, இரண்டாம் பதிப்பு , 1961, பக்கம் 690-691)

காந்தியடிகள் வன்முறை கூடாது என்றவர்தான் அகிம்சையை வலியுறுத்தியவர்தான்.ஆனால் தனது மரணத்தைத் தானே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை எத்தகைய அதிகாரத்தைத் தரும் என்பதை அவர் நன்றாகவே உணர்ந்திருந்தார். மரணத்தின்மீதான அதிகாரத்தை மிகவும் ஆற்றலோடு பயன்படுத்திய ஒரே தலைவர் அவர்தான்.அவரது உண்ணாநிலைப் போராட்டங்கள் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.

சாதிய வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் தலித்துகள் தமது உரிமையைப் பறித்துக்கொண்டவர் என்றுதான் காந்தியடிகளைக் கருதுகிறார்கள்.அதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.என்றபோதிலும், தலித்துகள் காந்தியடிகளிடமும் கற்கவேண்டியவை இருக்கின்றன. ”தீண்டாத மக்களே ! உங்கள் இழிவுகளை யார் ஏற்படுத்தினார்களோ அவர்களே அதைத் துடைக்க உதவுவார்கள் என நீங்கள் எண்ணி ஏமாறாதீர்கள்! உங்களது உயிர் அச்சத்தை விட்டொழிக்காமல் உங்களது இழிவைத் துடைத்துக்கொள்ள முடியாது”. வாழ்வையும் மரணத்தையும் பற்றி காந்தியடிகள் சொல்லியிருக்கும் கருத்து இந்த செய்தியைத்தான் தலித்துகளுக்குக் கூறுகிறது.

No comments:

Post a Comment