Monday, April 22, 2013

நீதிபதி வர்மா காலமாகிவிட்டார்

நீதிபதி வர்மா காலமாகிவிட்டார் என்ற செய்தியை பர்க்கா தத்தின் ட்விட்டர் செய்தியில் பார்த்தேன். அடடே என மனம் வருந்தியது.

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து அவர் அளித்த அறிக்கையை தமிழ்நாட்டில் எத்தனைபேர் படித்தார்கள் எனத் தெரியாது. அண்மைக்காலத்தில் அளிக்கப்பட்ட மிகச் சிறந்த அறிக்கை அது. அதை தயாரித்ததில் பலரும் பங்களித்திருக்கிறார்கள் எனினும் அதன் சாராம்சம் அவரால் தீர்மானிக்கப்பட்டதாகவே இருக்கவேண்டும். அவர் முன்வைத்த பரிந்துரைகள் அனைத்தையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை. குறிப்பாக சாதிப் பஞ்சாயத்து, கௌரவக் கொலைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றவேண்டுமென அவர் தனது அறிக்கையில் பரிந்துரைத்திருந்தார். ஆனால் அதைப்பற்றி மன்மோகன் சிங் அரசு அக்கறைகாட்டவில்லை. அதைவிட மோசம் அதை எந்தவொரு அரசியல் கட்சியும் பாராளுமன்றத்தில் வலியுறுத்தவில்லை.

நீதிபதி வர்மா அதிர்ச்சியடைந்திருக்கவும் அதனால் உயிரிழந்திருக்கவும் சாத்தியம் இருக்கிறது. தனது அறிக்கை அச்சிடப்பட்ட காகிதத்தின் மணம் மங்குவதற்கு முன்பே ஐந்து வயது குழந்தை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கேட்டு அவரது நெஞ்சு துடித்திருக்கும்.

இப்படியொரு நாட்டில் நீதிபதி என வாழ்வதைவிடவும் காலத்தில் கரைந்துபோவதே சிறந்தது என அவரது ஜீவன் கருதிவிட்டதுபோலும்!
நீதிபதி வர்மா அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை அவரது பரிந்துரைகள் அனைத்துக்கும் சட்ட வடிவம் கொடுப்பதுதான். அதைச் செய்யும் அளவுக்கு ஈர மனம் கொண்ட ஆட்சியாளர்களா நமக்கு வாய்த்திருக்கிறார்கள்?

No comments:

Post a Comment