Sunday, February 24, 2013

ஈழம் : ரவிக்குமார் கவிதைகள்





வாக்குமூலம் 1

தாயின் உதிரத்தில்
தாகம் தணிபவர்கள்
தந்தையின் தலைகொய்த மரபினர்
சகோதரனோ சகோதரியோ
எமக்கில்லை, எல்லாம் பிறர்தான்
பிள்ளைக்கறி கேட்டதெம் கடவுள்
எம்மிடத்தில்
காட்டுகிறாய் பாலகன் ஒருவனின் சடலத்தை
கருணை சுரக்குமென எதிர்பார்த்து.

எமக்கோ
நாக்கு சுரக்கிறது



வாக்குமூலம் 2

வானூர்தியின் இரைச்சல் கடக்கும் முன்
வெடித்துச் சிதறுகிறது தாயின் உடல்
பதுங்கு குழிகளில் அலறும்
பிள்ளைகளின் குரல்களை அமுக்குகிறது
இன்னொரு வெடிப்பு
பொருள் எது உடல் எது
எங்கும் சிதறல்கள்
இடைக்கிடை பேசுகிறவர்களின்
வாய்களிலிருந்து தெறிக்கிறது ரத்தம்

பின்புலத்தில் அடர்ந்தெழும்  
புகையின் கறுப்புக்கும்
ரத்தத்தின் சிவப்புக்கும் இடையிலான
முரண் அழகை ரசிக்கிறதெம் மனம்




வாக்குமூலம் 3

கதவுகள் இல்லா வீட்டைத்
தட்டிக்கொண்டிருப்பது
உனது தவறு
தொழுநோயாளியின் சருமத்தில்
உஷ்ணம் உரைப்பதில்லை
ஒரு லட்சம் சடலங்கள்
என்கிறாய்
அவ்வளவையும்
ஒரு சுவரொட்டிக்குள் அடக்குவது எவ்விதமென
யோசிக்கிறேன் நான்




  




No comments:

Post a Comment