Thursday, December 13, 2012

கறுப்பின மக்கள் காத்திருக்கிறார்கள் - ரவிக்குமார்




அதுவொரு சனிக்கிழமை – அமெரிக்க அதிபர் ஒபாமா சிறிய புத்தகக் கடை ஒன்றில் தன் இரண்டு மகள்களுடன் நுழைகிறார். கிறிஸ்துமஸ் பரிசாகக் கொடுப்பதற்கு குழந்தைகளுக்கான பதினைந்து புத்தகங்களை வாங்குகிறார்.  அமெரிக்காவில் கடைபிடிக்கப்படும் ‘ ஸ்மால் பிசினஸ் சாட்டர்டே ‘ என்ற நிகழ்வின் பகுதியாக அவர் செய்த ’ஷாப்பிங்’ அது. சிறு வணிகர்களை ஊக்குவிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு முதல் ’ஸ்மால் பிசினஸ் சாட்டர்டே’ அமெரிக்காவில் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. சில்லறை வர்த்தகம்தான் அமெரிக்காவில் மூன்றில் இரண்டு பங்கு வேலை வாய்ப்புகளை வழங்கிவருகிறது.அதை வலுப்படுத்துவதற்கே இந்த ஏற்பாடு. 

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க இந்திய பிரதமர் ஒற்றைக்காலில் நிற்கிறார். அமெரிக்க அதிபர் ஒபாமாவோ சிறு வணிகர்களை ஊக்குவிக்கிறார். மன்மோகன் சிங்கைப்போல ஒபாமா ஒரு பொருளாதார நிபுணர் அல்ல. தனது நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஒரு மனிதர், அவ்வளவுதான்.

ஒபாமா முதல் முறை அமெரிக்க அதிபரானபோது அவர் இரண்டாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்படுவார் என யாரும் எண்ணியிருக்க முடியாது. எனென்றால் அமெரிக்கா அந்த அளவுக்கு சமத்துவத்தை மதிக்கும் ஜனநாயக நாடு அல்ல. பெண்களுக்கும் கறுப்பின மக்களுக்கும் வெகுகாலம்வரை வாக்குரிமைகூட கொடுக்காமல் இருந்த நாடு அது. கடந்த முறை அதிபரானபோது ஒபாமா சொன்னார் : “''இந்தத் தேர்தல் 'முதன்முதல்' என்று சொல்லத்தக்க பல விஷயங்களைப் பெற்றிருக்கிறது. தலைமுறை தலை முறையாக சொல்லப் படப்போகும் பல கதைகளைக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்றிரவு என்னுடைய மனதில் பதிந்திருக்கிறது ஒரு காட்சி. அட்லாண்டாவில் வாக்களித்தார் ஒரு பெண். வரிசையில் நின்று வாக்களித்த லட்சக்கணக்கான வர்களில் அவரும் ஒருவர். ஒரே ஒரு வித்தியாசம். ஆன் நிக்ஸன் கூப்பர் என்ற அந்தப் பெண்மணிக்கு நூற்று ஆறு வயது. அவர் இந்த நாட்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதற்கு அடுத்து வந்த தலைமுறையில் பிறந்தவர். அது சாலைகளில் இந்த அளவுக்குக் கார்கள் செல்லாத காலம். வானில் இவ்வளவு விமானங்கள் பறக்காத காலம். இவரையொத்தவர்கள் இரண்டு காரணங்களால் வாக்களிக்க முடியாதிருந்த காலம் - ஏனென்றால் அவர் ஒரு பெண், அடுத்தது அவருடைய தோலின் நிறம் கறுப்பு'' என்று மிகவும் கவித்துவத்தோடு அதை ஒபாமா வர்ணித்தார்.

இப்போது அமெரிக்காவில் பெண்கள் வாக்களிக்க எந்தவிதத் தடையும் இல்லை. ஆனால், கறுப்பின மக்களின் நிலை அப்படியல்ல. அவர்களுக்கு வாக்குரிமை இருக்கிறது என்றபோதிலும், அதைப் பயன்படுத்த ஏராளமான தடைகள் உள்ளன. உலகில் மிக அதிகமான சிறைக் கைதிகளைக்கொண்ட நாடு அமெரிக்கா. கைதிகளில் பெரும்பான்மையோர் கறுப்பினத்தவர். விடுதலை செய்யப்பட்டாலும்கூட வாக்குரிமையை அவர்கள் மீண்டும் பெறுவது அவ்வளவு எளிதல்ல. இப்படி வாக்குரிமை பறிக்கப்பட்ட லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் அமெரிக்காவில் உள்ளனர். வாக்களிப்பதற்கான அடையாள அட்டை கறுப்பினத்தவரில் பலரிடம் கிடையாது. இந்த இடர்பாடுகள் இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏனென்றால் அமெரிக்க மாகாணங்களில் வெள்ளை இனத்தவரின் ஆதிக்கம்தான் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலின்போது ஒபாமாவின் ஆதரவாளர்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்கு என்னென்ன ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன என்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம்.அவற்றை எல்லாம் தாண்டித்தான் கறுப்பினத்தவர் பெருமளவில் வாக்களித்தார்கள். இப்போது ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஏற்கெனவே கறுப்பினத்தைச் சேர்ந்த பலர் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்திருக்கிறார்கள். ஆனால், அதிபராக அல்ல. வேலைக்காரர்கள் செல்லும் பின்கட்டு வழியாகப் போயிருக்கிறார்கள். அமெரிக்க அதிபரைக் கறுப்பர் ஒருவர் சந்திப்பதேகூட ஒரு காலத்தில் அபூர்வமாக இருந்தது. ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது அவரை கறுப்பினத் தலைவர் ஃப்ரடெரிக் டக்ளஸ் மூன்றுமுறை சந்தித்துப் பேசினார். அது அப்போது கறுப்பினத்தவரால் மிகப் பெரிய சாதனையாகக் கொண்டாடப்பட்டது.

வெள்ளை மாளிகைக்கு விருந்தாளியாகச் செல்வது வேறு; அங்கேயே அதிபராகத் தங்கியிருப்பது வேறு. 1904-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முதல் கறுப்பரான ஜார்ஜ் எட்வின் டெய்லர் என்பவர், கறுப்பினத்தவர் செய்யவேண்டிய புரட்சியைப்பற்றித் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அது வன்முறையான புரட்சி அல்ல; வாக்குச்சீட்டுகளின் மூலமான புரட்சி. ஒபாமா மூலம் அந்தப் புரட்சி நடந்திருக்கிறது.


ஒபாமா முதலில் அதிபரானபோது அவர் என்ன செய்யவேண்டும் என்பதைப்  புகழ் பெற்ற அமெரிக்க கறுப்பினப் பெண் எழுத்தாளர் ஆலிஸ் வாக்கர் ஒபாமாவுக்கு எழுதிய திறந்த மடலொன்றில் தெரிவித்திருந்தார்: ''மற்றவர்களின் எதிரிகளை உங்களுடைய எதிரிகளாகக் கருதாதீர்கள். அச்சத்தால், அவமானத்தால், வேதனையால்தான் அவர்கள் நமக்குக் கெடுதல் செய்கிறார்கள். அத்தகைய உணர்வுகள் நம் எல்லோரிடத்திலும் உள்ளன... நீங்கள் இப்போது அமெரிக்காவின் முப்படைகளுக்கும் தலைவராகப் போகிறீர்கள், நம்முடைய நாட்டைக் காக்கும் பெரும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. என்னுடைய அம்மா அடிக்கடி சொல்லும் பைபிள் வாசகம் ஒன்றை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்பு கிறேன். 'பாவத்தை வெறுங்கள், ஆனால், பாவிகளை நேசியுங்கள்.' அதை ஒபாமா மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டார் போல் தெரிகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் நடத்திய ஆட்சி பாவிகளை நேசிப்பதாகவே அமைந்தது. உலகமெங்கும் கொடுங்கோல் ஆட்சி செய்யும் பாவிகள். பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரால் போர்க் குற்றங்களைச் செய்யும் பாவிகள். சொந்த நாட்டு மக்களின் நலனைப் புறக்கணித்து தமது நாட்டை அன்னிய சக்திகளின் வேட்டைக்காடாக்கும் பாவிகள். அத்தகைய பாவிகளையெல்லாம் நேசிப்பதாகவே ஒபாமாவின் ஆட்சி இருந்தது.

அதிகாரத்துக்கு வந்ததும் தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் பேசியவையெல்லாம் அவருக்கு மறந்துபோய்விட்டன. ''சிகாகோவின் தென்பகுதியில் ஏதோ ஒரு குழந்தை படிக்க முடியாமல் இருக்குமானால், அது எனக்கு முக்கியமான விஷயம், அந்தக் குழந்தை என்னுடைய குழந்தை இல்லையென்றாலும்கூட! ஏதோ ஓரிடத்தில் ஒரு முதியவர் மருந்து வாங்குவதற்குப் பணமில்லாமல் தவித்தால் அது என்னை பாதிக்கிறது, அவர் என்னுடைய தாத்தாவாக இல்லாவிட்டாலும்கூட! அமெரிக்காவின் ஏதோ ஒரு பகுதியில் அரபு அமெரிக்கக் குடும்பம் ஒன்று போலீஸால் சுற்றி வளைக்கப்பட்டு... எவ்வித சட்ட உதவியுமின்றி துன்புறுத்தப்பட்டால் அது என்னுடைய சிவில் உரிமைகளைப் பாதிப்பதாகவே உணர்கிறேன்'' என்று உணர்ச்சி ததும்ப அவர் பேசிய வார்த்தைகள் ஒரு அரசியல்வாதியின் ஜோடனைப் பேச்சுகளாகவே முடிந்துபோயின.

அமெரிக்காவில் தாம் அனுபவித்துவரும் இனவொதுக்கல் பிரச்சனைகளுக்கு ஒபாமாவின் ஆட்சி முற்றுப் புள்ளி வைக்குமென கறுப்பின மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதிபரான பிறகு அவர் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெறுவதில்தான் குறியாக இருந்தார். முதலில் கறுப்பின மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அவர்களது பிரச்சனைகளைப் பேசுவது பிறகு அதைக் கைவிட்டுவிட்டு அனைவருக்குமான பிரதிநிதி என்பதுபோல தன்னைக் காட்டிக்கொள்வது என்பது அமெரிக்காவில் பெரும்பாலான கறுப்பின அரசியல்வாதிகளின் அணுகுமுறையாக இருக்கிறது. அதை கறுப்பினத்தவரும் நன்றாகவே அறிவார்கள்.

2007 ஆம் ஆண்டில் ஒபாமா செனட்டராக இருந்தபோது ஆறு கறுப்பின இளைஞர்கள் ஒரு வெள்ளையின இளைஞரைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர். அது பெரும் கொந்தளிப்பைக் கறுப்பின மக்களிடம் ஏற்படுத்தியது. அப்போது அவர்களிடையே பேசிய ஒபாமா ” இப்போது துணிச்சலோடு செயல்படாமல் இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்படியொரு சம்பவம் பற்றிப் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை. இது டெலிவிஷன் காமிராக்கள் அணைந்ததும், பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளிலிருந்து விலகியதும் மறக்கப்படுகிற இன்னொரு சம்பவமாக ஆகிவிடக்கூடாது” என்று ஆவேசமாகப் பேசினார். தான் அமெரிக்க அதிபராக வந்தால் ”நீதி வழங்கும் நடைமுறை நியாயமாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்வேன். இனவொதுக்கல் முறையை முற்றாக ஒழிக்க சட்டமியற்றுவேன். அப்பாவி மக்கள் நீதியின் பெயரால் கொல்லப்படும் மரணதண்டனை முறையை ஒழிப்பேன்” என்றெல்லாம் முழங்கினார். ஆனால் அதில் எதுவும் நடக்கவில்லை.

ஒபாமா அதிபரான சில காலத்திலேயே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த புகழ்பெற்ற கறுப்பின சிந்தனையாளர் ஹென்றி லூய் கேட்ஸ் ஜூனியர் பூட்டியிருந்த தனது வீட்டுக்குள் நுழைய முற்பட்டபோது வீட்டை உடைத்துக் கொள்ளையடிக்க முயற்சித்தாரென்ற தவறான குற்றச்சாட்டின்கீழ்  கைதுசெய்யப்பட்டார். ’போலீஸ்காரர்களின் முட்டாள்தனம்’ என அதை ஒபாமா முதலில் கண்டித்தார். ஆனால் உடனே போலீஸ்காரர்களை சமாதானம் செய்வதற்காகத் தன் வீட்டில் அந்தப் பேராசிரியருக்கும் அவரைத் தவறாகக் கைதுசெய்த போலீஸ்காரருக்கும் பியர் விருந்து அளித்தார். ஒபாமாவின்  இந்த  சமரச அணுகுமுறை கறுப்பினத்தவரிடையே அதிர்ச்சியை உண்டுபண்ணியது.

அமெரிக்காவில் அதிகரித்துவரும் வேலையில்லா நிலை எல்லோருக்குமானது என்றாலும் கறுப்பினத்தவரிடையே அது அதிக அளவில் உள்ளது. கறுப்பினத்தவருக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க அவர் முயற்சி எடுப்பாரென எதிர்பார்த்தார்கள். ஆனால் அதையும் அவர் செய்யவில்லை. அதுபற்றிக் கேட்டபோது ‘ எல்லோரது படகுகளும் முன்னோக்கிச் செல்லுமாறு பொருளாதாரத்தை உயர்த்துவதே தனது குறிக்கோள் ‘ என்றார். அது சரிதான்! ஆனால், படகே இல்லாதவர்களின் நிலை என்ன என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. 

கறுப்பினத்தவருக்கு எதுவும் செய்யாமல் ஒபாமா கைவிட்டபோதிலும் அவரைக் கறுப்பராகவே வெள்ளையர்கள் கருதுகிறார்கள். அவர் ஆட்சியில் இருந்த கடந்த நான்கு ஆண்டுகளில் வெள்ளை நிறவெறிக் குழுக்கள் அமெரிக்காவில் அதிகரித்துவிட்டன. ’சதர்ன் பாவர்டி லா செண்டர்’ என்ற அமைப்பு எடுத்த புள்ளிவிவரம் நமக்கு அதைத்தான் உணர்த்துகிறது. தற்போது 1018 நிறவெறிக் குழுக்கள் அமெரிக்காவில் தீவிரமாக இயங்கிவருகின்றன என அது தெரிவித்துள்ளது. அப்படியான நிறவெறியர்களால் தொடர்ந்து கறுப்பின மக்கள் தாக்கப்படுகின்றனர். அதைத் தடுப்பதற்கு ஒபாமாவின் அரசு உருப்படியாக எதையும் செய்யவில்லை. அவர் மீண்டும் அதிபராக அறிவிக்கப்பட்டபோது ‘ மீண்டும் இந்த நீக்ரோவின் ஆட்சியின் கீழ் நான்கு வருடங்களா? இந்த முறை இவனை யாராவது கொல்வார்கள்” என்று வெள்ளை இனத்தைச் சேர்ந்த டெனிஸ் ஹெல்ம்ஸ் என்ற இளம் பெண் தனது முகநூலில் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிபருக்கே அந்த அகதி என்றால் சாதாரண கறுப்பின ஏழைகளின் நிலை என்ன என்பதை நாம் யூகிக்கலாம். 

கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அமெரிக்க அதிபர் தங்களுக்கு ஆதரவாகச் செயல்படவேண்டும் என கறுப்பின மக்கள் சொல்லவில்லை. அமெரிக்காவின் குடிமக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்றுதான் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஒபாமா அதிபராக இல்லாதபோது அவர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடியதுபோல இப்போது அவர்களால் போராட முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் ஒபாமா அதிபராக இருக்கவேண்டும் என விரும்புகிறார்கள். தங்களுடைய போராட்டம் அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடக்கூடாது என எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.தமக்கு எதுவும் செய்யாவிட்டாலும்கூட அவர் அமெரிக்க அதிபராக இருப்பது கறுப்பின மக்களுக்குத் தெம்பைக் கொடுக்கிறது. தாமும் மனிதர்கள்தான் என்ற உணர்வைக் கொடுக்கிறது. தங்களாலும் ஆள முடியும் என்ற தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது.ஒபாமா அவர்களுக்கு அதிபர் மட்டுமல்ல, காலம் காலமாக ஒடுக்கப்பட்டிருக்கும் ஒரு இனத்தின் குறியீடு.

குறியீடாகக் கருதி ஒபாமாவை கறுப்பின மக்கள் ஆதரித்து நின்றதால்தான் அவர் மீண்டும் அதிபராக முடிந்தது. ஆனால், இந்தக் குறியீட்டு அரசியலுக்கு ஒரு எல்லை இருக்கிறது. வெகுகாலத்துக்கு இப்படிக் குறியீடாக மட்டுமே அவர் இருக்கமுடியாது. கறுப்பின மக்களின் தொடர்ந்த ஆதரவு வேண்டுமென்றால் ஒபாமா அமெரிக்காவில் சமத்துவத்தை நிலைநாட்ட முன்வரவேண்டும். சமரசம் என்பது பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பலியிடுவதாக இருக்கக்கூடாது. இது ஒபாமாவுக்குத் தெரியாத ஒன்றல்ல.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது நடந்த சம்பவம் இது: அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம். வாக்களிப்பதற்காகக் காத்திருக்கும் நீண்ட கியூ. வெள்ளையர் ஒருவர் தனக்கு முன்னே நிற்கும் கறுப்பரிடம் நட்புணர்வோடு கேட்கிறார்:

''ரொம்ப நேரமா வெய்ட் பண்றீங்களா?''

அதற்கு அந்த கறுப்பர் பதிலளிக்கிறார்:

''ஆமாம்! இருநூறு வருஷமா..!''

உண்மைதான்! ஒபாமா இரண்டாவது முறையும் அதிபராகிவிட்டார். ஆனால் அமெரிக்க கறுப்பின மக்கள் இன்னும் காத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment