Thursday, November 8, 2012

தமிழ் : மரபும் தற்காலமும் ஃப்ரான்ஸுவா குரோவுடன் ஒரு நேர்காணல் : ரவிக்குமார்




------------------------------------------------------------------------------------------------------------
1960களின் ஆரம்பத்திலிருந்து தமிழில் ஆராய்ச்சி செய்துவரும் ஃப்ரான்ஸுவா குரோ (Francois Gros) பாரீஸில், பாரீஸ் பல்கலைக் கழகத்தின் கீழ்வரும் உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Ecole Pratique Des Hautes Etudes) தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான (Philology) பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
பாண்டிச்சேரி ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டின் இந்தியவியல் துறையில் தனது ஆராய்ச்சிப் பணியைத் துவக்கிய குரோ 1977 முதல் 1989 வரை தூரக் கிழக்கு நாடுகளுக்கான ஃப்ரெஞ்ச் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.
சங்கத் தமிழிலிருந்து தற்காலத் தமிழ்வரை நீளும் இவரது ஈடுபாடு பல்வேறு தமிழ்ப் படைப்புகளை ஃப்ரெஞ்ச் மொழிக்குக் கொண்டு சென்றுள்ளது.  பரிபாடல் (1968) திருக்குறள் காமத்துப்பால் (1993) இரண்டும் ஃப்ரெஞ்ச்சில் நூல் வடிவம் பெற்றுள்ளன.  தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு வெளிவரவுள்ளது.  
வருடத்தில் சிறு பகுதியைப் பாண்டிச்சேரியில் தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காகச் செலவிடும் குரோ ஃப்ரான்ஸின் தென்கிழக்கில் உள்ள லியோன் நகரத்தில் வசிக்கிறார். இந்த ஆண்டுக்கான இந்திய அரசின் 'குறள்  பீடம் விருது ' அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நேர்காணல் 1997 ஆம் ஆண்டு  தினமணி பொங்கல்  மலரில் வெளியானது. பின்னர் மணற்கேணி இதழ் 4 இல் மறுபிரசுரம் செய்யப்பட்டது. நேர்காணலும் , குறிப்புகளும் : ரவிக்குமார் 
---------------------------------------------------------------------------------------------------------------------------------- 

முப்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் இயங்கிவரும் நீங்கள் தமிழ்மொழியை, அதன் ஆற்றலை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

ஒரு மொழியை மதிப்பீடு செய்யுமளவுக்குத் தகுதி படைத்த ஒரு நபராக என்னை நான் கருதிக் கொள்ளமாட்டேன்.  ஒரு மொழியை மதிப்பிட ஒருசில சோழர்காலக் கோயில்களில் இருக்கும் அளவுகோலைப் போன்ற ஏற்பாடு எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.  வேறொரு மொழியை, கலாச்சாரத்தைச் சேர்ந்தவர் என்கிற வகையில் அத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பதில் கூறும்படி நீங்கள் கேட்டால் அப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதும் தர மதிப்பீடு செய்வதும் அர்த்தமற்றவையென நான் சொல்வேன். "படிநிலைப் படுத்துதல் என்பது அர்த்தமற்றது.  எந்தக் கலாச்சாரம் மிகவும் வளர்ச்சியடைந்ததாயுள்ளது எனக் கண்டறியும் நோக்கத்தோடு கலாச்சாரங்களை ஒப்பீடு செய்யும் எந்தவொரு முயற்சியும், தனது நிழல்களைத் தானே வெறுக்கின்ற மேற்கத்திய கலாச்சாரத்தின் மற்றுமொரு கீழ்த்தரமான வெளிப்பாடுதான்" என டேனிஷ் எழுத்தாளர் பீட்டர் ஹாக் எழுதியதை இங்கு மேற்கோள் காட்டுவது  பொருத்தமாயிருக்கும்.  நான் மதிப்பீடு செய்ய விரும்பவில்லை;  மாறாக இந்தச் சூழலைப் புரிந்து கொள்ளவே விரும்புகிறேன்.

நீங்கள் தமிழ் மரபைப் புரிந்துகொள்ளும் விதம் பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா?

ஒரு கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் வேறுபட்ட அணுகுமுறைகள் என்பவை ஒரு நீண்ட, முதிர்ந்த மரபின் விளைவாகவோ அல்லது புதிதாக ஒன்று உள்வாங்கப்படும்போது உண்டாகும் தாக்கத்தினாலோ ஏற்படுகின்றன.  தொழில் நுட்பத் (Technology) தளத்தில் போலவே ஒருவர் கலாச்சாரப் பரிவர்த்தனைகள் குறித்தும் பேசியாக வேண்டும்.  இது ஒருபோதும் ஒருவழிப்பட்டதல்ல.  உதாரணமாகக் குறிப்பிட்டால் தமிழில், சமஸ்கிருதத்தில் தோன்றிய ஏராளமான உரைகளைச் சொல்லலாம்.  தமிழ் இலக்கண மரபென்பது, தொல்காப்பியத்திலிருந்து சங்க இலக்கியம் பற்றி எழுதப்பட்ட மத்திய கால உரைகள் வரை தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு மரபின் முக்கியமான உதாரணமாக உள்ளது.  இது தனது சொந்தக் கண்டுபிடிப்புகளை மீண்டும், மீண்டும் செறிவூட்டித் தான் கண்டடைந்த விளைவுகளை விரிவுபடுத்தி மேலும் உயர்ந்த நுட்பங்களை நோக்கிக் கொண்டு செல்கிறது.  இது மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த இலக்கிய வரலாற்று ஆசிரியர்களை மொழியியலாளர்களை வசீகரிப்பதாயுள்ளது.
ஏனெனில் சொல்லணிகள் குறித்தும்( Phonetics) இலக்கணத்தின் தனிமொழி  (Meta language) குறித்தும், இலக்கண மற்றும் கவிதையியல் (Poetics) பற்றிய கோட்பாடுகளின் வளர்ச்சி, வரலாறு குறித்துமான ஆய்வுகளில் அவர்கள் மூழ்கியிருக்கிறார்கள்.
தமிழில் செய்யப்படும் இம்மாதிரியான ஆய்வுகள் கல்வியியல் ஆய்வுகளென்பது சாதாரணமான விஷயமாக இருக்கும் ஃப்ரான்ஸ், அமெரிக்கா முதலிய நாடுகளிலுள்ள கல்வித்துறை வட்டாரத்தினரிடையே சாதகமான எதிரொலிகளை உண்டாக்கும்.
    மறுபுறம், புத்தகங்களின் வரலாற்றை, அவற்றின் வேறுபாடுகளை, வாசிப்புப் பழக்கங்களை இன்னபிறவற்றை ஆராய்கின்ற வராற்றறிஞர்கள்& ஃப்ரான்ஸில் ரோஜெ ஷாத்தியெ,  அமெரிக்காவில் ராபர்ட் டார்ன்டன்& உள்ளனர்.  அவர்கள் புதிய பார்வையை, எழுத்துலகம் பற்றிய புதிய சிந்தனையைத் தூண்டியுள்ளனர்.  அவர்களது ஆய்வுமுறையை இந்தியாவிற்கும் விரித்துப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமான விஷயமாயிருக்கும் ஏனென்றால் இங்கு ஆரம்பத்திலிருந்து இன்றிருக்கும் வாடகை நூலகங்கள்வரை வாசிக்கும் பழக்கங்களின் சமூகவியல் குறித்து நமக்கு எதுவுமே தெரியாது.  ஒரு கோயில் அர்ச்சகர், ஒரு சிறிய ஜமீன்தார், ஒரு வழக்கறிஞர் முதலியோரின் கலாச்சார உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள, அவர்களுடைய நூலகத் தொகுப்பில் இருக்கும் ஓலைச்சுவடிகள், பிரதிகள் ஆகியவற்றின் பட்டியல்கள், வேற்றுமொழி நூல்கள் போன்றவற்றை நாம் சமூக வரலாற்று நோக்கில் கவனித்தாக வேண்டும்.
இந்த அணுகுமுறையை  எந்தவித கலாச்சாரப் பிரச்சினையும் இல்லாமல் உள்வாங்கிக் கொள்ள முடியும்.  ஏனென்றால் இந்தியாவும்கூட எழுத்துகள், புத்தகங்கள், இலக்கியவாதிகள் சார்ந்த ஒரு உலகம்தான்.  இதில் முரண்பாடு ஏதுமில்லை.
சிகாகோ பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருக்கும் ஷெல்டன் பொல்லாக் தென்னாசியாவின் இலக்கிய வரலாற்றை எழுதுவதை நோக்கமாகக் கொண்டு மேற்கொண்டிருக்கும் ஆராய்ச்சித் திட்டம் இந்த வகையில் கவனத்துக்கு உரியதாகும்.

கலாசாரப் பரிவர்த்தனையில் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்ள முடியுமா?

இங்கு லெ ருவா குரோன்(Le Roi Gourhan) என்பவர்,  கண்டுபிடிப்பு மற்றும் கடன்வாங்கி உள்வாங்குதல் பற்றிக் கூறியதை நினைத்துக் கொள்கிறேன்.  அவர் சொன்னார் : "தான் கண்டுபிடிக்கவிருப்பதைத்தான் ஒருவர் கடன் வாங்குகிறார்"
ஒன்றுக்கொன்று சுயேச்சையான ஒன்றுக்கொன்று வளைந்து கொடுக்கும் தன்மை உடைய கட்டமைப்புக் கூறுகளின் அடிப்படையில் நாம் செயல்படுகிறோம் என அவர் கருதினார்.  புதிய கண்ணிகளை நாம் உருவாக்குகிறோம்.  வெளியிலிருந்து சில கூறுகளை வாங்கிச் சேர்ப்பதன் மூலம் அவற்றை நாம் சாதகமான முறையில் மேம்படுத்த முடியும்.  ஆனால் அப்படிச் சேர்க்கப்படுகிற கூறுகள் ஏற்கெனவே இருக்கின்ற அமைப்போடு பொருந்திப் போவதாயிருக்க வேண்டும்.  இது தத்துவத் துறையில் உள்ள சில கோட்பாடுகளுக்கும், இலக்கிய வடிவங்களுக்கும்கூடப் பொருந்துமென நான் நினைக்கிறேன்.  இருக்கின்ற திசுவுக்கு மிகவும் அன்னியப்பட்டதாக வெளியிலிருந்து வரும் கூறு இருக்குமானால் அது நிராகரிக்கப்பட்டுவிடும்.

தமிழில் சுயமான கோட்பாட்டை உருவாக்க வேண்டும் என்கிற குரலை எப்படிப் பார்ப்பீர்கள்?

இப்போதைய சூழலில் இதுபற்றிக் கூறுவது அவ்வளவு சாத்தியமில்லை.  மக்கள் தமது கலாச்சாரத்தை, சூழலைப் புரிந்துகொள்ளும் தேடலோடிருக்கிறார்கள்.  மண்சார்ந்த சுயமான அடையாளம் என்பதைக் கேள்விப்படும்போது, எதிர்கொள்ளும்போது எனக்கு ஒருவித தயக்கம் உண்டாகிறது.
சுயமான அடையாளம் என்கிறபோது அதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.  தனி மனிதத்துவம், இனம் (Ethnicity) என்பவற்றின் வரையறைகள்; இங்கு நிலவும் பல்வேறு விஞ்ஞானங்களின் நிலைகள்; அவை பற்றிய விளக்கங்கள்; தமிழ்ச் சூழலில் தனி மனிதத்துவம் என்பதை வடிவமைக்கிற விஷயங்கள் என இந்தப் பிரச்சினை பலவற்றோடு தொடர்பு கொண்டுள்ளது.
வேர்களை நோக்கித் திரும்ப வேண்டும், அடிப்படையான கருத்துநிலைகளை நோக்கி, அடிப்படையான மதிப்பீடுகளை நோக்கித் திரும்ப வேண்டும் என இதை அர்த்தப்படுத்தினால் நான் இப்படியான வாதங்கள் குறித்து எப்போதும் சந்தேகம் கொண்டிருக்கிறேன்.  மரபான மதிப்பீடுகள், பழைமை குறித்த ஏக்கங்கள் என்பவற்றை நான் ஐயத்தோடு பார்க்கிறேன்.

தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளை ஃப்ரெஞ்சுக்கு மொழி பெயர்த்துள்ளீர்கள்.  அவை உலகத் தரத்துக்கு உள்ளனவா?

தற்கால இலக்கியத்தின் மீதான எனது ஈடுபாடு மொழி சார்ந்தது.  இங்கு பல்வேறு பிரதிகளை மானுடவியல் நோக்கில் அணுக முடியும்.  தற்கால வாழ்க்கை நிலைகளைக் கூறுவனவாக, அறிமுகப்படுத்துபவையாக அவை இருக்கின்றன.  தமிழ் வாழ்க்கையை மானுடவியல் ரீதியில் அணுகுவதற்கான மிகச் சிறந்த வழியாக எனக்கு அது தோன்றுகிறது.  ஆனால் இலக்கியமென்று பார்த்தால் பிரச்சினை சிக்கலாகிவிடுகிறது.
உலக அளவில் அறியப்படவேண்டுமெனில் மொழிபெயர்ப்புகள் செய்யப்பட வேண்டும்.  மற்ற மொழிகளுக்கு இருப்பது போன்று தமிழுக்கு வாதிடுபவர்கள் ஆதரவு தேடுபவர்கள் (Lobby) இல்லை.  அதுபோலவே சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன.
"சம்ஸ்காரா" நாவலுக்குக் கிடைத்தது போல் நல்ல மொழிபெயர்ப்பு தமிழுக்குக் கிடைக்கவில்லை.  இங்கே மொழிபெயர்ப்பவர்கள் தம்முடைய கருத்தியல் சட்டகத்துக்குள் படைப்பை அடக்கி விடுகிறார்கள்.  அதனால் அதன் அசலான தொனி அடிபட்டுவிடுகிறது.  இப்படியாகப் பார்த்தால் நாம், மொழிபெயர்ப்பிலுள்ள பிரச்சினைகளைப் பேச வேண்டிவரும்.
அடுத்து, இங்கு வீர்யம் மிக்க படைப்புகள் உள்ளனவா என்று கேட்டால் நிச்சயம் உள்ளன என்று சொல்வேன்.  உதாரணம் வேண்டுமென்று கேட்டால் ஜி. நாகராஜனின், புதுமைப்பித்தனின், மௌனியின், லா.ச. ராவின் சில சிறுகதைகளை நான் குறிப்பிடுவேன்.  இவர்களைத் தமிழின் முழுமையான எழுத்தாளர்களாகக் கருத முடியும்.
பிரபஞ்சனின் "சங்கம்" சிறுகதை மானுடவியல் நோக்கில் முக்கியமானது.  ஆனால், உலகத் தரத்தில் உள்ள ஒரு சிறுகதையாக அதை எடுத்துக்கொள்ள முடியாது.
"கோவேறு கழுதைகள்" நாவலில் பார்த்தால் இமையத்திடம் ஒரு கதை இருப்பது தெரிகிறது.  ஒரு முக்கியமான பிரச்சினையை அவர் சொல்ல முயன்றுள்ளார்.  நல்ல முயற்சி.  ஆனால் ஒரு எல்லைக்குமேல் அது போகவில்லை.  அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ கதையின் இறுதி வரிகள் அக்கதையை அவரது கருத்தியல் சட்டகத்துக்குள் அடைத்துவிடுகின்றன.
இதில் இன்னொரு விஷயமும் வருகிறது.  நுட்பம் என்கிற விஷயம்.  இமையத்தின் நாவல் பலமுறை "எடிட்" செய்யப்பட்டு மறுபடி எழுதப்பட்டதாக அறிந்தேன்.  இத்தகைய ஒரு "எடிட்டிங்" ஒரு எழுத்தாளரின் விருப்பத்திற்கு உகந்ததாக இல்லாமல் இருந்தாலும்கூட, மறுபுறம் அது அவருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்.  அப்படி "எடிட்" செய்யப்படாதிருந்தால் இத்தனை நேர்த்தியான பிரதியாக அது அமைந்திருக்காது.
நுட்பம் என்கிற விஷயத்தைப் பொறுத்தவரை பயிற்சியும் அவசியமாகிறது.  அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் சிலவற்றில் எப்படி கதை எழுதுவது எனக் கற்றுத் தருகிறார்கள்.  ஒரு படைப்பை உருவாக்குவது எப்படியென்று யாரும் யாருக்கும் கற்றுத் தந்துவிட முடியாதுதான்.  ஆனால் அதேசமயம் ஒரு படைப்புக்குள் என்னென்ன கூறுகளை எப்படியெப்படி அமைப்பது, அந்த வெளியை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது போன்ற விஷயங்களை ஒருவர் பயிற்சி மூலம் தெரிந்து கொள்ள முடியும்.  ஒரு படைப்பின் தீவிரத்தை நீங்கள் உணரும்போது பொதுவான உலகத் தரம் ஒன்று உள்ளதென்றுதான் நினைப்பீர்கள்.  ஆனால் ஒரு படைப்பில் எங்கே எப்படி தீவிரமான வெளிப்பாடு அமையவேண்டும் என அடையாளம் காட்டுவது சிரமமானது.

தமிழில் மிகவும் புதுமையானதெனக் கூறப்பட்ட ஜே.ஜே.: சில குறிப்புகள் நாவலை நீங்கள் மரபின் தொடர்ச்சியாகக் கணித்திருக்கிறீர்கள்.  மரபின் தொடர்ச்சி என்பதை நீங்கள் அர்த்தப்படுத்துவது எவ்வாறு?

சமய மரபுகள் அல்லது இலக்கிய வடிவங்களின் தொடர்ச்சி பற்றி மதிப்பிடும்போது தமிழ்க் கலாசாரத்தின் இயக்கமற்ற தன்மை குறித்து எவ்வாறு பேசாமல் இருக்கமுடியும்?  ஆனால் இந்தத் தேக்கநிலையென்னும் தளத்துக்குக் கீழே இருக்கும் வரலாற்று ரீதியான இயக்கத்தை நாம் மீட்க முயன்றால் தவிர்க்க முடியாமல் இலக்கியத்தின் நவீனத்துவத்துக்கு முந்திய (Pre Modern) அம்சங்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுக்கும்படித் தூண்டப்படுவோம்.  (நாயக்கர் காலப் பிரதிகள், முஸ்லீம்கள் மற்றும் கிறித்தவர்கள் எழுதியதாக வெளிவந்த முதற்பிரதிகள்) அதுபோலவே பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் ஆக்கங்களுக்குச் சற்றே முக்கியத்துவம் தருவதும் நேரும்.  பிறகு, நவீன மற்றும் தற்காலத்தோடான அவற்றின் பிணைப்பு மிகவும் வெளிப்படையானதாகவும், பழமைக்கும் நவீனத்துவத்துக்கும் இடையிலான முறிவு மிகவும் செயற்கையானதாகவும் தோன்றும்.  உவே. சாமிநாதய்யரையும், பாரதியையும் நவீனத்துவத்தின் ஆரம்ப நிலைகளாக எண்ணிப் பார்க்க முடியுமா?  வ.உ.சி.யைத் தொல்காப்பியத்தைத் தொகுத்தவரெனவும், வ.வே.சு. அய்யர் திருக்குறளை மொழிபெயர்த்தவரெனவும் எண்ணிப் பாருங்கள்.

ரோஜெ ஷாத்தியெவின் அணுகுமுறையைப் பின்பற்றி மேலும் சிலவற்றைப் பார்க்கலாம்.  இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து அரசர்களின் ஆதரவுக்கும், சுயச்சார்பான சந்தையை (இலக்கியத்தை எப்படி விற்பது?) நோக்கிய இயக்கத்துக்கும் இடையில் நடந்த மாற்றங்களை எப்படி மதிப்பிடுவது?  படைப்பாளிகளைப் பற்றியும் புதிய இலக்கிய வடிவங்களைப்பற்றியும் நாம் பேசுகிறோம்.  ஆனால் மேட்டிமைத்தனம் கொண்ட இலக்கியத்துக்கும் வெகுசன இலக்கியத்துக்கும் இடையேயான பேதம் எப்படி உண்டானது? பெரும்பான்மை அல்லது கருத்தொற்றுமைக்கான (consensus) தேடல் அல்லது வரையறை என்பதுபற்றி என்ன கூறமுடியும்?  நகரம் சார்ந்த நடுத்தரவர்க்கத்தினுடைய மேலாண்மை நிலவும் வெகுசனக் கலாசாரத்தை நோக்கி கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.  காலனித்துவத்தைத் தமிழ்க் கலாச்சாரம் எவ்விதம் எதிர்கொண்டது எனப் பார்ப்பதை விடவும் இது ஆய்வுக்குரிய முக்கியமான ஒரு நிகழ்வாகும். தேசியத்தின் பல்வேறு வடிவங்கள் குறித்த ஆய்வுகளுக்குத் தேவையற்ற மதிப்பளிப்பது சுயநலம் மிக்க மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்களின் பொறியில் சிக்கிக் கொள்வதுதான்.

நாம் உண்மையில் கவனம் செலுத்த வேண்டியது பிரிட்டிஷாரைத் தமிழர்கள் எவ்விதம் எதிர்கொண்டார்கள் என்பது பற்றி அல்ல.  மாறாக, சுயமான, சுதந்திரமான தற்கால இலக்கியத்துக்குத் தீவிரமானதொரு தடையாகக் கருதப்படும் நடுத்தரவர்க்க இலக்கியத்தின் வகைமாதிரிகளின் (Stereotypes) மூலமாகத் தமிழர்கள் எப்படித் தமது மதிப்பீடுகளை வரையறுத்துக் கொள்கிறார்கள், தமது சூழலை எவ்விதம் அவர்கள் மறுபடியும் வடிவமைக்கிறார்கள் என்று பார்ப்பதே முக்கியம்.  ஒருவிதத்தில் சுதந்திரப் போராட்ட வரலாறானது விடுதலை உணர்வை அடிமைப்படுத்திவிட்டது என்று கூறலாம்.

தற்காலத் தமிழ் உலகின் சிக்கலான பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட வாழ்க்கைச் சூழல் மொழிக்கு விடுக்கின்ற சவால் இன்றைய காலகட்டத்தில் ஒருவரை மிகவும் வசீகரிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.  அதுபோலவே இன்று தனது இலக்கிய அம்சங்களாக, பரிமாணங்களாக கலாச்சார மீட்புவாதத்தைக் கொண்டுள்ள, இந்து கலாச்சாரத்தின் சுயமான பண்புகளுக்குத் திரும்ப வேண்டுமென்கிற ஒரு புதிய பிரக்ஞை உருவாகி வருவதும், பேச்சுமொழியை, வட்டார வழக்கை இலக்கிய அந்தஸ்துக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளும் கவனத்தை ஈர்ப்பதாய் உள்ளன.
போத்ரியா, ஃபூக்கோ, தெரிதா போன்ற மேற்கத்திய எழுத்தாளர்களைப்பற்றி, மேற்கத்திய தத்துவங்களையும், மானுடவியலையும் குறித்து குறைபட்ட அறிவையே கொண்டு அந்த அறிவைத் தமிழில் மறு கண்டுபிடிப்புச் செய்ய முற்படும் வகைப்படுத்த முடியாத தமிழ் அறிவு ஜீவிகளின் ஆசைகளைப் பற்றி என்ன கூறுவது....-?  வேருக்குத் திரும்ப வேண்டுமென்கிற வலுவானதொரு இயக்கத்துக்கும் உலகமயமாகும் வெளியில் வெடித்துக் கிளம்ப விழையும் ஒருவரது ஆசைக்கும் இடையேயான முரண்பாடு....?

தமிழ் தலித் இலக்கியம் குறித்து ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதியுள்ளீர்கள்.  தலித் இலக்கியத்தின் பக்கம் உங்கள் கவனம் திரும்பியது எப்படி?  அதைப் பற்றிய உங்களது எதிர்வினை என்ன?

பொதுவாகத் தலித் இலக்கியப் பிரதிகளைப் பார்க்கும்போது கடப்பாடு, போராட்டம் போன்றவற்றுக்கு அவை முக்கியத்துவம் தருவதாகத் தெரிகிறது.  இதனால் உருவத்தைவிட உள்ளடக்கத்துக்கு அவை அதிகம் முக்கியத்துவம் தருகின்றன.  இலக்கியம் படைப்பதற்கான காலமும், அவகாசமும் தலித்துகளுக்கு இல்லை.  படைப்பை நுணுக்கமாச் செய்ய, செழுமைப்படுத்த அவர்களுக்கு நேரமிருப்பதில்லை.  நான் மராத்திப் படைப்புகள் பலவற்றையும் படித்தேன்.  கருத்தியல் ரீதியில் அவை முக்கியமானவை.  அவை வாக்குமூலங்களாக, சுயசரிதைகளாக, அல்லது யாரேனும் ஒருவரை வியந்து பாராட்டி எழுதப்படுபவையாக இருக்கின்றன.  ஆனால் அவற்றில் எதுவும் பெரிய இலக்கியச் சாதனைகளாக எனக்குப் படவில்லை.  சமூக ஆவணங்கள் என்கிற வகையில் அவை முக்கியமானவை.  ஆனால் இலக்கியச் சாதனைகள் அல்ல.

தமிழைப் பொறுத்தவரை நான் என்னைப் பாதிக்கிற தீவிரமான ஒரு தலித் படைப்பைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.  அதற்காகக் காத்திருக்கிறேன்.  இங்கே தலித் இலக்கியமாக முன் வைக்கப்படும் பல பிரதிகள் படைப்பு என்பதை மிகவும்  சாதாரணமாக எடுத்துக் கொள்வதாகத் தோன்றுகிறது.  ஏறக்குறைய வெகுசன இலக்கியம் (Popular) என்கிற நிலைக்கு அவை சென்று விடுகின்றன.

கீழ்வெண்மணி குறித்து எழுதப்பட்ட ஒரு கதைப்பாடலை "தீக்குளியல்" என்ற படைப்பை நான் படித்தேன்.  சில இடங்களில் மிகவும் தீவிரமான வெளிப்பாடாக இருந்தது.  ஒரு விஷயத்தைச் சரியானபடி தீவிரத் தன்மையோடு மற்றவருக்கு எடுத்துச் சொல்லும் ஆற்றலோடு அது இருந்தது.  அதுபோல, "குறிஞ்சாகுளம்" கதைப்பாடலையும் குறிப்பிடலாம்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஃப்ரான்சின் எதிர்ப்புப் போராட்டம் பற்றி ஏராளமான கதைகள் எழுதப்பட்டன.  ஆனால் அவற்றுள் இன்றும் வீர்யத்தோடு எஞ்சியிருப்பவை ஒருசில மட்டுமே.
ஒரு அரசியல் சூழலின் விளைவாக உருவாகும் ஒரு படைப்பு அந்த அரசியல் சூழலோடே அழிந்துவிடுகிறது.

தற்போது தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை பற்றிப் பேசப்படுகிறது.  ஆனால் அதற்காக அதன் மூலம் செய்யப்படும் பிரச்சாரத்தைவிடவும், அவை எழுப்பும் தாக்கத்தை விடவும் சிறந்த, மேலானதொரு விளைவை தீவிரமானதொரு தலித் கலைப்படைப்புச் செய்துவிடும்.  அண்ணாமலைநகர் பத்மினியின் வாக்குமூலம் ஏற்படுத்தும் தீவிரத்தையும், அழுத்தத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு தமிழ் தலித் படைப்பை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் (IATR) துணைத் தலைவராக இருக்கிறீர்கள்.  உலகத் தமிழ் மாநாடுகள் நடத்துவதால் பயனேதும் உண்டா?

வ.அய். சுப்ரமணியம் ஒருமுறை கூறியது நினைவுக்கு வருகிறது.  "உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம் என்பது ஒரு காகித மலர்.  உலகத் தமிழ் மாநாடுகளின்போது மட்டும்தான் அது மணம் வீசும்" என்று அவர் கேலியாகக் குறிப்பிட்டார்.

சரி! அப்போதாவது மணம் வீசுகிறதே! உலகத் தமிழ் மாநாடுகளைப் பற்றிக் கூறினால், அவை பல தளங்களில் இயங்குகின்றன என்பதைக் குறிப்பிடவேண்டும்.

நீங்கள் மனதில் வைத்திருப்பது திருவிழா போன்ற அதன் கொண்டாட்டங்களையென நினைக்கிறேன்.  இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது சென்னை மெரினா கடற்கரையில் அண்ணாவையும், ஜாகிர் உசேனையும் வரவேற்கக் காத்திருந்த பெருங்கூட்டம் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.  அது ஒரு அம்சம்.  தமிழர்கள் தங்கள் மொழியைக் கொண்டாட விரும்புகிறார்கள்.  கொண்டாடிவிட்டுப் போகட்டும்.  அதில் ஆபத்து எதுவுமில்லை.  அது இயல்பானதொரு விஷயம்தான்.

இதைத்தாண்டி இன்னும் சில தளங்கள் உள்ளன.  உலகெங்கும் தமிழில் செயல்படும் அறிஞர்கள் இந்த மாநாடுகளால் பெறுகின்ற தாக்கம் முக்கியமானது.  தமிழ்க் கலாச்சாரத்தை அதற்கு முன் விரிவாக அறிந்திராத அறிஞர்கள் பலர் அப்போது அதற்கான ஒரு வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
இன்னொரு விஷயமும் இருக்கிறது.  அங்கு வரும் அறிஞர்கள் தமக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடிகிறது.  இதுவொரு முக்கியமான விஷயம்.

இதுபோல் உலக மொழிகள் பலவற்றிலும் நடக்கிறது.  ஏன் தமிழில் நடக்கக்கூடாது.  இந்த மாநாடுகள் பெரிதாகச் சாதித்துவிட்டன என்று பெருமை பாராட்டிக் கொள்ளமாட்டேன்.  ஆனால், சில சாதகமான அம்சங்களும் உள்ளன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.  மாநாட்டுப் பார்வையாளர்களாக வருபவர்களும், பலதரப்பட்ட அறிஞர்களைச் சந்திக்க, கருத்துப் பரிமாற அது வாய்ப்பளிக்கிறது.

சி.சு. செல்லப்பா என்பவர் யார், அவர் என்ன செய்திருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை அறிந்திருக்காத நிலையில் சென்னையில் நடந்த மாநாட்டின்போதுதான் நான் சி.சு செல்லப்பாவைச் சந்தித்தேன்.  அவர் "எழுத்து" பத்திரிகையின் சில பிரதிகளையும், தனது "வாடிவாசல்" குறுநாவலையும் தந்தார்.  அச்சந்திப்பு தற்காலத் தமிழ் இலக்கியத்திற்குள் நுழைவதற்கான ஒரு சரியான வழியை எனக்கு வகுத்துத் தந்தது.

குறிப்புகள் :
1. ரோஜெ ஷாத்தியே (Roger Chartier) :
புத்தகங்கள் அவற்றின் பரவல், அதனால் உண்டாகும் தாக்கம் வாசிப்புப் பழக்கங்கள் ஆகியவற்றை ஆராயும் வரலாற்றிஞர்.  பாரிஸில் சமூகவியலுக்கான உயர் ஆ£ய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியர்.

2. ராபர்ட் டார்ன்டன் (Robert Darnton) :

பத்திரிகையாளராக இருந்தவர்.  புத்தகங்கள் குறித்து ஆராயும் அமெரிக்கப் பேராசிரியர் ஃப்ரான்ஸில் பதினெட்டாம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் அறிவொளிக் காலத்துக்கும் (Enlightment) தணிக்கை முறைக்கும் இடையிலான மோதலின்போது வெளியான பிரதிகள் குறித்து ஆராய்ந்தவர்.  தற்போது இந்தியாவில் காலனிய தணிக்கை முறையின்போது வெளியான பிரதிகள் குறித்து ஆய்வு செய்வதில் ஈடுபட்டுள்ளார்.

3. லெ ருவா குரோன் (Le Roi Gourhan) :
வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த கலைகள் (Pre Historic arts) பற்றிய ஆய்வுகளில் வல்லுநர்.  தொழில்நுட்ப வரலாற்றில் பேராசிரியர்.  காலேஜ் ஆஃப் ஃப்ரான்ஸில் பணிபுரிந்தவர்.  லெவிஸ்த்ராஸின் சமகாலத்தவரான அவர் 1980களின் துவக்கத்தில் காலமானார்.

4. தீக்குளியல்:
 கீழ்வெண்மணியில் தலித்துகள் படுகொலை செய்யப்பட்டதுபற்றிய நீள்கவிதை. அதை எழுதியவர் எவரென்று தெரியவில்லை. அது புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தால் சிறு பிரசுரமாக வெளியிடப்பட்டது. பின்னர் தலித் இதழ் 10 இல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

5. குறிஞ்சாக்குளம் கதைப்பாடல் :
 குறிஞ்சாக்குளம் என்னும் கிராமத்தில் தலித்துகள் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டதுகுறித்து ரவிக்குமார் எழுதிய கொலைசிந்து. அது கே.ஏ.குணசேகரனின் இசை அமைப்பில் அவரது குரலில் ‘ மனுசங்கடா‘ என்ற ஒலிநாடாவில் இடம்பெற்றுள்ளது.

6. அண்ணாமலைநகர் பத்மினியின் வாக்குமூலம் :
 02.06.1992 இல் சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட பத்மினியின் வாக்குமூலத்தை புதுவை பி.யு.சி.எல் அமைப்பு சார்பில் முதலில் சிறு பிரசுரமாக வெளியிட்டேன் . அது பின்னர் நான் நடத்திய 'தலித்' இதழ் 3 இல் ( ஆகஸ்டு 1997 ) என்னால் வெளியிடப்பட்டது

No comments:

Post a Comment