Friday, July 20, 2012

'தமிழும் சமஸ்கிருதமும் ' ஆய்வரங்கு




இந்தியாவில் செம்மொழிகள் என்னும் தகுதியைப் பெற்றிருக்கும் தமிழும் சமஸ்கிருதமும் நீண்ட காலமாக ஒன்றிலிருந்து மற்றது கொண்டும் கொடுத்தும் வளர்ந்து வந்துள்ளன. தமிழைத் தாழ்த்தி சமஸ்கிருதத்தை உயர்த்தும் அரசியல் காரணமாகவே  இரு மொழிகளும் இன்று எதிரெதிராக நிறுத்தப்பட்டிருக்கின்றன. சமஸ்கிருதம் தமிழை அழித்துவிடும் என்று சொல்வது இன்றைய சூழலில் மிகைப்படுத்தப்பட்ட ஒரு கூற்றாகவே இருக்கும். சமஸ்கிருதத்தைப் பிராமணர்களோடு இணையாக வைத்துப் பார்ப்பதும்கூட வரலாற்றுக்கு மாறான ஒன்றுதான். “ பிராமணர்களின் உயர்வைப் பேசுகிற பிரதிகள் அதில் உண்டு, அதைப்போலவே பிராமணியத்தைக் கேலி செய்யும் பிரதிகளும் அதில் ஏராளமாக இருக்கின்றன” என்கிறார் ஜார்ஜ் ஹார்ட். பிராமணரல்லாதார் பலர் சமஸ்கிருதத்தில் தமது படைப்புகளை இயற்றியுள்ளனர். ” அதுவொரு தொடர்பு மொழியாக இருந்திருக்கிறது. இந்துக்கள் மட்டுமின்றி பௌத்தர்களும் அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சமஸ்கிருதம் தெரியாமல் பௌத்தைத்தை முழுமையாக ஆய்வுசெய்துவிட முடியாது” என்று ஜார்ஜ் ஹார்ட் கூறுவது கவனத்துக்குரியதாகும். 

சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்குமான உறவைப் போலவே அவற்றுக்கிடையிலான மோதலும் நீண்ட காலமாகவே இங்கு நடந்துவந்திருக்கிறது. என்றபோதிலும், தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சியின்போது அந்த முரண்பாடு தீவிரம் அடைந்தது. ‘கிரந்த யூனிகோடு’ பிரச்சனையின்போது அது மேலும் கூர்மையடைந்துவிட்டது.

இந்திய மொழிகள் பலவற்றிலும் சமஸ்கிருதத்தின் தாக்கம் இருப்பதை மொழியியலாளர்கள் கண்டறிந்து கூறியிருக்கிறார்கள். தமிழும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், தொன்மையான வரலாறும், தனக்கென்று ஒரு எழுத்து மரபும் கொண்ட தமிழ் மொழியானது சமஸ்கிருதத்துக்கு அப்பால் தனது தனித்துவத்தைக் காப்பாற்றிக்கொண்டு வருகிறது. ” சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகியவற்றால் தமிழ் அச்சுறுத்தப்படுகிறது என நான் நினைக்கவில்லை. தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை அதன் தனித்துவம் பேணி வளர்க்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் அப்படி அது பாதுகாக்கப்படும். தமிழர்கள் தமது மொழியை மதிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்.அவர்கள் தொடர்ந்தும் அதைச் செய்வார்கள். இன்று இந்தியாவில் மிகச் சில அறிஞர்கள்தான் சமஸ்கிருதத்தில் ஆய்வுகளைச் செய்து வருகிறார்கள். இந்திக்கும் , மலையாளத்துக்கும் சமஸ்கிருதம் ஏராளமான சொற்களை வழங்கியிருக்கிறது என்றாலும் அது இப்போது புறக்கணிக்கப்பட்டு செத்துக்கொண்டிருக்கிறது. அதன் விளைவாக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பண்பாட்டு வரலாறு தொடர்பான பல ஆவணங்களை வாசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது” என்று கூறுகிறார் ஜார்ஜ் ஹார்ட். 

சமஸ்கிருதத்தின் இந்த அவலநிலை குறித்து ஷெல்டன் பொல்லாக் விரிவாகவே ஆராய்ந்திருக்கிறார். ’ சமஸ்கிருதத்தின் மரணம்’ என்ற தனது கட்டுரையில் அதற்கான காரணங்களை அவர் முன்வைத்திருக்கிறார். லத்தீன் மொழிக்கு கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு முதல் நேர்ந்ததுபோல சமஸ்கிருதமானது தொடர்பு மொழியாக இருப்பதில் எந்த சிக்கலையும் எதிர்கொள்ளவில்லை.அதுபோலவே இங்கு பிராந்திய மொழிகள் பெற்ற முக்கியத்துவமும் சமஸ்கிருதத்துக்குத் தடையாக அமையவில்லை. பிராந்திய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்த பலர் சமஸ்கிருதத்திலும் புலமைபெற்று விளங்கினார்கள் என்று குறிப்பிடும் பொல்லாக், ஆட்சியதிகாரத்தை முஸ்லிம்கள் கைப்பற்றியதும்கூட  சமஸ்கிருதத்தை பலவீனப்படுத்திவிடவில்லை. மாறாக, முஸ்லிம்களின் ஆட்சிக் காலத்தில் சமஸ்கிருதம் புத்துயிர் பெற்றது என்று குறிப்பிடுகிறார். பிராந்திய எல்லைகளைக் கடந்த பொது மொழியாக விளங்கிய சமஸ்கிருதம் பிராந்திய அடையாள அரசியல் எழுச்சி பெற்றபோது தனது முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியது என்பது பொல்லாக்கின் கருத்து.

சமஸ்கிருதத்தின் நிலை குறித்து ஷெல்டன் பொல்லாக் ஆய்வு செய்திருப்பதைப் போல தமிழின் நிலை குறித்து நாம் ஆய்வு செய்தாக வேண்டும்.குறிப்பாக நமது கல்வி முறை,  தமிழ் பயிற்றுவிப்பதில் இப்போது நாம் கையாளும் வழிமுறைகள், ஊடகங்களின் பங்கு எனப் பல்வேறு அம்சங்களை நாம் கவனத்தில்கொள்ளவேண்டும். அதைவிடுத்து சமஸ்கிருதத்தை எதிரியாகக் காட்டிக்கொண்டிருப்பது நிழலோடு யுத்தம் செய்வதாகவே இருக்கும். 

'தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் இன்று' என்ற தலைப்பிலான ஆய்வரங்கின் தொடர்ச்சியாக 'தமிழும் சமஸ்கிருதமும் ' என்னும் தலைப்பில் ஆய்வரங்கு ஒன்றை மணற்கேணி ஏற்பாடு செய்யவிருக்கிறது.2012 செப்டம்பர்  முதல் வாரத்தில் நடைபெறவிருக்கும் ஒரு நாள் ஆய்வரங்கில் தமிழ் சமஸ்கிருதம் ஆகியவற்றுக்கிடையிலான உறவு குறித்து அறிஞர்கள் பலரும் ஆய்வுரைகளை வழங்கவுள்ளனர். அந்த ஆய்வரங்கில் கலந்துகொள்ளவும், கட்டுரை வாசிக்கவும் விரும்பும் ஆய்வு மாணவர்கள் ஆகஸ்டு இருபத்தைந்தாம் தேதிக்குள்manarkeni@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தமது விருப்பத்தைத் தெரிவித்துப் பதிவு செய்துகொள்ளலாம். இடம், நாள் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment