Tuesday, January 31, 2012

கடந்துவரும் குரல்





விடியற்காலை கொடிக்கால்பாளையம் பள்ளிவாசலின் பாங்கொலி  கேட்டு விழித்துக் கொள்வோம். பெரியவர்கள் கையில் கதிர் அரிவாளுடனோ அல்லது தோளில் மாட்டிய கலப்பையுடன் ஏர் மாடுகளையும் கூட்டிக் கொண்டு வயல் வேலைக்குப் போவார்கள். குழந்தைகள் புத்தகங்களை எடுத்துப் படிக்கத் துவங்குவோம். பாங்கொலிக்குப் பின் சாத்தான்கள் வீதிகளில் அலையாது என்பதால் , பெண்கள் தைரியமாக வெளியே வருவார்கள். வாசலில் சாணம் தெளித்துக் கோலமிடுவார்கள்.  கைகளில் தூக்கி நிறுத்தும் குழந்தைகள் நகரா ஒலிக்கு பொக்கை வாயைக் காட்டிய படி நடனமாடுவார்கள். அந்த அதிகாலை வேளையில் , ஏழை முஸ்லீம் பெண்கள் சிலர் கூடையிலும் வாளியிலும் துணிகளை அள்ளிக் கொண்டு பள்ளிவாசல் குளத்திற்கு குளிக்கச் செல்வார்கள்.
எங்கள் ஊரில் இந்துக்களை விட முஸ்லிம்களே நிலம் அதிகம் வைத்திருந்தார்கள்.ஏழை, தாழ்த்தப்பட்ட இந்துக்கள் அவர்களிடம் பண்ணைவேலை செய்தார்கள். ஏழை முஸ்லிம்கள் பணக்கார முஸ்லீம்களை அண்டி வாழ்ந்தார்களே அன்றி , ஒரு போதும் பண்ணை வேலை செய்ததில்லை. எங்கள் வீட்டு முதல் அறுவடை நெல்லில் ஒரு மரக்காலை பள்ளிவாசல் வேண்டுதல் நிறைவேற்ற எடுத்து வைத்து விடுவோம். மூன்று நாள் சீம்பாலை  பள்ளிவாசலில் பகிர்ந்து கொடுப்போம். பொட்டுகடலை சர்க்கரை வாங்கி உடல் நலம் அடைந்ததற்காக ஃபாத்தியா ஓதுவோம். ஏதோ ஒரு வேண்டுதலை நிறைவேற்றவென, இரவு பள்ளி வாசல்களில் தங்குவோம்.  நாய்கடிச்சார், ரெட்டமண்டையார், கருவேப்பில வீடு, ஆனங்காச்சி வீடு, ---என பல பெயர்களில் தங்கள் முதலாளிகளை ஏழைகள் அடையாளம் கண்டு வைத்திருந்தனர்.
பிரியாணி, புலவு, தாளிச்சா, ஆனம், பிர்னி கஞ்சி, பரோட்டா ,சால்னா, இஞ்சி கொத்து பணியாரம் ,முட்டை பணியாரம், ----இன்னும் என்னென்னவோ பலகாரங்கள் எங்கள் வீடுகளிலும் உணவு வரிசையில் இடம் பிடித்தன. ஃபாரின் புடவை, ஃபாரின் தைலம், ஃபாரின் சட்டை , சாக்லேட், லிப்ஸ்டிக் என வெளிநாட்டுப் பயணத்தில் இருந்து திரும்பிய முஸ்லீம் ஆண்களும் பெண்களும் கொடுப்பார்கள். பெரும்பாலும் ஆண்கள் வெளிநாடுகளில் இருப்பதால், ஏக்கத்தில் இருக்கும் முஸ்லீம் பெண்களுக்கு, சங்க கால தோழி போல எங்கள் வீட்டு பெண்கள் ஆறுதலாக இருந்தார்கள். மிகமிகக்  குறைவான கல்வி அறிவுடன், மிக அதிக எழுத்துப் பிழைகளுடன் , வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு, மிக அந்தரங்கமான கடிதங்களை எங்கள் வீட்டுப் பெண்களோடு சேர்ந்து எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். பொங்கலுக்கு இவர்கள் பெருமையுடன் கொண்டு செல்லும் கரும்பையும் ,வாழைப் பழங்களையும், பொங்கல் சாதத்தையும், தீபாவளி பலகாரங்களையும், கார்த்திகை அவலையும் விருப்பமுடன் விகல்பமின்றி வாங்கிக் கொள்வார்கள்.
என் அப்பாவுக்குப் பதினெட்டு வருடங்கள், முஸ்லீம் பகுதியில் இருந்த அரசுப் பள்ளியில் வேலை பார்த்த அனுபவம் உண்டு. அப்பா மிகவும் கண்டிப்பானவர், எனினும்  அப்பாவே அந்தப் பள்ளிக்கு வர வேண்டுமென பள்ளிக் கல்வி அதிகாரி வரை சென்று முஸ்லீம் மக்கள் கோரிக்கை வைத்தார்கள். வெளி நாடுகளில் தொழில் புரியும் முஸ்லீம் ஆண்கள் , அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காகவும், தங்கள் பிள்ளைகள் கல்வி அறிவு பெற வேண்டுமென்பதற்காகவும் அதிக நிதி உதவி அளித்தார்கள். பெரும்பாலான பெண்கள் ஐந்தாம் வகுப்பு வரையே படித்தார்கள். கொடிக்கால்பாளையம் பகுதிக்கு அப்பாவைத் தவிர வேறு யாரும் மக்கள் தொகை கணக்கெடுப்பதற்குச்  செல்ல மாட்டார்கள். அது மிகவும் சிரமமான காரியம். திருமணமான இளம் பெண்கள் கணவர் வெளிநாடுகளில் இருப்பதால் தங்கள் வீட்டைப் பூட்டி விட்டு, தாய் வீட்டிலேயே இருப்பார்கள். கிட்டதட்ட மூன்று நான்கு தலைமுறை பெண்கள் ஒரே வீட்டில் இருப்பார்கள். அவர்களில் குறைந்தது இரண்டு தலைமுறையினர் அப்பாவிடம் படித்தவர்களாகவும், இளைய தலைமுறை படித்துக் கொண்டும் இருப்பார்கள். அப்பாவுக்கு மட்டுமே விபரங்கள் புரியும் என்பதோடல்லாமல், மிகத் தெரிந்த, பழகிய ஆசிரியர் என்ற வகையில் அப்பா மட்டுமே அவர்கள் வீட்டிற்குள் சென்று வர முடியும். முஸ்லீம் பெண்கள் மற்றும் ஆண்களின் கல்விக் காலம் என்பது மிகக் குறுகியதாக இருந்தது. என்னுடைய பள்ளி, கல்லூரி வரையிலுமே ஒன்றிரண்டு பர்தா அணிந்த மாணவிகளைப் பார்த்திருக்கிறேன். அவ்வளவு தான்.
தீவிரவாதம் பற்றிப் பேச்சு வரும் போது, ‘ நம்ம முஸ்லீம் ஜனங்களா இருக்காது, அது ஏதோ வெளிநாட்டுக்காரவுங்க வேலையா இருக்கும் . இவ்வளவு வருஷம் தாயா பிள்ளையா பழகுறோம், ஒரு பிரச்சனையும் கிடையாது, நம்ம ஆம்பிள்ளைங்களாவது குடி, அடி தடின்னு இருப்பாங்க, பாவம், அதுங்க பொறுமையா இருக்குங்க’  என்று எங்கள் ஊரே சேர்ந்து பதில் சொல்லும்.

=====================

  ரயில் ஓசை முதன்முதல் எங்கள் கிராமத்தைத் தொட்ட போது , எல்லோரும் வீட்டிற்குள் ஒளிந்து கொண்டார்கள். அதன் ஓசை தொடர்ந்து இவர்களைத் தேடி வந்து கொண்டே இருந்தது. இவர்களும் ஒளிந்து கொண்டே இருந்தார்கள். தெருவில் நடந்தவர்கள் அப்படியே குப்புறப் படுத்துக் கொள்வதும் ,வயலில் வேலை செய்தவர்கள் குத்திட்டு அமர்ந்து கொள்வார்களாம். புகை வண்டியை தூரத்திலிருந்து பார்த்து விட்டு திரும்பிய ஆண்கள் ஆபத்து ஒன்றும் இல்லை என்பதை உறுதிப்படுத்த அதன்பிறகு பயம் ஆர்வமாக மாறிப்போனது. ஆண்களும் பெண்களுமாக புகை வண்டியில் ஏறிப் பார்த்து விட்டு ,கொஞ்ச தூரம் பயணித்து விட்டு வருவது என்ற முடிவுடன் ஒருநாள் கிளம்பினார்கள். அவர்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள நிறுத்தத்தில் ஏறி ,மறு நிறுத்தத்தில் இறங்கி விட வேண்டும் என்ற கட்டுப்பாட்டோடு ஏறினார்கள் . மிகப்பெரிய சத்தம், மரங்கள் பின்னோக்கி ஓட,  தாங்கள் அப்படியே நகராமல் அமர்ந்து கொண்டிருப்பது போல் உணர்ந்த பெண்கள் கண்களை இறுக மூடிக் கொண்டு அமர்ந்தபடி கடவுளை வேண்டிக் கொண்டார்கள். காலணா அரையாணாவை விட பண்டமாற்று முறையையே  அதிகம் தெரிந்திருந்த அவர்கள், ஸ்டேஷன் மாஸ்டர் பயணச்சீட்டு கேட்டதற்கு பயந்து , அழுது, திட்டு வாங்கிக் கொண்டு மீண்டும் புகை வண்டியில் ஏறப் பயந்து , நடந்தே ஊர் வந்தார்கள். அவர்களில் ஒருவராய் இருந்த என் ஆத்தா , புகை வண்டியை , இறக்கும் வரை அதே பயத்துடனும் அதிசயத்துடனும் பார்த்தற்கு நான் சாட்சி. அதே போன்று அடுத்த தெரு, அடுத்த வீடு, வீடு வரை உறவு, பழக்க வழக்கம் என எல்லாமும் நடந்து முடிந்திருந்தாலும் , புகை வண்டியை பார்ப்பது போலவே , முஸ்லீம்களைப் பார்க்கும் போது பயமும் ஆர்வமும் ஒருங்கே எழுவது எங்கள் ஊர் ஜனங்களிடம் இயல்பாகி விட்டது.
  இந்துக்களுக்கு அடுத்து அதிக அளவில் இருக்கும் கிறிஸ்தவர்களை விடவும் , முஸ்லீம்களின் வாழ்க்கை ,உணர்வுகள், பழக்கவழக்கங்கள் , குறித்த புரிதல் இன்மை நம்மிடம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக, பர்தாக்களுக்குள் மறைத்து வைக்கப்படும் முஸ்லீம் பெண்கள் குறித்த  புரிதலின்மை அவர்களைக் குறித்து  அறிந்து கொள்வதில்  அதிக ஆர்வத்தை நம்முள் தூண்டுகிறது. வெளி உலகத்துக்கு அறிமுகமானாவர்களாக தன்னாட்சியும் ,திறனும் உடைய முஸ்லீம் பெண்களைக் குறித்த சிந்தனை எழும் போது நமக்குள் தோன்றுவது இரண்டு முகங்கள்: பெனாசிர் புட்டோ, தஸ்லிமா நஸ்ரின். தீவிரவாதத்துக்குப் பலியான  பெனாசிர் புட்டோவும், இன்னும் துரத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தஸ்லிமாவும், முஸ்லிம் பெண்கள் மீது திணிக்கப்படும் அதிதீவிர கட்டுபாடுகளையும், வளர்ச்சிப் பாதையில் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய அதி பயங்கர போராட்டங்களையும் உலகுக்குச் சொல்லும் நிகழ் கால சாட்சிகள்.

================

முஸ்லீம் பெண்களின் கல்வியறிவு ,உலக அறிவு மற்றும் சுய முன்னேற்றம் ஆகியவைக் குறித்து சிந்திக்கும்போது , ஒரு ஆளுமையையோ, காலகட்டத்தையோ , வரலாற்றையோ , புரட்சியையோ முன்னிறுத்தி எந்த முடிவையும்  எட்ட முடியவில்லை.முஸ்லீம்கள் சிறுபான்மையினராகவும், தீவிர கட்டுப்பாடுகள் கொண்டவர்களாகவும் இருக்கும் இந்தியாவில் ஆங்காங்கே ஒன்றிரண்டு முஸ்லீம் பெண்களை கண்டு கொள்ள முடிந்தது. ஆனால் , சட்டங்களும் ,மதக்கட்டுபாடுகளும் தாண்ட முடியாத மதிற் சுவராக வளர்ந்து நிற்கும் சூழலில் , ஆட்சியாளரில் இருந்து குடிமக்கள் வரை முஸ்லிம்களாக இருக்கும் பாகிஸ்தான் போன்றதொரு நாட்டில் , பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என்ற நினைவு என்னை துளைத்துக் கொண்டே இருக்கும்.
ரவிக்குமார் ஆக்ஸ்ஃபோர்டு பிரஸ் இயக்குநர் திருமதி. மினிகிருஷ்ணனை அறிமுகப்படுத்திய போது ,அவர் ‘அண்ட் த வேர்ல்ட் சேஞ்ச்டு’ என்ற புத்தகத்தைக் கொடுத்தார். பாகிஸ்தான் பெண்கள் ஆங்கிலத்தில் எழுதிய கதை மற்றும் நாவலின் சில பகுதிகளைக் கொண்டு முனிஸ் ஷாம்ஸியால் தொகுக்கப்பட்ட புத்தகம் அது.
அதில் ஸெஹ்பா ஸார்வாரால் எழுதப்பட்ட, குழந்தைகளின் உலகம் குறித்துப் பேசும் ‘பிளாக் விங்ஸ்’ என்ற நாவலின் ஒரு பகுதியை படித்த போது அதை மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ரவிக்குமார் அதற்கான ஊக்கத்தையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
முஸ்லீம் பெண் என்பதைப்பற்றி நம்முள் பதிக்கப்பட்டிருக்கும் கருத்துகளைத் தகர்த்து , இலக்கியத்தின் வாயிலாகவும் சமூக சேவையின் மூலமாகவும் பலவிதமான சாத்தியப்பாடுகளை முன்வைத்திருப்பவர்  ஸெஹ்பா ஸர்வார். அவரைத் தொடர்பு கொண்ட போது, என் மனதில் என்னை அறியாமல் படிந்திருந்த  முஸ்லிம் பெண்கள் குறித்த கற்பிதங்கள் அகன்றன.
நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட மாயைகள் விலகித் தெளிவு பெறும் போது, பயம் விலகி விடும் போது ,  இன்னொரு புதிய வாசல் திறந்து கொள்ளும் போது , உருவாகும் புரிதலுடனும் ,அது தரும் பூரிப்புடனும் , ஸெஹ்பா ஸர்வார் , மினி கிருஷ்ணன், ரவிக்குமார் ஆகியோருக்கு நன்றியுடனும், இந்தப் புத்தகத்தை உங்கள்முன் வைக்கிறேன்.

- தேன்மொழி
16.12.2011

( ' கடந்துவரும் குரல் - பாகிஸ்தானிய பெண் எழுத்தாளர் செஹ்பா சர்வாரின் படைப்புகள் ' என்ற நூலுக்கு அதன் தொகுப்பாசிரியர் தேன்மொழி எழுதியிருக்கும் முன்னுரை )

No comments:

Post a Comment