Wednesday, September 14, 2011

தமிழின் முதல் மொழிபெயர்ப்பாளர் ஔவையா ?

ஔவை எழுதிய புறநானூற்றுப் பாடலான ‘ நாடா கொன்றோ ... ‘ என்ற பாடல்
தம்மபதப் பாடல் ஒன்றோடு பொருந்திப்போகும் செய்தி தெ.பொ.மீ அவர்களால்
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே சுட்டிக்காட்டப்பட்ட ஒன்றுதான். அதை இப்போது
பேராசிரியர் செ.வை.சண்முகம் அவர்கள் மேலும் விரித்து ஒரு கட்டுரையாக
எழுதியிருக்கிறார். கவிதைக் கட்டமைப்பு என்ற அவரது நூலில்( மெய்யப்பன்
பதிப்பகம் 2003) இடம்பெற்றிருக்கும் ’ஔவையாரின் கவிதை மொழி’ என்ற
கட்டுரையிலும் அவர் இதே செய்தியை ஆராய்ந்திருக்கிறார். அந்தப் பாடல்
ஔவையின் பிற பாடல்களிலிருந்து தனித்து நிற்பதாகக் குறிப்பிடும்
பேராசிரியர் செ.வை.ச ஔவையின் பிற பாடல்களில் ”வடமொழிச் சொற்கள் மற்றும்
கருத்துகள் குறிப்பாக வைதீக மதக் கருத்துகள் காணப்படுகின்றன “ என்கிறார்.
புதல்வர், கோவலர், அற்சிரம், நேமி, சகடம் போன்ற பல வடமொழிச் சொற்களை ஔவை
கடன் சொல்லாகக் கையாண்டிருக்கிறார் எனவும் செ.வை.ச குறிப்பிடுகிறார்.
இவற்றைச் சொன்னதோடு அவர் நிற்கவில்லை, தம்மபதப் பாடலை ஔவை மொழியாக்கம்
செய்திருக்கிறார்  எனவே அவரைத் தமிழின் முதல் மொழிபெயர்ப்பாளர் என்று
கொள்ளலாம் என்கிறார் பேராசிரியர் செ.வை.சண்முகம். அவரது கருத்து ஏற்கத்
தக்கதுதானா?

2 comments:

  1. ஔவையார் மொழிபெயர்ப்பாளரா? சிந்தனைக் கடன் எல்லா இடத்திலும் உண்டு. விவிலியத்தின் பல சிந்தனைத் தெறிப்புகள் மற்ற மொழிகளிலிருந்து கடன் வாங்கியவை.
    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறப்பாடல் ஆசீவகச் சிந்தனையான 'முறை' எனும் தத்துவத்தை வெளிப்படுத்துவதாகும் என்பதைச் சிலர் எடுத்துக்கூறியுள்ளனர். ஆசீவகத் துறவிகள் சோதிடக் கலையில் வல்லவர்கள். கணியன் என்பதும் சோதிட வல்லுநர்தான். கணியன் பூங்குன்றன் என்றே அப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் அமைந்துள்ளது. இரவல் சிந்தனையை எடுத்துத் தமிழின் உன்னதச் சிந்தனையாக இதை இப்போது உருமாற்றிக் கொண்டோம். ஆகவே கணியன் பூங்குன்றனும் ஒரு மொழிபெயர்ப்பாளரா?

    ReplyDelete
  2. ஔவையார் மொழிபெயர்ப்பாளரா? சிந்தனைக் கடன் எல்லா இடத்திலும் உண்டு. விவிலியத்தின் பல சிந்தனைத் தெறிப்புகள் மற்ற மொழிகளிலிருந்து கடன் வாங்கியவை.