Monday, August 15, 2011

அப்சல் குரு பயங்கரவாதியா ?




(இது 2006 ஆம் ஆண்டு அக்டோபரில் நான் காலச்சுவடு மாத ஏட்டில் எழுதிய தலையங்கம் )  

     அஃப்சல் மற்றும் சதாம் ஹுசைன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரன தண்டனை இப்போது மீண்டும் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் ஒலிப்பதற்குக் காரணாமாகியுள்ளது.இந்த சேர்ந்திசையில் மாநில முதல்வர்களின் குரல்களும் இணைந்துகொண்டுள்ளன.அஃப்சலுக்கு மரண தண்டனை கூடாது என காஷ்மீர் முதலமைச்சர் குலாம் நபிஆஸாத் கூறியிருக்கிறார். தமிழக முதல்வரும் கூட மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டுமென்று கருத்து தெரிவித்திருக்கிறார்.சதாம் ஹுசைனின் மரண தண்டனையை பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் உட்பட பல நாடுகளின் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

இந்தியப் பாராளுமன்றத்தின்மீது  நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அதே இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கான சதித் திட்டத்துக்கு உடந்தையாக இருந்தாரென்பது தான் அஃப்சல் மீதான குற்றச்சாட்டு. சதித்திட்டத்தின் மூளைகளாக செயல்பட்டவர்களென போலீஸால் குறிப்பிடப்பட்ட மசூத் அஷார், காஸி பாபா, தாரிக் அகமது ஆகிய மூன்று பேர்களையும் போலீஸார் இதுவரை கைது செய்யவில்லை. சுட்டுக் கொல்லப்பட்ட அந்த ஐந்து பேர்களின் அடையாளங்களும் கூட கண்டறியப்படவில்லை. இதற்கிடையில் அஃப்சல் உள்ளிட்ட நான்கு பேர்களை டெல்லி போலீஸின், சிறப்புப் பிரிவு கைது செய்தது. வழக்கு விசாரணைக்கு வந்த போது அஃப்சல் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக பொய் சாட்சிகளைப் போலீஸ் தயாரித்திருந்ததும், கைது நடந்தது பற்றிய தேதி இடம் ஆகியவற்றைகூடத் தவறாகக் குறிப்பிட்டிருந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நான்கு பேர்களில் அஃப்சல் தவிர மற்ற மற்ற மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மரண தண்டனையை உறுதி செய்தபோது கூட அஃப்சலுக்கு எதிராக நேரடியான ஆதாரம் எதுவுமில்லை என்றுதான் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அஃப்சல் எந்தவொரு பயங்கரவாத அமைப்பிலும் உறுப்பினராக இருந்தாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை அரசு தரப்பு சாட்சியங்களாக விசாரிக்கப்பட்ட எண்பதுபேர்களில் ஒருவர்கூட அதை உறுதி செய்யவில்லை.

கீழ் கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது அஃப்சலுக்கு வழக்கறிஞர் எவரும் அமர்த்தப்படவில்லை. தேசவிரோதிகள் என தங்களையும் முத்திரை குத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில் எந்தவொரு வழக்கறிஞரும் அஃப்சலுக்கு உதவ முன்வரவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் ஒருவரான  பேராசிரியர் ஜீலானிக்கு வாதாட முன்வந்ததற்காக முன்னாள் சட்ட அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானியின் அலுவலகத்தை சிவசேனை கட்சியினர் அடித்து நொறுக்கினார்கள். ''விசாரணை முழுவதிலும் எந்தவொரு சாட்சியையும் நானோ, எனது சார்பில் வழக்கறிஞரோ குறுக்கு விசாரணை செய்ய முடியவில்லை. பல சாட்சிகளை முதன்முறையாக அப்போதுதான் நான் பார்த்தேன். அவர்கள் சொன்னவற்றை எந்தவித விசாரணையுமின்றி ஒருதலைப்பட்சமாக நீதிமன்றம் பதிவு செய்தது. நான் நிர்க்கதியாக ஒரு பார்வையாளரைப்போல வாய்மூடி நின்றேன்'' என தன்னுடைய வழக்கு விசாரணை பற்றி அஃப்சல் குறிப்பிடுகிறார்.

இதே வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலையாகியிருக்கும் பேராசிரியர் ஜீலானிக்காக அமைக்கப்பட்ட போராட்ட கமிட்டிக்கு அஃப்சல் கடிதமொன்றை எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி தனக்காக இப்போது உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர் சுஷில்குமாருக்கும் ஒரு கடிதத்தை அஃப்சல் எழுதியிருக்கிறார். அந்த கடிதங்களில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் முக்கியமானவை. எஸ்.எஸ்.பி.யாக இருந்த அஷாக் ஹுசைன் என்பவரது மைத்துனர் அல்டாஃப் என்பவர் மூலமாக டி.எஸ்.பி.யாக இருந்த டிரவீந்தர்சிங் என்பவரிடம் தான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு அந்த டி.எஸ்.பி. அனுப்பிய ஆள் ஒருவரை டெல்லிக்கு அழைத்து வந்ததாகவும் அவரோடு சில நாட்கள் டெல்லியில் தங்கி பலரை சந்தித்ததாகவும் அப்போது டிரவீந்தர்சிங்கும், காஷ்மீர் அதிரடிப்படை (ஷிஜிதி) போலீஸ் அதிகாரிகளும் தம்மோடு பலமுறை போனில் பேசியதாகவும் அஃப்சல் குறிப்பிட்டுள்ளார். அவர் சொல்வதிலிருந்து பார்த்தால் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு காஷ்மீர் சிறப்பு அதிரடிப்படையோடு தொடர்பு இருந்திருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி இந்த வலைப்பின்னலுக்குள் அஃப்சல் திட்டமிட்டே சிக்க வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிகிறது.  இந்த விஷயத்தை நீதிமன்றத்தில் அஃப்சல் வலியுறுத்தியபோதும் அதை நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை.

       அஃப்சலுக்கு உடனே மரண தண்டனையை நிறைவேற்றவேண்டும் என பாரதீய ஜனதா கட்சி கூக்குரலெழுப்புவதைப் பார்த்தால் இந்த வழக்கை இனிமேல் விசாரிக்க வேண்டாம்  என அது விரும்புவதுபோல் தெரிகிறது.செப்டம்பர் 11 சம்பவத்தையொட்டி சர்வதேச அளவில் எழுந்த முஸ்லிம் எதிர்ப்பு மனநிலையைப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் லாபம் அடைவதற்காக பி.ஜே.பி அரசே ‘ஏற்பாடு‘ செய்ததுதான் அந்த சம்பவம் என அப்போது எழுந்த விமர்சனத்துக்கு வலு சேர்ப்பதுபோலவே பி.ஜே.பியின் இப்போதைய கூச்சல் இருக்கிறது.
.
        சதாம் ஹுசைன் வழக்கு எப்படி நடத்தப்பட்டது என்பதை உலகம் அறியும்.அவருக்காக வாதாடிய மூன்று வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டனர்.முதலில் விசாரித்த நீதிபதி பதவியைவிட்டு விலகிக்கொண்டார்,அடுத்தவர் பதவியேற்கவேயில்லை,மூன்றாவதாக நியமிக்கப்பட்டவர்தான் இப்போது தீர்ப்பு சொல்லியிருக்கிறார்.சதாம் அமெரிக்கவால் போர்க் கைதியாகப் பிடிக்கப்பட்டவர்.ஒரு போர் கைதிக்கான உரிமைகள் அவருக்கு வழங்கப்பட்டிருக்கவேன்டும்.இது குறித்து ஜெனீவா ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருப்பவற்றை அமெரிக்கா மதித்து நடக்கவில்லை.ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட ஈராக்கியர்களின் எண்ணிக்கை சதாமால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும்..அந்த கொலைகளுக்கு ஜார்ஜ் புஷ்தான் பொறுப்பேற்கவேன்டும்.அப்போது சதாமுக்கு  கொடுத்ததைப்போலப் பத்து மடங்கு தண்டனையை புஷ்ஷுக்குக் கொடுக்கவேண்டியிருக்கும்.புஷ்ஷின் ஈராக் கொள்கையை அமெரிக்க மக்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை சமீபத்தில் நடந்த தேர்தல் முடிவுகள் காட்டிவிட்டன.

        மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்பதே உலகில் பெரும்பாலான நாடுகளின் கருத்து.தற்போது 129 நாடுகள் மரண தண்டனையைப் பயன்படுத்துவதில்லை.‘உயிருக்கு உயிர்‘ என்பது நாகரீக சமூகத்தின் சட்டமாக இருக்கமுடியாது.எனவே அந்தத் தண்டனை முறையை நீக்கிவிடவேன்டும் என்பதே நமது கோரிக்கை.இந்த கோரிக்கை இப்போது பலராலும் எழுப்பப்படுவது வரவேற்கப்படவேண்டியதே.ஆனால் இப்போது மரண தண்டனையை எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புகள் இதற்குமுன் இப்படி குரலெழுப்பியதில்லை.ராஜீவ் கொலை வழக்கில் 26பேர்களுக்கு மரனதண்டனை விதிக்கப்பட்டபோது இவர்கள் மௌனம் காத்தனர்.இப்பொதும்கூட பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் நடைமுறையில் இருக்கும் மிக மோசமான தண்டனை முறைகளை இவர்கள் கண்டிப்பதில்லை.அதுபோலவே ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்த்தவர்கள் ஈழத்தில் இயக்கங்கள் கைக்கொள்ளும் தண்டனை முறைகளை விமர்சிப்பதில்லை.

        அஃப்சல் மற்றும் சதாம் வழக்குகளில் மரண தண்டனையை எதிர்ப்பது சுலபம்.ஆனால் இப்போது பிரியதர்ஷினி மட்டூ கொலை வழக்கில் சந்தோஷ்குமார் சிங் என்பவருக்கு டெல்லி உயர்நீதிமண்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.அதை  இஸ்லாமிய அமைப்புகளோ தமிழ்த் தேசியவாதிகளோ இதுவரை கண்டிக்கவில்லை.அவர்களின் மனித உரிமை குறித்த கரிசனத்தின் எல்லை அதுதான்.

        அஃப்சலுக்கும் சதாமுக்கும் வழங்கப்பட்டுள்ள மரண தண்டனைகள் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும்கூட நீதி அமைப்புகளின் நிலை என்னவாக இருக்கிறது என்பதைத்தான் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இவ்வளவு மோசமான நீதி அமைப்பை வைத்துக்கொண்டு ஒருவரின் உயிரைப் பறிக்கும் தண்டனை முறையைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானதாகும்.மனித குலத்தின்மீது மதிப்பு கொண்டவர்கள் அனைவரும் ஒருமித்து குரல் எழுப்புவோம் ’ஒழியட்டும் மரண தண்டனை’.

1 comment:

  1. அருட்பிரகாச வள்ளலாரின் நேர் வழித்தோன்றலான அப்பழுக்கற்ற அப்சல் குரு என்ற மனித நேயப் புனிதனுக்கு மரண தண்டனை விதித்த அநீதியை நினைத்தால் நாமே தூக்கு மாட்டிக்கொள்ளலாம்; ஆனால் என்ன செய்வது தூக்கு கூடாது என்று அறிஞர் பெருமக்கள் சர்வ தேச மனித நேய குருமார்கள் சொல்வதையும் கேட்கத்தானே வேண்டும்.

    ReplyDelete