Friday, July 15, 2011

சென்றுவாருங்கள் பேராசானே..! -ச.ச.முத்து

சென்றவாரத்தில் ஒருநாள் (06.07.2011) பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் மரணித்துவிட்டார் என்ற செய்தி வந்துசேர்ந்தது. பேராசிரியரிடம் கல்வி கற்றவனோ அல்லது விரிவுரைகளை கேட்டவனோ அல்ல என்றாலும்கூட மிகஎட்ட இருந்தே அவரை பார்த்து கற்றுக்கொள்ள முயற்சித்த ஒரு ஏகலைவன் என்ற முறையில் சிலநினைவுக்குறிப்புகளை பதியமுடியும் என நினைக்கிறேன். (கட்டைவிரல் காணிக்கை கேட்காத துரோணராச்சாரியார் அவர்)
அதுவரையும் புத்திசீவிகளைப்பற்றியும், பேராசிரியர்கள் பற்றியும் எங்கள் மனங்களுக்குள் இருந்த விம்பங்களையும் கற்பிதங்களையும் தகர்த்து எறிந்து தவிடு பொடியாக்கியவர் பேராசிரியர் சிவத்தம்பி ஆவார்.அவருடன் கதைப்பதற்கு முன்னர் பேராசிரியர்கள், புத்திசீவிகள் என்றால் தங்களுடன் கதைப்பவர்களைவிடவும் ஒருஅடி மேலாக நின்று அந்தரத்தில் உலாவிக்கொண்டே கருத்துச் சொல்பவர்கள், சாதாரணமக்களுக்கு புரியாமலேயே ஏதேதோ வார்த்தைகளை பேசும்போது புகுத்துவார்கள் என்றே நினைத்துக்கொண்டிருந்தோம்.முதலாவது சந்திப்பிலேயே மிக அந்நியோன்னியமாக நட்பாக, தோழமையுடன் கருத்துச்சொல்லவும், கருத்துகளை கேட்கவும் அவரால் முடிந்ததை பார்த்தபோது இருந்த மலைப்பு இன்றளவும் தொடர்கிறது.
அவரைப்போல ; நவீனஇலக்கியம்,சமூகஆய்வுஅறிவு,ஆங்கிலபுலமை,நுண்கலைகள் பற்றிய ஆழ்ந்த பேரறிவு, நடப்புஅரசியல் பற்றிய துல்லியமான பார்வை, என்பனவற்றுடன் மரபுஇலக்கியங்களிலும் மிகமிக விரிந்த தேடலும்,ஆற்றலும் கொண்டவராக இன்னுமொருவர் வந்துவிடமுடியாது என்று சொல்லுமளவுக்கு அவர்அனைத்து தளங்களிலும் மிகுந்தபரந்து விரிந்த புலமைகொண்டவராக இருந்திருக்கிறார்.
அவரால் மட்டுமே பல்கலைக்கழகங்களில் துறைசார் பேரறிஞர்களுடன் தரவுகளை எடுத்துப்போட்டு மிகஆழமாக விவாதங்களில் ஈடுபடவும் அதே நேரத்தில் முதன்முதலாக எழுதவேண்டும் என்ற ஆவலில் உள்ளவர்களுடனும் அதே ஈடுபாட்டுடன் கதைக்கவும் முடிகிறது.எல்லோருக்கும் அவரை எட்டஇருந்து பார்க்கும்போது ஒரு தமிழ் பேராசிரியராகவோ, நுண்கலை அறிஞராகவோ தான் தெரியும். ஆனால் அவருடன் கதைத்துக்கொண்டு இருக்கும்பொழுதுகளில் எந்த துறையானாலும் அவர்தனது ஆளுமையை அந்த துறையில் தனக்கு இருக்கும் அறிவாற்றலை, தேடலை மிகவும் தெளிவாக புரியவைத்துவிடுவார்.
அவருடைய புத்தகங்கள் அனைத்தும் வாசகனுடன் மிகநெருக்கமான உறவை வாசிக்கும்போது கொண்டுவிடுகின்றன.நவீனஇலக்கியம் முதல் தொல்பொருளியல் வரைக்கும் அவருடைய புத்தகங்கள் விலாவாரியாக பேசுகின்றன.
அதிலும் அவர் எழுதிய ‘தமிழ்இலக்கியத்தில் மதமும் மானுடமும்’ என்ற புத்தகம் மிகவும் ஆழமாகவும் சுவாரசியமாகவும் மொழியில் மதங்களின் பங்களிப்பையும் பாதிப்பையும் சொல்லியது.இன்றுஅந்த புத்தகம் நான்காவது பதிப்புகூட வருமளவுக்கு நிறைந்தஒரு வாசகப்பரப்பை கொண்டிருக்கிறது.
இதுவரை கண்டடையப்பட்ட எந்த சமூகமும் மதம் இல்லததாக இல்லை என்ற வரைபுடன் ஆரம்பிக்கும் அவரது ஆய்வு மதத்தை நிராகரிப்பது ஆதரிப்பது என்பதற்கு அப்பால் விலகி மதத்தின் வரலாற்றுப்பாத்திரத்தை மிகஅழகா,மிகஎளிமையாக விளக்குகிறார். இதே  புத்தகத்தின் 130ம் பக்கங்களில் பேராசிரியர் அவர்கள் திருக்குறளை தமிழில் ஒலித்த முதலாவது மானுடவிடுதலைக்கான குரலாக பார்ப்பதை காணலாம்.இந்த கருத்து இந்த புத்தகம் எழுதப்பட்டு (1984) பத்து ஆண்டுகளுக்கு பின்னர் அவர் டென்மார்க்நாட்டுக்கு வநதிருந்தபோதும் அப்படியே மாறாமல் இருந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
உலகத்தின் வடமுனையில் இருக்கும் சுவீடன் ஊப்சலா பல்கலைக்கழகம் முதல் அமெரிக்க, ஆபிரிக்க, ஆசிய, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் அவரை தமது பல்கலைக்கழகங்களுக்கு மரியாதைக்குரிய பேராசிரியராக, வருகைதரும் பேராசிரியாராக அழைத்து கவுரவித்தன.அத்தனை பல்கலைக்கழகங்கள் ஏறினாலும் அவர் ஏதோ ஒரு பொழுதில் அந்த நிகழ்வுமுடிந்ததும் தனது மண்ணுக்கே திரும்பும் ஒரு யாத்திரையை மேற்கொண்டு இருந்தார்.அவர் அந்த மண்ணையும் அதன் மக்களையும் ஆழமாக நேசித்தவர்.
நாம்வாழும் காலத்தின் மிகப்பெரும் அறிஞர்அவர் என்ற மதிப்பும் மரியாதையும் அவரிடத்தில் இன்றும் இனிவரும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.தமிழில் ஆய்வுகளையும்,விமர்சனங்களையும் ஒரு கருத்துஇயக்கம்போலவே நடாத்திக்கொண்டு இருந்தவர் பேராசிரியர் சிவதம்பி ஆவார்.
இன்றுஅந்த அறிவுஅமைப்பு கண்ணை மூடிவிட்டது. அவருக்கு மரணம் வரும் நெருத்தில்கூட எங்காவது சங்ககாலப்பாடல்களில், அல்லது சைவசித்தாந்த பாடல்களில்மரணநேரம் பற்றிய பாடல்கள் இருக்கின்றதா என்றே நினைத்திருப்பார். அல்லது மார்க்சிம் கோர்க்கியோ, டால்ஸ்டாயோ மரணத்தை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றே இறுதிக்கணத்திலும் யோசித்திருப்பார். அவரின் மனம், மூளை, ரத்தம், செல்கள், எங்கும் இலக்கியம் தான் புகுந்து இருக்கிறது. அவரே அவரின் ஒரு புத்தகமான ‘இலக்கியமும் கருத்துநிலையும்’ என்பதில் சொல்லி இருக்கிறார்
‘இலக்கியம் என்பது ஒரு சமூக அழகியல் நிகழ்வு’ (பக்கம்28) என்று. ஆனால் தமிழ்சமூகம் இப்போது சிவத்தம்பி என்ற இலக்கிய பிதாமகரை இழந்து தனது அழகு அற்று நிற்கிறது.
பேராசான் சிவத்தம்பி அவர்களின் ‘தமிழில் இலக்கியவரலாறு ‘என்ற நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையின் இறுதியில் சொல்லியிருப்பதுபோல “நிகழ்வுகள் நினைவுகளாகி, அந்த நினைவுகளின் நினைப்பிலே வாழ்வது மனிதனின் மானுடத் தன்மைக்கு வலுவும் ஆழமும் வழங்குகிறது” என்பதைப் போலவே பேராசானின் நினைவுகள் வலுவும் ஆழமும் வழங்கும்.

நன்றி: ஈழமுரசு (12.07.2011)

No comments:

Post a Comment