Thursday, December 9, 2010

bob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி


(உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி  நூலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப்பட இருக்கிறது )

உலகெங்கும் இருக்கிற இளைஞர்களைக் கவர்ந்த ஹீரோ யார் எனக் கேட்டால் தயங்காமல் பதில் சொல்வோம் - சே குவேரா. அவருக்கு இணையாக உச்சரிக்கப்படும் இன்னொரு பெயர் பாப் மார்லி சே குவேராவைப்போல துப்பாக்கி ஏந்தி புரட்சி செய்தவரல்ல பாப் மார்லி. கைகளில் அவர் ஏந்தியிருந்தது கிடார். அவர் செய்தது இசை கலகம்.
இளைஞர்களை வசீகரித்து இசை உலகில் இப்போதும் முன்னணியில் நிலைத்து நிற்கும் வரலாறு அவர்.   1981ல் மே மாதத்தில் அவர் இறந்தார். முப்பத்தாறு வயதில் புற்றுநோய்க்கு அவர் பலியானபோது உலகமே துடித்துப் போனது. ‘‘இசையின் நல்ல குணம் என்ன தெரியுமா? அது உங்களைத் தாக்கும்போது உங்கள் வலிகளெல்லாம் மறந்து போய்விடும்!’’ என்றார் மார்லி. அதனால் தான் அவருக்கிருந்த புற்றுநோயின் வலி அவருக்குத் தெரியாமல் போய்விட்டது போலும்! ‘‘நான் இறந்தாலும் என் இசை வாழும்’’ என்று அவர் கூறியது பொய்யல்ல. இப்போதும் கோடிக்கணக்கில் அவரது இசையைத் தாங்கிய குறுந்தகடுகள் விற்றுக் கொண்டிருக்கின்றன. உலகில் எங்கோ இருக்கும் ஜமைக்காவில் பிறந்த பாப் மார்லி பூகோள எல்லைகளைத்தாண்டி, மொழியின் எல்லைகளைத் தாண்டி தமிழ்நாட்டிலும்கூட அதிர்வுகளை எழுப்ப முடிகிறதென்றால் அதுதான் அவரது இசையின் ஆற்றல்.
பாப் மார்லி - இளைஞர்களின் நாயகன். இசை உலகின் சக்ரவர்த்தி - ஒரு புதிய மதத்தை உருவாக்கிய போதகர். ‘உங்கள் வரலாற்றை மட்டுமல்ல உங்கள் விதியையும் மறந்து விடாதீர்கள்!’ என்று அவர் தனது ரசிகர்களிடம் சொன்னார். அது இசை ரசிகர்களுக்காகச் சொன்னது மட்டுமல்ல. விடுதலைக்காகப் போராடும் எல்லோருக்குமே பொருந்தக் கூடியதுதான். விதியைத் தீர்மானித்துக் கொள்ள வரலாறு தெரிந்திருக்க வேண்டும்.
      2009 ஆம் ஆண்டு மே மாதம் நானும் நண்பர் கலைச்செல்வனும் பாண்டிச்சேரியின் தெருக்களில் அவரது காரில் போய்க்கொண்டிருந்தோம். அவர் ஜூனியர் விகடனில் செய்தியாளராக இருப்பவர். மார்லியைப் பற்றி அவரிடம் நான் பேசிக்கொண்டு போனேன். உடனே அவரது சி.டி தனக்கு வேண்டும் என்றார். ஒரு கடைக்குள் நுழைந்து தேடியதில் ஒன்று கிடைத்தது. அவரது காரில் பயணித்தபடியே அதைக் கேட்டொம். அவருக்கு உடம்பே சிலிர்த்துவிட்டது. அப்போதுதான் மார்லியின் வாழ்க்கையைப் பற்றி எழுதவேண்டும் என்ற என் நீண்டநாள் ஆசையை நான் அவரிடம் சொன்னேன். அந்த நேரத்தில் நான் ஜூனியர் விகடனில் பத்தி ஒன்றை எழுதிவந்தேன். எனவே ஆனந்த விகடனில் அதை எழுத வாய்ப்பிருக்குமா எனக் கேட்கச் சொன்னேன். அவர் உடனே விகடன் குழுமப் பத்திரிகைகளின் ஆசிரியராக இருக்கும் திரு.அசோகனிடம் போன் செய்து கேட்டார். அவர் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல இன்றே அதை ஆரம்பியுங்கள் என்றார். ஜூனியர் விகடனிலேயே வேறு பெயரில் அதை எழுதுங்கள் என்று சொன்னார். நான் எனது மகன் அதீதன் பெயரில் அதை எழுதுவதாகக் கூறினேன். ஒப்புக்கொண்டார். உடனே அன்றைய தினமே அந்தத் தொடரின் முன்னுரையையும் முதல் அத்தியாயத்தையும் டைப் செய்து அனுப்பினேன். 
      பாப் மார்லியைப் பற்றிய அந்தத் தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதை எழுதுவது நான்தான் என்பதை முதலில் அடையாளம் கண்டுகொண்டு எனக்கு போன் செய்து பேசியவர் இந்திரா பார்த்தசாரதி. ஒரே நேரத்தில் பத்தியையும் எழுதிக்கொண்டு மார்லி பற்றிய தொடரையும் எழுதினேன். வாரத்துக்கு இரண்டுமுறை- சுமார் நான்காயிரம் வார்த்தைகள் எழுதவேண்டும். அந்த சமயத்தில் நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். தூக்கம் என்பது மறந்து போய்விட்டது. ஒருபக்கம் அரசியல் பணிகள், இன்னொரு பக்கம் சட்டப்பேரவை உறுப்பினராகச் செய்யவேண்டிய கடமைகள், அவற்றுடன் இந்தத் தொடர்கள். என்னைப் பார்க்கிறவர்கள் ‘எப்படி இவ்வளவு வேலை செய்கிறீர்கள்? ‘ என்று வியந்து கேட்பதுண்டு. 
     மார்லி பற்றிய தொடரை எழுதும்போது எனக்கு அது தொடர்பான அரிய நூல்கள் சிலவற்றை அமெரிக்காவில் இருக்கும் தனது சகோதரர்மூலம் வாங்கிவந்து கொடுத்து உதவியவர் நண்பர் அழகரசன். அந்தத் தொடரை யாராவது பாராட்டினால் அதைத் தனக்கான பாராட்டாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு என்மேல் அன்பு வைத்திருப்பவர்.அவரைப்போலவே ஜூனியர் விகடன் ஆசிரியராக இருந்த திரு.சரவணக்குமார், விகடன் குழும இதழ்களின் ஆசிரியர் திரு.அசோகன், இந்த நூலை சாத்தியப்படுத்திய நண்பர் கலைச்செல்வன் ஆகியோரையும் நான் இந்தத் தருணத்தில் நன்றியோடு நினவுகூர்கிறேன். 

  தமிழ்நாட்டில் உள்ள பாமர மக்களும் பாப் மார்லியின் டியூனைக் கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே நம் ‘கோலிவுட்’காரர்கள் அதை ‘உல்டா‘ செய்து நமக்குத் தந்திருக்கிறார்கள்.அவருடைய புகழ்பெற்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பாடலான ‘ பஃபல்லோ சோல்ஜர் ‘ தமிழ்ச் சினிமாவின் நான்காம்தர இசை அமைப்பாளர் ஒருவரால் திருடப்பட்டு கேவலமான முறையில் திரிக்கப்பட்டது.  ‘குத்துப்பாட்டு’ கேட்டு குதூகலித்துக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் பாப் மார்லியைத் தெரிந்து கொள்ள வேண்டும் அப்படித் தெரிந்துகொண்டால் அவர்களின் இசை ரசனை மாறும்  என்பதற்காகவே இந்த நூலை நான் எழுதினேன்.அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் சாஸ்த்ரீய இசைக்கு எதிராக நாட்டுப்புற இசையை முன்னிறுத்தும் ‘முற்போக்கு‘ யுக்திகளில் எனக்கு உடன்பாடில்லை. மார்க்சிய - லெனினிய அரசியலால் ஈர்க்கப்பட்டு பணியாற்றிய காலத்தில் அந்த இயக்கங்களின் பண்பாட்டு நடவடிக்கைகளில் நானும் ஈடுபட்டிருந்தேன். அவர்களும்கூட அதே அணுகுமுறையைத்தான் வைத்திருந்தார்கள். மேற்கத்திய இசை என்றாலே அதை ஏகாதிபத்தியத்தோடு இணைத்துப் பார்த்தார்கள். அதைக் கேலிசெய்து அவர்கள் பேசும்போது எனக்கு வேடிக்கையாக இருக்கும். அதனால், மிகவும் புரட்சிகரமானது என அவர்கள் முன்வைத்த இசை மிக மிகப் பழமையான பிற்போக்கான இசையாகவே வெளிப்பட்டது. இன்றும் அதே நிலைதான் தொடர்ந்துகொண்டிருக்கிறது.நான் இந்த நூலை சமர்ப்பணம் செய்திருக்கும் தோழர் கத்தரின் இசையும்கூட ஒருவிதத்தில் இந்த குற்றச்சாட்டுக்கு உட்பட்டதுதான்.  
    பாப் மார்லியின் இசை எப்படியானது என்பதை எழுத்தில் விவரிப்பது மிகவும் கடினம். அதைக் கேட்டு அனுபவிக்கவேண்டும்.இந்த நூல் அவரது இசையைப் புரிந்துகொள்வதற்கான பின்னணியை வழங்குகிறது, அவ்வளவுதான்.அவர் உருவாக்கிய ‘ ரெக்கே‘ இசையைப் போல இங்கிருக்கும் தலித் மக்களின் இசையை நவீனத்தன்மையும், கலகக்கூறுகளும் கொண்டதாக உருமாற்றவேண்டும் என்பது என் பேராசை. இளையராஜாவின் பாடல்கள் சிலவற்றைக் கேட்கும்போது இந்தியாவில் மார்லியைவிட மகத்தான ஆளுமையாக உருவெடுத்திருக்ககூடிய ஒருவரை தமிழ்ச் சினிமா காலி செய்துவிட்டதே என்கிற ஆதங்கம் உண்டாகும். அந்த ஏக்கத்தில் என் மனம் இப்போதும் என்னுள் குமைந்துகொண்டிருக்கிறது.இந்த நூலைப் படிக்கும்போது நீங்களும் எனது உணர்வைப் பகிர்ந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.    

பாப் மார்லி - ஒரு பெயரல்ல. முழக்கம்!
பாப் மார்லி - ஒரு இசைக் கலைஞன் மட்டுமல்லல்ல. போராளி!
பாப் மார்லி - தனது இசையால் ஒரு உலகத்தை சிருஷ்டித்திருக்கிறார். அது போர்களற்ற உலகம். துயரங்களும், மரணங்களுமற்ற உலகம். அன்பால் ஆன உலகம். அந்த உலகின் குடிமக்களாக மாற உங்களை அழைக்கிறது இந்தப் புத்தகம்.

- ரவிக்குமார் 
12.10.2010

2 comments:

  1. // ஒரே நேரத்தில் பத்தியையும் எழுதிக்கொண்டு மார்லி பற்றிய தொடரையும் எழுதினேன்.

    //


    நீங்கள் இதைச் செய்தது எனக்கு ஆச்சர்யமில்லை.இதற்கு நடுவில் மக்கள் பணியையும் செய்ததுதான் வியப்பூட்டுகிறது.


    // இளையராஜாவின் பாடல்கள் சிலவற்றைக் கேட்கும்போது இந்தியாவில் மார்லியைவிட மகத்தான ஆளுமையாக உருவெடுத்திருக்ககூடிய ஒருவரை தமிழ்ச் சினிமா காலி செய்துவிட்டதே என்கிற ஆதங்கம் உண்டாகும்

    //



    101% உண்மை

    :((

    ReplyDelete
  2. ஜானகி.இராசாDecember 14, 2010 at 5:48 AM

    இதைத் தொடராக வெளிவந்த போதே (ஜூனியர் விகடன் இதழில்) சிலப் பகுதிகளைப் படித்திருக்கிறேன்.எனினும் நூலாக காண்பதில், படிப்பதில் ஒரு தொடர்ச்சியும் விடுபாடுகள் அற்று முழுமையாகக் கற்க முடியும்.

    தமிழர்களுக்கு நாட்டுப்புற இசையும் ஒருவகையில் அவர்களுக்கான போராட்டக் கருவியாக பயன்பட்டுள்ளது. இந்த நாட்டுப்புற இசையினை மேலைஇசை ஆதிக்கம் செலுத்தும் போது அல்லது குறைத்து மதிப்பிடும் போது மேலையிசையின் மீது விமர்சனம் எழத்தான் செய்யும்.

    இளையராஜாவின் இசைப்புலமை யாருக்கும் பயன்படவில்லையே என்ற ஏக்கத்தினை, குறையினை இனியாவது போக்க இயைராஜா முயற்சிக்க வேண்டும்.

    திருவாசகம் சிம்பொனி இசை அணுபவங்களை ஜெகத்கஸ்பர் நக்கீரனில் எழுதியதையும் இசைஞானியின் இசைகுறித்து இசைப்போராளி குணசேகரனின் நூலுக்கு இளையராசாவின் எதிர்வினையினையும் அறியும் பொது மாற்றுக் கருத்தே ஏற்படுகிறது.

    ReplyDelete