Monday, December 6, 2010

கிரந்தப் பூச்சாண்டி- மணி மு. மணிவண்ணன்




கல்வெட்டுகளும், செப்பேடுகளும் மட்டுமே நமது வரலாற்றுத் தடயங்கள்.  அவை இல்லா விட்டால், நாம் “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்” பேசும் மாக்கள் மட்டுமே.  கல்வெட்டுகள் இல்லையேல் வரலாற்றாய்வாளர்களால் மாமன்னன் அசோகன் என்று ஒருவன் இருந்தான் என்பதே கண்டு பிடித்திருக்க முடியாது.  கல்வெட்டுகள் இல்லையேல் அதியமான் நெடுமானஞ்சி வெறும் ஔவைப் பாட்டிக் கதையில் வரும் ஒரு கற்பனைப் பாத்திரமாக மட்டுமே இருந்திருப்பான்.  கல்வெட்டுகள் இல்லையேல் “பொன்னியின் செல்வன்” கதை எழுதுவதற்கு கல்கிக்கு ஒரு செய்தியும் கிடைத்திருக்காது.  கல்வெட்டுகள் இல்லையேல் தமிழர்கள் வாழ்வில் சமணம் எத்தகைய தாக்கம் செலுத்தியிருந்திருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம்.
கல்வெட்டுகள் இல்லையேல் மாமல்லை நமக்கு இன்றும் புரியாத ஒரு விந்தை உலகமாகத்தான் தெரிந்திருக்கும்.
இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இன்றைய ஆவணங்களை ஆய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களால் இன்றைய ஆங்கில ஆவணங்களை அப்படியே பதியாமல் நம் வரலாற்றை முற்றாகப் புரிந்து கொள்ள இயலும் என்றா நினைக்கிறீர்கள்?
கிரந்த எழுத்துகளில் இருக்கும் கல்வெட்டுகளை, செப்பேடுகளை, ஓலைச்சுவடிகளை அண்மைக் காலத்தில் தேவநாகரி வரிவடிவத்தில் அச்சிட்டு வருகிறார்கள்.  தமிழ் எழுத்துகளோடு தேவநாகரி எழுத்தும் கலந்து வந்திருக்கும் அவற்றைப் பார்க்கும்போது, கிரந்தத்தின் மீதுள்ள வெறுப்பால் தென்னகத்தில் வரலாற்றில் வேரூன்றாத நாகரி எழுத்துக்கு மேலிடம் கொடுப்பது விந்தையாகத் தெரிகிறது.  சொல்லப் போனால், நாகரி எழுத்தில் இருப்பதால் மேலும் பலரும் கல்வெட்டுப் படிகளைப் படிக்க முடிகிறது என்பது வேறு திறக்கு.  ஆனால், வரலாற்றை நாம் வரலாறாகப் பார்ப்பதில் என்ன தயக்கம் என்று எனக்குப் புரியவில்லை.
இல்லாத கட்டுக்கதைகளை நம்புபவர்களுக்கு உண்மையை அறியத் தயக்கம் ஏனோ?
தமிழர்கள் சிலருக்குக் கிரந்தம் பூச்சாண்டியாகத் தோன்றுவதால் கிரந்த எழுத்துகளை யூனிக்கோடு குறியீட்டில் ஏற்றக் கூடாது என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டால் புவி இருண்டு போகும் என்பதற்கு ஒப்பானது.
தென்னகத்தில் 1908 வரை எடுத்த கல்வெட்டு, செப்பேட்டுகளின் மசிப் படிகள் மட்டுமே நூறாயிரத்தைத் தாண்டும். அவை மட்டுமே பதிப்பாயுள்ளன. அதற்குப் பின் எடுத்தவற்றின் மசிப்படிகள் இன்னும் எத்தனை காலம் அழியாமல் இருக்குமோ தெரியாது.  1908க்குப் பின் கல்சுரங்கக் குத்தகைதாரர்களும், கல்வெட்டுகளின் பெருமை அறியாத எண்ணற்ற பலரும் பல கல்வெட்டுகளை அழித்து விட்டார்கள்.  நம்முடைய பழைய நாணயங்கள், ஓலைச்சுவடிகள் போன்ற பல செல்வங்களை அறியாமையால் நாம் அழித்தது போல நாம் கல்வெட்டுகளையும் விரைவாக அழித்துக் கொண்டிருக்கிறோம்.
பழைய ஓலைச்சுவடிகள் இருந்தென்ன பயன்? ஐம்பெருங்காப்பியங்கள் எல்லாமே குப்பைதானே!  சங்கப் பாடல்களை எல்லாம் ஏன் படிக்க வேண்டும்?  புதியது என்னவென்று தெரிந்து கொள்வது போதாதா என்ற குரல்களும் அவ்வப்போது ஒலிக்கத்தான் செய்கின்றன.  சாதி ஒழிப்பு போன்ற பல முற்போக்குக் கொள்கைகளுக்காகப் போராடிய திராவிட இயக்கம் அறிவுசார் கருத்துகளை மறுக்கும் தன்மையையும் வளர்த்து விட்டிருக்கிறது என்று குறைப்பட்டிருக்கிறார் தமிழ் அறிஞர் பேரா. நொபோரு கராஷிமா (http://www.thehindu.com/opinion/interview/article925942.ece).
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓலைச்சுவடிகளைப் போகி கொளுத்தினோம்.  இருபதாம் நூற்றாண்டில் கல்வெட்டுகளைக் கிரேனைட் ஆக்கினோம். இருபத்தோராம் நூற்றாண்டில் கல்வெட்டு எழுத்துகளைக் கூடப் பதிக்கக் கூடாது என்று கூட்டம் போடுகிறோம்.  முன்னாள் தமிழ்ப் பல்கலையின் துணைவேந்தர் ஒருவரே ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் கை தட்டலுக்காக "மீண்டும் கிரந்த எழுத்துகளுக்கு  இடம் தரக்கூடாது  வரலாற்று ஆவணங்களை தமிழிலே கொண்டுவர முடியும். முடியாது என்றால் அவற்றைத் தூக்கி எறியுங்கள்” என்று சொல்லியிருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது.  அந்த அறிஞரின் தந்தையார், புகழ் பெற்ற  பெரும்புலவரின் நூல்கள் பல கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு தமிழ் கற்பித்திருக்கின்றன.
தமிழ் மட்டுமல்ல, உலகின் பல மொழிகளும் இன்று ஆங்கிலத்தின் ஆதிக்கத்தில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. பெருவழக்கொழிந்து போய், வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஓர் எழுத்து முறை கோடிக்கணக்கான தமிழர்கள் அன்றாடம் புழங்கும் எழுத்து முறையை அழித்து விடும் என்று பூச்சாண்டி காட்டுவது விந்தையாக இருக்கிறது.
தமிழ் வீடு ஆங்கிலத்தீயால் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது தோட்டத்தின் ஒரு மூலையில் வாடிக் கிடக்கும் கிரந்தச் செடியில் ஒரே ஒரு இலை தளிர் விட்டிருப்பதைப் பார்த்துக் குய்யோ முறையோ என்று கூக்குரலிடுவது பொருளற்றது.
கிபி ஆறாம் நூற்றாண்டில் தோன்றி,  அரசுக் கல்வெட்டு உரைநடையில் தமிழோடு கிரந்த எழுத்துகள் கலந்திருந்தாலும் கூட கிபி பதினான்காம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியத்தில் கலக்காத கிரந்த எழுத்துகள் எப்போது தமிழ் இலக்கியத்தில் நுழைந்தன?
மஹேந்திரவர்ம பல்லவன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், என்று அரசர்களின் பெயர்களில் எல்லாம் கூடக் கிரந்தம் கோலோச்சியிருந்தும் தமிழ்ப் புலவர்கள் நாவில் ஏன் கிரந்தம் நடமாடவில்லை?  பின்னர் எப்படி வழக்கில் வந்தது?
பண்பாட்டுப் போர்களில் தொழில்நுட்பங்களைக் கேடயமாகவோ, வாளாகவோ புழங்குவதால் ஏதும் பொருளில்லை. 
நம் தாய்மொழியை நோஞ்சான் என்று கருதும் தன்னம்பிக்கை அற்ற அஞ்சுநெஞ்சர்களைப் பார்த்துப் பரிவு கொள்ளத்தான் தோன்றுகிறது.
“சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா” பாடல் நினைவுக்கு வருகிறது. 
.....  வார்த்தைகளை
வேடிக்கைக்காகக் கூட நம்பி விடாதே
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே நீ வெம்பி விடாதே!
என்ன தன்னம்பிக்கையுள்ள பாடல்!  எங்கே போயிற்று அந்த வீரம்?

நன்றி: தமிழ் மன்றம் மடல் குழு 

1 comment:

  1. க. தில்லைக்குமரன்December 6, 2010 at 8:06 PM

    மணிவண்ணன்,

    நல்லக் கருத்து இதை நான் முழுதும் ஏற்கிறேன். கிரந்தம் யூனிகோட்டில் ஏற்றக்கூடாது என்பது எவ்விதத்தில் நியாயம் இல்லை. தமிழை கிரந்தத்தில் கலக்கக்கூடாது; கிரந்தத்தை தமிழில் கலக்கக்கூடாது என்பதுதான் நமது போராட்டமாக இருக்க வேண்டும். யூனிகோடு நிறுவனம் கிரந்தத்தை யூனிகோட்டில் ஏற்றுவதை நம்மால் தடுக்க முடியாது. தமிழை கிரந்தத்தில் திணிக்காமல் இருக்க யூனிகோட்டை நாம் ஏற்றுக்கொள்ள வைக்க முடியும்.

    அன்புடன்,
    க. தில்லைக்குமரன்
    சான் ஓசே, கலிபோர்னியா

    ReplyDelete