Saturday, December 4, 2010

தினமணி நாளேட்டில் வெளியான செய்தி :





சிதம்பரம், நவ. 30: மழைக்காலம் என தெரிந்தும் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் நோக்கில் வீராணம் ஏரியில் அதிகளவான 46.50 அடி நீர் தேக்கிவைத்ததால் உபரி நீர் வெள்ளியங்கால் ஓடையில் திறந்து விடப்பட்டு சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பொதுப்பணித் துறை அதிகாரிகளின் மெத்தனைப் போக்கே இதற்கு காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
தமிழகத்தில் பெய்து வரும் மழையில் அதிகளவு பாதிக்கப்பட்ட பகுதியாக காட்டுமன்னார்கோவில் தாலுகா திகழ்கிறது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையை விட வெளி மாவட்டங்களில் பெய்த மழை நீர் வீராணம் ஏரிக்கு வந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதுதான் வெள்ளப் பெருக்குக்கு காரணம். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் சென்னைக்கு வீராணம் நீர் தேவையில்லை. எனவே அரசு வீராணம் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும்.
மழை, வெள்ளத்தில் காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் மட்டும் 10ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கால்நடைகள் இறந்துள்ளன. அஜீத்குமார் என்ற மாணவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்துள்ளார். புயல், மழை குறித்து வானிலை மைய முன்னெச்சரிகை விடுத்தப் பின்னர் அதற்குரிய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டிருந்தால் ஒரளவு வெள்ளச் சேதத்தை தடுத்திருக்க முடியும்.
கடந்த 3 நாள்களாக வெள்ளம் பெருக்கெடுத்த பின்னர் திங்கள்கிழமை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்ட பின்னர்தான் நிவாரண நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உதாரணமாக வெள்ளப் பாதிப்பு அடையும் கிராமங்களில் அரிசி கூட கையிருப்பு வைக்கப்படவில்லை. ஆண்டுதோறும் துண்டிக்கப்படும் திருநாரையூர், நந்திமங்கலம் பகுதிகளில் படகுகள் கொண்டு வர தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண மையம் உடனடியாக அமைக்க வேண்டும்.
மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதி கூடுதலாக வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் புதுதில்லியில் நிதி அமைச்சரைச் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார். விரைவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிடுவார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு குறைந்தபட்ச நிவாரணத்தை |5 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்வர் கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் முற்றிலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளித்து உடனடியாக வீடு கட்டித்தர உத்தரவிட வேண்டும்.
விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கூடுதலாக 30 நாள்கள் வேலை வழங்க வேண்டும். பாதிப்பட்ட தோட்டக்கலை பணப்பயிரான வெற்றிலை பயிருக்கு ஏக்கருக்கு |25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என துரை.ரவிக்குமார் எம்எல்ஏ தெரிவித்தார்.-- 

No comments:

Post a Comment