Wednesday, December 1, 2010

எட்வர்டு ஸெய்த் : ஒரு நினைவுக்குறிப்பு -தாரிக் அலி

தாரிக் அலி : 1967இல் யுத்தம் உங்களைச் சீல்திருத்திவிட்டது.  அதுதான் பாலஸ்தீனத்துக்குப் பரிந்து பேசும் அதன் பேச்சாளராக உங்களை மாற்றிவிட்டதா?
ஸெய்த் : பாலஸ்தீனியன் என்பதைவிடவும் முதலில் நான் அராபியன்.
தாரிக் அலி : அந்த கடப்பாட்டிலிருந்தான் "ஓரியண்டலிசம்" என்று நூல் உருவானதா?
ஸெய்த்  : மத்திய கிழக்கு நாடுகளைப் பற்றி எழுதப்பட்டவற்றை முறையாக நான் வாசிக்கத் தொடங்கினேன்.  அவை எனது அனுபவங்களோடு ஒத்துப்போகவில்லை.  அவற்றினூடாகச் செய்யப்பட்டிருக்கும் திரிபுகள், ஏற்றபடுத்தப்பட்டிருக்கும் பொய்யான பதிவுகள் யாவும் திட்டமிட்டுச் செய்யப்பட்டவை என்பதையும், அது அரசு உலகைக் கையாள்வதற்கு மேற்குலகம் பின்பற்றுகிற திட்டமிட்ட ஒரு செயல்திட்டத்தின் பகுதிதான் என்பதையும் நான் எழுபதுகளின் துவக்கத்தில் புரிந்துகொண்டேன்.  இலக்கியத்தைப் பற்றிய ஆய்வென்பது வெறுமனே அழகியல் சார்ந்ததல்ல, அது வரலாற்றுப் பொறுப்பு கொண்டது என்ற எனது புரிதலை உறுதிசெய்தது.  அழகியலின் பங்கினை நான் இப்போதும் ஏற்கவே செய்கிறேன்.  ஆனால் "இலக்கிய ராச்சியம் இலக்கியத்துக்காகவே" என்பது தவறு.  கலாச்சாரம் என்பது அரசியலோடு தொடர்புடையது என்ற நிஜத்திலிருந்து தீவிரமான வரலாற்றுரீதியான ஆய்வொன்று துவக்கப்பட வேண்டும்.  மேற்கத்திய நாடுகளின் மாபெரும் இலக்கியப்பிரதிகள் மீது எனக்கு ஆர்வமிருந்தது.  அவை மிகப்பெரும் இலக்கிய சாதனைகள் என்ற மயக்கத்தினால் அல்ல.  வரலாற்றுச் சூழலில் வைத்து உள்வாங்கிக் கொள்ள வேண்டிய பிரதிகள் என்ற அர்த்தத்தில்.  அப்படிப் பார்த்தால் அவை அதிர்வுகளை ஏற்படுத்தமுடியும்.  ஆனால் அவற்றின் மீது விருப்பமே இல்லாமல் நீங்கள் அதைச் செய்ய முடியாது.  அந்த நூல்களைப் பற்றி அக்கறைப்படாமல் அதைச் செய்ய முடியாது.
1993இல் வெளிவந்த சிuறீtuக்ஷீமீ ணீஸீபீ மினீஜீமீக்ஷீவீணீறீவீsனீ ஓரியண்டலிசம் நூலின் மையமான வாதத்தை விரிவுபடுத்தி மேலெடுத்துச் சென்றது.  வேறுபட்டதொரு அரசியல் சூழலில் எழுதப்பட்ட அந்த நூல் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளாது.  எர்னெஸ்ட் கெல்னரோடு ( நடந்த புகழ்பெற்ற விவாதம் குறிப்படவேண்டிய ஒன்று.
இப்போது கலாச்சார விவாதங்கள் பாலஸ்தீனத்தில் நடக்கும் நிகழ்வுகளால் பின்தள்ளப்பட்டுவிட்டன.  1917 என்ற ஆண்டு உங்களுக்கு எதனை நினைவுப்படுத்துகிறது என நான் ஸெய்த்திடம் கேட்டபோது எவ்வித தயக்கமுமின்றி, "ஆமாம், அது பல்ஃபோர் பிரகடனத்தை நினைவுப்படுத்துகிறது" என அவர் பதிலளித்தார்.  பாலஸ்தீனம் பற்றி ஸெய்த்தின் எழுத்துகள் முற்றிலும் வேறுவிதமானவை.  அவர் எழுதிய பிற எழுத்துக்களிலிருந்து வித்தியாசமானவை.  பைபிளின் எளிமையையும், வேட்கையையும் கொண்டவை.  அது தான் அவரது போராட்டம்,  அரை டஜனைத் தாண்டும் நூல்கள். அல்-அஹ்ரம் இதழில் எழுதிய பத்தி மற்றும் கட்டுரைகள், பத்திரிகையில் எழுதியவை.
1967 ஏற்றப்பட்ட சுடர் எப்போதும் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது.  பாலஸ்தீனத்தின் மெய்யான வரலாற்றை ஒரு தலைமுறை புரிந்துகொள்ள அவர் உதவினார்.  தமது மக்களை, அன்னியரால் ஆக்கிரமிக்கப்பட்ட தனது தாய்நாட்டை அவர் ஆவணப்படுத்தினார்.  உலகெங்கும் அதன் காரணமாகவே அவர் மதிக்கப்படுகிறார்.  புகழப்படுகிறார்.  இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஐரோப்பியர்களால் மேற்கொள்ளப்பட்ட யூதப்படுகொலைகளின் மறைமுகமான பலிகளாக பாலஸ்தீனியர்கள் ஆகியுள்ளனர்.  ஆனால் மேற்குலகில் அது பற்றி எந்தவொரு அரசியல்வாதியும் கவலைப்படவில்லை.  ஸெய்த் அப்படியானவர்களின் கூட்டுப் பிரக்ஞையைக் குத்திக் கிழித்தார்.  எனவே அவர்கள் ஸெய்த்தை விரும்பவில்லை.
ஸெய்த் ஆலோசனை கேட்கும் இரண்டு நண்பர்கள் - இப்ராஹிம் அபு-லுகோதி.  இக்கால் அஹமது - 1999 மற்றும் 2001இல் அடுத்தடுத்து இறந்துபோனார்கள்.  அவர்களது இழப்பு அவரை வருத்தியது.  ஆனால் அந்த இழப்பு மேலும் உறுதியாகத் தனது எதிரிகளின் மீதான இலக்கியத் தாக்குதலை உக்கிரப்படுத்தச் செய்தது.  பாலஸ்தீனிய தேசிய கவுன்சிலில் ஒரு சுயேச்சை உறுப்பினராக பதினான்கு ஆண்டுகள் அவர் இருந்தபோதிலும், 1984இல் ஐ.நா. சபையில் நிகழ்த்தப்பட்ட யாஸர் அராஃபத்தின் உரையை சீர்திருத்தி அவர்தான் மெருகேற்றினார் என்ற போதிலும் பாலஸ்தீனிய தலைமையிடம் தந்திரோபாய ரீதியான பார்வை இல்லாதது பற்றி அவர் விமர்சித்தே வந்தார்.  வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் அதிபர் ராபினுடன், யாஸர் அராபத் ஒப்பந்தம் செய்து  கைகுலுக்கியதை "ஃபேஷன் ஷோ வக்கிரம்" என வர்ணித்த ஸெய்த், 1991 வளைகுடா யுத்தத்தையொட்டி அமெரிக்காவும், இஸ்ரேலும் திணித்த "ஓஸ்லோ ஒப்பந்தத்தை" சரணாகதி ஒப்பந்தம் என வர்ணித்தார்.3  வரலாறு ஸெய்த் சொன்னதையே நிரூபணம் செய்துள்ளது.  2001இல் அராபத்தை விமர்சித்து ஸெய்த் எழுதிய கட்டுரை, "ஓஸ்லோ ஒப்பந்தமென்பது ஆக்கிரமிப்பை புதிய வடிவில் அடைத்துத் தந்துள்ளது.  1967இல் பறிக்கப்பட்ட நிலத்திலிருந்து வெறுமனே பதினெட்டு சதவீத இடத்தை ஊழல் மலிந்த அரசியல்வாதியான அராபத்திடம் அது வழங்கியுள்ளது.  இஸ்ரேலுக்காக அந்த நிலத்தைக் காவல்காப்பதும், தனது மக்களிம் வரி வசூல் செய்வதும்தான் அராபத்துக்குள்ள அதிகாரங்கள்" என எழுதினார்.
"பாலஸ்தீனிய மக்கள் இதைவிடவும் அதிகம் பெறத் தகுதியானவர்கள்.  அராபத்தும் அவரது "கம்பெனியும்" அதிகாரத்தில் இருக்கும்வரை எந்தவித விடிவும் கிடையாது.  இப்போது பாலஸ்தீனியர்களுக்குத் தேவை களத்தில் நின்று போராடுகிற தங்களுக்குத் தலைமை கொடுக்கும் சரியான தலைவர்.  கொழுத்த, சுருட்டு பிடிக்கிற அதிகாரிகளல்ல.... சிந்திக்கிற திட்டமிடுகிற, செயல்படுகிற ஆற்றல் கொண்ட ஒருங்கிணைந்த தலைமையே எங்களுக்குத் தேவை...." ஹமாஸ் அப்படியான தலைமையைத் தரமுடியுமா? என நான் கேட்டேன்.  "அது ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு எதிர்ப்பியக்கம்" என்றார் ஸெய்த்.
"இஸ்லாமிய அரசு பற்றிய அவர்களது (ஹமாஸ்) கருத்துகள் முற்றிலும் முதிர்ச்சி அற்றவை.  அங்கு வாழுகிற எவருக்கும் திருப்தியளிக்காதவை.  அவர்களது திட்டத்தை எவரும் "சீரியஸாக" எடுத்துக்கொள்வதில்லை.
"உங்களது பொருளாதாரக் கொள்கைகள் எவை? மின் உற்பத்தி நிலையங்கள், குடியிருப்புகள் பற்றி உங்களது கொள்கை என்ன?" என்று நான் கேட்டபோல நீங்கள் அவர்களைக் கேட்டால், "ஓ! அது பற்றி நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம்" என அவர்கள் பதில் சொல்வார்கள்.  இஸ்லாமிய சமூகச் செயல்திட்டம் என ஒன்று இருக்க முடியாது.  அவர்கள் குறிப்பிட்டதொரு சூழ்நிலையால் உருவாக்கப்பட்ட ஜந்துக்கள்.  தற்போதைய ஆளும் கட்சியின் தேக்கநிலையை, கையாலாகத்தனத்தை விமர்சிக்க இஸ்லாம் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு.  பாலஸ்தீனிய ஆட்சியாளர்கள் சவுதி அரேபியாவைப் போல, எகிப்தைப்போல செல்வாக்கிழந்து, வலுவற்று அமெரிக்காவின் கைப்பாவைகளாகிவிட்டனர்"
ஹமாஸ் மற்றும் இஸ்ராமிய ஜிஹாத் அமைப்பினரை ஒடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் கோருவதன் பின்னே அதன் ராணுவநோக்கம் ஒளிந்திருப்பதா ஸெய்த் குறிப்பிட்டார்.  அப்படி ஒடுக்குவதன்மூலம் பாலஸ்தீன அரசுக்கு எதிரான உள்நாட்டு யுத்தமொன்றைத் தூண்டிவிட இஸ்ரேல் முயற்சிப்பதாக ஸெய்த் சொன்னார்.  அவரது வாழ்க்கையில் கடைசி மாதங்களில் தாங்கள் "தோற்கடிக்கப்பட்டவர்கள்" என்பதை ஏற்க மறுத்த பாலஸ்தீனிய மக்களின் உறுதியான எதிர்ப்பை ஸெய்த் மகிழ்ச்சியோடு பாராட்டினார்.  முஸ்தபா பர்குதியால் வழிநடத்தப்படும் "நேஷனல் பொலிட்டிக்கல் இனிஷியேடிவ்" மேலும் உயிப்புமிக்க படைப்புக்குணம் கொண்ட பாலஸ்தீனிய அரசியலை முன்வைக்கும், அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என ஸெய்த் நம்பிக்கை தெரிவித்தார்.  "நாற்பது சதவீத நிலத்தை மட்டுமே கொண்ட தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அரசு. அகதிகாளல் கைவிடப்பட்ட, இஸ்ரேலின் பிடியில் ஜெரூசலம் இருக்கிற அரசு - அதுவல்ல நமது கோரிக்கை.  இறையாண்மை மிக்க, யூதர்களும், அராபியர்களும் சேர்ந்து ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்த பிரதேசங்களைக் கொண்ட ஒரு தேசமே நமது கோரிக்கை...." என்றார்.3
பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து அனுபவித்துவரும் துயரங்களைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிற உலகின் வடபகுதியில் பாலஸ்தீனிய மக்கள் தெளிவாக ஒலித்த தங்களின் குரலை, எட்வர்டு ஸெய்த்தின் மறைவினால் இழந்து நிற்கிறார்கள்.  இஸ்ரேலியர்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் அவர்கள் பயங்கரவாதிகள்.  சீரழிந்த அராபிய அரசுகளுக்கோ அவர்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு தொந்தரவு.  தனது கடைசிக் காலத்தில் தனது எழுத்துக்களில் ஈராக்மீதான அமெரிக்க யுத்தத்தை ஸெய்த் வன்மையாக எதிர்த்தார்.  வன்முறையிலிருந்தும் பொய்களிலிருந்தும் விடுதலையை அவர் வேண்டினார்.
பாலஸ்தீனம், ஈராக் ஆகிய இரு நாடுகளின் மீதான ஆக்கிரமிப்பு மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி இல்லாமல் செய்துவிட்டது என்பதை அவர் உணர்ந்திருந்தார்.  அவரது குரல் பதிலீடு செய்ய முடியாதது.  ஆனால் அவரது பாரம்பர்யம் என்றும் நிலைத்து நீடித்திருக்கக்கூடியது.  அவர், அவருக்கும் அப்பால் பல வாழ்வுகளைக் கொண்டவர்.

எட்வர்ட் ஸெய்த் இறந்தபோது தாரிக் அலி எழுதிய நினைவுக் குறிப்பின் ஒரு பகுதி. டிசம்பரில் எனது மொழிபெயர்ப்பில் வெளிவர இருக்கும் எட்வர்ட் செய்ததின் நூலில்(மணற்கேணி வெளியீடு ) இதன் முழு வடிவம் இடம்பெற்றுள்ளது 

No comments:

Post a Comment