Monday, November 1, 2010

வெ ஸ்ரீராமை சந்தித்தேன் : ' புலிக்குட்டி கோவிந்தனின் குரங்கு ' -ரவிக்குமார்




பிரெஞ்சிலிருந்து அற்புதமான பல படைப்புகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கும் திரு. வெ. ஸ்ரீராம் அவர்களை நேற்று க்ரியா அலுவலகத்தில் சந்திக்க வாய்த்தது. சிலமுறை அவரைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் அவரோடு நீண்ட நேரம் பேசக்கூடிய சந்தர்ப்பம் அமைந்ததில்லை. எனது ' மழை மரம் ' கவிதைத் தொகுப்பு மிகவும் பிடித்திருப்பதாகவும் அதை பிரெஞ்சில் மொழிபெயர்க்க விரும்புவதாகவும் அவர் சொன்னார் . என் கவிதை ஒன்றில் 'காயவைத்த இட்லி துணி' என்ற ஒரு இமேஜ் வரும். அதைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். இன்றைய தலைமுறைக்கு இட்லி துணியே தெரியாது. குக்கர் இட்லி சாப்பிட்டு பழகிவிட்டார்கள் . என் பிள்ளைகளுக்கே அது தெரியாது என்றார். அப்போது திடீரென் புலிக்குட்டி கோவிந்தன் என்பவரைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். 
புலிக்குட்டி கோவிந்தன் சினிமாவுக்கு மிருகங்களை சப்ளை செய்பவர். தமிழ் சினிமா குறித்து ஆராய்ச்சி செய்ய வந்திருந்த பிரெஞ்ச்காரர் ஒருவருக்கு உதவியாக ஸ்ரீராம் கோவிந்தனைப் பார்க்கப் போனாராம். அவர் வீட்டின் பின்புறம்தான் மிருகங்களின் வாசஸ்தலம். புலி , சிங்கம் , குரங்கு , மான் என விதவிதமான மிருகங்கள் ஒருபக்கம். பலவிதமான பறவைகள் இன்னொரு பக்கம். அவற்றையெல்லாம் பழக்கி சினிமாவுக்கு நடிக்க அனுப்புவதே கோவிந்தனின் தொழில். ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்ட ' சாம்சன் அண்ட் டிலைலா ' படத்தில் நடித்த சிங்கம் நம் புலிக்குட்டி கோவிந்தன் பழக்கிய சிங்கம்தான். அந்தக் காலத்தில் இங்கிருந்து விமானத்தில் கொண்டுபோய் ஹாலிவுட்டில் நடிக்க வைத்திருக்கிறார்கள். ( ஹாலிவுட்டில் நடித்த முதல் சிங்கம் தமிழ் சிங்கம் தான் ).
கோவிந்தன் ஒரு வித்தியாசமான ஆள். மிருகங்களோடு சரளமாகப் பேசும் நுட்பம் தெரிந்தவர். ஸ்ரீராம் அவரைச் சந்திக்க போயிருந்தபோது அவரது வீட்டின் ஒரு மூலையில் அடுப்பில் இட்லி வெந்துகொண்டிருந்ததாம். கோவிந்தனின் மனைவி ' ராமா ' என்று குரல் கொடுத்ததும் ஒரு குரங்கு அங்கே வந்ததாம். ' இட்லியை எடுத்து வை ' என்று அவர் ஆணையிட குரங்கு அடுப்பில் இருந்த இட்லி பானையைத் திறந்து இட்லி கொத்தை எடுத்து பக்கத்திலிருந்த தாம்பாளத்தில் கவிழ்த்து லாவகமாக இட்லி துணியை எடுத்து பக்கத்தில் வைத்துவிட்டு ஒவ்வொரு இட்லியாக எடுத்து அருகிலிருந்த குண்டான் ஒன்றில் அடுக்க ஆரம்பித்துவிட்டதாம். ' அந்த குரங்குக்குக் கூட இட்லி துணி தெரியும். ஆனால் நம் இளைய தலைமுறைக்குத் தெரியாது ' என்றார் ஸ்ரீராம் . புலிக்குட்டி கோவிந்தன் இப்போது உயிரோடு இல்லை என்றுஅவர் சொன்னபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சுவாரஸ்யமான மனிதர் ஒருவரைச் சந்திக்கும் பேறு இல்லாமல் போய்விட்டதே என்று நொந்துகொண்டேன்.  
ஸ்ரீராமிடம் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியவில்லை . அவரது அனுபவம் மிகவும் பரந்தது. "சினிமாவை எடுத்துக்கொண்டால் நாம் திரையில் பார்ப்பதுதான் இருப்பதிலேயே மிகவும் சுவாரஸ்யம் குறைந்தது . சுவாரஸ்யமானவை திரைக்குப் பின்புறம் நடப்பவைதான்"  " நம் திரைப்படங்களில் நடிக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அபாரமான திறமைசாலிகள் , துணிச்சல்காரர்கள் . அவர்கள் போடும் சண்டைக் காட்சிகளை நாம் திரையில் பார்க்கும்போது அதன் தீவிரம் தெரிவதில்லை. ஆனால் பிரெஞ்ச் சினிமாக்காரர்கள் அப்படி இல்லை. நான் ஒரு பிரெஞ்ச் சினிமா ஷூட்டிங் பார்த்தேன் . அங்கே எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி மிகவும் சாதாரணமாக இருந்தது. ஆனால் அதைத் திரையில் பார்த்தபோது நான் அசந்துவிட்டேன் . அப்படி பிரம்மாண்டமாக மாற்றி இருந்தார்கள். தொழில்நுட்ப வசதியை அப்படி அவர்கள் பயன்படுத்துகிறார்கள். நம் தமிழ் சினிமா இப்போதுதான் அதை முயற்சித்துப்பார்க்க ஆரம்பித்திருக்கிறது " என்றார் ஸ்ரீராம். 
சட்டென்று அவரது பேச்சு இலக்கியத்தை நோக்கித் தாவியது. " தமிழ் எழுத்தாளர்கள் மொழியைப் பிரக்ஞை பூர்வமாகவும் நுட்பமாகவும் பயன்படுத்துவதில்லை . அலட்சியமாக எழுதுகிறார்கள் . நான் ' அந்நியன் ' மொழிபெயர்ப்பை வெளியிட்டபோது தமிழ் எழுத்தாளர்கள் சிலர் ' இதென்ன புதுவிதமான மொழியாக இருக்கிறதே ' என்று வியந்து சொன்னார்கள் . பாராட்டினார்கள். " என்றார் . அவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கும் ழாக் ப்ரெவர் கவிதைகள் தமிழ்க் கவிஞர் கள் மீது செல்வாக்கு செலுத்தியிருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது என்றார். ஸ்ரீராமின் மொழி பெயர்ப்பில் பிரெஞ்ச் நாவல் ஒன்று க்ரியா வெளியீடாக வரப்போகிறது. டிசம்பரில் வெளிவரும் எனத் தெரிகிறது.   

1 comment: