Saturday, November 20, 2010

2ஜி விவகாரத்தில் பிரதமர் பதில்

இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் இரண்டாம் தலைமுறை அலைவரிசைகள் ஏலம் விடப்பட்டதில் அரசுக்கு சுமார் 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சிஏஜி எனப்படும் இந்திய தணிக்கை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இதன் பின்னர் தான் எவ்வித தவறையும் செய்யவில்லை என கூறியிருந்த தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராஜா கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் 16 மாத காலமாக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டை ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சுவாமி பதிவு செய்து இருந்தார். இது குறித்து இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில் இந்திய பிரதமரின் விளக்கம் அவரது அலுவலகத்தின் இயக்குநர் வித்யாவதி மூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தாங்கள் நட்வடிக்கை எடுக்கவில்லை என்பதை பிரதமர் மறுத்துள்ளார். மேலும் இதில் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் பிரதமருக்கு அனுப்பிய கடிதங்கள் தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புத்துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா மீது குற்ற நடவடிக்கை எடுக்க சுப்ரமணியன் சுவாமி பிரதமரிடம் அனுமதி கேட்டது குறித்து, பிரதமர் அலுவலகம் சட்ட அமைச்சகத்திடன் ஆலோசனை கேட்டதாகவும், ஆனால் சி.பி.ஐ விசாரித்து வருவதால் சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையை பெற முடியவில்லை என்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதிலில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே புதுதில்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாடாளுமன்றம் நடைபெறுவதற்கு எதிர்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என்றும், எந்த ஒரு விஷயத்தை விவாதிக்கவும் தாங்கள் அஞ்சவில்லை என்றும் கூறினார்.
இந்த நிலையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன் சுவாமி, இரண்டாம் தலைமுறை அலைகற்றைகள் ஏலம் கொடுக்கப்பட்டது தொடர்பில் தான் எழுப்பிய அனைத்து பிரச்சனைகளையும் பிரதமரின் அலுவலகம் கொடுத்துள்ள பதில் மனு உறுதிப்படுத்துவதாக கூறியுள்ளார்.
அத்தோடு தொலைத்தொடர்புதுறை முன்னாள் அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க தான் கீழ் நீதிமன்ற ஒன்றை அணுக தனக்கு இப்போது தடை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2004 முதல் 2007 வரை தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதிமாறன், ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தை அமைச்சரவை குழு முடிவு செய்ய கூடாது என்றும், இது குறித்த முடிவை தனது அமைச்சகம் மட்டுமே எடுக்கும் என்பதை பிரதமர் அங்கீகரிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தற்போதைய ஜவுளித்துறை அமைச்சரான தயாநிதிமாறன், 2006 ஆம் ஆண்டு தான் அமைச்சராக இருந்த போது, அலைகற்றைகள் ஏற்கனவே சேவையில் இருந்த நிறுவனங்களுக்கே கொடுக்கப்பட்டது என்றும், பெரும்பாலான அலைகற்றைகள் பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் போன்ற அரசு சார் நிறுவனங்களுக்கே கொடுக்கப்பட்டது என்றும், அத்தோடு அலைகற்றைகளின் விலையானது டிராய் எனப்படும் தகவல் தொடர்பு ஆணையத்தின் அறிக்கைகளை பொறுத்தே அமைக்கப்பட்டது என்றும் கூறினார்.

courtesy : பிபிசி தமிழோசை

No comments:

Post a Comment